சங்ககாலச் சேரர்

(சங்கச் சேரர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டு வந்தனர். சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப் பகுதியையும் ஆண்டு வந்தனர். இவற்றை முறையே குணபுலம், தென்புலம், குடபுலம் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[1]

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, எய்யும் வில்
சங்ககால வரலாறு
சேரர்
சோழர்
பாண்டியர்
வள்ளல்கள்
அரசர்கள்
புலவர்கள்
edit

கடல்சார்ந்த நிலம் சேர்ப்பு என்னும் சொல்லால் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வந்தது. நீர் சூழ்ந்த கடலும் நிலமும் சேருமிடத்தைத் தமிழர் சேர்ப்பு என்றனர். சேரநாட்டின் பெரும்பகுதி சேர்ப்புநிலம். சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் சேர்ப்புப்பகுதி இருந்தாலும் இவற்றில் உள்நாட்டுப்பகுதி அதிகம்.

சேரநாட்டை ஆண்ட மன்னர்கள் அனைவரும் 'சேரமான்' என்னும் அடைமொழியில் தொடங்கும் பெயருடன் குறிப்பிடப்படுகின்றனர். எளிய ஒப்புநோக்குத் தெளிவுக்காக 'சேரமான்' என்னும் சொல் சேர்க்கப்படாமல் பெயர்கள் இங்கு குறிப்பிடப்படுகின்றன. ஒப்புநோக்க உதவும் வகையில் குடிப்பெயர்களின் பெயர் வரிசையில் அரசர் பெயர்கள் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அரசர் பெயரை அடுத்து அவர்கள் பாடப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல்-வரிசை எண்ணும் தரப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் உள்ள சேர அரசர்கள் புறநானூற்றுப் பாடல்களில் வருபவர்கள். பதிற்றுப்பத்து நூலில் குறிப்பிடப்படும் சேர அரச பரம்பரையில் காலநிரல் தெரிகிறது. எனவே அவர்கள் காலநிரல் வரிசையிலேயே காட்டப்படுகின்றனர்.

பதிற்றுப்பத்து காட்டும் சேரர்

தொகு
பத்து பெயர் இறுதி குடிப்பெயர் பெயர் உறவு
1 ஆதன் சேரல் (உதியஞ்சேரல், சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்) எனக் கருதப்படுகிறது -
2 ஆதன் சேரல், குடக்கோ குடக்கோ நெடுஞ்சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தலைவன் 1-ன் மகன்
3 - குட்டுவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் தலைவன் 2-ன் தம்பி
4 - சேரல் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் தலைவன் 2-ன் மகன்
5 - குட்டுவன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன், சேரன் செங்குட்டுவன் தலைவன் 2-ன் மகன்
6 ஆதன் சேரல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தலைவன் 2-ன் மகன்
7 ஆதன் கடுங்கோ செல்வக்கடுங்கோ வாழியாதன் அந்துவன் மகன்
8 பொறை சேரல், குட்டுவன் பெருஞ்சேரல் இரும்பொறை, குட்டுவன் இரும்பொறை தலைவன் 7-ன் மகன்
9 பொறை சேரல் இளஞ்சேரல் இரும்பொறை தலைவன் 8-ன் மகன்

பெயர் நோக்கில் சேரர்

தொகு
  1. ஆதன் – கடுங்கோ – செல்வக்கடுங்கோ வாழியாதன் - 14
  2. ஆதன் – கடுங்கோ வாழியாதன் - 8
  3. ஆதன் – குடக்கோ நெடுஞ்சேரலாதன் – 368
  4. ஆதன் – சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் - 387
  5. ஆதன் - சேரலாதன் - பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் - 2
  6. கடுங்கோ - பாலைபாடிய பெருங்கடுங்கோ - 11
  7. குட்டுவன் – கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் - 369
  8. கோதை – குட்டுவன் கோதை - 54
  9. கோதை - கோக்கோதை மார்பன் – 48, 49,
  10. கோதை – கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை - 245
  11. சேரமான் – பாமுள்ளூர் அரசன் - 203
  12. பொறை - அந்துவஞ்சேரல் இரும்பொறை - 13
  13. பொறை - இரும்பொறை - கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை - 5
  14. பொறை – இரும்பொறை - சேரல் - குடக்கோச்சேரல் இரும்பொறை – 210, 211
  15. பொறை – சேரல் - யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – 20, 22, 229,
  16. பொறை - தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - 50
  17. பொறை - மாந்தரஞ்ஞேரல் இரும்பொறை - 53
  18. வஞ்சன் - 398

பிற நோக்கில் சேரர்

தொகு

சேரன்-புலவர்

தொகு
  1. சேரமான் கணைக்கால் இரும்பொறை - 74
  2. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ - 282

