சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, மதுரை

(சௌராட்டிர மேல்நிலைப்பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி மதுரை மாநகரின் மையப்பகுதியில் காமராசர் சாலையில் அமைந்துள்ளது. சௌராட்டிர மொழி பேசும் மொழிவாரிச் சிறுபான்மை சௌராட்டிர சமுகத்தவரால் நடத்தப்படும் இப்பள்ளி சௌராட்டிர சமுக மக்களின் பண்பாடு, மற்றும் நாகரிகத்தின் சின்னமாக திகழ்கிறது. தற்போது இப்பள்ளியில் 3500 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, மதுரை 625009
அமைவிடம்
காமராசர் சாலை, மதுரை, தமிழ் நாடு.
தகவல்
தொடக்கம்1904
நிறுவனர்சௌராட்டிர உயர்நிலைப் பள்ளிக் குழு, மதுரை.
பள்ளி மாவட்டம்மதுரை
கல்வி ஆணையம்முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்
தரங்கள்ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை
பால்ஆண்கள்
மாணவர்கள்3500
கல்வி முறைதமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டம்

வரலாறு

தொகு

1886ஆம் ஆண்டில் மதுரை நகரின் கிழக்குப்பகுதியில் உள்ள, இராமநாதபுரம் சாலையில் (தற்போது காமராசர் சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது) இருந்த தொப்பே. பெல்லய்யர் சத்திரத்தில், கந்தாள்ளு. ரெ. சுந்தரராஜபாகவதர் தலைமையில் இருந்த கல்விக் குழு, சௌராட்டிர துவக்கப் பள்ளி துவக்கப்பட்டது. பின்னர் 1900ஆம் ஆண்டில் கெண்டேன். கே. எஸ். பி. நன்னுசாமி பாகவதவர் தமது சொந்த கட்டிடத்தை, சௌராட்டிர துவக்கப் பள்ளி அவ்விடத்தில் நிலையாக நடைபெற நன்கொடையாக வழங்கினார். இத்துவக்கப் பள்ளியை “கெண்டென் பொள்டம்” என்று சௌராட்டிர சமூக மக்கள் இன்றளவும் சிறப்பாக அழைப்பர்.

பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை பெருகவே, தெற்குமாசிவீதியில், திருமலை நாயக்கர் மன்னரின் இசை மன்றமாக விளங்கிய நவபத்கானா எனும் பழைய கட்டிடத்தை அன்றைய ஆங்கிலேய அரசிடமிருந்து ஐயாயிரம் ரூபாய் விலைக்கு வாங்கி, 1892ஆம் ஆண்டு அவ்விடத்தில் புதிய துவக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.

1895ஆம் ஆண்டு முதல் இப்பள்ளியின் நிர்வாகப் பெறுப்பு மதுரை சௌராட்டிர சபையின் கீழ் வந்தது. 1898ஆம் ஆண்டில் இந்த துவக்கப் பள்ளி இடைநிலைப் பள்ளியாக நிலை உயர்த்தப்பட்டது. 1900ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. இவ்வுயர்க்கு காரணமாக விளங்கியவர்களில் புளியடி. முனிநாகேந்திர பாகவதர், மாணிக்கா. இராம. சங்கரநாராயணய்யர், கந்தாள்ளு. வெ. இலட்சுமணய்யர், கே. எஸ். பி. நன்னுசாமி பாகவதர் மற்றும் கே. எஸ். சேசய்ய பாகவதர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

1900இல் பள்ளியின் நிர்வாகக் குழு

தொகு

மதுரை சௌராட்டிர சபையினரால் நியமிக்கப்பட்ட கே. டி. இலக்குமண பாகவதர் செயலாளராக கொண்ட, எல். கே. துளசிராம், கே. வி. இராமாச்சாரி, கே. எஸ். பி. நன்னுசாமி பாகவதர், என். கே. இராமலிங்கய்யர், ஆகியவர்கள் கொண்ட நிர்வாகக்குழு, 1900ஆம் ஆண்டு முதல் பள்ளியின் நிர்வாகத்தை திறம்பட நடத்தினர்.

உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்வு

தொகு

மாணவர்கள் எண்ணிக்கை உயரவே இடப்பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால், 1901ஆம் ஆண்டு, ஆகத்து மாதத்தில் மேங்காட்டுப் பொட்டல், எட்வர்டு பூங்கா (இன்றைய ஜான்சிராணி பூங்கா) (நியு சினிமா திரைஅரங்கு) அருகில் இருந்த கட்டிடத்தை, அருளம்மாள் அந்தோணியிடமிருந்து ரூபாய் ஐயாயிரத்தி அறுநூறுக்கு வாங்கி, நவபத்கானாவில் இருந்த பள்ளியை புதிய கட்டிடத்திற்கு மாற்றினர்.

நவபத்கானாவில் இருந்த கட்டிடம் கிளைப் பள்ளியாக செயல்பட்டது. 1903ஆம் ஆண்டு முதல் இப்பள்ளி முழு அளவில் உயர்நிலைப்பள்ளியாக தகுதி பெற்றது. பின் அரசின் தற்காலிக தகுதி இப்பள்ளிக்கு கிடைத்த பின்பு, 1904ஆம் ஆண்டில் முதன்முதலாக மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வான மெட்ரிக்குலேசன் தேர்வுக்கு அனுப்பப்பட்டனர்.

பள்ளி கல்விக் குழு

தொகு

உயர்நிலைப் பள்ளியின் தேவைகள் தொடர்ந்து பெருகப் பெருக, சிக்கலான நேரங்களில் நிலைமையை சமாளிக்க 1906இல் பத்து பேர் கொண்ட கல்விக்குழு அமைக்கப்பட்டது. பள்ளிக் கல்விக்குழுவின் மேலாளராக 1. எல். கே. துளசிராம் மற்ற உறுப்பினர்களாக 2. கே. வி. இராமாச்சாரி, 3. கே. எஸ். சேஷய்ய பாகவதர், 4. கே. டி. இலக்குமண பாகவதர், 5. கே. எஸ். பி. நன்னுசாமி பாகவதர், 6. அல்லு. சொக்கய்யர், 7. என். கே. இராமலிங்கம், 8. என். எம். ஆர். பாலுசாமி அய்யர், 9. சி. எம். வெங்கடாசலபதி அய்யர், 10. எஸ். பி. நாகேசுவர அய்யர் ஆகியவர்களின் நிர்வாகத்தில் பள்ளி செயல்பட்டது.

புதுப் பொலிவுடன் சௌராட்டிர உயர்நிலைப் பள்ளி கட்டிடம்

தொகு

மதுரை சௌராஷ்ட்ர சபையின் கீழ் இருந்த இப்பள்ளியின் நிர்வாகம், 1911இல் அமைக்கப்பட்ட சௌராட்டிர உயர்நிலைப் பள்ளிக் குழுவின் கீழ் வந்தது.

மாணவர்களின் எண்ணிக்கை பெருகவே, 1911இல் மதுரை, இராமநாதபுரம் சாலையில் (காமராசர் சாலை) இருந்த மதுரை நகராட்சிக்கு சொந்தமான இடத்தை முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கி, 1917இல் பள்ளிக்கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டிட நிதிக்காக சமுக மக்களிடம் நன்கொடை பெற்று, ரூபாய் 1,50,000/- செலவில் புதிய பள்ளிக் கல்கட்டிட திறப்பு விழா 17. 01. 1929இல் நடந்தது. மதுரை, திருநகரில் உள்ள சீதாஇலக்குமி ஆலைத் தலைவர் சி. எஸ். இராமாச்சாரி, வழங்கிய நன்கொடை மூலம், பள்ளியின் முதன்மை கல்கட்டிடத்தின் முதல் மாடியில சீதாஇலக்குமி கூட்ட அரங்கம் (Meeting Hall) கட்டப்பட்டது.

பள்ளியின் குறிக்கோளுரை

தொகு

இப்பள்ளியின் குறிக்கோளுரை (Motto of the School) பிறர்க்கு வாழ் என்பதே. பள்ளியின் முதன்மை கல் கட்டிடத்தின் நுழைவாயின் மேற்புற முகப்பில் கல்விக் கடவுளான சரசுவதி தேவியின் திருவுருவசிலை அமைக்கப்பட்டு, அதன் மேல் பிறர்கு வாழ் எனும் பள்ளியின் குறிக்கோளுரை பொறிக்கப்பட்டு, அதனடியில் ஆங்கிலத்தில் Live for Others என குறிப்பிடப்பட்டுள்ளது.

