சலாகுத்தீன்
சலாகத்தீன் யூசுப் இப்னு அய்யூப்[a] (Salah ad-Din Yusuf ibn Ayyub, அண். 1137 - மார்ச் 4, 1193, அரபு: صلاح الدين يوسف بن أيوب; குர்தி: سهلاحهدین ئهیوبی) என்பவர் அய்யூப்பிய அரசமரபின் நிறுவனர் ஆவார். மேற்குலகில் பொதுவாக சலாதீன்[b] என்றும் இவர் அறியப்படுகிறார். இவர் ஒரு குர்து குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். எகிப்து மற்றும் சிரியா ஆகிய இரு பகுதிகளின் முதல் சுல்தான் இவராவார். மூன்றாம் சிலுவைப் போரில் ஒரு முக்கியமான நபராக இருந்த இவர் லெவண்டில் இருந்த சிலுவைப் போர் அரசுகளுக்கு எதிராக முஸ்லிம் இராணுவ முயற்சிக்குத் தலைமை தாங்கினார். இவரது அதிகாரத்தின் உச்ச நிலையில் அய்யூப்பிய அரசானது எகிப்து, சிரியா, மேல் மெசொப்பொத்தேமியா, ஹெஜாஸ், ஏமன் மற்றும் நூபியா ஆகிய இடங்களில் பரவியிருந்தது.
சலாகத்தீன் | |
---|---|
வெற்றியை வழங்கும் மன்னன் சிரியா மற்றும் எகிப்தின் சுல்தான் | |
எகிப்து மற்றும் சிரியாவின் சுல்தான் | |
ஆட்சிக்காலம் | 1174 – 4 மார்ச் 1193 |
முடிசூட்டுதல் | 1174, கெய்ரோ |
முன்னையவர் | அல் அதித் (பாத்திமிய கலீபாவாக) |
பின்னையவர் |
|
பாத்திம கலீபகத்தின் உயரதிகாரி | |
ஆட்சிக்காலம் | 26 மார்ச் 1169 – 26 செப்தெம்பர் 1171 |
முன்னையவர் | சிர்குக் |
பின்னையவர் | பதவி ஒழிக்கப்பட்டது |
பிறப்பு | யூசுப் இப்னு அய்யூப் அண். 1137 திக்ரித், மேல் மெசொப்பொத்தேமியா, அப்பாசியக் கலீபகம் |
இறப்பு | 4 மார்ச் 1193 (அகவை 55–56) திமிஷ்கு, சிரியா, அய்யூப்பிய வம்சம் |
புதைத்த இடம் | உமய்யா மசூதி, திமிஷ்கு |
துணைவர் | இசுமததீன் கதுன் |
குழந்தைகளின் பெயர்கள் |
|
அரசமரபு | அய்யூப்பிய அரசமரபு (நிறுவனர்) |
தந்தை | அய்யூப் இப்னு சாடி |
மதம் | சுன்னி இசுலாம் |
இளமைக்காலம்
தொகுயூசுப் சலாகுத்தீன் இப்னு அய்யூப் 1137-ம் ஆண்டு இராக்கிலுள்ள திக்ரித் நகரில் பிறந்தார்[6]. குர்திய இசுலாமிய பின்புலத்தைக் கொண்ட இவரது குடும்பம், அர்மீனியாவிலுள்ள டிவின் நகரில் இருந்து புலம்பெயர்ந்து அங்கு வந்திருந்தது. இவரது தந்தை நசிமுத்தீன் அய்யூப். இவர் தனது குடும்பத்தை திக்ரித் நகரில் இருந்து மோசுல் நகருக்கு மாற்றினார். அங்கு நசிமுத்தீன் செஞ்சிப் பேரரசைத் தோற்றுவித்தவரும், சிலுவைப்போர்களுக்குத் தலைமையேற்றவருமான இமானுதீன் செஞ்சி என்பவரைச் சந்தித்து 1939-ல் அவரது கோட்டையைப் பாதுகாக்கும் தளபதியாகப் பணியாற்றினார். இமானுதீன் செஞ்சியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் நூறுத்தீன் செஞ்சி 1146-ம் ஆண்டு செஞ்சிப் பேரரசின் அரசராக நியமிக்கப்பட்டார்[7]. இவரது காலத்தில் சலாகுத்தீன் மேற்படிப்பிற்காக சிரியாவின் தலைநகரான டமாசுக்கசு நகருக்கு அனுப்பப்பட்டார். இந்தக் காலகட்டத்திலேயே சலாகுத்தீன் இசுலாம் மேல் அதிக ஆர்வம் கொண்டார்.[8] மாறாக, கிறித்தவர்கள் திடீரென செருசலேம் நகரைத் தாக்கிய முதலாம் சிலுவைப்போராலேயே சலாகுத்தீன் இசுலாமியப் பேரரசில் அதிக ஆர்வம் கொண்டார் எனவும் சிலர் கூறுகின்றனர்.[9]