சேர்த்தாளிகள்

தொகு
  1. மாரிவெண்கோ + கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி + இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (ஒருங்கிருந்தாரை ஔவையார் – 367)
  2. அந்துவஞ்சேரல் இரும்பொறை + முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி (கருவூரில் மதயானை) -13

பகையாளிகள்

தொகு
  1. குடக்கோ நெடுச்சேரலாதன் + வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி (போர்ப்புறம் போரில் வீழ்ந்த குடக்கோ ஆரங்கழுத்துடன் கிடந்தது) -368, 62, 63,
  2. சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண் நாணி வடக்கிருந்தான் – 65
  3. சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து, தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு – 74
  4. மாந்தரஞ்சேரல் இரும்பொறை சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு பொருது தோற்றபோது தேர்வன்மலையன் தன் பக்கம் இருந்திருந்தால் வென்றிருக்காம் எனல் – 125
  5. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறையிலிருந்து யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இருப்பொறை தன்னை விடுவித்துக்கொண்டு வலிதிற்போய் அரியணை ஏறினான்.

பிற குறிப்புகள்

தொகு

மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை ஆகிய சேர மன்னர்களின் காசுகள் தமிழகத்தில் கிடைத்துளன. இதன் மூலம் சங்ககாலப் பாடல்களில் இவர்களைப் பற்றியுள்ள செய்திகள் உறுதியாகின்றன.

 
மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை காசுகள்

தொகுப்பு வரலாறு

தொகு

மூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் [2][3] பத்துப்பாட்டையும் தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் [4] தொகுத்துப் பதிகம் பாடியவரும் குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன. அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில் தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும். இவர்கள் 18 பேர்

அந்துவஞ்சேரல்

தொகு
சோழனை மதயானைப் பிடியிலிருந்து காப்பாற்றியவன்
சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை என்று குறிப்பிடப்படுகிறவன். இவனும், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவரும் கருவூர் வேண்மாடத்தில் [5] இருந்தனர். சேரமான் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி கருவூரைத் தாக்க வந்தான். சோழன் ஏறிவந்த யானைக்கு மதம் பிடித்து ஓடியது. சோழன் துன்பம் இன்றி நாடு திரும்ப வேண்டும் என்று புலவர் வாழ்த்தினார் [6] புலவரின் வாழ்த்தைக் கேட்டுச் சேரன் சோழனைக் காப்பாற்றினான் போலும்.[7]

உதியஞ்சேரலாதன்

தொகு
பதிற்றுப்பத்து 1 ஆம் பத்து (?)
ஐவர் நூற்றுவர் போரில் பெருஞ்சோறு அளித்தவன்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் எனக் குறிப்பிடப்படும் இவனது இயற்பெயர் 'ஆதன்'. ஐவருக்கும் நூற்றுவருக்கும் நடந்த போரில் பெருஞ்சோறு அளித்த செய்தியை முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் குறிப்பிடுகிறார்.[8] இந்த நிகழ்வைச் சிலப்பதிகாரம் வழிமொழிகிறது,[9] இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் [10] தந்தை எனக் கொள்வர். இவனது மனைவி வெளியன் வேள் மகள் நல்லினி.[11]. இவனைக் கிடைக்காமல் போன பதிற்றுப்பத்து முதலாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் எனக் கொள்கின்றனர்.

கடுங்கோ வாழியாதன்

தொகு
பதிற்றுப்பத்து 7 ஆம் பத்து - தலைவன்
பூழியர் பெருமகன்
சிக்கற்பள்ளியில் துஞ்சியவன்
புகழூர்க் கல்வெட்டு
பதிற்றுப்பத்து 7 ஆம் பத்துத் தலைவன். இவனைச் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும் [12], கடுங்கோ வாழியாதன் என்றும் [13], சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும் [14], சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும் [15] பாடலின் குறிப்புகள் குறிப்பிடுகின்றன. புலவர் கபிலருக்கு 10 பாடல்-தொகுதி பாடியமைக்காக நூறாயிரம் [16] காணம் [17] சிறுபுறம் [18] என்று சொல்லி வழங்கினான். அத்துடன் தன் நாட்டு 'நன்றா' என்னும் குன்றின்மீது ஏறித் தன் கண்ணுக்கும், புலவர் கண்ணுக்கும் தொரிந்த அத்தனை ஊர்களையும் அவருக்கு உரிமையாக்கிக் கொடுத்தான்.[12] கபிலரின் கையைப் பற்றி மென்மையானது என்றபோது, "வாள் பிடித்ததால் உன் கை வன்கை. உன் விருந்து உண்டதால் என் கை மென்கை" என்கிறார் புலவர்.[14] ஞாயிறு ஒரு நாளில் பாதி நேரம் வருவதில்லை. இவன் இரவுபகல் எல்லா நேரமும் வழங்குகிறான் என்கிறார் புலவர்.[13] பூழியர் பெருமகன். பொருநை ஆறு பாயும் நாட்டை ஆண்டவன்.[15] சிக்கற்பள்ளி என்னுமிடத்தில் உயிர் துறந்தவன்.[15] குண்டுகட் பாலியாதனார் என்னும் புலவருக்கு அவரது சிறுமையை எண்ணிப் பார்க்காமல் தன் பெருமையை எண்ணிப் பார்த்து கரி, பரி முதலான பரிசில்களை வழங்கியவன் [15].மாயவண்ணன் என்னும் மறையவனை அமைச்சனாக்கிக்கொண்டதோடு அவனுக்கு நெல்வளம் மிக்க ஒகந்தூர் என்னும் ஊரையும் வழங்கிச் சிறப்பித்தான்.[19] புகழூர்க் கல்வெட்டு 'கோ ஆதன் செல் இரும்பொறை' எனக் குறிப்பிடுகிறது.

