குவாலியரின் தோமர்கள்
குவாலியரின் தோமர்கள் (Tomaras of Gwalior) 14-16 ஆம் நூற்றாண்டுகளில் மத்திய இந்தியாவில் உள்ள குவாலியர் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை ஆண்ட இராஜபுத்திர வம்சத்தினர் ஆவர். இவர்கள் குவாலியரில் கலாச்சார நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தற்காக அறியப்பட்டவர்கள்.
தோமர்கள் முதலில் தில்லி சுல்தானகத்தின் துக்ளக் வம்சத்தின் நிலப்பிரபுக்களாக சிலகாலம் இருந்தனர். 1390-களில், இவர்கள் குவாலியரின் கட்டுப்பாட்டைப் பெற்று, அடுத்தடுத்த ஆண்டுகளில் சுதந்திரமடைந்தனர். இவர்கள் தங்கள் சுதந்திரத்தைத் தக்கவைக்க தில்லி ஆட்சியாளர்களுடன் பல போர்களை நடத்தினர்.
ஆதாரங்கள்
தொகுகுவாலியர் கோட்டை கல்வெட்டுகள், முஸ்லிம் எழுத்தாளர்களின் சமகால வரலாறுகள், குவாலியர் பற்றிய பல்வேறு வரலாற்று புத்தகங்கள் (குவாலியர் -நாமாக்கள் என அழைக்கப்படுகிறது) ஆகியவற்றிலிருந்து குவாலியரின் தோமரர்களைப் பற்றிய பெரும்பாலான தகவல்கள் கிடைத்துள்ளன. இவற்றில் கோபாச்சலா-அக்யானா , குல்யாத்-இ-குவாலியாரி ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கவையாகும். [1]
வரலாறு
தொகுதில்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக் குவாலியர் பகுதியில் இருந்த பிரதிகாரத் தலைவர்களில் கடைசிவரை அடிபணியச் செய்த பிறகு குவாலியரைச் சுற்றி தோமர்கள் தோன்றினர்.
வீரசிம்மன்
தொகுகுவாலியரின் ஆரம்பகால தோமர் ஆட்சியாளர் வீரசிம்ம-தேவன் என்பவராவார். 1390-91 இல், துக்ளக் ஆட்சியாளர் முகமது ஷா (ஆட்சி 1390-1394) இட்டாவா விற்கு வருகை புரிந்ததாக யாஹ்யா-பின்-அஹ்மத் சிர்ஹிந்தியின் தாரிக்-இ- முபாரக்சாகி குறிப்பிடுகிறது. அங்கு, வீரசிம்மனுக்கு ஒரு பரிசு கொடுத்து திருப்பி அனுப்பினார். [2] 1391-92 இல், இவரும் சில நிலப்பிரபுக்களும் சுல்தானுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். பதிலுக்கு, சுல்தானகத்தின் தளபதி இஸ்லாம் கான் இவரை தோற்கடித்து, இவரது செல்வத்தை கொள்ளையடித்தார். [3]
உத்தாரணன்
தொகுவீரசிம்மனுக்குப் பிறகு உத்தராண-தேவன் ( 1400-1402) ஆட்சி செய்தார். இந்த இரண்டு ஆட்சியாளர்களுக்கும் இடையிலான உறவு உறுதியாக இல்லை. சில ஆதாரங்கள் உத்தாரணனை வீரசிம்மனின் மகனாகக் குறிப்பிடுகின்றன. சில பதிவுகள் இவரை வீரசிம்மனின் சகோதரர் என்று குறிப்பிடுகிறது. பிற முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் இவரைக் குறிப்பிடவில்லை. மேலும் இவரது வாரிசான விராமனை வீரசிம்மனின் மகன் என்று பெயரிட்டனர். கோபாச்சலா-அக்யானாவின் உஜ்ஜைன் கையெழுத்துப் பிரதியும் இவரது பெயரைத் தவிர்க்கிறது. 'யசோதர -சரிதை' விராமரின் ஆட்சியின் போது இயற்றப்பட்டது. எனவே இது மிகவும் நம்பகமானது. எனவே, உத்தாரணன் வீரசிம்மனின் மகனாக இருக்கலாம். [4]
விராமன்
தொகுஉத்தாரணனுக்குப் பிறகு விராம-தேவன் (1402-1423) ஆட்சிக்கு வந்தார். [5] இவர் பதவியேற்ற நேரத்தில், நசீர்-உத்-தின் முகமது ஷா துக்ளக்கின் மந்திரி மல்லு இக்பால் கான், சுதந்திரத்தை அறிவித்த தலைவர்களை அடிபணிய வைப்பதன் மூலம் தில்லி சுல்தானகத்தின் கௌரவத்தை புதுப்பிக்க முடிவு செய்தார். 1402 இல், அவர் குவாலியர் கோட்டையை முற்றுகையிட்டார்; அவரால் கோட்டையை கைப்பற்ற முடியவில்லை என்றாலும், அவர் சுற்றியுள்ள பகுதிகளை சூறையாடினார். அடுத்த ஆண்டு, அவர் கோட்டை மீது மற்றொரு தாக்குதலை நடத்தினார். [6] அப்துல் காதிர் பதாயுனியின் கூற்றுப்படி, அவர் கோட்டையைக் கைப்பற்ற முடிந்தது. இருப்பினும், வரலாற்றாசிரியர் கிஷோரி சரண் லால் இதனை மறுக்கிறார். ஏனெனில் இந்த கோட்டை பிற்காலத்தில் தோமர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. [6]