பேரரசை நிறுவுதல்
தொகுஎகிப்து
தொகுசலாகுத்தீன் சிரியப் படையில் சேர்ந்தபொழுது செருசலேம் முதலாவது அமல்ரிக் என்ற இலத்தீன் கிறித்தவரால் ஆளப்பட்டது. இவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் எகிப்தைக் கொண்டுவரும் பொருட்டு, அதன் மீது பல முறைப் படையெடுத்தார். அப்போது எகிப்தைப் பாத்திம கலிபாக்கள் வழிவந்த ‘சாவார்’ என்ற மன்னர் ஆண்டு வந்தார். சாவாருக்கு ஆதரவாகப் படையெடுத்து வந்த சிரிய தேசத்துப் படைக்கு சலாவுத்தீனின் சிறிய தந்தை ஆசாத்துல் சீர்க் தலைமை தாங்கினார். இவரே சலாகுத்தீனைச் சிரியப் படையில் சேர்த்துவிட்டவர் ஆவார். இந்நிலையில் சீர்க்கின் மறைவு மற்றும் சாவாரின் அதிகாரக்குறைவு காரணமாக 1169 ஆம் ஆண்டு சலாகுத்தீன், சிரிய மற்றும் பாத்திம கலிபாக்களின் கூட்டுப்படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். தனது 31 ஆம் வயதில் இந்த நிலைக்கு வந்த சலாகுத்தீன், தனது நிர்வாகத் திறமை, போர்முறைகள் மற்றும் அஞ்சாத குணம் ஆகியவற்றின் காரணமாக எகிப்து நாட்டின் தலைவராக மாறினார். இவரே சன்னி இசுலாத்தை எகிப்தில் பரப்பியவர்.[10] இதன் பிறகு 1171-ம் ஆண்டு ஏற்பட்ட கலிபாவின் மரணத்தைத் தொடர்ந்து, இவர் எகிப்தின் பேரரசராக முடிசூட்டப்பட்டார். இவரின் ஆட்சியின் கீழ், எகிப்தின் படைவலிமை மற்றும் பொருளாதாரம் வேகமாகப் பெருகியது.
இதன் பிறகு இவர் தனது மனதில் சிரியா, இராக் மற்றும் செருசலேம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மாபெரும் இசுலாமியப் பேரரசை உருவாக்க வேண்டும் என ஆவல் கொண்டார். ஆயினும் தனது தந்தையின் அறிவுரைப்படி, தனது மன்னனான சிரிய சுல்தான் நூறுதீனுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் இவர் ஈடுபடவில்லை. இறுதியாக நூறுதீனின் மரணத்திற்குப் பிறகே சிரியாவை தனது பேரரசுடன் இணைத்தார்.
சிரியா
தொகுஇவ்வாறு 1174-ம் ஆண்டு நூறுதீனின் மரணத்திற்குப் பிறகு, சலாகுத்தீனின் படைகள் டமாசுக்கசு நகருக்குள் நுழைந்தன. அங்கு சிரிய மக்கள் சலாகுத்தீனையும் அவரது படைகளையும் வரவேற்றனர். பின்பு தனது முன்னால் மன்னரான நூறுதீனின் விதவை மனைவியான இசுமத் உல்தீன் காத்துன் என்பவரை மறுமணம் புரிந்து கொண்டார். இதன் மூலம் எளிதில் சிரிய நாட்டைத் தனது அயூபிட் பேரரசுடன் இணைத்துக் கொண்டார். இதன் பிறகு சிரிய பேரரசிலிருந்து பிரிந்து போன அலிப்போ மற்றும் மோசுல் நகரங்களையும் முறையே 1176 மற்றும் 1186 ஆகிய ஆண்டுகளில் தனது பேரரசுடன் இணைத்தார். இதற்கு மேற்கொண்ட முயற்சிகளில் இவரை இரண்டு முறைகள் கொலை செய்ய முயன்றனர். குறிப்பாக இரண்டாவது முறை மயிரிழையில் உயிர் தப்பினார்.