குட்டுவன் (செங்குட்டுவன்)

தொகு
பதிற்றுப்பத்து 5 ஆம் பத்து - தலைவன்
வேல் கெழு குட்டுவன்
கடல் பிறக்கு ஓட்டியவன்
கண்ணகிக்குச் சிலை
பதிற்றுப்பத்து 5 ஆம் பத்தின் தலைவன். சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் [20], கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் [21] சேரன் செங்குட்டுவன் என்னும் பெயர்கள் இவனைக் குறிக்கும். பதிற்றுப்பத்தில் இவனைப் பாடிய புலவர் பரணர் புறநானூற்றுப் பாடலிலும் இவன் கடற்போரில் வெற்றி கண்ட செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போரை இவன் தன் வேலாண்மையால் வெற்றி கண்டானாம்.[22] கடல் முற்றுகை வெற்றி பற்றி [23][24][25][26] விளக்கும் குறிப்புகள் அவன் இலட்சத் தீவுகளை வென்ற செய்தி ஆகலாம். அப் போரின் வெற்றியால் பெற்ற நீர்வளச் செல்வங்களை [27][28] தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான்.[29] பழையனை வென்று அவன் காவல்மரமான வேம்பை வெட்டிக் கொண்டுவந்து தனக்கு முரசம் செய்துகொண்டான்.[30][31] இமயம் வரை வென்றான்.[32] கனக விசயரை வென்றான். இமயத்திலிருந்து கல் கொண்டுவந்து கண்ணகிக்குக் கோட்டம் அமைத்தான்.[33] வியலூர், கொடுகூர் போர்களில் வெற்றி கண்டான்.[34] சோழர் குடிக்கு உரிய தாயாதியர் ஒன்பது பேரை வென்று தாய்மாமன் ஆட்சியை நிலைநாட்டினான்.[35]

குட்டுவன், (பல்யானைச் செல்கெழு குட்டுவன்)

தொகு
பதிற்றுப்பத்து 3 ஆம் பத்து - தலைவன்
அகப்பா வெற்றி
நாட்டை பங்கிட்டுத் தரல்
அயிரை தெய்வத்தை வழிபடல்
ஆட்சிக்குப் பின்னர் துறவு
பல்யானைச் செல்கெழு குட்டுவன் [36] பதிற்றுப்பத்து 3 ஆம் பத்தின் பாட்டுடைத் தலைவன். இரண்டாம் பத்தின் தலைவனான இமையவரம்பனின் தம்பி. அகப்பாக் கோட்டையைக் கைப்பற்றினான். அங்கு வாழ்ந்த முதியர் குடிமக்களை அரவணைத்துக்கொண்டான். அவர்களுக்குத் தன் நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்து ஆட்சி புரிந்தான். யானைகளை வரிசையாக நிறுத்தி இரண்டு கடலிலிருந்தும் நீர் கொண்டுவரச் செய்து ஒரே பகலில் நீராடிய பின்னர் அயிரை மலைத் தெய்வத்தை [37] வழிபட்டான். பார்ப்பாரில் சிறந்தாரைக் கொண்டு வேள்வி செய்து, தன்னைப் பதிற்றுப்பத்தாகப் பாடிய [[பாலைக் கௌதமனார்|பாலைக் கௌதமனாரையும், அவரது மனைவி பார்ப்பினியையும் சுவர்க்கம் புகச் செய்துவிட்டு, நெடும்பார தாயனார் முன் செல்லப் பின் சென்று, காட்டில் தவம் செய்தான். இவன் நாடாண்ட காலம் 25 ஆண்டுகள் [38]

