கே. ஏ. சுப்பிரமணியம்
கே. ஏ. சுப்பிரமணியம் என்ற கொல்லங்கலட்டி அம்பலப்பிள்ளை சுப்பிரமணியம் (மார்ச் 5, 1931 - நவம்பர் 27, 1989) இலங்கையின் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.[1] இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு) கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர்.[2][3] இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். தோழர் மணியம் அல்லது மணியம் தோழர் எனக் கட்சித் தோழர்களால் அழைக்கப்பட்டவர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் வரை பொதுவுடைமைவாதியாக முழு நேர அரசியலில் உழைத்து வந்தவர்.[4][5] [6] தேசிய கலை இலக்கியப் பேரவையின் நிறுவனர்களில் ஒருவர், தாயகம் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் இருந்தவர்[7].
கே. ஏ. சுப்பிரமணியம் | |
---|---|
பிறப்பு | அம்பலப்பிள்ளை சுப்பிரமணியம் 5 மார்ச்சு 1931 கொல்லங்கலட்டி, யாழ்ப்பாணம் |
இறப்பு | நவம்பர் 27, 1989 கண்டி, இலங்கை | (அகவை 58)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | அரசியல்வாதி |
அறியப்படுவது | பொதுவுடமைவாதி |
சமயம் | எதுவுமில்லை |
பெற்றோர் | கதிரிப்பிள்ளை அம்பலப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை இலங்கைநாயகமுதலி |
வாழ்க்கைத் துணை | வள்ளியம்மை சுப்பிரமணியம் |
பிள்ளைகள் | சத்தியராஜன் (மீரான் மாஸ்டர், 1962-2001), சத்தியமலர், சத்தியகீர்த்தி |
வலைத்தளம் | |
சத்தியமனை |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுசுப்பிரமணியம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டம், கீரிமலையில் கொல்லங்கலட்டி என்ற சிற்றூரில் வேளாண்மைக் குடும்பத்தில் கதிரிப்பிள்ளை அம்பலப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை இலங்கைநாயகமுதலி ஆகியோருக்குப் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் இளவாலை புனித என்றீசு கல்லூரியிலும் முடித்துக் கொண்டு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் தனது 17வது அகவையில் பொறியியல் பயிலுனராகப் பணியில் சேர்ந்தார். 1962 ஆம் ஆண்டில் ஆசிரியையான வள்ளியம்மை என்பவரைக் காதலித்துக் கலப்புத் திருமணம் புரிந்து கொண்டார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவு
தொகுசீமெந்துத் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த கம்யூனிசத் தொழிலாளிகள் பாசையூர் சந்தியாப்பிள்ளை, மான் முத்தையா போன்றோருடன் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மாக்சிய சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சங்கப் பணிகளில் அவர் ஈடுபடலானார். இதன் விளைவாக மூவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
1951 ஆம் ஆண்டில் கம்யூனிச வாலிபர் இயக்கத்திலும், அதன் பின்னர் 1952 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினரானார். 1953 ஆம் ஆண்டு இடதுசாரிக் கட்சிகள் இணைந்து நாடு தழுவிய ரீதியில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் தனது முழுமையான பங்களிப்பைச் செலுத்தினார். அன்றைய காலகட்டத்தில் வடக்கு மாகாணத்தில் கம்யூனிச இயக்கத்தை வழிநடத்தி வந்த மு. கார்த்திகேசன், மரு. சு. வே. சீனிவாசகம், பொன். கந்தையா, அ. வைத்திலிங்கம், எம். சி. சுப்பிரமணியம் போன்றவர்களின் நெருங்கிய தொடர்பினால் கட்சியில் முழுநேர ஊழியரானார்.
1950களின் இறுதியில் வி. பொன்னம்பலம் காங்கேசன்துறைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகளை கிராமம் தோறும் நிறுவுவதற்கு சுப்பிரமணியம் பக்கபலமாக நின்று செயற்பட்டார்.[8]
1956 பொதுத்தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியுடன் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆட்சியைப் பிடித்தார். இதனையடுத்து பாடசாலைகள் தேசியமயமாக்கல் இடம்பெற்றது. இதற்கு ஆதரவாக மணியம் வாலிபர்களைத் திரட்டி முன்னணியில் நின்று செயல்பட்டார்[9].
1964 ஆம் ஆண்டில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு கூறாகப் பிளவடைந்தது. இப்பிளவினை அடுத்து, நா. சண்முகதாசன் தலைமையில் மாக்சியம்-லெனினியம், மற்றும் மாவோ சே துங் சிந்தனையில் உருவான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங் சார்பு) உடன் சுப்பிரமணியம் தன்னை இணைத்துக் கொண்டார்[9]. 1967 இல் அல்பேனியாவில் நடைபெற்ற வாலிபர் அமைப்பு மாநாட்டில் இலங்கை கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கப் பிரதிநிதியாக கலந்து கொண்டார். ரோகண விஜயவீரவும் இம்மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதியாக கலந்து கொண்டார். 1963, 1967, 1975, 1979 ஆகிய ஆண்டுகளில் வாலிபர் அமைப்பு மற்றும் கட்சிப் பிரதிநிதியாக மக்கள் சீனக் குடியரசுக்குச் சென்றார்.