இவர் சிரியாவை ஆண்ட காலத்தில் பலமுறை சிலுவைப்போர்களைச் சந்தித்தார். ஒவ்வொரு முறையும் இவர் எதிரிப் படைகளை முறியடித்து ஐரோப்பாவிற்குத் திருப்பி அனுப்பினார். ஆனால் 1177-ம் ஆண்டு நவம்பர் 25-ம் நாள் நடைபெற்ற போரில் மட்டும் இவர் தோல்வியுற்றார். இந்தப் போரில் செருசலேம் நகரை ஆண்ட நாலாம் பால்டுவின் மற்றும் ரோனால்டு ஆகியோரின் கூட்டுப்படையை எதிர்கொண்ட இவர், இறுதியில் தோல்வியுற்று தனது படையில் பத்தில் ஒரு பகுதி வீரர்களோடு எகிப்து திரும்பினார்.[11]
சிலுவைப்போர்கள்
தொகுஇதன் பிறகு தனது படை வலிமையைப் பெருக்குவதில் ஈடுபட்ட சலாகுத்தீன் 1180-ம் ஆண்டு சிலுவைப்போராளிகளின் நகரங்களைத் தாக்கினார். இதற்குப் பதிலடியாக ரோனால்டு, முசுலிம் வணிகர்களுக்கும், புனித தலங்களுக்கும் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். இதனால் முசுலிம் வணிகர்களுக்கான முதன்மைப் பாட்டையில்(சாலை) ஒரு படையை சலாகுத்தீன் நிறுவினார். மேலும் 1182-ம் ஆண்டு மிகப்பெரிய படையுடன் சென்று பெய்ரூட் நகரையும் தாக்கினார். இதற்குப் பதிலடியாக ரோனால்டு, இசுலாமியர்களின் புனித தலங்களான மெக்கா மற்றும் மதீனா ஆகியவற்றைத் தாக்கினார்[12]. இதனால் கோபமுற்ற சலாகுத்தீன், ரோனால்டின் தலைநகரை 1183 மற்றும் 1184ஆகிய ஆண்டுகளில் தாக்கினார். இதன் பின்பும் ரோனால்டு 1185-ம் ஆண்டு புனித கச் (Haj) யாத்திரை சென்றவர்களின் வாகனங்களைத் தாக்கினார்[12]. இவ்வாறு சலாகுத்தீன் போர் நெறிமுறைகளைப் பின்பற்றி ரோனால்டின் படைகளை மட்டுமே தாக்கிய பொழுதும் கூட, ரோனால்டு அதற்குப் பதிலடியாக அப்பாவி முசுலிம்களை தாக்குவதயே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார்.
இதன் பிறகு உள்நாட்டுக் குழப்பங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த சலாகுத்தீன், மோசுல் நகரை ஆக்கிரமித்திருந்த மசூத் என்பவனையும் அவனுக்குத் துணையாக வந்த அசர்பைசான் கவர்னரையும் 1185 ஆம் ஆண்டு சாக்ரோல் மலைத்தொடரில் சந்தித்து, அவர்களின் படையை முறியடித்தார். பின்பு தனது பார்வையை மீண்டும் சிலுவைப்போராளிகளின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் செலுத்தியவர், அதில் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். தொடர்ந்து 1187-ம் ஆண்டு சூலை 4-ம் நாள் காத்தின் என்ற இடத்தில் லூசிஞ்ன் கை, கிங் கான்சேர்ட் மற்றும் மூன்றாம் ரேமன்ட் ஆகியோரின் கூட்டுப்படையை எதிர்கொண்டார். கடல் போன்ற இந்த கூட்டுப்படையை எதிர்கொண்ட சலாகுத்தீனின் படை அதை முறியடித்து வெற்றிபெற்றது. இந்த வெற்றி சிலுவைப்போர்களில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து போரில் தோல்வியுற்று பிடிபட்ட லூசிஞ்ன் கை மற்றும் ரோனால்டு ஆகியோர் சலாகுத்தீனின் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். இவர்களில் லூசிஞ்ன் கையை மன்னித்த சலாகுத்தீன், அவரைச் சிறையில் அடைக்க உத்திரவிட்டார். ஆனால் தொடர்ந்து முசுலிம் மக்களுக்குத் தொல்லை கொடுத்ததாலும் இசுலாமியப் புனிதத் தலங்களைத் தாக்கியதாலும் ரோனால்டுக்கு மரண தண்டனை விதித்தார்[13]