குட்டுவன் கோதை

தொகு
குட்டநாட்டு அரசன்
வள்ளல்
சேரமான் குட்டுவன் கோதை என இவன் குறிப்பிடப்படுகிறான். குட்ட நாடு என்பது மலைநாடு எனப்பட்ட சேர நாட்டின் ஒரு பகுதி.[39] குட்டுவன் கோதை இந்த நாட்டு அரசன். "கடுமான் கோதை" எனப் போற்றப்பட்ட இவன் சிறந்த வள்ளல்.[40] பெயர் ஒப்புநோக்கம் குட்டுவன் சேரல் என்பவன் சேரன் செங்குட்டுவனின் மகன். சேரன் செங்குட்டுவன் தன்னைப் பாடிய பரணருக்குப் பணிவிடை செய்யுமாறு தன் மகன் குட்டுவன் சேரனைக் கொடுத்தான் [41]

குடக்கோச் சேரல்

தொகு
பதிற்றுப்பத்து 9 ஆம் பத்து - தலைவன்
கருவூரில் இருந்துகொண்டு குடநாட்டையும் சேர்த்து ஆண்டவன்
பதிற்றுப்பத்து 9 ஆம் பத்தின் தலைவன். சேரமான் குடக்கோச் சேரலைக், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை எனவும் வழங்குவர். கருவூரைத் தலைநகராகக் கொண்டு சேரநாட்டை ஆண்ட இவன் குடநாட்டில் இளவரசனாக இருந்தவன். இவன் புலவர் பெருங்குன்றூர் கிழாருக்குப் பரிசில் தராமல் காலம் கடத்தினான்.[42] பின்னர் பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தில் உள்ள பாடல்களைப் பாடியதற்குப் பரிசாக முப்பதாயிரம் (30,000) காணம் பணமும், அணிகலன்களும், வீடுகளும், நிலங்களும் புலவருக்குப் பரிசாக வழங்கினான்.[43]

கோதை மார்பன்

தொகு
தொண்டி அரசன்
பழையன் மாறனைக் கிள்ளி வளவன் வென்றது கண்டு மகிழ்ந்தவன்
இவனைச் சேரமான் கோக்கோதை மார்பன் என்றும், கோதை மார்பன் என்றும் பாடல் குறிப்புகள் காட்டுகின்றன. தொண்டியில் இருந்த வள்ளல் [44] கிள்ளி வளவன் பெரும் படையுடன் மதுரைக்கு வந்து பழையன் மாறனைத் தாக்கி, தன் பகையரசனின் ஊரையும், அவனது குதிரை, யானைப் படைகளையும் கைப்பற்றிக்கொண்டபோது, இந்தக் கோதை மார்பன் பெரிதும் மகிழ்ந்தான்.[45]

சேரல், (களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்)

தொகு
பதிற்றுப்பத்து 4 ஆம் பத்து - தலைவன்
பூழி நாட்டை வென்றது
நன்னனை வென்றது
துளங்கு குடி திருத்தியது
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் [46] பதிற்றுப்பத்து 4 ஆம் பத்தின் தலைவன். தந்தை இரண்டாம் பத்தின் தலைவன் நேரலாதன். தாய் வேள் ஆவி மலை [47] அரசன் பதுமன் மகள். பூழி நாட்டைத் தன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டவன். கடம்பின் பெருவாயில் நகரைத் தலைநகராய்க் கொண்டு நாடாண்ட நன்னனை வென்று அவனது காவல்மரம் வாகையை வெட்டி வீழ்த்தினான். ஆட்டம் கண்ட குடிமக்களின் அச்சம் போக்கினான். தன்னைப் பதிற்றுப்பத்தாகப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனாருக்கு நாற்பது நூறாயிரம் [48] பொன்னும், தன் ஆட்சியில் பாதியும் கொடையாக வழங்கினான். 25 ஆண்டு காலம் நாடாண்டான்.[49]

சேரலாதன், (ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்)

தொகு
பதிற்றுப்பத்து 6 ஆம் பத்து - தலைவன்
தொண்டி அரசன்
மழவரை வென்றான்
பதிற்றுப்பத்து 6 ஆம் பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடினார்.[50] இதற்குப் பரிசாகப் புலவர் அணிகலன்கள் செய்துகொள்வதற்கு என்று ஒன்பது காப் [51] பொன்னும், பணமாக நூறு ஆயிரம் [52] காணமும் வழங்கினான். தந்தை குடக்கோ நெடுஞ்சேரலாதன். தாய் வேள் ஆவிக்கோமான் மகள். தொண்டி அரசன். மழவர் செல்வாக்கை ஒடுக்கியவன். தண்டாரணியப் பகுதியில் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தொண்டி நகருக்குக் கொண்டுவந்து பசுமாடுகளுடன் சேர்த்துப் பார்ப்பார்க்கு வழங்கி, வானவரம்பன் எனப் போற்றப்பட்டவன். 38 ஆண்டுகள் நாடாண்டான்.

