அரபுத் தமிழ் எழுத்துமுறை

(அரபுத் தமிழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அரபுத் தமிழ் எழுத்துமுறை (لسان الأروي) அல்லது அர்வி எனப்படுவது அரபு எழுத்துக்களைப் பயன்படுத்தி தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்தப்படும் முறை ஆகும். இந்த முறை இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழ் முஸ்லிம்களால் பரந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று இதன் பயன்பாடு அருகிவிட்டது.

அர்வி
வகை Abjad
மொழிகள் அரபுத் தமிழ் எழுத்துமுறை
காலக்கட்டம்
மூல முறைகள் Egyptian hieroglyphs
 → Proto-Sinaitic
  → பினீசிய எழுத்து
   → Aramaic
    → Syriac
     → Nabataean
      → அரபு எழுத்துமுறை
       → அர்வி
ஐஎஸ்ஓ 15924 Arab
Letters unique to Arwi.
அர்வி அரபுத் தமிழ் எழுத்துமுறையில் கீழக்கரை பழைய ஜும்மா பள்ளியில் உள்ள கல்லறை நடுகல்.

இஸ்லாம் மார்க்கத்தின் மொழி அரபி. ‘அரபி’ என்பதற்குப் ‘பண்பட்டது’ என்று பொருள் என இஸ்லாமியத் தமிழ்க் கலைக்களஞ்சியம் சொல்கிறது. அரபு மூதாதையர் தமிழை ‘அரவம்’ என அழைத்துள்ளனர். முஸ்ஸீம் அறிஞர்கள், தாங்கள் எழுதிய இஸ்லாம் பற்றிய தமிழ் நூல்களில் தமிழ் மொழியை ‘அற்விய்யா’ எனக் குறிப்பிட்டுள்ளனர். அறிவையும், அறத்தையும் பற்றிய இலக்கியங்கள் தமிழல் அதிகமாக இருந்தமையால் ‘அற்விய்யா’ என்ற சொல் கையாளப்பட்டது.

அரபு என்ற சொல்லே ‘அறவிய்யா' என மாறியது. ‘அறவு’ என்ற சொல்லில் ‘ப’ வுக்கு சமமான எழுத்து இல்லை. ‘ப’ விற்கு ‘வ’ என்ற எழுத்தைப் பயன்படுத்தி, ‘அறபு’- ‘அறவு’- ‘அறவிய்யா’ என்று தோன்றியுள்ளது. அறவிய்யா என்ற அரபுத் தமிழுக்கு மற்றொரு பெயருமுண்டு, ‘லைசானுல்அற்விய்யா’ ஆகும். அரபுத் தமிழை சோனகத்தமிழ் , முஸ்ஸீம்தமிழ் என்றும் கூறுவர்.

விளக்கக் குறிப்புகள்தொகு

தமிழ்நாட்டில் குடியேறிய அரபிகள் தமிழைக் கற்றுக் கொண்டதுடன் அதனை அரபி எழுத்துக்களினாலும் எழுதினர். இதுவே அரபுத் தமிழ் எனப் பெயர் பெறலாயிற்று.[சான்று தேவை] தமிழில் உள்ள ள, ழ, ண, ட போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் ஒலி இல்லாததால் அவற்றிற்கு சற்று முன்பின் சம ஒலியுள்ள அரபி எழுத்துக்களுக்கு சில அடையாளங்களை அதிகப்படியாகச் சேர்த்து அவ்வொலிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அரபுத் தமிழிலோ அரபி எழுத்துக்கள் 28 உடன் 8 எழுத்துக்கள் மேற்கொண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. அரபுத் தமிழுக்கு முன்னோடியாக இருப்பது அரபு வங்காள மொழியாகும். இதைப் பற்றி இப்னு கல்தூனும் தம்முடைய உலக வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார். இதற்கு முன்னர்த் தென் கிழக்கு ஆப்ரிக்காவில் தன்சானியா நாட்டில் சுவாஹிலி மொழி, அரபி எழுத்துக்களினாலும் எழுதப்பட்டது. மலேசியாவிலும் "ஜாவி" மொழி அரபி எழுத்துக்களால் தாம் எழுதப்பட்டு வருகிறது. துருக்கி மொழி துவக்கத்தில் அரபி லிபியில் தான் எழுதப்பட்டு வந்தது, பின்னர் முஸ்தபா கமால் காலத்திலயே அதனை உரோம லிபியில் எழுதும் பழக்கம் புகுத்தப்பட்டது. உஸ்பெக் மொழியும் அரபி லிபியிலயே எழுதப்பட்டு வந்தது. இப்போது ரோம லிபியில் எழுதப்பட்டு வருகிறது. கேரளத்திலும் அரபு மலையாளத்தில் பல நூல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மொழியான ஹிந்தியை அரபி எழுத்துக்களில் எழுதத் துவங்கியதன் விளைவாகவே உருது தோன்றியது.