போராட்டங்களில் பங்கேற்பு
தொகு1966 அக்டோபர் 21 இல் தீண்டாமைக்கும், சாதியத்துக்கும் எதிராக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட சுன்னாக எழுச்சிப் போராட்டத்தில் கலந்து கொண்டார். எழுச்சி ஊர்வலம் சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி இவர் தலைமையில் முன்னேறியபோது, காவல்துறையினரின் தாக்குதலுக்கு இலக்காகியதோடு கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விடுதலையானார்[9].
1969 ஆண்டு மே நாள் நிகழ்வு பௌத்தர்களின் புனித நாளான வெசாக் நாளன்று வந்ததால் அன்று மே தினப் பேரணிகளுக்கு அன்றைய டட்லி சேனநாயக்க அரசு தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை மீறி யாழ்ப்பாணத்தில் கே. ஏ. சுப்பிரமணியம் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோருக்கு எதிராக காவல்துறையினர் தடியடி நடத்தியதில் சுப்பிரமணியம் உட்படப் பலர் படுகாயமடைந்தனர். ஆனாலும் ஊர்வலம் கலைக்கப்பட்ட பின்னர் பொதுக்கூட்டம் ஒன்று நல்லூர் வீராளி அம்மன் கோயிலடியில் நடைபெற்றது.[10]
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) தோற்றம்
தொகு1978 ஆம் ஆண்டில் நா. சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி தமிழரின் சுயநிர்ணயத்தை ஏற்காமை, மூன்றுலகக் கோட்பாட்டை நிராகரிப்பது என்ற முடிவைப் பகிரங்கப்படுத்துவதில்லை என்ற மத்திய குழு முடிவை மீறி பகிரங்க அறிக்கை வெளியிட்டது என்கிற காரணங்களால் சுப்பிரமணியம் உட்படப் பலர் அக்கட்சியிலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்தனர்.
1978 சூலை 3 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் கட்சி உறுப்பினர்கள் கூடி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்தனர். இதன் செயலாளராக கே. ஏ. சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டார். 1984 செப்டம்பர் 2, 3 நாட்களில் இக்கட்சியின் முதலாவது தேசியக் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் சுப்பிரமணியம் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நோய்வாய்ப்பட்டு 1989 ஆம் ஆண்டில் இறக்கும் வரை அப்பதவியை வகித்து வந்தார்[9].
1978 -1981 காலப் பகுதியில் Red Banner என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பல கட்டுரைகளையும் ஏனைய அனைத்து ஆசிரிய தலையங்கங்களையும் அவரே எழுதினார்[11].
இலக்கியப் பங்களிப்பு
தொகுகே. ஏ. சுப்பிரமணியம் அரசியல்வாதியாக மட்டுமன்றி கலை, இலக்கிய ஆர்வலராகவும் திகழ்ந்தவர். 1974 ஆம் ஆண்டில் தேசிய கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பை உருவாக்க சில்லையூர் செல்வராசன், கே. டானியல், என். கே. ரகுநாதன் போன்றோருடன் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டார். பேரவைக்கு க. கைலாசபதி, இ. முருகையன் ஆகியோரது முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டார். பேரவையின் தாயகம் இதழ் வெளியிடப்பட இவரது வழிகாட்டல் முக்கிய பங்கு வகித்துள்ளதுடன்[7] அதன் ஆசிரியர் குழுவிலும் பங்கேற்றார். இறக்கும் வரையில் அவ்விதழின் ஆசிரியர் தலையங்கங்களை எழுதி வந்தார்[7].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kollankaladdy Ambalapillai Subramaniam".
- ↑ Peking Review, Issue 50 dated 13 December 1963
- ↑ Marxists.org. To All Marxist-Leninists Inside the Ceylon Communist Party
- ↑ தோழர் கே. ஏ. சுப்பிரமணியம், புதிய-சனநாயகக் கட்சி இணையதளம்
- ↑ "The New-Democratic Marxist-Leninist Party in its 35th Year" (PDF).
- ↑ "NDMLP 40th Anniversary Seminar and Meeting".
- ↑ 7.0 7.1 7.2 ஓர் அரசியல் தலைவரின் இலக்கிய உணர்வுகள் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், சி. கா. செந்திவேல், தாயகம், பக். 79-87, சனவரி-பெப்ரவரி 1990
- ↑ பொன்மலர், 1994
- ↑ 9.0 9.1 9.2 9.3 சி. கா. செந்திவேல் உரை, தோழர் மணியம் நினைவு மலர், யாழ்ப்பாணம், 1989
- ↑ பொலீஸ் தடையை மீறி நடந்த மே தின ஊர்வலம், தினபதி, மே 3, 1969
- ↑ Red Banner