சீனப் பெருஞ் சுவர்

(சீனப்பெருஞ்சுவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China) (長城 எளிதாக்கப்பட்டது: 长城 பின்யின்: (ச்)சாங் (ச்)செங், நேரடிக் கருத்து: "நீண்ட நகர் (கோட்டை)") என்பது, ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'சியோங்னு'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். இதில் சில சுவர்கள் 7ஆம் நூற்றாண்டுப் பகுதியின் துவக்கத்தில் கட்டப்பட்டதாகும்.[1] பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருந்தது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சீனப் பெருஞ் சுவர்
The Great Wall
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
The Great Wall
வகைகாலச்சாரம் சார்
ஒப்பளவுi, ii, iii, iv, vi
உசாத்துணை438
UNESCO regionஆசியா பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1987 (11வது தொடர்)

இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

வரலாறு

தொகு
 
பெருஞ்சுவர் சின் வம்சம்
 
பெருஞ்சுவர் ஹான் வம்சம்
 
பெருஞ்சுவர் மிங் வம்சம்
 
முழுமையான சுவர்க் கட்டுமானத்தின் நிலப்படம்

கிமு ஏழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள்பற்றி அறிந்திருந்தனர். இச் சுவர், குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் கிமு 221 க்கும் இடைப்பட்ட காலத்தில், சண்டையிட்டு வந்த சி, யான், சாவோ ஆகிய நாடுகளினால் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட பல்வேறு தனித்தனியான சுவர்களின் ஒன்றிணைப்பால் பெறப்பட்டது. இச்சுவர்கள் பொதுவாக இறுக்கப்பட்ட மண், சரளைக் கற்கள் என்பவற்றினால் கட்டப்பட்டு, வாள், ஈட்டி போன்ற சிறு ஆயுதங்களையே தாக்குப்பிடிக்கக் கூடியனவாக இருந்தன. கிமு 221 ஆம் ஆண்டில் சின் ஷி ஹுவாங் எதிரி நாடுகள் அனைத்தையும் கைப்பற்றி சீனாவை ஒன்றிணைத்து சிங் வம்ச அரசை நிறுவினார். மையப்படுத்திய ஆட்சியை நடத்துவதற்காகவும், நிலப்பிரபுக்கள் மீண்டும் வலுப்பெறுவதைத் தடுக்கவும், தனது பேரரசுக்கு உட்பட்ட நாடுகளின் இடையில் அமைந்திருந்த எல்லைச் சுவர்களை இடித்துவிட அவர் ஆணையிட்டார். இடையிடையே காணப்பட்ட இடைவெளிகளையும் நிரப்பி வடக்கு எல்லைச் சுவரை முழுமைப்படுத்தினார். பின் வந்த வம்சங்களினால் திருத்தப்பட்டும், விரிவாக்கப்பட்டும் வந்த இச்சுவர், மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தற்போதைய வடிவத்தைப் பெற்றது.

வெவ்வேறான நான்கு முக்கிய கட்டுமானங்களும், திருத்தவேலைகளும் நடைபெற்றிருக்கின்றன:

  1. கிமு 208 (கின் வம்சம்)
  2. கிமு முதலாம் நூற்றாண்டு (ஹான் வம்சம்)
  3. 1138–1198 (பத்து வம்சங்களினதும் ஐந்து அரசுகளினதும் காலம்)
  4. 1368 (மிங் வம்சம்)

மிங் வம்சப் பெருஞ் சுவர், கிழக்கு முனையில் ஹேபெய் மாகாணத்திலுள்ள கிங்ஹுவாங்டாவோ (Qinghuangdao)வில் போஹாய் குடாவுக்கு அருகில் ஷன்ஹாய் கடவையில் தொடங்குகிறது. ஒன்பது மாகாணங்களையும், 100 'கவுண்டி'களையும் கடந்து, மேற்கு முனையில், வடமேற்கு கன்சு மாகாணத்திலுள்ள ஜியாயு கடவையில் முடிவடைகின்றது. ஜியாயு கடவை, பட்டுச் சாலை வழியாக வரும் பயணிகளை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டது. பெருஞ் சுவர், ஜியாயு கடவையில் முடிவடைகின்றபோதும், ஜியாயு கடவையையும் தாண்டிப் பட்டுச் சாலையில் காவல் கோபுரங்கள் உள்ளன. இக்கோபுரங்கள் படையெடுப்புக்களை அறிவிக்கப் புகைச் சைகைகளைப் பயன்படுத்தின.