அரபு தமிழில் ஏறத்தாழ நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட சமய நூல்கள் வெளிவந்துள்ளன. திருக்குரானுக்கு தமிழில் விளக்கவுரை எழுதக்கூடாது என மார்க்க விற்பன்னர்கள் பெரிதும் வற்புறுத்தி வந்ததன் காரணமாக அரபுத் தமிழில் தப்சீர்களும், ஏனைய இஸ்லாமிய நூல்களும் வெளிவரலாயின. குர்ஆனின் அரபுத் தமிழ் விரி உரைகளான தப்சீர் பத் ஹுல்கரீம், தப்சீர் பத் ஹுல் ரஹீம், புதூ ஹாதூர் ரஹ்மானியா பீதப்சீரி கலாமிர் ராப்பானியா ஆகியவை பிரசித்தி பெற்ற நூலாகும். இவை காயல்பட்டனத்திலிருந்து வெளிவந்தவை. காயல்பட்டணம் ஷாம் சிஹாபுதீன் வலி அவர்கள் அரபுத் தமிழில் பல பாமாலைகள் இயற்றியுள்ளனர். கி. பி.1889 ஆம் ஆண்டில் "கஷ்பூர் ரான் பீ கல்பில் ஜான்" என்ற ஒரு வார ஏடும், கி பி 1906 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து "அஜாயிபுல் அக்பர் (செய்தி வினோதம்) என்று ஒரு வார ஏடும் வெளிவந்துள்ளன.

பொதுவாக ஆண்களைவிட பெண்கள்தாம் இவ்வரபுத் தமிழை அதிகமாக எழுதப் படிக்க தெரிந்திருந்தனர். அக்காலத்தில் கடிதங்கள் கூட அரபுத் தமிழில் எழுதப்பட்டு வந்தன. தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் இது பிரபல்யமாக இருந்தது. தமிழ்நாட்டில் இதில் பல பாரிசி, உருது சொற்கள் கலந்து விட்ட பொழுது இலங்கையில் இது தன் நிலைகுலையாது இருந்தது. கி.பி 8 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை அரபுத் தமிழ் சிறப்புற்று விளங்கியது. அச்சுப் பொறி வந்த பின் இதன் மதிப்பு மங்கலாயிற்று. மேலும் இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் பேச்சு வழக்கில் உள்ள சாதாரண சொற்களாக இருந்ததாலும் இதனுடைய நடையும், பழங்காலத்தாயிருந்ததாலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சில முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்கள் இதனை வன்மையாகத் தாக்கினர். இழித்தும் கூறினார். அதன் காரணமாகவும் அரபி மதராசாக்களில் இது வழகொழிந்ததால் தமிழ்நாட்டில் முஸ்லிம் பொது மக்களிடத்திலும், பெண்களிடத்திலும் இந்நூல்களைப் படிக்கும் ஆர்வம் அற்று போய் விட்டது. எனினும் இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் இது இன்றும் மதிப்புடன் விளங்குகிறது." அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" என்று இதனை அங்குள்ள முஸ்லிம்கள் போற்றுகின்றனர்.[சான்று தேவை] அங்கு தோன்றிய செய்கு முஸ்தபா ஆலிம் வலி " பதுகுர் ரஹ்மான் பி தப்சீர் இல் குரான்" என்ற பெயருடன் அரபுத் தமிழில் திருக்குரானுக்கு ஒரு விரிவுரை எழுதி உள்ளார். அதில் ஐந்து அத்தியாயங்களே அச்சில் வெளிவந்துள்ளன.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கடல்வழி வணிகத்துக்குத் தமிழகம் வந்த முஸ்லீம் வணிகர்கள் இஸ்லாம் தோன்றிய காலத்திலேயே தமிழகத்தின் பெருவழி என்றழைக்கப்பட்ட பாதையில் கள்ளிக்கோட்டையில் இருந்து புலிகட் வரை பரவி வாழ்ந்து தமிழக வ்ணிகமும் இஸ்லாமியக் கொள்கைகளும் கிழக்காசியாவில் பரவக் காரணமாக இருந்தார்கள். அவர்களே அரபிக் தமிழ் வரிவடிவத்தை உருவாக்கித் தென் தமிழகத்திலும் இலங்கையிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து போற்றி வளர்த்து பள்ளிகளின் இளஞ் சிறார்களுக்கும் சிறூமிகளுக்கும் கற்பித்து வந்ததாக இணைப்பில் உள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேற்கோள்கள்தொகு

. 1.எம்.ஆர்.எம்.அப்துற்றஹீம்,இஸ்லாமிய கலைக்களஞ்சியம், முதற்பாகம்.