சேர சோழ பாண்டியரை மூவேந்தர் என்கிறோம்.
வில், புலி, கயல் ஆகியவை முறையே இவர்களின் கொடிச்சின்னம்.
போந்தை, ஆர், வேம்பு ஆகியவை முறையே இவர்கள் சூடும் அடையாளப்பூ. இவற்றை இவர்கள் தம் காவல்மரமாகவும் கொண்டிருந்தனர். (இந்த மரங்களை பனை, ஆத்தி, வேம்பு என்னும் தெரிந்த பெயராலும் குறிப்பிட்டுவருகிறோம்)
புறநானூறு என்னும் நூலிலிருந்து இந்தப் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இவர்களது பெயருக்கு முன்னால் சோழன் என்னும் அடைமொழி உள்ளது.
தெளிவுக்காக இவர்களது பெயரிலுள்ள குடிப்பெயர் இறுதி அடைமொழியை முதன்மைப்படுத்தி வைத்துக்கொண்டு அகரவரிசைப் படுத்திக்கொள்கிறோம்.
ஒவ்வொரு வேந்தனும் எந்தெந்தப் புறநானூற்றுப் பாடல்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளான் என்னும் செய்தி அவரவர் பெயரை அடுத்துப் பாடலின் வரிசையெண்களாகத் தரப்பட்டுள்ளன.
சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி கருவூரிடம் சென்றபோது சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை வேண்மாடத்தில் இருந்தான். சோழனை மதம் கொண்ட யானை துரத்தியது. சேரன் காப்பாற்றினான்.[6]
சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராச்சூயம் வேட்ட பெர்நற்கிள்ளி – ஆகியோர் உடனிருந்தனர் [21]
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி ஆகிய இருவரும் உறையூர் நாளவையில் நண்பர்களாகக் காட்சியளித்தனர் [22]
சோழன் இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் தேர்வண் மலையனும் சேரனை எதிர்க்க ஒன்றுபட்ட நண்பர்கள் [23]
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியோடு பொருது, போர்களத்தில் உயிர் போகாது கிடந்தான் [24] இருவரையும் [25]
சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானொடு பொருது புறப்புண் நாணி வடக்கிருந்தான் [26]
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானொடு திருப்போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற்கோட்டத்துச் சிறையில் கிடந்து, தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு [27]
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழிச் சோழர்க்குத் துப்பாய்(பற்றுக்கோடாய்) இருந்தவன் தேர்வண் மலையன் [23]
மூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் [28][29] பத்துப்பாட்டையும் தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் [30] தொகுத்துப் பதிகம் பாடியவரும் குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன. அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில் தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும். இவர்கள் 17 பேர்
சோழன் உருவப் பஃறேர் இளசேட்சென்னி என இவனது பெயர் விளக்கப்பட்டுள்ளது. இவன் கரிகாற் பெருவளத்தானின் தந்தை.[31][32] இவன் தேரில் பொலிவுறும் காட்சியைப் பரணர் குறிப்பிட்டிள்ளார்.[33] பெருங்குன்றூர் கிழார் இவனை "வான்தோயு நீள்குடை வயமான் சென்னி" என்று குறிப்பிட்டு அவனது கொடையைப் போற்றுகிறார்.[34]
இவன் சோழன், செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்னும் விளக்கப்பெயருடன் குறிப்பிடப்படுகிறான்.[10] செருப்பாழி என்பது சேரமன்னனின் ஊர். இவன் இந்த ஊரைக் கைப்பற்றினான். புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இந்த வெற்றியைப் போர்களத்திக்கே சென்று பாடி போர்யானைகளைப் பரிசாகத் தரும்படி ஒருபாடலில் வேண்டுகிறார். மற்றொரு பாடலில் இவன் தந்த அணிகலன்களை எந்த அணியை எங்கு அணிந்துகொள்வது எனத் தெரியாமல் தம் உடலில் ஆங்காங்கே அணிந்துகொண்டதாகக் குறிப்பிடுகிறார்.[35]
இவன் சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, சோழன் நெய்தலங்ககானல் இளஞ்சேட்சென்னி என்னும் விளக்கப் பெயர்களுடன் குறிப்பிடப்படுகிறான். பாடல் இவனை 'நெய்தலங்கானல் நெடியோன்' எனக் குறிப்பிடுகிறது. பாமுள்ளூர் சேரமன்னனின் ஊர். இதனை இவன் கைப்பற்றினான். புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இவனை இரண்டு பாடல்களில் போற்றியுள்ளார்.[36] ஒரு பாடலில் பகைவர் பணிந்தால் தண்டிக்காதே என்று அவனை அறிவுறுத்துகிறார். மற்றொரு பாடலில் பகைவரின் கோட்டையை வெல்வதற்கு முனபே அக்கோட்டையைத் தன் பாணர்களுக்கு இவன் வழங்கிவிடுவான் என்கிறார்.