1904ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டம்

தொகு

இந்தியத் துணைக் கண்டத்திலே முதன் முதலாக பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டத்தை இப்பள்ளி 1904ஆம் ஆண்டு முதல் சமுக கொடையாளர்களிடமிருந்து நன்கொடைகள் பெற்று செயல்படுத்தியது. தற்போது இலவச மதிய உணவு திட்டத்தின் கீழ் 1250 மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

காலைச் சிற்றுண்டித் திட்டம்

தொகு

தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களின் நலன் கருதி அமெரிக்கா வாழ் சௌராட்டிரர்கள் மற்றும் உள்ளூர் சமுக வள்ளல்களின் நிதி உதவியுடன் 2003ஆம் ஆண்டு தொடக்கம் முதல் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளியின் தொடர் விரிவாக்கப் பணிகள்

தொகு

மாணவர்களின் அறிவு மற்றும் உடல் வளுவிற்காக 1934இல் அறிவியல் கூடங்களுக்கு தேவையான கருவிகளும் வாங்கப்பட்டும் மற்றும் விளையாட்டு அரங்குகளும் கட்டப்பட்டன. பள்ளியின் இடவசதிக்காக, பள்ளியின் கிழக்குப் பகுதியில் இருந்த சோமலிங்காபுரம் பகுதி ரூபாய் 45,500 செலவில் வாங்கப்பட்டது.

பொன் விழா கட்டிடம் (ஜானகிராம் அரங்கம்)

தொகு

பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை பெருகவே, பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டிய சூழ்நிலையில் பள்ளியின் கௌரவச் செயலாளராக இருந்த பி. எஸ். ஏ. கிருட்டிணய்யரின் விடா முயற்சியால் சமுக தர்ம சிந்தனையாளர்களிடம் ஒன்றை இலட்சம் ரூபாய நன்கொடை ஈட்டி, 1954ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் காமராசரால் புது கட்டிடம் கட்ட கட்டிட அடிக்கல் நாட்டப்பட்டது. பெரிய அரங்கத்துடன் கூடிய 12 வகுப்பறைகள் கட்டப்பட்டது. இக்கட்டிடம் பொன்விழா கட்டிடமாக கருமுத்து தியாகராசர் தலைமையில் 26-01-1957இல் திறப்புவிழா நடைபெற்றது. ’கூட்ட அரங்கம்’ கட்ட நன்கொடை அளித்த கே. எல். என். ஜானகிராம் அவர்கள் பெயரால், ஜானகிராம் ஹால் எனும் பெயர் கூட்ட அரங்கத்திற்கு சூட்டப்பட்டது.

ஹார்வி நூலக கட்டிடம்

தொகு

மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் பொருட்டு மதுரை ஹார்வி மில் உரிமையாளர் பெயரில் ஹார்வி நூலக கட்டிடம் திறக்கப்பட்டது.

திறந்த வெளி கலை அரங்கம்

தொகு

மோர்கொண்டா. இராம. நரசிம்மய்யர்-சரசுவதி தம்பதியரின் நன்கொடையால் கட்டப்பட்ட திறந்த வெளி கலை அரங்கம் (மோர்கொண்டா. நரசிம்மய்யர் கலை அரங்கம்) அமைக்கப்பட்டது.

பகலுணவுத் திட்டத்திற்கு புதிய கட்டிடம்

தொகு

இலவச பகலுணவு திட்டத்திற்கு மாணவர்கள் அமர்ந்து உண்ண பெரிய கட்டிடம் தேவைப்பட்டதால், புதிய பகலுணவு கட்டிடத்தை 1966ஆம் ஆண்டில், ஞானி. இராமாச்சாரி வழங்கிய நன்கொடையால், (ஞானி. இராமாச்சாரி மதிய உணவு கட்டிடம்) கட்டப்பட்டது.