இந்த ஒருவரைத் தவிர மற்ற எதிரிகள் யாரையும் சலாகுத்தீன் தன் வாழ்நாளில் கொன்றதில்லை. சிறையில் அடைக்கப்பட்ட லூசிஞ்ன் கையின் மனைவி சலாகுத்தீனைக் கடிதம் மூலம் மன்றாடிக் கேட்டுக்கொண்டதின் பேரில், 1188-ம் ஆண்டு லூசிஞ்ன் கை விடுதலை செய்யப்பட்டு தனது மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செருசலேம் கைப்பற்றப்படல்
தொகுஇதன் பிறகு செருசலேம் நகரை முற்றுகையிட்ட சலாகுத்தீனின் படை, அங்கு உள்ள பிரெஞ்சுப் படைகளைச் சரணடையும்படி கேட்டுக்கொண்டது. அவர்கள் அதை மறுக்கவே 1187-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். ஆனபோதிலும் சலாகுத்தீன் அங்கு பிடிபட்ட வீரர்களையும், மக்களையும் துன்புறுத்தாமல் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வழி செய்தார்[14]. இதன் பிறகு சிலுவைப்போராளிகளின் வசம் எஞ்சி இருந்தது டயர் என்ற நகரம் மட்டுமே.இதை காண்ரட் என்பவர் ஆட்சிசெய்துகொண்டு இருந்தார். மேலும் சலாகுத்தீனால் விடுதலை செய்யப்பட்ட லூசிஞ்ன் கையும் தனது மனைவியுடன் இங்குதான் வசித்து வந்தார். இதன் மீது 1188 -ம் ஆண்டு படையெடுத்த சலாகுத்தீன், இதையும் கைப்பற்றினார். இவ்வாறு அனைத்து சிலுவைப்போராளிகளின் பகுதிகளையும் கைப்பற்றிய சலாகுத்தீன், ஒரு முழுமையான பேரரசாக அயூபி பேரரசை மாற்றினார். இவ்வாறு ஒரு முழுமையான இசுலாமியப் பேரரசின் கீழ் செருசலேம் நகரைக் கொண்டுவந்தபொழுதும் கூட, அங்கு வாழ்ந்த யூத மக்களைத் தொடர்ந்து செருசலேம் நகரிலேயே வாழ அனுமதித்தார்[15].
மூன்றாம் சிலுவைப்போர்கள்
தொகுஇவ்வாறு செருசலேம் நகர் முழுவதுமாக சலாகுத்தீன் கையில் வந்த பிறகு, அதை மீண்டும் மீட்க மூன்றாம் சிலுவைப்போர்கள் தொடங்கப்பட்டன. இதை இங்கிலாந்து மன்னரான முதலாம் ரிச்சர்ட் தலைமையேற்று நடத்தினார். இந்தப் போர் 1191-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் நாள் அர்சுப் என்ற இடத்தில் தொடங்கியது. இதில் ரிச்சர்ட்டின் படைகள் எவ்வளவோ முயன்றும் கூட, செருசலேம் நகரைக் கைப்பற்ற முடியவில்லை. இதிலும் இறுதியில் சலாகுத்தீனே வெற்றிபெற்றார்.
இருப்பினும் சலாகுத்தீன் மற்றும் ரிச்சர்ட் ஆகிய இருவருக்கும் இடையில் இருந்த நட்புறவு தனித்தன்மையானது. இந்த நட்பு சகமனித மரியாதைக்கும், போர் நெறிமுறைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. ரிச்சர்ட் ஒரு முறை நோய்வயப்பட்ட பொழுது, சலாகுத்தீன் அவரைக் குணப்படுத்த தனது அந்தரங்க மருத்துவரை அனுப்பியத்தோடு பழவகைகளையும் கொடுத்தனுப்பினார்[16]. மேலும் அர்சுப் போர்க்களத்தில் ரிச்சர்ட்டின் குதிரை இறந்தததைக் கேள்விப்பட்ட சலாகுத்தீன், அவருக்கு உயர் ரக குதிரைகள் இரண்டைக் கொடுத்தனுப்பினார். இதன் பிறகு ரிச்சர்டின் தங்கை ‘சோன்’ என்பவளை சலாகுத்தீன் தனது தம்பிக்கு மணமுடித்து வைத்தார். இதன் மூலம் முசுலிம் மற்றும் கிறித்தவர்கள் இடையே நட்புறவு ஏற்பட வழிவகுத்தார். இவ்வளவுக்கும் சலாகுத்தீன், ரிச்சர்ட் இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததே இல்லை. கடிதம் மற்றும் தூதர்கள் மூலம் மட்டுமே பரிமாற்றம் நடைபெற்றது.
