கரகாட்டக்காரன் (திரைப்படம்)

கங்கை அமரன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கரகாட்டக்காரன் (Karakattakkaran) ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த திரைப்படம். இத்திரைப்படம் ஜூன் 16, 1989ல் வெளியானது. இத்திரைப்படத்தில் கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்பட வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது. இளையராஜாவின் கிராமிய இசையில் கரகாட்டக் கலைக்கு புத்துயிரும் மதிப்பும் பெற்றுத்தந்த திரைப்படமாகும்.

கரகாட்டக்காரன்
கரகாட்டக்காரன்
இயக்கம்கங்கை அமரன்[1]
தயாரிப்புகருமாரி கந்தசாமி
ஜெ. துரை
கதைகங்கை அமரன்
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், காந்திமதி
ஒளிப்பதிவுஅ.சபாபதி
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்விஜயா மூவிஸ்
விநியோகம்விஜயா மூவிஸ்
வெளியீடுஇந்தியா 16 சூன் 1989
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைக்கரு

தொகு

நகைச்சுவை கலந்த காதல் கதை. இரு கரகாட்டக்கலைஞர்களின் காதலை மையப்படுத்தி, கோர்வையான திரைக்கதையில் உண்டான நகைச்சுவைத் திரைப்படம்.

அக்கிராமத்தில் காமாட்சி கரகாட்டக் கலையில் பயிற்சி பெற்ற வல்லாள். அவ்வூர் பண்ணையார் அவளின் மேல் மோகம் கொண்டு விழைய அவளால் அவமதிக்கப்படுகிறான். பகையுணர்வின் காரணமாக பண்ணையார் அந்த வருட திருவிழாவிற்கு வெளியூர் ஆட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்து காமாட்சியின் ஆட்டத்திற்கு தடை விதிக்கிறான். சேந்தம்பட்டியைச் சேர்ந்த முத்தையா கரகாட்டக் குழுவினர் அவ்வூருக்கு விஜயம் செய்கின்றனர்.

காமாட்சி சிறந்த ஆட்டக்காரி எனக் கேள்வியுறும் முத்தையா, அவளைக் காணத் துடிக்கிறான். அன்றைய திருவிழாவில் நடனமாடும் முத்தையா, அதைக் காண வந்த காமாட்சியைக் கண்டு காதல் வயப்படுகிறான். சிறந்த ஆட்டத்திற்காக அவ்வூர் மூத்த ஆட்டக்காரரான கனகாவின் தந்தையால் கௌரவிக்கப்படுகிறான். மேலும் சிறப்பு விருந்திற்கும் அழைப்பைப் பெறுகிறான். விருந்து அவர்களின் காதலை இன்னும் வலுவடையச் செய்கிறது.

ஊர் திரும்பும் முத்தையா, தாயைக்காண வருகிறான். ஆனால் தன் தங்கையிடம் வம்பிழுத்த இறைச்சிக் கடைக்காரனுக்கு பாடம் புகட்ட அவள் சென்றிருப்பதை உணர்ந்து அவ்விடம் விரைகிறான். அங்கே நடைபெற்ற சண்டையில் அவனைத் தோற்கடித்து வீடு திரும்புகிறான். சில நாட்களுக்குப் பிறகு காமாட்சியைக் காண அவளூருக்கு செல்ல எண்ணுகிறான். அவளையும், அவளின் தந்தையையும் கண்டுரையாடுகிறான். அது மட்டுமல்லாமல் பேச்சு வழக்கால் முத்தையாவும், காமாட்சியும் தங்களிடையே ஆட்டக் கரகத்தில் போட்டியிட சம்மதிக்கின்றனர்.

போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக இறைச்சிக் கடைக்காரன் மறைந்திருந்து தாக்குகிறான், அதைத் தடுக்கச் சென்ற காமாட்சி காயமுறுகிறாள். பதறி ஓடிவரும் காமாட்சியின் தந்தை மகளின் நிலையை எண்ணி கதறுகிறார். அவ்வண்ணமே வரும் முத்தையாவின் தாயார் தன் தம்பி(காமாட்சியின் தந்தை)யைக் கண்டு கோபமுறுகிறாள். தான் யாரை இவ்வளவு நாட்கள் காண ஒண்ணாது இருந்தவரைக் கண்டதாய் சாடுகிறாள். இருப்பினும் முத்தையா, தன்னைக் காப்பாற்றிய காமாட்சிக்கு சிகிச்சை அளிக்கக்கோருகிறான். ஆயினும் தாயின் வற்புறுத்தலினால் அவ்விடத்திலிருந்து விடைபெற மனமில்லாமல் காமாட்சியின் தந்தையிடம் ஆறுதல் கூறி நகர்கிறான்.

காமாட்சியின் நினைவால் வாடும், முத்தையா அவளைக் காண ஏங்குகிறான். அவளைக் காண அவளூர் வரும்போது அவளது மாமான் பலராமனால் தடுக்கப்படுகிறான். விரக்தியுடன் வீடு திரும்புகிறான். தாயிடம் தன் மாமனைப் பற்றி வினவும் போது அவர் திருடன் என்றும், தன் கணவர் நலிவுற்ற போது மருத்துவ செலவிற்காக சில நகைகளை அவரிடம் கொடுத்தனுப்பியதாகவும், அவர் திரும்பாமல் தன் கணவரின் இறப்புக்கு காரணமானதாகவும் சாடுகிறாள். முத்தையா நிலையை எண்ணி வருத்தமுறுகிறான்.

