மாயாண்டி பாரதி

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
(ஐ. மாயாண்டி பாரதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐ. மாயாண்டி பாரதி (1917 - 24 பெப்ரவரி 2015) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், நகைச்சுவைப் பேச்சாளர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் தலைவர் என்று பல பரிமாணம் கொண்டவர்.[1] இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் 13 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த இவர், தனது 70 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊர்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களின் வழியாகப் பொதுவுடமைக் கருத்துகளைப் பரப்பி வந்தவர்.

ஐ. மாயாண்டி பாரதி
பிறப்புமாயாண்டி
1917
70, மேலமாசி வீதி, மதுரை
இறப்பு24 பெப்ரவரி, 2015 (அகவை 97–98)
இருப்பிடம்பாரதமாதா இல்லம், காக்கா தோப்பு, மதுரை
தேசியம்இந்தியர்
கல்வி10ஆம் வகுப்பு
பணிஇதழாளர்
அறியப்படுவதுஅரசியல் கட்டுரைகள்
பெற்றோர்இருளப்பன் ஆசாரியார்
தில்லையம்மாள்
வாழ்க்கைத்
துணை
பொன்னம்மாள்
பிள்ளைகள்இல்லை

பிறப்பு

தொகு

தமிழ் நாட்டில் அமைந்துள்ள மதுரை நகரின் மேலமாசி வீதியில் 70ஆம் எண் வீட்டில் வாழ்ந்த இருளப்பன் ஆசாரி – தில்லையம்மாள் இணையருக்கு 11ஆவது குழந்தையாக 1917 ஆம் ஆண்டில் பிறந்தார்.[2]

கல்வி

தொகு

மாயாண்டி தன்னுடைய கல்வியை மதுரையில் சுவீடன் பாதிரியார்கள் பெண்களுக்காகத் தொடங்கிய ஏட்டுப் பள்ளிக்கூடம் ஒன்றில் தொடங்கினார். மூன்றாம் வகுப்பு வரை அங்கே பயின்றார். ஆனால் அவரால் கேட்கவோ பேசவோ இயலவில்லை. எனவே அவரைக் காது கேட்க வாய்பேச இயலாதோர் பள்ளியில் சேர்த்தனர். அவர் இரண்டு ஆண்டுகள் பயின்றார். காது கேட்கவும் வாய் பேசவும் இயன்ற பின்னர், 1928 ஆம் ஆண்டில் மதுரை கோரிப்பாளையத்தில் அமெரிக்கன் கல்லூரி வளாகத்திற்குள் இருந்த அமெரிக்கன் மிசன் நடுநிலைப் பள்ளியில் சேர்ந்து மூன்றாம் படிவம் வரை (எட்டாம் வகுப்பு) படித்தார்.[3] பின்னர் அவரை என். எம். ஆர். சுப்பராமன் அவர்கள் மதுரை சௌராட்டிர மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துவிட ஒன்பது, பத்தாம் வகுப்புகளைப் படித்தார். தமிழ் தவிர அனைத்துப் பாடங்களிலும் இரண்டு முறை தொடர்ந்து தோல்வியடைந்ததார். அதனால் அதன் பின்னர் கல்வியைத் தொடரவில்லை.[2]

அரசியல் பணி

தொகு

மாணவத் தொண்டர்

தொகு

1930 ஆம் ஆண்டில் மரைக்காடு என்னும் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் மாயாண்டி பாரதிக்கு அண்ணனான கருப்பையா கலந்துகொண்டார்.[3] இதனால் மாயாண்டி பாரதிக்கு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. இதனால் 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை மாயாண்டி தன் மாணவ நண்பர்களுடன் சென்று வேடிக்கை பார்த்தார்.[2] அதன் பின்னர் தன் நண்பர்களோடு சேர்ந்து லஜபதிராய் வாலிபர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பின் வழியாகக் காங்கிரசு நடத்தும் போராட்டங்களுக்கு உதவத் தொடங்கினார். அப்பொழுது பாரதியார் மீது மாயாண்டி கொண்டிருந்த ஈடுபாட்டைக் கண்ட அவர்தம் நண்பர்களான சிதம்பரபாரதி, தியாகராஜசிவம் ஆகியோர் அவரது பெயரை மாயாண்டி பாரதி என மாற்றினர்.[3]