தொழில் கல்வி பிரிவுகள் மற்றும் புதிய கட்டிடங்கள்

தொகு

பள்ளியில் துணி நூல் தொழினுட்பம் (Textile Technology), இயந்திரவியல் (Mechanical) மற்றும் அமைச்சுப் பணி பயிற்சி(Secretarial Course) ஆகிய மூன்று தொழிற்கல்வி பிரிவு வகுப்புகள் தொடங்கப்பட்டது. துணிநூல் தொழில் நுட்ப கல்விக்கு டி. பி. கிருட்டிணய்யர் நினனவு துணிநூல் தொழில் நுட்ப கட்டிடம் கட்டப்பட்டது. ஸ்ரீபிரசன்ன வெங்கடேசுவரா தட்டச்சு பயிற்சி மையமும் தொடங்கப்பட்டது. கே. எல். நாகசாமி அய்யர் நினைவு இயந்திரவியல் கட்டிடம், இயந்திரவியல் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது.

நவீன உடற்பயிற்சிக் கூடம்

தொகு

மாணவர்களின் உடல் வலு ஏற்றம் பெற, சமுக வழக்கறிஞர் ஆர். எஸ். சுந்தரராமன்-சீதாஇலக்குமி அம்மாள் நினைவுநவீன உடற் பயிற்சிக் கூடம் கட்டப்பட்டது. அல்லு. சுப்ரமணியன் வழங்கிய நன்கொடையில் இதே கட்டிடத்தில் முதல் மாடியில் மேசைப் பந்தாட்ட விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டது.

ஆசிரியர்கள் காலனி

தொகு

1958ஆம் ஆண்டில், பள்ளி ஆசிரியர்களின் நலனை முன்னிட்டு, சி. எம். வி. கிருட்டிணமாச்சாரி, என். எம். ஆர். மகாதேவன் மற்றும் ஜெ. கே. இராமமூர்த்தி ஆகியவர்களின் முயற்சியால் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் உள்ள அனுப்பானடியில் வீட்டடி மனைகள் வாங்கப்பட்டு சௌராட்டிர பள்ளி ஆசிரியர்கள் குடியிருப்பு உருவாக்கப்பட்டது.

வைர விழா

தொகு

இப்பள்ளி அறுபது ஆண்டுகள் நிறைவு அடைந்த, வைரவிழா 1966ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அன்றைய தமிழக முதல்வர், எம். பக்தவச்சலம், தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்த சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர். பி. சந்திர ரெட்டி ஆகியவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பு செய்தனர்.

பவள விழா

தொகு

இப்பள்ளி 1978ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. பள்ளியின் பவளவிழா, தமிழ்நாடு அரசு தமிழக முதல்வர் எம். ஜி. ஆர்., தலைமையில் 09-07-1979ஆம் நாளில் சிறப்பாக நடைபெற்றது.

நூற்றாண்டு விழா

தொகு

இப்பள்ளியின் நூற்றாண்டு விழா (1904-2004) பள்ளியின் தலைவர் எம். ஆர். சங்கரன் முன்னிலையில், பள்ளியின் தாளாளர் ஏ. கே. இராமமூர்த்தி தலைமையில் 05-10-2007 அன்று நடைபெற்றது. விழாவை சிறப்பிக்கு பொருட்டு பள்ளி நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டது. பள்ளியின் மேம்பாட்டிற்காக கடினமாக உழைத்த சமுக சிந்தனையாளர் எல். கே. துளசிராம் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது. மேலும் நூற்றாண்டு விழா நினைவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பள்ளியின் நூற்றாண்டு விழா கட்டிட திறப்பு விழா

தொகு

பள்ளியின் நூற்றாண்டு விழா (1904-2004) கட்டிடத்தை, பள்ளியின் தாளாளர் ஏ. கே. இராமமூர்த்தி தலைமையில், பள்ளியின் தலைவர் எம். ஆர். சங்கரன் முன்னிலையில் சென்னை, மைலாப்பூர், இராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் கௌதமானந்தஜி 03-12-2010 அன்று திறந்து வைத்தார்.↑