சோழன் கரிகாற் பெருவளத்தான் என்பது இவனது விளக்கப் பெயர். சோழன் கரிகால்வளவன், கரிகாலன், கரிகால் என்னும் பெயர்களாலும் இவன் குறிப்பிடப்படுகிறான. இவன் தந்தை 'சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி'.[37] மனைவி நாங்கூர் வேள் மகள்.[38] முதுமைக் கோலத்தில் தோன்றி அரசவையில் தீர்ப்பு வழங்கினான் என்றும், கருவூரில் இருந்தபோது கழுமலத்துப் பட்டத்து யானை இவனுக்கு மாலை போட்டு அரசன் எனக் காட்டியது என்றும், இளமைக் காலத்தில் காலில் தீப் பட்டு உயிர் பிழைத்தான் என்றும், இரும்பிடர்த் தலையார் இவனது தாய்மாமன் என்றும் பிற்காலப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.[39] பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களின் பாட்டுடைத் தலைவன். பட்டினப் பாலை நூலாகத் தன்னைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குப் பதினூறாயிரம் பொன் பரிசாக வழங்கினான்.[40] வெண்ணிப் போரில் பெருஞ்சேரலாதனையும், அவனுக்குத் துணைவந்த பாண்டியனையும் வென்றான்.[41] வண்ணிப் போரில் இரு பெருவேந்தரும், பதினொரு வேளிரும் இவனைத் தாக்கித் தோற்றனர். அது கண்டு அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.[42] வெண்ணியில் இவனை எதிர்த்துப் போரிட்டபோது முதுபில் புறப்புண்பட்டது என்று நாணிச் சேரமான் பெருஞ்சேரலாதன் போர்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்தான்.[43] கழார் என்னும் ஊரிலிருந்ந காவிரியாற்றுத் துறையில் ஆட்டனத்தி, காவிரி ஆகியோர் நீட்டல் நடனம் ஆடியதைத் தன் மகள் ஆதுமந்தியும் சுற்றமும் சூழ வீற்றிருந்து கண்டுகளித்தான்.[44] வாகைப் பறந்தலைப் போரில் இவனை எதிர்த்த ஒன்பது மன்னரும் ஒருநாள் நன்பகலுக்கு முன்னர் தோற்று, தம் கொற்றக் குடைகளைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.[45] இவன் காவிரிப் பூம்பட்டினத்திலிருந்துகொண்டு அரசாட்சி செய்தான் என்றும், ஒருகாலத்தில் இமயமலை வரை சென்று இடைப்பட்ட அரசர்களை வென்றான் என்றும் பிற்கால நூல்கள் தெரிவிக்கின்றன.[46]
சேரனின் வஞ்சிமுற்றத்தை வென்று குடநாட்டைக் கைப்பற்றினான்
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்று கூறப்படும் இவன் முதலில் பிட்டை என்பவனை அழித்துக் கொங்கு நாட்டில் வெற்றி கண்டான்.[47] குடபுலச் சேரரின் தலைநகர் வஞ்சி நகருக்குக் கருவூர் வஞ்சி இரண்டாம் தலைநகராக விளங்கி, அவர்களின் ஆட்சிக்கு முற்றம் போல விளங்கியதால் கருவூரை வஞ்சிமுற்றம் என்றனர். இதன் வெற்றியால் குடநாட்டைத் தாக்கி அழித்தான்.[48]கோவூர் கிழார் என்னும் புலவர் இவனை போருக்களத்தில் கண்டு பாடி களிறுகளைப் பரிசாகப் பெற்றார்.[15]