நெடுஞ்சேரலாதன், (இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்)

தொகு
பதிற்றுப்பத்து 2 ஆம் பத்து - தலைவன்
இமையத்தில் வில்லைப் பொறித்தான்
ஆரியரை அடிபணியச் செய்தான்
யவனப் புரட்சியாளர்களைத் தண்டித்தான்
இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன். இவனது தந்தை உதியஞ்சேரல். தாய் வெளியன் வேள் என்பவனின் மகள். இவன் இமையத்தில் தன் வில் சின்னத்தைப் பொறித்தான். ஆரியர்களை அடிபணியச் செய்தான். நாட்டில் புரட்சி செய்த யவனர்களின் கைகளைப் பின்னால் கட்டி, தலையில் எண்ணெய் ஊற்றி இழுத்துவந்தான். அவர்களின் செல்வ வளங்களைத் தன் ஊர் மக்களுக்கு வழங்கினான். இப்படி 58 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். பதிற்றுப் பாடல்களைத் தன்மீது பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்னும் அந்தணர்க்குப் பிரமதேயமாக உம்பற்காட்டுப் பகுதியில் 500 ஊர்களை வழங்கினான். அத்துடன் தென்னாட்டிலிருந்து தனக்கு வரும் வருவாயில் பாதியை 38 ஆண்டு காலம் கொடுத்தான்.[53]

நெடுஞ்சேரலாதன் (குடக்கோ நெடுஞ்சேரலாதன்)

தொகு
குடநாட்டு அரசன்
சோழனோடு போரிட்டபோது இருவரும் மாண்டனர்
செங்குட்டுவனின் தந்தை
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என இவன் குறிப்பிடப்படுகிறான். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேல்பஃறடக்கை பெருவிறல் கிள்ளி ஆகிய இருவரும் போர்ப்புறம் என்னுமிடத்தில் போரிட்டுக்கொண்டபோது இருவரும் போர்களத்திலேயே மாண்டனர்.[54][55] செங்குட்டுவன் தந்தை குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் எனக் குறிப்பிடப்படுகிறான் வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் [56][57]

பெருங்கடுங்கோ

தொகு
பாலைக்கலி பாடிய புலவன்
கருவூர் அரசன், வள்ளல்
புகழூர்க் கல்வெட்டு
சேரமான் பெருங்கடுங்கோ எனவும், பாலை பாடிய பெருங்கடுங்கோ [58] எனவும் இவன் குறிப்பிடப்படுகிறான். இவன் தண் ஆன்பொருநை ஆறு பாயும் விறல்வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன்.[59][60] பகையரசர் பலரைப் புறம் கண்டவன்.[61] இந்த வெற்றியைப் பாடிய பாடினிக்கு கழஞ்சு நிறை அளவு பொன்னணிகளை வழங்கியவன்.[62] பாணனுக்கு தீயில் புடம் போட்டுச் செய்த பொன்னாலான தாமரைப் பூவை வெள்ளி நாரில் கோத்து அணிவித்தவன்.[63] புகழூர்க் கல்வெட்டில் இவன் 'கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ' எனக் குறிப்பிடப்படுகிறான்.

பெருஞ்சேரல் இரும்பொறை

தொகு
பதிற்றுப்பத்து 8 ஆம் பத்து - தலைவன்
புலவர்க்குக் கவரி வீசியவன்
புலவர் நோயைப் போக்கியவன்
மறைந்துபோன தமிழ்நூல் 'தகடூர் யாத்திரை'யின் பாட்டுடைத் தலைவன்
சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என இவன் குறிப்பிடப்படுகிறான். கருவூர் ஏறிய ஒள்வாட் கோ, தகடூர் எறிந்த - என்னும் இரு அடைமொழிகளுடன் இவன் குறிப்பிடப்படுகிறான். தந்தை செல்வக் கடுங்கோ (வாழியாதன்). தாய் வேள் ஆவிக் கோமான் பதுமன் தேவி.[64] கொல்லிக் கூற்றம் என்னுமிடத்தில் நடந்த போரில் அதியமானையும், இரு பெரு வேந்தரையும் ஒருங்கு வென்றான். தொடர்ந்து நடந்த தகடூர் போரிலும் அக் கோட்டையைத் தகர்த்தான். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டு அரசாண்டான்.[65] முரசுக்கட்டிலில் அறியாது துயின்ற புலவர் மோசிக் கீரனாருக்குக் கவரி வீசியவன் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.[66] நரிவெரூஉத் தலையார் என்னும் புலவர் நேரில் கண்டு தன் உடம்பு நலம் பெற்ற அரசன் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் [67] அரிசில் கிழார் இவனைப் "பிறக்கடி ஒதுங்காப் பூட்கை ஒள்வாள்" [68] என்று குறிப்பிடுகிறார்.[69] தகடூர் யாத்திரை என்னும் நூல் இவன்மீது பாடப்பட்டது.