1934 ஆம் ஆண்டில் காந்தியடிகள் மதுரைக்கு அரிசன நிதி திரட்டுவதற்காக வந்தபொழுது அவரைச் சந்தித்தார்.[2]

1935 சூலை 9 ஆம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் பொழுதும் அதே காலகட்டத்தில் ஹாசிமூசா துணிக்கடையின் முன்னர் நடந்த அந்நியத்துணி விலக்குப் போராட்டம் நடந்தபொழுதும் பள்ளி மாணவரான மாயாண்டி பாரதி தன் லஜபதிராய் வாலிபர் சங்க நண்பர்களுடன் சென்று வேடிக்கை பார்த்தார். அந்நியத்துணி விலக்குப் போராட்டத்தில் அடிபட்டவர்களை மருத்துவம் நடைபெறும் இடத்திற்குக் கயிற்றுக்கட்டிலில் தூக்கிக்கொண்டு செல்வது இவர்களது பணி.[2]

காங்கிரசு ஊழியர்

தொகு

1938 ஆம் ஆண்டு முதல் மாயாண்டி பாரதி நேரடி அரசியல் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினார். அவ்வாண்டு இராசபாளையத்தில் தமிழ் மாகாண காங்கிரசு மாநாடு நடபெற்றது. அம்மாநாட்டிற்கு ‘திருப்பூர் குமரனுக்கு நினைவுச் சின்னம் எழுப்புக’ என்னும் கோரிக்கையைத் தன் நண்பர்களோடு இணைந்து பிரச்சாரம் செய்தவாரே சென்றார். அங்கே ம. கி. திருவேங்கடம், கே. இராமநாதன், சக்திதாசன் சுப்பிரமணியன் ஆகியோரின் நட்புக் கிடைத்தது. அவர்களின் அழைப்பின்பேரில் இதழியப் பணியாற்ற 1939 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாயாண்டி பாரதி சென்னைக்குச் சென்றார். காங்கிரசு இயக்கத்தில் இணைந்தார்.[2]

இந்து மகா சபை

தொகு

பின்னர் 1940 ஆம் ஆண்டில் மதுரைக்குத் திரும்பினார். 1939 ஆம் ஆண்டில் இந்திய முசுலீம்கள் பாகிசுதான் கோரினர். இதனால் இந்திய தேசிய காங்கிரசில் இருந்த முசுலீம்கள் முக்கியத்துவம் இழந்தனர். பாகிசுதான் கோரிக்கை எதிர்த்து இந்து மகா சபை உருவாக்கப்பட்டது.[சான்று தேவை] 1940 ஆம் ஆண்டில் மாயாண்டி பாரதி மதுரை இராமநாதபுரம் மாவட்ட இந்துமகாசபை அமைப்புச் செயலாளராக இருந்தார். அப்பொழுது சாவர்க்கரை மதுரைக்கு அழைத்து வந்தார்.[3]

அப்பொழுது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்தது. இளைஞர்கள் படையில் சேர்க்கப்பட்டார்கள். அதனை எதிர்த்துச் சாத்தூர் பகுதியில் போர் எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தினார். இதனால் 1940ஆம் ஆண்டில்[4] கைது செய்யப்பட்டு திருவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாதச் சிறையும் 50 ரூபாய் தண்டமும் சிவகாசி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரை, திருச்சி, வேலூர், கோயமுத்தூர் சிறைகளுக்கு மாற்றப்பட்டு 1941 மார்ச் 21 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார்.[2] மீண்டும் சிறைவாசலில் கைதுசெய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் பாதுகாப்புக் கைதியாகச் சிறையில் இருந்தார்.[4] 1942ஆம் ஆண்டில் விடுதலை பெற்ற அவர், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்பொழுது பாதுகாப்புக் கைதியாக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1943ஆம் ஆண்டில் வெளியே வந்த அவர் மீண்டும் கைது செய்யப்பட்டபொழுது, அவ்வண்டிக்கு பின்னால் ஓடிவந்த அவர் தாயார் மரணமடைந்தார். சிறையில் இருந்த மாயாண்டி பாரதியால் தன் தாயின் இறுதிச்சடங்கில் கூடக் கலந்துகொள்ள முடியவில்லை.[4]