தவில் வித்வான் மற்றொரு ஊரின் திருவிழாவிற்கு காமாட்சி ஆட வரும் செய்தியை முத்தையாவிடம் கூறுகிறான். இருவரும் அங்கு செல்லும் போது சந்திக்கின்றனர். காமாட்சி மாமானால் இழுத்துச் செல்லப்படுகிறாள். துயருற்ற காமாட்சி தற்கொலைக்கு முயலுகிறாள். மகளின் நிலையை உணர்ந்து, காமாட்சியின் தந்தை தனது அக்காவிடம் தான் நிரபராதி என்பதை எடுத்துரைக்கிறார். தான் நகைகளை விற்கச் சென்ற போது அவை திருட்டு நகைகள் என காவல்துறையால் கைது செய்யப்பட்டு 7 வருடம் சிறை வாசம் சென்றதாகவும் கூறுகிறார். முத்தையாவின் தாயாரும் நகைகள் தனது கணவரிடம் அவரது நண்பரால் கொடுத்து வைக்கப்பட்டதாகவும் அவரும் கள்வர் அல்லர் என்பதை விளக்குகிறார்.

ஒருவாறாக முத்தையாவிற்கும், காமாட்சிக்கும் திருமண நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனாலும் சின்ராசு பண்ணையாரின் தூண்டுதலால் காமாட்சியின் மாமன் பலராமன் அதைத் தடை செய்கிறான். மேலும் சின்ராசு, காதலர்கள் இருவரும் தற்செயலாக கோயிலில் சந்திப்பதை தெய்வகுற்றம் நடந்துவிட்டதாக ஊர் மக்களை நம்ப வைக்கிறான். அதற்கு தண்டனையாக தீமிதித்து உறுதி செய்யும்படி சூழ்ச்சி செய்கிறான்.

திருந்திய பலராமன் சின்ராசுவிடம் முறையிட அவனும் பண்ணையில் கட்டிவைக்கப்படுகிறான். அங்கிருந்து தப்பிக்கும் பலராமன் காளையை அனுப்பிகிறான். அது சின்ராசுவை குண்டத்தில் தள்ளிவிடுகிறது. தன் தவறை உணர்ந்து தீக்காயங்களுடன் தப்பிக்கிறான். இறுதியில் காதலர்கள் திருமணத்தில் இணைகிறார்கள்.

திரைவிமர்சனம்

தொகு
  • "தில்லானா மோகனாம்பாள்" கதையை ஒத்திருந்த போதும், இத்திரைப்படம் கிராமிய வாசனையும், நகைச்சுவை ரசமும் பெற்று கரகாட்டத்தை முன்னிறுத்தி கிராமக் காவியமாக படைக்கப்பட்டிருந்தது.
  • பழம்பெரும் நடிகையான தேவிகாவின் புதல்வி கனகாவிற்கு இது முதல் தமிழ்த்திரைப்படம் [2].
  • நகைச்சுவை இணை நாயகர்களான கவுண்டமணி-செந்திலின் நகைச்சுவைப் பயணம் இத்திரைப்படத்தினின்று புத்துயிரும் ஓட்டமும் பெற்றது.
  • இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த "மாங்குயிலே பூங்குயிலே" பெரும் அனைத்து தரப்பினரயும் கவர்ந்து வெற்றி பெற்ற பாடலாகும்.

கதாபாத்திரங்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இப்படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா.[3]

வ.எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் ஒலி நேரம் (ம:நி)
1 இந்த மான் உந்தன்.. இளையராஜா, கே. எஸ். சித்ரா கங்கை அமரன் 04:35
2 குடகு மலைக் காற்றில்.. மனோ, கே. எஸ். சித்ரா 04:31
3 மாங்குயிலே பூங்குயிலே.. (ஆண்) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:37
4 மாங்குயிலே பூங்குயிலே.. (இருவர்) எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:25
5 மாரியம்மா.. மாரியம்மா.. மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா 04:31
6 முந்தி முந்தி வினாயகரே.. மனோ, கே. எஸ். சித்ரா 03:20
7 நந்த வனத்தில் ஒரு.. கங்கை அமரன் 01:05
8 ஊரு விட்டு ஊரு வந்து மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் 04:34
9 பாட்டாலே புத்தி சொன்னான்... இளையராஜா இளையராஜா 04:37

சாதனை

தொகு
  • இத்திரைப்படம் மதுரை திரையரங்கில் ஒரு வருடத்திற்கும் மேல் (425 நாட்கள்) ஓடி சாதனை படைத்தது[4]. இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றி அடைந்தன.
  • இப்படம் சப்பான், உருசியா போன்ற நாடுகளிலும் திரையிடப்பட்டது.
  • தமிழக அரசின் சிறப்பு விருது 1989-ம் ஆண்டு கரகாட்டக்காரனுக்கு கிடைத்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Karakattakaran, IMDb, பார்க்கப்பட்ட நாள் 2008-11-17
  2. http://cinema.maalaimalar.com/2012/05/04182243/karakattakaran-movie-ramarajan.html
  3. "Karagattakaran Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  4. http://chennaionline.com/movies/cine-buzz/20130126030130/Lifetime-Achievement-Award-for-Ramarajan.col