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று விளக்கமாக வேறுபடுத்திக் காட்டப்படும் இவன் 'பசும்பூட் கிள்ளிவளவன்' [49] 'பெரும்பூண் வளவன்' [50] எனப் பாடல்களுக்குள் குறிப்பிடபுபடுகிறான். இச்சோழன் உறையூர் அரசன். இவனை 10 புலவர்கள் பாடியுள்ளனர். ஆலத்தூர் கிழார் [51] ஆவூர் மூலங்கிழார் [52] இடைக்காடனார் [53] எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்,[54] கோவூர் கிழார் [55] நல்லிறையனார் [56] வெள்ளைக்குடி நாகனார் [57] என்னும் எழுவரும் இவனது போராற்றலையும், வள்ளல் தன்மையையும் போற்றிப் பாடியுள்ளனர். மாறோக்கத்து நப்பசலையார் [58] இவனது கொடைச் சிறப்பையும், இறப்பையும் பாடியுள்ளார். ஆடுதுறை மாசாத்தனார் [50] ஐயூர் முடவனார் [59] ஆகிய இருவரும் இவன் இறந்தது கண்டு இரங்கிப் பாடியுள்ளனர். இவன் கருவூரை அடுத்த ஆன்பொருநை [60] ஆற்றுமணலில் தன் படையை நிறுத்தி, முரசு முழக்கிச் சேரனைப் போருக்கு அழைத்தான். சேரன் கோட்டையை விட்டு வெளிவரவில்லை. இப்படிப்பட்ட சேரனோடு போரிடுவதற்கு வளவன் நாணவேண்டும் என்று ஒரு புலவர் அறிவுரை கூறினார்.[61] இவன் பாணர்க்குப் பொன்-தாமரை விருதும், தேரும் வழங்குவான்.[62] நினைத்த்தை முடிக்கும் ஆற்றல் மிக்கவன் என இவனைப் போற்றும் ஒரு புலவர் [63] இன்சொல் பேசி எளிமையாக வாழவேண்டும் என அறிவுறுத்துகிறார்.[64] புலவர்கள் இவனை எதிர்கோக்கும்போது இவன் பகைமன்னரின் மண்ணையே எண்ணிக்கொண்டிருந்தானாம் [65] இவன் மலையமான் மக்களை யானைக்காலால் மிதிக்கவைக்க முயன்றபோது, அழும் குழந்தை யானையைக் கண்டு அழுகையை நிறுத்திக்கொண்டு வேடிக்கை பார்த்த்தைச் சுட்டிக் காட்டி குழந்தையைக் கொல்வதை ஒரு புலவர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.[66]
கோப்பெருஞ்சோழனின் தலைநகர் உறையூர். புலவனாகவும் விளங்கினான்.[67] சேர அரசன் இளஞ்சேரல் இரும்பொறை இவனை வென்றான்.[68] தன் மக்கள் இருவர் மீது போருக்கு எழுந்தான். புலவர் ஒருவர் அறிவுரையைக் கேட்டு மக்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர் துறந்தான்.[69] கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதனார் [70], பிசிராந்தையார் [71], பொத்தியார் [72] ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவனுடன் வடக்கிருந்தவர் பலர்.[70] பிசிராந்தையார் வருவார், அவர் வடக்கிருக்க இடம் ஒதுக்குக என்றான் [73] தன்னுடன் வடக்கிருக்கத் துணிந்த பொத்தியாரை மகன் பிறந்த பின் வருக என்றான். அவ்வாறே அவர் வந்தபோது அவருக்குத் தன் கல்லறையில் இடம் கொடுத்தான்.[74] கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு நட்பிற்கு இலக்கணம்.[75]
சோழன் செங்கணான் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் நடந்த போரில் சேரமான் கணைக்கால் இரும்பொறையை வென்றான். தோற்ற சேரனைக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைத்தான். சோழன் செங்கணானால் சிறையிலிடப்பட்டு, தாகத்துக்குக் கேட்ட தண்ணீர் காலம் தாழ்ந்து பெற்றதால், அதனை உண்ணாமல் உயிர் துறந்தவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை.[76]
நலங்கிள்ளி மகன் (1)ன் மகன், நலங்கிள்ளி (2)ன் தந்தை
சோழன் இலவந்திகைப்பள்ளித் [77] துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி என்னும் விளக்கப்பெயரைக் கொண்ட இவன் சிறந்த வீரன். கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னுப் புலவர் இவனை 'இயல்தேர்ச் சென்னி' என்று குறிப்பிடுகிறார்.[8]. இவனது பெயரிலுள்ள 'நலங்கிள்ளி' என்பதை இவனது தந்தையின் பெயராகக் கொள்வது தமிழ் மரபு.