பெருஞ்சேரலாதன்

தொகு
வெண்ணிப் போர்
சேரமான் பெருஞ்சேரல் ஆதன் 'சேரமான் பெருந்தோள் ஆதன்' எனவும் குறிப்பிடப்பபடுகிறான். சோழன் கரிகாலனோடு போரிட்டபோது தனக்கு நேர்ந்த புறப்புண்ணுக்கு நாணிப் போர்கள்ளத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்தான்.[70][71]

மாந்தரஞ்சேரல்

தொகு
கொல்லிமலை நாட்டை வென்றான்
தொண்டி மக்களை அடக்கினான்
சோழனைத் தாக்கித் தோற்றான்
பதிற்றுப்பத்து, 10 ஆம் பத்து, தலைவன் எனலாம்
  • கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றெல்லாம் இவன் குறிப்பிடப்படுகிறான்.
  • குறுங்கோழியூர் கிழார், பொருந்தில் இளங்கீரனார், கூடலூர் கிழார், பேரி சாத்தனார்(வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்) பரணர் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.
  • யானையைப் போலக் கூர்மையான பெருமிதப் பார்வை உடைமை பற்றி 'யானைக்கட் சேய்' [72] என்னும் அடைமொழி இவனுக்குத் தரப்பட்டுள்ளது.[73]
  • பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவனைக் கட்டி இழுத்துச் சென்றபோது இந்தச் சேரன் தன் வல்லமையால் தன்னை விடுவித்துக்கொண்டு சென்று தன் அரியணையில் அமர்ந்தான்.[74]
  • இவனுக்கும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளிக்கும் போர் மூண்டபோது தேர்வண் மலையன் சோழன் பக்கம் நின்று போராடிச் சோழனுக்கு வெற்றியைத் தேடித் தந்தான். அப்போது தேர்வண் மலையன் நம் பக்கம் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாமே என்று இந்தச் நேரன் வருந்திக் கூறியிருக்கிறான்.[75]
  • கொல்லிமலை நாட்டை வென்றவன்.[76][77]
  • தொண்டி மக்களைப் போரிட்டு அடக்கினான்.[78][79]
  • இவனது ஆட்சிக் காலத்தில் நாடு அமைதிப் பூங்காவாக விளங்கியது.[80]
  • கபிலன் இன்று இருந்தால் தன் வெற்றிகளைப் பாடுவாரே என்று இவன் ஏங்கியபோது பொருந்தில் இளங்கீரனார் கபிலரைப் போலவே [81] பாடிச் சிறப்பித்தார்.[82] இது கிடைக்காமல் போன பதிற்றுப்பத்தின் பத்தாம் பத்து போலும்.
  • கூடலூர் கிழார் ஒரு கணியர். அவர் காலத்தில் ஒரு எரிமீன் வீழ்வு நிகழ்வை வைத்துக் கணித்து, தன் நாட்டு மன்னன் இன்ன நாளில் இறப்பான் எனக் கணித்தார். கணித்த நாளிலேயே மன்னனும் இறந்தான். இறந்த மன்னன் இந்த மாந்தரஞ்சேரல்.[83]
  • இவன் சிறந்த வள்ளல்.[84]
  • பொருநை என்னும் அமராவதி பாயும் கருவூர் அரசன்.[85]

மாரி வெண்கோ

தொகு
மூவேந்தர் நட்பு
சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவரும் நண்பர்களாய் ஓரிடத்தில் இருப்பதைப் பார்த்த ஔவையார் இன்று போல் என்றும் வாழ்க என வாழ்த்தியுள்ளார்.[86]

வஞ்சன் (சேரமான்)

தொகு
வள்ளல்
சேரமான் வஞ்சன் என்னும் இவன் பாயல் என்னும் நாட்டுப் பகுதியை ஆண்ட அரசன்.[87] சிறந்த வள்ளல்.