சிறிது காலம் கழித்து, விராமன் இக்பால் கானுக்கு எதிராக ஒரு கூட்டணியில் சேர்ந்தார்: இவரது கூட்டாளிகளில் இட்டாவா ஆட்சியாளர் ராய் சுமர் மற்றும் ராய் ஜல்பஹர் ஆகியோர் இருந்தனர். 1404 இல் இக்பால் கான் இவர்களுக்கு எதிராக அணிவகுத்துச் சென்றபோது, கூட்டாளிகள் இட்டாவாவில் தஞ்சம் புகுந்தனர், மேலும் 4 மாத நீண்ட முற்றுகைக்குப் பிறகு இக்பால் கானுடன் சமாதானம் செய்து கொண்டனர். [7]
விராமனின் ஆட்சி குவாலியரில் சைன அறிஞர்களின் எழுச்சியைக் கண்டது. [5] விராமனின் மந்திரி குசராஜா காயஸ்த கவிஞரான பத்மநாபனை யசோதர சரிதையை எழுத ஊக்குவித்தார். [8] குசராஜா குவாலியரில் சந்திரபிரபா கோயிலையும் நிறுவினார். இந்த கோவில் முகலாயர் காலத்தில் முஸ்லிம் துறவி முகமது கவுசின் கல்லறையால் மாற்றப்பட்டது. [9] சமகாலக் கவிஞன் எவரும் பண்டைய கவிஞர்கள் எழுதிய கவிதைகளுடன் ஒப்பிடக்கூடிய கவிதையை இயற்ற முடியாது என்று விராமாவின் அரசவையினர் அறிவித்தபோது, ஒரு சவாலாக 'ஹம்மிர மகாகாவியம் என்பதை இயற்ற அவர் தூண்டப்பட்டதாக சைன அறிஞர் நயச்சந்திரா கூறுகிறார். இந்த அறிக்கையின் அடிப்படையில், பொ.ச.1420 -இல் தோமர்களின் அரசவையில் கவிதை எழுதப்பட்டது என்று பிலிஸ் கிரானோஃப் கருதுகிறார். [10]
துங்கரசிம்மனும் கீர்த்திசிம்மனும்
தொகுதுங்கரசிம்மன் மற்றும் கீர்த்திசிம்மன் ஆட்சியின் போது, காஷ்ட சங்கத்தின் சைன பட்டாரகர்கள் முக்கியத்துவம் பெற்றனர். [5]
குவாலியர் கோட்டைக்குள் 1500-க்கும் மேற்பட்ட சைன பாறை சிற்பங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை 1440 மற்றும் 1473-க்கு இடையில் துங்கரசிம்மன் (கி.பி. 1425-59) மற்றும் கீர்த்திசிம்மன் (கி.பி. 1459-80) காலத்தில் செதுக்கப்பட்டவை. [11] சமணக் கவிஞரான ராய்டுவின் கூற்றுப்படி, கோபாலகிரி (குவாலியர் கோட்டை மலை) ஒரு சைன புனித இடமாக கமலசிம்மன் என்ற சைனத் துறவி தொடங்கினார். இந்த முன்முயற்சி ஒரு அரச திட்டம் இல்லை என்றாலும், துங்கரசிம்மனும் கீர்த்திசிம்மனும் கமலசிம்மனுக்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்கினர் என்று ராய்டு கூறுகிறார். [12] துங்கரசிம்மாவின் அழைப்பின் பேரில் ராய்டு குவாலியர் அரசவையில் தங்கினார். [13] துங்கரசிம்மாவின் மந்திரி அசபதி ராய்டுவின் ஆதரவாளராக இருந்தார். [12]
கீர்த்திசிம்மனும் கல்யாணமல்லனும்
தொகு1451 இல், லௌதி வம்சம் தில்லி சுல்தானகத்தைக் கைப்பற்றியது. ஆரம்பத்தில், பஹ்லுல் லௌதி குவாலியருடன் நட்புறவைப் பேணி வந்தார். மேலும் குவாலியர் தில்லிக்கும் மால்வா சுல்தானகத்திற்கும் இடையில் ஒரு இடையக மாநிலமாக செயல்பட்டது. இருப்பினும், 1466 இல், குவாலியரின் ஆட்சியாளர் கீர்த்திசிம்மன், தில்லிக்கு எதிரான போரில் ஜான்பூர் ஆட்சியாளர் உசைன் ஷா ஷர்கியை ஆதரித்தார். குவாலியர் ஆட்சியாளர் உசைன் ஷாவிற்கு ஆட்களையும் பணத்தையும் வழங்கியது மட்டுமல்லாமல், தில்லிக்கு அவர் அணிவகுத்த போது கல்பிக்கு அழைத்துச் சென்றார். இது பஹ்லுல் லௌதியை குவாலியரின் எதிரியாக்கியது. அவர் 1479 இல் உசைன் ஷர்கியை தோற்கடித்தார். ஆனால் குவாலியரைத் தாக்க 1486 இல் கீர்த்திசிம்மனின் வாரிசான கல்யாணமல்லன் இறக்கும் வரை காத்திருந்தார். [14]
மானசிம்மன் (மான் சிங் தோமர்)