முக்கிய படை அதிகாரியான வு சங்குயியை, ஷஹாய்க் கடவையின் கதவைத் திறந்துவிடச் சம்மதிக்க வைத்ததன் மூலம், மஞ்சுக்கள் சுவரைத் தாண்டினார்கள். அவர்கள் உள்ளே வந்து சீனாவைக் கைப்பற்றிய பின்னர், யாரைத் தடுப்பதற்காகச் சுவர் கட்டப்பட்டதோ அவர்களே நாட்டை ஆண்டுகொண்டிருந்ததால், பெருஞ் சுவர் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை இழந்தது.

அரசாங்கம் சுவர் கட்டும் வேலையில் ஈடுபடும்படி மக்களுக்கு உத்தரவிட்டது. அவர்கள் படைகளால் தாக்கப்படக்கூடிய ஆபத்தைத் தொடர்ச்சியாக எதிர் நோக்கினார்கள். சுவரின் கட்டுமானப் பணிகளின்போது பலர் இறந்த காரணத்தால், இச்சுவர் "உலகின் அதி நீளமான மயானம்" என்றும் அழைக்கப்படுவதுண்டு.

குறிப்பிடத்தக்க பகுதிகள்

தொகு

பின்வரும் மூன்று பகுதிகள் பெய்ஜிங் மாநகரசபைப் பகுதிக்குள் வருகின்றன. இவை திருத்தப்பட்டு இருப்பதுடன், தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வரும் இடங்களாகவும் உள்ளன.

 
ஜின்ஷான்லிங்கிலுள்ள சுவரின் ஒரு பகுதி
 
  • வடக்குக் கடவை அல்லது ஜூயோங்குவான் கடவை. சீனர்கள் தங்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்கு இச் சுவரைப் பயன்படுத்திய காலத்தில், சுவரின் இப்பகுதியில் பல காவலர்கள் இருந்து தலைநகரான பெய்ஜிங்கைப் பாதுகாத்தனர். மலைப்பகுதியிலிருந்து எடுத்த கற்களாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட இச் சுவர்ப்பகுதி, 7.8 மீட்டர் (25.6 அடி) உயரமும், 5 மீட்டர் (16.4 அடி) அகலமும் கொண்டது.
  • மேற்குக் கடவை அல்லது ஜியாயுகுவான் கடவை. இக் கோட்டை, சீனப் பெருஞ் சுவரின் மேற்குப் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது.
  • ஷான்ஹாய்குவான் கடவை. இக்கோட்டை பெருஞ்சுவரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
  • மிகவும் சரிவான மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மிங் காலச் சுவர்ப் பகுதி, மிகவும் கவர்ச்சியானது. இது 11 கிலோமீட்டர் (7 மைல்) நீளமும், 5 முதல் 8 மீட்டர்வரை (16 – 26 அடி) உயரமும் கொண்டது. அடிப்பகுதியில் 6 மீட்டர் (19.7 அடி) அகலத்தைக் கொண்ட இச் சுவர்ப்பகுதி உச்சியில் 5 மீட்டர் (16.4 அடி) அகலத்தைக் கொண்டுள்ளது. வாங்ஜிங்லூ என்பது ஜிங்ஷான்லிங்கின் 67 காவல் கோபுரங்களில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 980 மீட்டர் (3,215 அடி) உயரத்தில் உள்ளது.
  • ஜின்ஷான்லிங்கின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முத்தியான்யு பெருஞ்சுவர் மலையொன்றைச் சுற்றி அமைந்துள்ளது. தென்கிழக்கிலிருந்து, வடமேற்காகச் செல்லும் இச் சுவர் 2.25 கிலோமீட்டர் (1.3 மைல்) நீளமானது. இது மேற்கில் ஜுயோங்குவான் கடவையுடனும், கிழக்கில் குபெய்க்குவுடனும் இணைந்துள்ளது.

இன்னொரு குறிப்பிடத்தக்க பகுதி சுவரின் கிழக்கு முனைப் பகுதிக்கு அண்மையில் உள்ளது. இங்கேதான் பெருஞ் சுவரின் முதல் கடவை இச் சுவர் ஏறும் முதல் மலையான ஷான்ஹாய்குவானில் கட்டப்பட்டது. இச் சுவரில் பாலமாகக் கட்டப்பட்ட ஒரே பகுதியான ஜியோமென்கூ உள்ளது. சோங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட மெங் ஜியாங்-நு கோயில் இங்கிருப்பதால், ஷான்காய்குவான் பெருஞ் சுவர், "பெருஞ்சுவர்க் கட்டுமானத்தின் அருங்காட்சியகம்" எனப்படுகிறது.