மாயாண்டி பாரதி சிறையில் இருந்தபொழுது, இந்து மகாசபையினர் அவரிடம் இரண்டாம் உலகப் போர் எதிர்ப்பு நடவடிக்கையில் இனி ஈடுபடுவது இல்லையென மன்னிப்பு கடிதம் எழுதி அரசுக்குக் கொடுத்துவிட்டு விடுதலை ஆகும்படி கூறினர். மாயாண்டி பாரதி அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இந்து மகா சபையிலிருந்து விலகினார்.[3]

பொதுவுடைமை இயக்கத்தில்

தொகு

போர் எதிர்ப்புக் கைதியாக 1941 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் சிறையில் இருந்தபொழுது பொதுவுடைமைத் தலைவர்களான ஜமத்கனி, வி. பி. சிந்தன், கே. ஏ. தாமோதரன் ஆகியோரை மாயாண்டி பாரதி சந்தித்தார். அவர்கள் நடத்திய மார்க்சிய வகுப்பால் ஈர்க்கப்பட்டு, பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.[3]

1941ஆம் ஆண்டில் மதுரை ஹார்விமில் தொழிலாளர் போராட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அதனால் மீண்டும் கைது செய்யப்பட்டு மதுரை, திருச்சி, வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். அங்கே கே. பி. கிருஷ்ணா என்பவரிடம் மார்க்சியம் பயின்றார். தண்டனைக் காலம் முடிந்து 1942 சூலையில் விடுதலை ஆனார்.[2] மதுரையில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் ஆனார்.[3]

1942 ஆகத்து மாதம் நடைபெற்ற ஆகத்து புரட்சியில் கலந்துகொண்டதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அப்பொழுது அவர்தம் அம்மா காலமானார். அந்தச் சாவிற்கு மாயாண்டி பாரதியை அனுப்ப அன்றைய பிரிட்டிசு அரசு மறுத்துவிட்டது. பின்னர் தண்டனை முடிந்து 1944 ஆம் ஆண்டில் விடுதலையானார்.[3]

1945 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி, சுபாசு சந்திர போசின் இந்திய தேசியப் படையினரை விடுதலை செய்ய வேண்டுமெனப் போராட்டம் நடத்தியது. மாயாண்டி பாரதி அப்போராட்டத்தில் கலந்துகொண்டார். 1946 பிப்ரவரி 23 ஆம் நாள் இராயல் இண்டியன் நேவி (Royal Indian Navy - RIN) என்னும் கப்பல் படையினரின் போராட்டத்திற்கு ஆதரவாகச் சென்னையில் இந்திய பொதுவுடைமைக் கட்சி நடத்திய போராட்டத்தில் மாயாண்டி பாரதி கலந்துகொண்டார்.[2]

இந்திய விடுதலைக்குப் பின்னரும் பிரிட்டிசாரின் கையில் இருந்த தொழில்களையும் சொத்துகளையும் நாட்டுடைமையாக்க வேண்டும் எனப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்ட மாயாண்டி பாரதி 1948 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். 1949 ஆம் ஆண்டில் விடுதலையானதும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார்.[3]