சோழன் நலங்கிள்ளி ஒரு புலவனாகவும் விளங்கினான்.[78] சேட்சென்னி நலங்கிள்ளி [79] புட்பகை, தேர்வண்கிள்ளி என்னும் பெயர்கள் இவனுக்கு உண்டு. ஆலத்தூர் கிழார் [80] உறையூர் முதுகண்ணன் சாத்தனார் [81] கோவூர் கிழார் [82] ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். உறையூர் இவனது தலைநகர் [83][84] இவனது போராற்றலைக் கண்டு வடபுலத்து அரசர்கள் நடுங்கினர் [85] பாண்டிய நாட்டு ‘ஏழில்’ அரண்-கதவில் தன் புலிக்கொடியைப் பொறித்தான்.[86] தன் தாயத்தாரோடு பகைமை பூண்டு நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டைக்குள்ளும் [87] உறையூர்க் கோட்டைக்குள்ளும் [88] அடைத்துக்கொண்டிருந்தபோது முற்றுகையிட்டுத் தாக்கினான். புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சொல்லை மதித்துப் போர்த்தொழிலைக் கைவிட்டு அறச் செயல்களைச் செய்தான்.[89][90] தாய் குழந்தைக்குப் பால் சுரப்பது போலப் பாணர்களுக்குப் பரிசில் வழங்குவான்.[91] பெருங்கலம் என்னும் கப்பல் செல்வ-வளம் சேர்க்கும் புகார்த் துறைக்கு அரசன்.[92] வங்கக் கப்பல்களை வேள்வித் தூணில் கட்டி நிறுத்தி வைக்கும் நாட்டை உடையவன்.[93]
காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியின் பெயர் 'சோழன்' என்னும் முன்னொட்டுடன் குறிப்பிடப்படவில்லை. இவன் நலங்கிள்ளி ஆவூரையும்,[87] உறையூரையும் [88] முற்றுகையிட்டபோது கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தான். இளந்தத்தன் என்னும் நலங்கிள்ளிடமிருந்து உறையூருக்குள் நுழைந்தபோது ஒற்று வந்தான் என்று கொல்லத் துணிந்தான். புலவர் கோவூர் கிழார் இளந்தத்தனின் வெள்ளை உள்ளத்தை விளக்கியபோது, உண்மையை உணர்ந்து இளந்தத்தனை விடுவித்தான்.[94] கோவூர் கிழார் 'போரிடு, அல்லது விட்டுக்கொடு' எனக் கூறியதைக் இவன் நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடுத்து விலகிவிட்டான் என்பதை நலங்கிள்ளியின் செல்வாக்கு உணர்த்துகிறது.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் என இவன் குறிப்பிடப்படுகிறான். திருமாவளவன் என்னும் பெயர் கரிகாலனைக் குறிக்கும். இவன் பெருந்திருமாவளவன். உறையூர் மருத்துவன் தாமோதரனார் [95] காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் [22] கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் [96] ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி இவனுடைய நண்பன்.[22]
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பது இவனைச் சுட்டும் பெயர். உலோச்சனார் [97], ஔவையார் [21], பாண்டரங்கனார் [98] ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவன் போரில் வல்லவன்.[99][100] தேர்வண் மலையன் என்னும் குறுநில மன்னனின் துணையுடன் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையோடு போரிட்டு வென்றவன்.[23] சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய இருபெரு வேந்தர்களின் நண்பன்.[21] இவனது இராசசூயத்தைப் புறநானூற்றுப் பாடல் "அவி உணவினோர் புறம் காப்ப அறநெஞ்சத்தோன் வாழ" என்னும் தொடரால் குறிப்பிடுகிறது.[97]
சோழன் பொர்வைக் கோப் பெருநற்கிள்ளி என இவன் சுட்டப்படுகிறான். போர்வை என்னும் ஊரில் இருந்துகொண்டு நாடாண்டவன். சாத்தந்தையார் [101], பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் [102][103] ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர். இவன் உறையூர் அரசன் தித்தன் என்பவனின் மகன் எனக் கொள்ளப்படுகிறான்.[104] முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனை மற்போரில் வென்று வீழ்த்தினான். தந்தை தித்தன் இவனுக்கு ஆட்சி வழங்காதபோது புல்லரிசி உணவை மட்டுமே உண்டு வாழ்ந்துவந்தான் [105]
சோழன் முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி என்னும் பெயரால் இவன் சுட்டப்படுகிறான். இவனைப் பாடிய புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இவன் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையோடு பகைமை கொண்டிருந்தான். இவன் கருவூரின்மீது படையெடுத்துச் சென்றபோது இவன் ஏறியிருந்த பட்டத்து யானை மதம் பிடித்து ஓடியது. சேரனுடன் அவனது வேண்மாடத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த புலவர் முடமோசியார் சோழன் துன்பமின்றி மீளவேண்டும் என வாழ்த்தினார். சேரன் இரும்பொறை அவனைக் காப்பாற்றினான்.[6]