மேலும் காணலாம்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. சிறுபாணாற்றுப்படை
  2. உ. வே. சாமியாதையர் ஆராய்ச்சி குறிப்புடன் ((முதல் பதிப்பு 1894) ஐந்தாம் பதிப்பு 1956). புறநானூறு மூலமும் உரையும். சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு. pp. முன்னுரை, பாடப்பட்டோர் வரலாறு பக்கம் 62 முதல் 82. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. சு. வையாபுரிப் பிள்ளை அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கியது ((முதல் பதிப்பு 1940) இரண்டாம் பதிப்பு 1967). சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்). சென்னை - 1: பாரி நிலையம்,. pp. அரசர் முதலியோரும், அவர்களைப் பாடியோரும், பக்கம் 1461 முதலை 1485. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: location (link)
  4. உ. வே. சாமியாதையர் அரும்பத அகராதி முதலியவற்றுடன் (இரண்டாம் பதிப்பு 1920). பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும். சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, சுப்பிரமணிய தேசிகர் பொருளுதவி. {{cite book}}: Check date values in: |year= (help)
  5. வேள் = உதவி, வேள்மாடம் = கொடை வழங்கும் மாடம்
  6. புறநானூறு 13
  7. ஒப்புநோக்குக - எறிபத்த நாயனார்
  8. புறநானூறு 2
  9. சிலப்பதிகாரம் வாழ்த்துக்காதை
  10. பதிற்றுப்பத்து 2 ஆம் பத்து பாட்டுடைத் தலைவன்
  11. இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன் (பதிற்றுப்பத்து 2 ஆம் பத்து பதிகம்)
  12. 12.0 12.1 பதிற்றுப்பத்து ஆறாம்பத்து பதிகம்
  13. 13.0 13.1 புறநானூறு 8
  14. 14.0 14.1 புறநானூறு 14
  15. 15.0 15.1 15.2 15.3 புறநானூறு 387
  16. 1,00,000
  17. சங்ககாலக் காசு
  18. கைச்செலவுக்குத் தரும் காசு
  19. பதிற்றுப்பத்து, ஆறாம்பத்து. பதிகம்
  20. பரணர் (புறநானூறு 389)
  21. கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் பதிற்றுப்பத்து, 5 ஆம் பத்து, பதிகம்
  22. உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று,
    விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,
    படை நிலா இலங்கும் கடல் மருள் தானை
    மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன்
    பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து,
    செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி,
    ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
    நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்
    கூர் மதன் அழியரோ நெஞ்சே! (பரணர் - அகநானூறு 212)
    தலைவி சொன்ன குறியிடத்தைத் தவற விட்ட தலைவன் இந்தக் குட்டுவன் வேல் தன் நெஞ்சில் பாயட்டும் எனக் கூறுவதாகப் இந்தப் பாடல் உள்ளது.
  23. முந்நீர்முற்றி (அகநானூறு 212)
  24. கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு, உடை திரைப் பரப்பின் படு கடல் ஓட்டிய, வெல் புகழ்க் குட்டுவன் (பதிற்றுப்பது 46)
  25. கொடும்போர் கடந்து நெடுங்கடல் ஓட்டி (சிலப்பதிகாரம் 28-119)
  26. பொங்கு இரும் பரப்பில் கடல் பிறக்கு ஓட்டி (சிலப்பதிகாரம் 30 - கட்டுரை 19)
  27. "நீர்ப் பெற்ற தாரம்" (பதிற்றுப்பத்து 48)
  28. இலட்சது தீவில் கிடைத்த பவளச் செல்வ வளங்கள்
  29. நீர் புக்கு, கடலொடு உழந்த பனித் துறைப் பரதவ! 'ஆண்டு நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு, இவர் கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும் கல்லா வாய்மையன் (பதிற்றுப்பத்து 48)
  30. கருஞ் சினை விறல் வேம்பு அறுத்த, பெருஞ் சினக் குட்டுவன் (பதிற்றுப்பத்து 49)
  31. பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின் முழாரை முழு முதல் துமியப் பண்ணி, (பதிற்றுப்பத்து 5, பதிகம்)
  32. கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை, வட திசை எல்லை இமயம் ஆக, தென்அம் குமரியொடு ஆயிடை அரசர், முரசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ, சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த, போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ! (பதிற்றுப்பத்து 43)
  33. சிலப்பதிகாரம்
  34. உறு புலி அன்ன வயவர் வீழ, சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி; அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து; (பதிற்றுப்பத்து 5 பதிகம்)
  35. ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர் ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து; நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, (பதிற்றுப்பத்து 5 பதிகம்)