நெல்லைச் சதி வழக்கு

தொகு

1950 ஆம் ஆண்டில் பொதுவுடைமைக் கட்சியினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. பலரும் கொல்லப்பட்டனர். அக்கொலைகளுக்கு பழிவாங்கும் நோக்கில், தூத்துக்குடிக்கு அருகில் உள்ள மீளவிட்டான் தொடர்வண்டி நிலையத்தில் தண்டவாளத்தைப் பிரித்துச் சரக்குத் தொடர்வண்டியின் 25 பெட்டிகளையும் 2 இந்திரங்களையும் மாயாண்டி பாரதியை உள்ளிட்ட பொதுவுடைமைக் கட்சியினர் கவிழ்த்தனர். அவ்வழக்கில் மாயாண்டி பாரதிக்கும் மேலும் பதின்மருக்கும் இரண்டை வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட 100 பேரில், மீதமிருந்தவர்களுக்கு குறைந்த கால அளவுத் தண்டனைகள் வழங்கப்பட்டன.[3] மதுரைச் சிறையில் 4ஆண்டுகள் தண்டனை அனுபவித்த மாயாண்டிபாரதி உள்ளிட்டவர்கள், தமிழகத்தில் நடந்த பெரும் போராட்டங்களுக்குப் பின்னர், 1954 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டனர்.[2]

1956 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ரோசன் பார்க் இணையர்கள் மின்சார நாற்காலியில் உட்கார வைத்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னை அமெரிக்க தூதரகத்தின் முன்னர் பொதுவுடைமைக் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் மாயாண்டி பாரதி கலந்துகொண்டார். இதனால் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறையில் இருந்தார்.[2]

1962 ஆம் ஆண்டில் இந்திய சீன எல்லைப் போரின் பொழுது, சீனாவோடு சமாதானம் செய்ய வேண்டும் எனப் பொதுவுடைமைச் கட்சியினர் போராடினர். அதன் காரணமாக மாயாண்டி பாரதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[2] 1966 ஆம் ஆண்டில் விடுதலை ஆனார்.[3]

மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியில்

தொகு

1964 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பிளவுபட்டு இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) உருவானது. மாயாண்டி பாரதி அக்கட்சியில் இணைந்தார்.

1968 ஆம் ஆண்டில் கீழவெண்மணிப் படுகொலைகளை எதிர்த்து நடத்தப்பட்ட கண்டனப் போராட்டத்தில் மாயாண்டி பாரதி 144 தடையை மீறிக் கலந்துகொண்டதனால் கைது செய்யப்பட்டார்.[2]

1985 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்துக்கு (USSR) சென்று திரும்பினார்.[3]

1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மாயாண்டி பாரதி தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதழ்ப் பணி

தொகு

1939 ஆம் ஆண்டில் சென்னைக்குச் சென்ற மாயாண்டி பாரதி முதலில் திரு. வி. க. ஆசிரியராக இருந்த நவசக்தி இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். அங்கு பரலி சு. நெல்லையப்பரைச் சந்தித்தார். அதே ஆண்டில் லோகசக்தி என்னும் இதழில் மாயாண்டி பாரதி தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.[3] அவ்விதழில் 1939 அக்டோபர் 1 ஆம் நாள் போருக்குத் தயார் என்னும் கட்டுரையை எழுதினார்.[2] இக்கட்டுரையை வெளியிட்டதற்காக அவ்விதழுக்கு 750 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அதனைக் கட்ட முடியாததால் அவ்விதழ் நின்றுபோனது.

எனவே மாயாண்டி பாரதி உள்ளிட்ட இளைஞர்கள் இணைந்து பாரதசக்தி என்னும் இன்னொரு இதழைத் தொடங்கினர். இவ்விதழில் 1939 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன், சுபாஷ் சந்திரபோசு, எம். என். ராய். மாசேதுங் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகளை எழுதினார். 1939ஆம் ஆண்டில் படுகளத்தில் பாரததேவி, கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன்[4] ஆகிய கட்டுரைகளை எழுதியதற்காகக் கைது செய்யப்பட்டார். தண்டனை முடிந்து வெளியே வந்தபின்னர் அவ்விதழில் 1940 ஆம் ஆண்டில் ‘பொதுவுடைமை ஏன் வேண்டும்?’ என்னும் கட்டுரையை எழுதினார். இதற்காக மாயாண்டி பாரதியை கைதுசெய்யக் காவலர்கள் வந்தனர். அவர்களிடமிருந்து தப்பி, மாயாண்டி பாரதி மதுரைக்கு வந்தார்.[2]

1940 முதல் 1944 வரை பரலி சு. நெல்லையப்பர் நடத்திய லோபாகாரி உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். 1944ஆம் ஆண்டு பி. இராம்மூர்த்தியின் அழைப்பின்பேரில் சென்னைக்குச் சென்று 1964 ஆகத்து 15 ஆம் நாள் வரை ஜனசக்தியில் துணையாசிரியராகப் பணியாற்றினார்.[3] பின்னர் 1966 ஆம் ஆண்டு முதல் தீக்கதிர் இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார்.[2] 1990 ஆம் ஆண்டில் அவ்விதழிலிருந்து ஓய்வுபெற்றார்.[3]

நூல்கள்

தொகு

மாயாண்டி பாரதி பல்வேறு இதழ்களில் எழுதிய பல்வேறு கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் பின்வரும் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன:

  1. படுகளத்தில் பாரதமாதா (1939)
  2. தூக்கு மேடைத் தியாகி பாலுவின் இறுதி நாட்கள்
  3. போருக்குத் தயார்!
  4. விடுதலைப் போரில் வெடிகுண்டுகளும் வீரத் தியாகங்களும் (2012)
  5. அரசு என்றால் என்ன?

ஜனசக்தியில் கண்ணோட்டம் என்னும் பகுதியிலும் தீக்கதிரில் வாழும் கேடயம் என்னும் பகுதியிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.[2]

மாயாண்டி பாரதி எழுதிய சில கட்டுரைகள்:

  • செந்தமிழ் நாட்டு இளந்தமிழ் வீரனே! தீராதிதீரனே!! (1939, லோகசக்தி)
  • போருக்குப் புறப்படு! (1939, லோகசக்தி)
  • சுதந்திரப் போருக்கு அழைப்பு! (1939, லோகசக்தி)
  • கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன்! (1939, பாரதசக்தி) (வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி முதன்முறையாக எழுதப்பட்ட கட்டுரை இதுதான்.)

குடும்பம்

தொகு

மாயாண்டி பாரதி, எட்டயபுரத்தில் பிறந்த பொன்னம்மாள் என்பவரை 1954ஆம் ஆண்டில் மணந்தார். இவ்விணையருக்கு குழந்தைகள் இல்லை.[2]

மறைவு

தொகு

மாயாண்டி பாரதி மதுரை காக்காதோப்பு சந்தில் உள்ள பாரதமாதா இல்லத்தில் தன் மனைவி பொன்னம்மாளுடன் வசித்து வந்தார். உடல் நலக் குறைவு காரணத்தால் மாயாண்டி பாரதி 2015 பெப்ரவரி 24 அன்று காலமானார்[5]. மறைவின் போது அவர் வயது 98. அவருடைய மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. மாயாண்டி பாரதி தேவர் , போருக்குத் தயார்!, 2002, மதுரை பக். 4
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 ஏறுனா ரயிலு எறங்குனா செயிலு, மாயாண்டி பாரதியின் பேட்டி, செப்டம்பர் 2010 உங்கள் நூலகம் இதழ்
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 தீராநதி, 2011 ஜனவரி
  4. 4.0 4.1 4.2 4.3 ஏறினால் ரயில், இறங்கினால் செயில் வருது! திரும்பிப் பார்க்கிறார் தியாகி மாயாண்டி பாரதி, தினமலர் 9-8-2014 பக்.15
  5. சுதந்திரப் போராட்ட வீரர் ஐ. மாயாண்டி பாரதி காலமானார், பிபிசி, பெப்ரவரி 24, 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயாண்டி_பாரதி&oldid=3942108" இலிருந்து மீள்விக்கப்பட்டது