தொகுபுதிதாக முடிசூட்டப்பட்ட மானசிம்மன் (முஸ்லிம் நாளிதழ்களிலும் வடமொழி இலக்கியங்களிலும் மான் சிங் தோமர் என்று அழைக்கப்படுகிறார்) தில்லியில் இருந்து படையெடுப்பிற்கு தயாராக இல்லை. மேலும் பஹ்லுல் லௌதிக்கு 800,000 தாங்காக்களை (காசுகள்) காணிக்கையாக செலுத்துவதன் மூலம் போரைத் தவிர்க்க முடிவு செய்தார். [14] 1489 இல், சிக்கந்தர் லௌதி, பஹ்லுல் லௌதிக்குப் பிறகு தில்லியின் சுல்தானானார். 1500 ஆம் ஆண்டில், சிக்கந்தர் லௌதியை வீழ்த்துவதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்த தில்லியைச் சேர்ந்த சில கிளர்ச்சியாளர்களுக்கு மானசிம்மன் புகலிடம் அளித்தார். சுல்தான், மானசிம்மனைத் தண்டிக்க விரும்பி, தனது எல்லையை விரிவுபடுத்த, குவாலியருக்கு ஒரு இராணுவப் பயணத்தைத் தொடங்கினார். 1501 இல், அவர் குவாலியரின் சார்புடைய தோல்பூரைக் கைப்பற்றினார். அதன் ஆட்சியாளரான விநாயக-தேவன் குவாலியருக்கு தப்பி ஓடினார். [15]
சான்றுகள்
தொகு- ↑ Sant Lal Katare 1975, ப. 344.
- ↑ Sant Lal Katare 1975, ப. 347.
- ↑ Sant Lal Katare 1975, ப. 348.
- ↑ Sant Lal Katare 1975, ப. 353.
- ↑ 5.0 5.1 5.2 Kailash Chand Jain 2010, ப. 1044.
- ↑ 6.0 6.1 Kishori Saran Lal 1963, ப. 49.
- ↑ Kishori Saran Lal 1963, ப. 52.
- ↑ Kalyan Kumar Chakravarty 1984, ப. 113.
- ↑ Kalyan Kumar Chakravarty 1984, ப. 44.
- ↑ Phyllis Granoff 2006, ப. 42.
- ↑ Phyllis Granoff 2006, ப. 31.
- ↑ 12.0 12.1 Phyllis Granoff 2006, ப. 33.
- ↑ Phyllis Granoff 2006, ப. 34.
- ↑ 14.0 14.1 Kishori Saran Lal 1963, ப. 155.
- ↑ Kishori Saran Lal 1963, ப. 174.
உசாத்துணை
தொகு- Andrew Topsfield (2001). Court Painting at Udaipur: Art Under the Patronage of the Maharanas of Mewar. Artibus Asiae Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-907077-03-0.
- B. D. Misra (1993). Forts and fortresses of Gwalior and its hinterland. Manohar. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7304-047-4.
- Devendrakumar Rajaram Patil (1963). The antiquarian remains in Bihar. Kashi Prasad Jayaswal Research Institute. இணையக் கணினி நூலக மைய எண் 248920006.
- Iqtidar Alam Khan (2008). Historical Dictionary of Medieval India. Scarecrow. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810864016.
- Kailash Chand Jain (2010). History of Jainism: Medieval Jainism. Vol. 3. D.K. Printworld. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-246-0550-9.
- Kalyan Kumar Chakravarty (1984). Gwalior Fort: art, culture, and history. Arnold-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780391032231. இணையக் கணினி நூலக மைய எண் 223392675.
- Kishori Saran Lal (1963). Twilight of the Sultanate. Asia Publishing House. இணையக் கணினி நூலக மைய எண் 500687579.
- Phyllis Granoff (2006). "Mountains of Eternity: Raidhū and the Colossal Jinas of Gwalior". Rivista di Studi Sudasiatici (Firenze University Press) 1: 31–50. doi:10.13128/RISS-2455. http://fupress.net/index.php/rss/article/viewFile/2455/2290. பார்த்த நாள்: 2022-03-16.
- S.R. Sharma (1999). Mughal Empire in India: A Systematic Study Including Source Material. Atlantic Publishers & Dist. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-817-8.
- Sant Lal Katare (1975). B J Sandesara. ed. "Two Gangolatal, Gwalior, Inscriptions of the Tomara Kings of Gwalior". Journal of the Oriental Institute (Oriental Institute, Maharajah Sayajirao University) XXIII. https://books.google.com/books?id=KGBjAAAAMAAJ.