மாணவர்களுக்கான நாட்டு நலப்பணித் திட்டங்கள்

தொகு

இப்பள்ளியில் தேசிய மாணவர் படை 1955ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பிற பள்ளிகளில் இல்லாத அளவில் தேசிய மாணவர் படையில் இரண்டு தரைப்படை பிரிவுகளும், ஒரு கப்பல்படை பிரிவும், ஒரு விமானப்படை பிரிவும் உள்ளது. மேலும் மாணவர்களை சமூகப்பணியில் ஈடுபடுத்தும் நோக்கில், மூன்று சாரணர் படைகள் அமைப்பும் மற்றும் ஒரு திரிசாரணர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய மாணவர் அமைப்புகள் செயல்படுகிறது.

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்

தொகு

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்

தொகு

இந்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்கள்

  • எஸ். கே. குப்புசாமி, தலைமை ஆசிரியர் சௌராட்டிர உயர்நிலைப்பள்ளி, காமராசர்சாலை, மதுரை 625009.
  • கே. வி. கோவிந்தன், தலைமை ஆசிரியர், சௌராட்டிர துவக்கப் பள்ளி, கீழவெளி வீதி, மதுரை 625001

மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்

தொகு

தமிழ்நாடு அரசின் மாநில நல்லாசிரியர் விருது பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்கள்.

  • ஆர். கே. வெங்கட்ராமன், தலைமை ஆசிரியர்
  • பி. ஆர். இராசாராம், பட்டதாரி ஆசிரியர்
  • கே. ஜி. இராமமூர்த்தி, பட்டதாரி ஆசிரியர்
  • ஆர். கிருட்டிணராசன், பட்டதாரி ஆசிரியர்

சாரணர் இயக்கத்தின் உயர் விருதுகள் பெற்ற நிர்வாகிகள் & ஆசிரியர்கள்

தொகு

தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் மதுரை மாவட்ட ஆணையாளரும் மற்றும் தமிழ்நாடு மாநில உதவி ஆணையாளருமான பள்ளியின் தாளாளர் ஏ. கே. இராமமூர்த்தியின் சாரணர் இயக்கத்திற்காக ஆற்றிய பெரும்பணியைப் பாராட்டும் முகமாக, இந்தியக் குடியரசுத் தலைவர், திருமதி பிரதிபா படேல் அவர்களிடமிருந்து சாரணர் இயக்கத்தின் உயர் விருதான வெள்ளி யாணை விருதை 14-07-2010ஆம் நாளில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அசோகா மாளிகையில் நடந்த விழாவின்போது பெற்று பள்ளியின் மேன்மையை அகில இந்திய அளவில் வெளிப்படுத்தினார்.

இந்திய சாரணர் & சாரணீய இயக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பள்ளி ஆசிரியர் பி. ஆர். சந்திரசேகரின் மேலான நீண்டகால சாரணர் இயக்கப் பணியை பாராட்டும் முகத்தான், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடமிருந்து, சாரணர் இயக்க விருதையும் பாராட்டுப் பத்திரத்தையும் பெற்று பள்ளியின் பெருமையைத் தமிழ்நாடு முழுமையாக வெளிப்படுத்தினார்.

இப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள்

தொகு
  • சௌராட்டிர மேல் நிலைப் பள்ளி, (அரசு உதவி பெரும் பள்ளி), காமராசர் சாலை, மதுரை 625009
  • சௌராட்டிர இருபாலர் மேல்நிலைப் பள்ளி, (அரசு உதவி பெரும் பள்ளி), (நியு சினிமா திரையரங்கம் அருகில்) மதுரை 625001
  • சௌராட்டிர துவக்கப் பள்ளி, (அரசு உதவி பெரும் பள்ளி), கீழவெளிவீதி, மதுரை 625001
  • ஸ்ரீபிரசன்ன வெங்கடேசுவர மேல்நிலைப் பள்ளி (சுயநிதிப் பள்ளி), மதுரை 625009
  • ஸ்ரீபிரசன்ன வெங்கடேசுவர மழலையர் பள்ளி (சுயநிதிப் பள்ளி), மதுரை 625009

பள்ளியின் வளர்ச்சிக்குக் வித்திட்ட நிர்வாகிகள்

தொகு

ஆதார நூல்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு