கனகசபை சிவகுருநாதன்

கனகசபை சிவகுருநாதன் (டிசம்பர் 20 1920 - சனவரி 13 2003) கசின் எனும் பெயரால் நன்கு அறியப்பட்ட பல்துறை எழுத்தாளரும், சமூக சேவையாளருமாவார். “சட்டம்பியார்” என்ற புனைப் பெயரிலும் இவர் எழுதியுள்ளார்.

கனகசபை சிவகுருநாதன்
Kanaka sabai Sivakurunathan.jpg
பிறப்புகனகசபை சிவகுருநாதன்
டிசம்பர் 20 1920
புலோப்பளை,யாழ்ப்பாணம்
இறப்புசனவரி 13 2003
தேசியம்இலங்கைத் தமிழர்
மற்ற பெயர்கள்கசின், சட்டம்பியார்
கல்விஅச்சுவேலி மத்திய மகாவித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
செல்லம்மா
பிள்ளைகள்புஷ்பராணி, புஷ்பநாதன், செல்வராணி, சபாநாதன், கேதீஸ்வரநாதன்

வாழ்க்கைக் குறிப்புகள்தொகு

யாழ்ப்பாண மாவட்டத்தில் புலோப்பளையில் கனகசபை சேதுப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியினை உசன் இராமநாதன் கல்லூரி, அச்சுவேலி மத்திய மகாவித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பெற்றார். 1940 ஆம் ஆண்டு திருநெல்வேலி ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சிக்காக சேர்ந்தார். 1950ஆம் ஆண்டில் பண்டிதர் பரீட்சை எழுதி அதில் சித்தியடைந்தார். இவரின் மனைவி செல்லம்மா. பிள்ளைகள்: புஷ்பராணி, புஷ்பநாதன், செல்வராணி, சபாநாதன், கேதீஸ்வரநாதன்.

தொழில் நடவடிக்கைதொகு

1943 ஆம் ஆண்டு ஆசிரியராக வெளியேறி வவுனியாவில் தனது பணியை ஆரம்பித்தார். செட்டிக்குளம், மன்னார், மத்துகமை, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஆசிரியப்பணி தொடர்ந்தது. 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1978ஆம் ஆண்டு சேவையிலிருந்து இளைப்பாறும்வரை உடுத்துறை மகாவித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றினார்.

சமயப்பணிதொகு

‘கசின்’ சிவகுருநாதன் சரசாலையில் வசிக்கும்போது இராமாவில் பிள்ளையார் கோவில் திருப்பணி, மட்டுவில் அம்மன் கோவில் திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதிபர் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தொண்ணூறுகளில் சில ஆண்டுகள் மன்னார் திருக்கேதீச்சரக் கோவலில் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்தினார். இலங்கை இராணுவம் திருக்கேதீச்சரத்தை முற்றுகையிட்டபோது கோயிலில் கடமை புரிந்த ஊழியர்கள் எல்லோரும் வெளியேறி விட்ட நிலையில் கோவிலைப் பூட்டி இறுதியாக அங்கிருந்து இவர் வெளியேறியனார்.

தமிழ்ப்பணிதொகு

1963 ஆம் ஆண்டு கொழும்பில் கடமையாற்றியபோது இலங்கை கலை இலக்கிய பேரவையின் தலைவராக விளங்கினார். இவர் தலைவராக இருந்தபோது இலக்கியப் பேரவை பல இலக்கிய விழாக்களையும் இலக்கியக் கலந்துரையாடல்களையும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. தனது இறுதிக் காலங்களில் பம்பலப்பிட்டியில் வாழ்ந்தபோது கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அங்கு பால பண்டித வகுப்புகளில் இலவசமாக விரிவுரையாற்றினார். அவ்வகுப்புகளில் அரச சேவையில் பணியாற்றிய பலர் மாணவர்களாக விளங்கினர்.

ஆக்க இலக்கிய ஈடுபாடுதொகு

இவர் 1946ஆம் ஆண்டில் இலக்கியத்துறையில் காலடியெடுத்து வைத்துள்ளார். இவரின் கன்னியாக்கத்தை ஈழகேசரி பிரசுரித்துள்ளது. ஈழகேசரி உருவாக்கிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். “கசின்” எனும் புனைப்பெயரில் முன்னைய இலக்கியத் தலை முறையினருக்கு நன்கு அறிமுகமான சிவகுருநாதன் ஆரம்ப காலங்களில் ஈழத்தில் அனைத்து பத்திரிகைகளிலும் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என நூற்றுக்கணக்கான ஆக்கங்களை எழுதியுள்ளார்.

புதினங்கள்தொகு

கசினின் முதலாவது ஆக்க இலக்கியமான “வண்டியில் வளர்ந்த கதை” தொடர் புதினமாக 1947 ஆம் ஆண்டில் ஈழகேசரியில் வெளியானது. அப்புதினத்தில் அவர் கையாண்ட உத்தி காலத்தின் புதுமையானதாக சித்திரிக்கப்பட்டது. இவர் பிற்காலத்தில்

 • சகட யோகம்,
 • இராசமணிச் சகோதரிகள்,
 • இதய ஊற்று,
 • தேடிவந்த செல்வம்,
 • கற்பகம்,
 • நிதானபுரி,
 • சொந்தக்காரன்,
 • கண்டெடுத்த கடிதங்கள் என பல புதினங்களை எழுதியுள்ளார்.

சிறுகதைகள்தொகு

நாவல் இலக்கியத்தைப் போலவே சிறுகதை இலக்கியத்திலும் இவர் புதுமைகளை சாதித்துள்ளார். மணியோசை, நூலும் நூற்கயிறும், இது காதலல்ல, பச்சைக் கிளி, பஞ்சும், நெருப்பும், சிலந்திவளை, தமிழன்தான், வனசஞ்சாரம், குந்து மாணிக்கம் என்பன இவரின் சிறுகதைகளுள் குறிப்பிடத்தக்கவை. ஈழத் தமிழர்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுமுறை போன்றவற்றை இவரின் சிறுகதைகளில் காண முடியும். இலங்கையின் அனைத்து தேசிய பத்திரிகைகளிலும் போல இவரின் ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.

இவரால் வெளியிடப்பட்ட நூல்கள்தொகு

இவரது நூலுருவான படைப்புகளின் விபரம் வருமாறு:

 • நிதானபுரி

கசின் எழுதிய நான்கு குறுநாவல்களின் தொகுதி இது. நிதானபுரி, கற்பகம், சொந்தக்கால், தேடிவந்த செல்வம் ஆகிய நான்கு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. முதற்பதிப்பு 1995 டிசம்பர்

 • காதலும் கடிதமும்.

இந்நூலில் வண்டியில் வளர்ந்த கதை, கண்டெடுத்த கடிதங்கள் ஆகிய இரண்டு கதைகள் இடம்பெற்றுள்ளன. முதற்பதிப்பு 1995

 • கசின் சிறுகதைகள்.

இந்நூலில் இவரால் எழுதப்பட்ட 15 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. வெளியீடு : யாழ். இலக்கியவட்டம், முதலாம் பதிப்பு: 1999 ஏப்ரல்

 • குமாரி இரஞ்சிதம்.

இது ஒரு நாவலாகும். வெளியீடு கண்டி தமிழ் மன்றம் முதற்பதிப்பு, 2000 செப்டம்பர் மாதம் வெளிவந்தது.

 • சகடயோகம்.

இதுவும் ஒரு நாவலாகும். வெளியீடு பம்பலப்பிட்டி சந்ரா வெளியீட்டகம் முதற்பதிப்பு 2001 சூன்

கௌரவங்கள்தொகு

 • இவரது இலக்கியச் சேவையைப் பாராட்டி 1994ஆம் ஆண்டு இலக்கியப் பேரவை யாழ் மண்ணில் விழா எடுத்து இவரைக் கௌரவித்தது.
 • இவரது தமிழ்ப் புலமையைப் பாராட்டி கொழும்பு தமிழ்ச்சங்கம் 1999ஆம் ஆண்டு நடாத்திய புலவர், வித்துவான்கள் மாநாட்டில் இவருக்கு ``இயற்றமிழ் வித்தகர்’’ என பட்டமளித்து கௌரவித்தது.
 • 2000ஆம் ஆண்டு இவரது இலக்கியப் பணிக்காக இலங்கை அரச கலாசாரத் திணைக்களம் ``கலாபூசணம்’’ விருது வழங்கி கௌரவித்தது.

ஆதாரம்தொகு

 • இவர்கள் நம்மவர்கள்- பாகம் 05 - கலாபூஷணம் புன்னியாமீன் (பக்கம் 125-135) ISBN 978-955-1779-17-7
 • கசின் நினைவலைகள் - பொ. ஆனந்தலிங்கம்

வெளிஇணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகசபை_சிவகுருநாதன்&oldid=2993845" இருந்து மீள்விக்கப்பட்டது