காவற் கோபுரங்கள்

தொகு

பெருஞ்சுவரின் நீளம் முழுவதும் இருந்த படையினருக்கு இடையேயான தகவல் தொடர்புகளும், தேவையான போது கூடுதல் படைகளை அழைப்பதற்கான வசதிகளும், எதிரிகளின் நகர்வுகள்குறித்து, பாசறைகளில் இருந்த படைகளை எச்சரிக்க வேண்டியதும் முக்கியமான தேவைகள். இதனால், மலை முகடுகளிலும், சுவர்ப் பகுதிகளில் அமைந்த பிற உயரமான பகுதிகளிலும், சமிக்ஞைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கட்டிடப்பொருள்கள்

தொகு

செங்கற்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர், பெருஞ்சுவர் மண், கற்கள், மரம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருந்தது. மிங் வம்சக் காலத்தில், சுவரின் பல இடங்களில் செங்கற்களும், கற்கள், ஓடுகள், சுண்ணாம்பு என்பனவும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. செங்கற்களின் அளவு, கற்கள், மண் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்வதிலும் பார்க்கக் கட்டுமான வேலையை வேகமாகச் செய்ய உதவியது. அத்துடன் செங்கற்கள் கூடுதலான சுமையைத் தாங்கக்கூடியவையாக இருந்ததுடன் மண்சுவர்களை விடக் கூடிய காலம் நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது. கற்கள் அவற்றின் நிறை காரணமாகச் சுவரை உறுதியாக வைத்திருக்கக் கூடியன என்றாலும், அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் கடினமானது. இதனால், நீள்சதுரக் குற்றிகளாக வெட்டப்பட்ட கற்கள், அத்திவாரம், வாயில் பகுதிகள் போன்றவற்றுக்குப் பயன்பட்டன.

தற்போதைய நிலைமை

தொகு

பெய்ஜிங்குக்கு வடக்கே சுற்றுலா மையங்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்டும், சில வேளைகளில் மீளமைப்புச் செய்யப்பட்டும் இருந்தாலும் ஏனைய இடங்களில் சுவர் நல்ல நிலையில் இல்லை. சில இடங்களில் இது ஊர் விளையாட்டு இடங்களாகவும், இன்னும் சில இடங்களில், சுவரின் சில பகுதிகளில் சுலோகங்களும் எழுதப்படுகின்றன. கட்டுமானத் திட்டங்களின்போது குறுக்கேயிருந்தமையால் சில பகுதிகள் இடித்துத் தள்ளப்பட்டுமுள்ளன. சீனப் பெருஞ் சுவர்ச் சங்கம் சுவரைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஜூன் 2003 வரை சீன அரசாங்கம் சுவர்ப் பாதுகாப்புக்கான எந்தச் சட்டத்தையும் உருவாக்கவில்லை. விரிவான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாததால் இச்சுவரின் எவ்வளவு பகுதி எஞ்சியுள்ளது என்று கூறமுடியாதுள்ளது. குறிப்பாகத் தொலைதூரப் பகுதிகளில் இச் சுவரின் நிலை பற்றிக் கூறுவது கடினமானது. கான்சு மாகாணத்திலுள்ள 60 கிலோமீட்டர் நீளமான இச் சுவரின் பகுதி, மணற்புயலினால் ஏற்படும் அரிப்பினால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் அழிந்துவிடக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

சிறப்பு மதிப்பீடு

தொகு

இச் சுவர் சிலசமயம் "நவீன உலகின் ஏழு அதிசயங்களுள்" ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆனாலும் இது கிரேக்கர்களினால் அடையாளம் காணப்பட்ட பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றல்ல.

1987 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் அறிவிக்கப்பட்டது.

1938 ஆம் ஆண்டில், ரிச்சர்ட் ஹலிபர்ட்டன் எழுதிய "அதிசயங்களின் இரண்டாவது புத்தகம்", சந்திரனிலிருந்து பார்க்கக்கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு சீனப் பெருஞ் சுவர் மட்டுமே என்று குறிப்பிட்டது. இந்தக் குறிப்பு நிலைத்து, நகரத்துப் பாரம்பரியக் கதை நிலையைப் பெற்றதுடன், பாடப் புத்தகங்கள் சிலவற்றிலும் இடம் பெற்றது. எனினும் சீனப் பெருஞ் சுவரை நிலவிலிருந்து வெறும் கண்ணால் பார்க்கமுடியும் என்ற பொருளை இது தருமாயின் அது உண்மையல்ல.