↑உ. வே. சாமியாதையர் ஆராய்ச்சி குறிப்புடன் ((முதல் பதிப்பு 1894) ஐந்தாம் பதிப்பு 1956). புறநானூறு மூலமும் உரையும். சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு. pp. முன்னுரை, பாடப்பட்டோர் வரலாறு பக்கம் 62 முதல் 82. {{cite book}}: Check date values in: |year= (help)
↑சு. வையாபுரிப் பிள்ளை அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கியது ((முதல் பதிப்பு 1940) இரண்டாம் பதிப்பு 1967). சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்). சென்னை - 1: பாரி நிலையம்,. pp. அரசர் முதலியோரும், அவர்களைப் பாடியோரும், பக்கம் 1461 முதலை 1485. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: location (link)
↑உ. வே. சாமியாதையர் அரும்பத அகராதி முதலியவற்றுடன் (இரண்டாம் பதிப்பு 1920). பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும். சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, சுப்பிரமணிய தேசிகர் பொருளுதவி. {{cite book}}: Check date values in: |year= (help)
↑"உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்" எனக் கரிகாற் பெருவளத்தானைப் பாடிய பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது
↑தொல்காப்பியம் அகத்திணையியல் 30 ஆம் நூற்பா உரையில் நச்சினார்க்கினியார் இதனைக் குறிப்பிட்டாள்ளார்.
↑ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, கலிகொள் சுற்றமொடு கரிகால் காண, தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று, இரும்பொலம் பாண்டில், மணியொடு தௌர்ப்ப, புனல் நயந்து ஆடும் அத்தி (அகநானூறு 376)
↑வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார், சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த பீடு இல் மன்னர் போல, ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே (அகநானூறு 125)
↑இவன் பாடிய பாடல்கள் குறுந்தொகை 20, 53, 129, 147, புறநானூறு 214, 215, 216
↑பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும், வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனையும், வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று - பதிற்றுப்பத்து, பதிகம் 9
↑உலகத்து, நின்தலை வந்த இருவரை நினைப்பின், தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர், அமர் வெங் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்; நினையும்காலை, நீயும் மற்றவர்க்கு அனையை அல்லை; அடு மான் தோன்றல்! பரந்து படு நல் இசை எய்தி, மற்று நீ உயர்ந்தோர் உலகம் எய்தி; பின்னும் ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே: அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும் இன்னும் கேண்மதி, இசை வெய்யோயே! நின்ற துப்பொடு நிற் குறித்து எழுந்த எண் இல் காட்சி இளையோர் தோற்பின், நின் பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே? அமர் வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின், இகழுநர் உவப்ப, பழி எஞ்சுவையே; அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! – புல்லாற்றூர் எயிற்றியனார் - புறநானூறு 213
↑குயவர் சக்கரத்தில் வைத்த பசுமண் போல உச்சிப்பிள்ளையார் மலையைக் கொண்டது இவன் நாடு – “வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமண் குரூஉத்திரள் போல, அவன் கொண்ட குடுமித்து இத் தண் பணை நாடே” - புறநானூறு 32
↑ஆமூர் மல்லனை இவன் வென்றதை "நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப் பொரல் அரும் தித்தன் காண்க" (புறநன்னூறு 60) என்னும் பாடல் தொடரால் இந்தக் கருத்து உருவாகியுள்ளது
↑"என் ஐ புற்கை (புல்லரிசி] உண்டும் பொரும் தோளன்" (புறநானூறு 84)