சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்

ஜெனகை மாரியம்மன் கோயில், இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தானில் பாயும் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1] இக்கோயில் கருவறையில் சந்தன மாரியம்மன் நின்ற நிலையிலும், ஜெனகை மாரியம்மன் அமர்ந்த நிலையிலும் காட்சியளிக்கிறார். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் அமைந்த இடத்தை முன்னர் ஜெனகாயம்பதி, சதுர்வேதிமங்கலம், சோழாந்தக சதுர்வேதி மங்கலம், ஜெனநாத சதுர்வேதி மங்கலம் என்று அழைத்ததாக கோவில் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகிறது.[2]இந்த மருத்துவக் கோயிலில் குடிகொண்டுள்ள ஜெனகை மாரியம்மன், சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 48 கிராம மக்களுக்கும் குடும்பக் கடவுளாக உள்ளார். ஜெனகை மாரியம்மன் குடிகொண்டுள்ள இந்த ஊர் இராமாயணத்தில் வரும் ஜனகர் மகளான ஜானகியை போற்றும் வகையில் ஜெனகபுரம் என்று முன்னர் அழைக்கப்பட்டது. மேலும் மாரியம்மனுக்கு ஜெனகை மாரியம்மன் எனப்பெயர் சூட்டப்பட்டது. இக்கோயில் தல விருட்சம் வேப்பமரம் மற்றும் அரசமரம் ஆகும்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் is located in தமிழ் நாடு
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்
ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், மதுரை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°01′13″N 77°57′42″E / 10.0203°N 77.9617°E / 10.0203; 77.9617
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை மாவட்டம்
அமைவிடம்:சோழவந்தான்
சட்டமன்றத் தொகுதி:சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:தேனி மக்களவைத் தொகுதி
ஏற்றம்:217 m (712 அடி)
கோயில் தகவல்
மூலவர்:ஜெனகைமாரி (ரேணுகாதேவி)
குளம்:மாரி தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி பிரம்மோற்சவம்,
விஜயதசமி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:உள்ளன

அமைவிடம் தொகு

மதுரையிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழவந்தானில் இக்கோயில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 217 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°01′13″N 77°57′42″E / 10.0203°N 77.9617°E / 10.0203; 77.9617 ஆகும்.

நோய் தீர்க்கும் அம்மன் தொகு

எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவக் கோயில் உள்ளது. அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு, அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும் அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும்.பெண் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி, கோயிலில் தொட்டில் கட்டி பூஜை செய்வது வழக்கம்.

சிறப்பு நாட்கள் தொகு

வெள்ளிக் கிழமை மட்டும் அம்மன் சந்தன காப்பில் அருள் வழங்குவார். வெள்ளி போன்ற சிறப்பு நாளில் காலை 6 மணி முதல் இரவு 8 வரை தொடச்சியாக கோயில் நடை திறந்திருக்கும். பிற நாட்களில் பகலில் 6 மணி முதல் 11 மணி நேரம் வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்து இருக்கும். கோயிலில் நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

அதிசயத்தின் அடிப்படையில் தொகு

இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் ஜெனகை மாரியம்மன் பெயரில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விஜயதசமி அன்று வைகை ஆற்றில் நடக்கும் அம்பு போடும் திருவிழாவின் முடிவில் மழை தூரல் விழுவது இன்றும் நடக்கும் அதிசயமான உண்மையாகும்.

வைகாசித் திருவிழா & தேரோட்டம் தொகு

ஆண்டுதோறும் வைகாசி மாதம் 17 நாட்கள் பிரம்மோற்சவம் திருவிழா நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளான்று ஜெனகை அம்மன் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். வைகாசி திருவிழாவை முன்னிட்டு பொங்கல் படையல், அக்னிசட்டி எடுத்தல், பூக்குழியில் இறங்குதல் போன்ற நேர்த்திக கடன்கள் பக்தர்கள் செலுத்துவர். 17ஆம் நாள் இரவு 7 மணி முதல் விடிய விடிய வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெறும்.[3]

குடமுழுக்கு, 2021 தொகு

27 சனவரி 2021 அன்று இக்கோயிலுக்கு குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. jenakai mariamman kovil, sholavandan
  2. ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், மதுரை
  3. ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா
  4. "சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்" இம் மூலத்தில் இருந்து 2021-01-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210128022327/https://www.maalaimalar.com/news/district/2021/01/25081518/2288681/tamil-news-janagai-Mariamman-temple-Kumbabishekam.vpf. 

வெளி இணைப்புகள் தொகு