எனினும் தாழ்வான பூமியைச் சுற்றும் சுற்றுப்பாதையிலிருந்து, அதாவது சந்திரனிலும் ஆயிரம் மடங்கு குறைவான தூரத்திலிருந்து பார்க்கும்போது, சில வாய்ப்பான சமயங்களில் இது வெறும் கண்ணுக்குத் தெரியக்கூடும். பெருஞ் சுவர் சில மீட்டர்கள் அகலம் மட்டுமே கொண்டது, அதனால் நெடுஞ்சாலைகள், விமான ஓடுபாதைகள் முதலிய பூமியிலுள்ள பல்வேறு அமைப்புக்களுடன் ஒப்பிடக்கூடியது. விண்வெளி விமானிகள் வெவ்வேறுவிதமான குறிப்புகளைத் தந்துள்ளனர். இது அதிசயப்படத்தக்கதல்ல. ஒளியின் திசையைப் பொறுத்து, சில சமயங்களில் தெளிவாகத் தெரியும் சந்திர மேற்பரப்பிலுள்ள சில அம்சங்கள், வேறு சமயங்களில் கண்ணுக்குப் புலப்படாமற் போவதுண்டு.

"விமான ஓடுபாதையளவுக்குச் சிறியவற்றைக்கூட நாங்கள் பார்க்கமுடிகிறது, (ஆனால்) 180 மைல்கள் மட்டுமேயான உயரத்திலிருந்து சீனப் பெருஞ் சுவர் தெரியவேயில்லை" என ஒரு விண்வெளிக் கலத்தின் விமானி அறிக்கையிட்டார். விமானி வில்லியம் போக் என்பவர் ஸ்கைலாப்பிலிருந்து தான் அதைப் பார்த்ததாக நினைத்தார். ஆனால் பின்னர், உண்மையில் அவர் பார்த்தது பீக்கிங்குக்கு அண்மையிலுள்ள பெருங் கால்வாயையே எனக் கண்டுகொண்டார். இவர் தொலை நோக்குக் கண்ணாடிகளைப் பயன்படுத்திப் பெருஞ் சுவரைக் காண்பதில் வெற்றிகண்டார் என்றாலும் வெற்றுக் கண்களுக்குச் சுவர் தெரியவில்லை என்றார். அண்மையில் சீன விண்வெளி விமானி யாங் லிவெய், தன்னால் அதைப் பார்க்கவே முடியவில்லை என அறிவித்தார். ஒரு அப்போல்லோ விமானி, சில ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பார்க்கும் போது எந்த மனிதரமைத்த அமைப்புமே தெரியவில்லை என்றார்.

அனுபவம் மிக்க அமெரிக்க விமானி Gene Cernan, 160 கிமீ தொடக்கம் 320 கிமீ உயரத்திலுள்ள பூமிச் சுற்றுப்பாதையிலிருந்து சீனப் பெருஞ் சுவர் வெற்றுக் கண்ணுக்குத் தெரியவே செய்கிறது என்று கூறினார்.

எவ்வாறெனினும் சீனப் பெருஞ் சுவர், மனிதனாலாக்கப்பட்ட வேறெந்த அமைப்பையும் விட விண்வெளியிலிருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரியக் கூடியது என்ற கதை உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவு.

காட்சியகம்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The New York Times with introduction by Sam Tanenhaus (2011). The New York Times Guide to Essential Knowledge: A Desk Reference for the Curious Mind. St. Martin's Press of Macmillan Publishers. p. 1131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-64302-7. Beginning as separate sections of fortification around the 7th century B.C.E and unified during the Qin Dynasty in the 3rd century B.C.E, this wall, built of earth and rubble with a facing of brick or stone, runs from east to west across China for over 4,000 miles.

வெளியிணைப்புகள்

தொகு
சீனப் பெருஞ் சுவர் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

  விக்சனரி விக்சனரி
  நூல்கள் விக்கிநூல்
  மேற்கோள் விக்கிமேற்கோள்
  மூலங்கள் விக்கிமூலம்
  விக்கிபொது
  செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனப்_பெருஞ்_சுவர்&oldid=3894023" இலிருந்து மீள்விக்கப்பட்டது