  36. செல் = மேகம், மேகக் கூட்டம் போல்ப் பல யானைகளைப் படையைக் கொண்டிருந்தவன்
  37. ஐயப்பன்
  38. பதிற்றுப்பத்து பதிகம் 3
  39. சேரன் செங்குட்டுவன் இந்த நாட்டில் இளவரசனாக விளங்கியவன்.
  40. [[கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் (புறநானூறு 54)
  41. பதிற்றுப்பத்து 5 பதிகம்
  42. பெருங்குன்றூர் கிழார் புறநானூறு 210,
  43. பதிற்றுப்பத்து, 9 ஆம் பத்து, பதிகம்
  44. பொய்கையார் (புறநானூறு 48, 49)
  45. நெடுந் தேர், இழை அணி யானைப் பழையன் மாறன், மாட மலி மறுகின் கூடல் ஆங்கண், வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த கிள்ளி வளவன் நல் அமர் சாஅய், கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி, ஏதில் மன்னர் ஊர் கொள, கோதை மார்பன் உவகையின் பெரிதே.(அகநானைறு 346)
  46. போர்வைத் தலைப்பாகையின்மீது முத்துக்களோடு நீலநிற மணிகளைக் களாக்காய் போல சிலந்தி நூல் போன்ற இலைகளில் கோத்துச் செய்யப்பட்ட அரசுமுடி அணிந்தவன் - "அலங்கல் போர்வையின், இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச் சீர் மிகு முத்தம் தைஇய நார்முடிச் சேரல்" (பதிற்றுப்பத்து 39)
  47. பழனிமலை
  48. 40,00,000
  49. பதிற்றுப்பத்து பதிகம் 4
  50. பதிற்றுப்பத்து, ஆறாம் பத்து, பதிகம்
  51. கா என்னும் நிறையளவு
  52. 100,000
  53. பதிற்றுப்பத்து பதிகம் 2
  54. கழாத்தலையார் (புறநானூறு 62)
  55. பரணர் (புறநானூறு 63)
  56. பதிற்றுப்பத்து பதிகம் 5
  57. வடவர் நடுங்கும் வெல்கொடி உடையவன் என்பதால் இவனை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனக் கொள்வாரும் உண்டு
  58. பாலைக்கலி பாடிய புலவன்
  59. தண் பொருநைப் புனல் பாயும், விண் பொரு புகழ், விறல் வஞ்சி, பாடல் சான்ற விறல் வேந்தனும்மே, (புறநானூறு 11)
  60. அமராவதி பாயும் வஞ்சிமுற்றம் எனப்பட்ட கருவூர் அரசன்.
  61. வெப்பு உடைய அரண் கடந்து, துப்பு உறுவர் புறம் பெற்றிசினே (புறநானூறு 11)
  62. புறம் பெற்ற வய வேந்தன் மறம் பாடிய பாடினியும்மே, ஏர் உடைய விழுக் கழஞ்சின், சீர் உடைய இழை பெற்றிசினே; (புறநானூறு 11)
  63. இழை பெற்ற பாடினிக்குக் குரல் புணர் சீர்க் கொளை வல் பாண் மகனும்மே, என ஆங்கு, ஒள் அழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூ பெற்றிசினே. (புறநானூறு 11)
  64. மகள்
  65. பதிற்றுப்பத்து, 8 ஆம் பத்து, பதிகம்
  66. புறநானூறு 50
  67. புறநானூறு 5
  68. பதிற்றுப்பத்து 80
  69. "கோதை மார்ப" என அரிசில் கிழார் இவனைப் பாராட்டுவது (பதிற்றுப்பத்து 79) மகளிர் மார்பில் மாலை குழைவது பற்றியது ஆகும். கோதை மார்பன் என்னும் அரசன் வேறு.
  70. கழாஅத்தலையார் (புறநானூறு 65)
  71. வெண்ணிக் குயத்தியார் (புறநானூறு 66)
  72. சேய் = முருகன்
  73. "வேழ நோக்கின் விறல் வெஞ் சேய்" - புறநானூறு 22
  74. புறநானூறு 17
  75. பேரி சாத்தனார் - புறநானூறு 125
  76. "ஓங்கு கொல்லியோர் அடு பொருந" - குறுங் கோழியூர் கிழார் (புறநானூறு 22)
  77. பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி -பரணர் (குறுந்தொகை 89)
  78. "தொண்டியோர் அடு பொருந" - குறுங் கோழியூர் கிழார் (புறநானூறு 17)
  79. திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை - பரணர் (குறுந்தொகை 128)
  80. "திருவில் அல்லது கொலைவில் அறியார், நாஞ்சில் அல்லது படையும் அறியார்" - புறநானூறு 20
  81. செல்வக் கடுங்கோ வாழியாதனை பதிற்றுப்பத்து ஆறாம் பத்தில் கபிலர் பாடியது போலவே
  82. வாழேம் என்றலும் அரிதே 'தாழாது செறுத்த செய்யுள் செய் செந் நாவின், வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன் இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின் ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப, பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே (பொருந்தில் இளங்கீரனார் - புறநானூறு 53)
  83. புறநானூறு 229
  84. கவி கை வள்ளல் நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற குறையோர் கொள்கலம் போல, நன்றும் உவ இனி வாழிய, நெஞ்சே! - அகநானூறு 142
  85. பூந் தண் பொருநைப் பொறையன் வாழி! மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க!” சிலப்பதிகாரம் 23-84
  86. புறநானூறு 367
  87. அருவி பாயல் கோ (திருத்தாமனார் - புறநானூறு 398)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்ககாலச்_சேரர்&oldid=3294190" இலிருந்து மீள்விக்கப்பட்டது