இதன் பிறகு 1192-ம் ஆண்டு சலாகுத்தீன் மற்றும் ரிச்சர்ட் ஆகிய இருவரும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தனர். ராம்லா ஒப்பந்தம் என அழைக்கப்படும் இதன் படி செருசலேம் முசுலிம்கள் வசமே தொடர்ந்தது. மேலும் கிறித்தவர்களும் அங்கு உள்ள புனிதத் தலங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்[17].
மறைவு
தொகுஇவ்வாறு ராம்லா உடன்படிக்கையைத் தொடர்ந்து ரிச்சர்ட் அரேபியாவை விட்டு வெளியேறிய பின் 1193-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் நாள் டமாசுக்கசு நகரில் நோய்வயப்பட்டு சலாகுத்தீன் இறந்தார். இவ்வாறு இறந்த பிறகு அவரை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தில் போதிய பணம் இல்லை[18]. காரணம் இவர் தனது செல்வம் முழுவதையும் தானம் செய்வத்திலேயே செலவிட்டிருந்தார். இவ்வாறு அவரது உடல் டமாசுக்கசு நகரில் உள்ள பிரபலமான உமய்யா மசூதியின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு செருமனியை சேர்ந்த பேரரசரான இரண்டாம் வில்லியம் ஒரு சலவைக்கல் கல்லறைமேடையை சலாகுத்தீனுக்காக உருவாக்கினார்[19]. இதுவே இன்றளவும் சலாகுத்தீனின் சமாதியாக மக்களால் பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மையான கல்லறை வேறு இடத்தில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீதே சலவைக்கல் மேடையை அமைக்காததற்கு காரணம், அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாதததே ஆகும். அந்த அளவிற்கு அவர் மக்களிடம் மட்டுமல்லாமல் எதிரிகளிடமும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
நன்மதிப்பும் நற்பெயரும்
தொகுசலாகுத்தீன் ஒரு மிகப்பெரிய பேரரசை ஏற்படுத்திய பின்பும் கூட ஒரு சாதாரணமான மனிதனாகவே எளிமையாக வாழ்ந்தார். தீவிரமான சன்னி இசுலாம் முறையைப் பின்பற்றிய இவர், மற்ற மதத்தினரையும் மதித்தார். அவர்களின் புனித தலங்களுக்குப் பாதுகாப்பும் கொடுத்தார். இவர் ஆக்கிரமிப்பாளர்களைத் தவிர மற்ற எவரையும் தாக்கியதில்லை. அவ்வாறு அவர்களைத் தாக்கியப்பொழுதும் கூட, அவர்களுக்கு முதலிலேயே சரணடைய பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தார். மீறி போர் செய்து அவர்கள் பிடிபட்ட பின்பும் கூட அவர்களைத் துன்புறுத்தவோ, சிறையில் அடைக்கவோ இல்லை. மாறாக அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பி செல்ல அனுமதித்தார். செருசலேம் நகரிலேயே அவர்கள் தங்கிக் கொள்ளவும் அனுமதித்தார். மேலும் இவரின் எதிரிகள் இசுலாமியர்களைத் தாக்கியபொழுதும்கூட, இவர் கிறித்தவர்களைத் தாக்கியதில்லை.
இவ்வாறு இவரது குணநலன்கள் அரேபியர்கள் மட்டும் அல்லாது ஐரோப்பியர்களையும் ஈர்த்தது. ஐரோப்பிய கிறித்தவர்கள் மத்தியில் ரிச்சர்ட்டை விட சலாகுத்தீன் அதிகம் பிரபலமானார். மேலும் ரிச்சர்ட்டும் சலாவுத்தீனும் தங்களுக்கு இடையே பல பரிசுகளை அனுப்பி மகிழ்ந்தனர். இருப்பினும் இவர்கள் இருவரும் கடைசிவரை ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததே இல்லை.
