விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 10, 2011
குங்குமப்பூ சாஃப்ரன் குரோக்கசு எனும் செடியின் பூவிலிருந்துத் தருவிக்கப்படும் நறுமணப் பொருளாகும். இப்பூவின் உலர்த்தப்பட்ட சூலக முடிகளும் சூல் தண்டுகளும் சமையலில் நறுமணத்திற்கும் வண்ணமூட்டவும் பயன்படுகின்றன. தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட இது, நீண்டகாலமாக உலகின் மிகவும் விலை உயர்ந்த நறுமணப் பொருளாக இருந்துவருகிறது. பொதுவாக இப்பூ ஊதா நிறம் கொண்டதாகும். இதில் எளிதில் ஆவியாகும் ஆவியாகா நறுமணமிகு 150க்கும் மேற்பட்ட வேதிச்சேர்மங்கள் உள்ளன. இது 3,000 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகின்றது. வடமேற்கு ஈரானில் 50,000 ஆண்டுகள் பழமையான ஓவியங்களில் இதன் நிறமிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குங்குமப்பூ உற்பத்தியில் ஈரான் முதலிடம் வகிக்கிறது. குங்குமப்பூவின் தரம் அதன் நிறம், சுவை, நறுமணம் ஆகியவற்றை வைத்து அளவிடப்படுகிறது. குங்குமப்பூவின் வலிமையான சுவை, நறுமணம், வண்ணமூட்டும் விளைவு ஆகியவற்றின் அடையாளமான மிக அடர்ந்த பழுப்பு-ஊதா வண்ணம் கொண்ட காஷ்மீர் வகை உலகின் அடர்நிறக் குங்குமப்பூ வகைகளுள் ஒன்றாக விளங்குகிறது. மேலும்...
தனிநாயகம் அடிகள் (1913-1980) ஈழத்துத் தமிழறிஞர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலியவர். யாழ்ப்பாணம், கரம்பொனில் இந்துவாகப் பிறந்தவர், கிறிஸ்தவ சமயத்தை தழுவியபோது ஏற்றுக்கொண்ட பெயர் சேவியர் ஸ்தனிசுலாசு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், லண்டனில் முனைவர் பட்டமும் பெற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகவும், பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமைப் பேராசிரியராகவும், பிரான்சுக் கல்லூரியிலும், நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகவும் பணியாற்றினார். கத்தோலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் தமிழை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும், பரப்பும் தூதராகத் திகழ்ந்தார். தமிழ்க் கல்ச்சர் என்ற ஆங்கில காலாண்டிதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். 1961 இல் சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். மொத்தம் 137 நூல்களை எழுதினார். மலேசியாவில் பணி புரியும் காலத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டார். அதன் முதல் மாநாட்டினை கோலாலம்பூரில் நடத்தினார். மேலும்...