நவீன காலம்
தொகுசலாகுத்தீன் புகழ் அவரது வாழ்நாளில் மட்டும் அல்லாமல் நவீன உலகிலும் தொடர்கிறது. இன்னும் இவர் இசுலாமிய மக்களால் மிகவும் உயர்வாகப் போற்றப்படுகின்றார். குறிப்பாக இசுரேல் - பாலஸ்தீனம் பிச்சினை ஆரம்பமான பிறகு இவர் புகழ் வேகமாக பரவத் தொடங்கியது. இவர் தனது வாழ்நாளில் செருசலேம் நகரை கிறித்தவர்களிடம் இருந்து மீட்டதே இதற்குக் காரணம் ஆகும். இவரால் தோற்றுவிக்கப்பட்ட அயூபி பேரரசு இவரது மறைவுக்குப் பிறகு 57 ஆண்டுகள் தொடர்ந்தது. அது இன்றளவும் மறைமுகமாக நவீன உலகிலும் தொடர்கிறது. இதற்குச் சான்றாக, இவரது சின்னமான கழுகு முத்திரையே இன்றும் இராக், எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளின் ராணுவ சின்னமாக உள்ளது.
-
இராக் ராணுவச்சின்னம்
-
எகிப்து ராணுவச்சின்னம்
-
பாலசுத்தீனம் ராணுவச்சின்னம்
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Nicolle 2011, ப. 26: "This copper dirham, minted at Mayyafariqin in 587 AH (1190/01 AD) shows Saladin wearing the sharbush hat of a Saljuq-style Turkish ruler."
- ↑ Lesley Baker, Patricia (1988). A History of Islamic Court Dress in the Middle East (PDF) (phd). SOAS, London University. p. 119. எண்ணிம ஆவணச் சுட்டி:10.25501/SOAS.00033676.
By the end of the 12th century, the wearing of the sharbush demonstrated support for Salah al-Din. Under the later Bahri Mamluks of Egypt and Syria it formed part of the khil'a given to an amir on his investiture.
- ↑ 3.0 3.1 Balog (1980). The Coinage of the Ayyubids. London: Royal Numismatic Society. p. Coin 182., also Whelan Type III, 258-60; Album 791.4
- ↑ Richards 1995, ப. 910.
- ↑ Lane-Poole 1906, ப. 6.
- ↑ History - Saladin
- ↑ http://books.google.com/books?id=hGR5M0druJIC
- ↑ "Who2 Biography: Saladin, Sultan / Military Leader". Answers.com. பார்க்கப்பட்ட நாள் August 20, 2008.
- ↑ http://www.answers.com/topic/saladin.
- ↑ Moors' Islamic Cultural Home souvenir III, 1970–1976 Islamic Cultural Home, 1978, p. 7.
- ↑ Lyons & Jackson 1982, ப. 8
- ↑ 12.0 12.1 KOVAŘÍK, Jiří. The sword and cross, knights battle and destinies. Praha: Mladá fronta, 2005. [dále jen Kovařík]. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 80-204-1289-1
- ↑ Saladin Or What Befell Sultan Yusuf by Beha Ed-din, Baha' Al-Din Yusuf Ib Ibn Shaddad, Kessinger Publishing, 2004, p.42, p.114
- ↑ http://books.google.com/books?id=7CP7fYghBFQC&pg=PA1101&dq=saladin+balian+jerusalem+siege+-wikipedia+-%22Kingdom+of+Heaven%22+destroy+temple+mount&sig=lu0RI7bOVMyPYmxqHXVUiaWTkkw#v=onepage&q=saladin%20balian%20jerusalem%20siege%20-wikipedia%20-%22Kingdom%20of%20Heaven%22%20destroy%20temple%20mount&f=false
- ↑ Scharfstein and Gelabert, 1997, p. 145.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-19. பார்க்கப்பட்ட நாள் 2010-02-11.
- ↑ Jonathan Phillips, The Crusades, 1095-1197 (New York: Pearson Education Limited, 2002) pg 150.
- ↑ Bahā' al-Dīn (2002) pp 25 & 244.
- ↑ Riley Smith, Jonathan, "The Crusades, Christianity and Islam", (Columbia 2008), p. 63-66
வெளி இணைப்புகள்
தொகு- Stanley Lane-Poole, "The Life of Saladin and the Fall of the Kingdom of Jerusalem", in "btm" format பரணிடப்பட்டது 2009-03-04 at the வந்தவழி இயந்திரம்
- Richard and Saladin: Warriors of the Third Crusade
- Rosebault Ch.J. Saladin. Prince of Chivalri
- De expugnatione terrae sanctae per Saladinum A European account of Saladin's conquests of the Crusader states.
- Saladin: The Sultan and His Times, 1138–1193 பரணிடப்பட்டது 2012-12-11 at Archive.today