இழான் இழாக்கு உரூசோ

(ஜான் ஜேக்கஸ் ரூசோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இழான் இழாக்கு உரூசோ (ஜான் ஜாக் ரூசோ, Jean-Jacques Rousseau, சூன் 28, 1712சூலை 2, 1778) ஒரு முக்கியமான பிரான்சிய மெய்யியலாளரும் அறிவொளிக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது அரசியல் தத்துவம் பிரான்சியப் புரட்சியிலும், தாராண்மைவாதம், பழமைவாதம், சமூகவுடமைக் கோட்பாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியது. குற்ற ஏற்புரைகள் (Confessions), தனித்த பயணியின் கனவுகள் (Reveries of a Solitary Walker) போன்ற அவரது எழுத்துக்கள் மூலம் தற்காலத் தன்வரலாற்று இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியதுடன், சிந்தனையில் அகநிலைநோக்கை (subjectivity) ஊக்குவித்தார். இதன் தாக்கத்தை எகல், பிராய்டு போன்ற பரந்துபட்ட சிந்தனையாளர்களின் ஆக்கங்களில் காணமுடியும். இவரது ஜூலி அல்லது புதிய ஏலவீஸ் (Julie, ou la nouvelle Héloïse) என்னும் புதினம் 18 ஆம் நூற்றாண்டின் அதிகம் விற்பனையான புனைகதை இலக்கியங்களுள் ஒன்றாக இருந்ததுடன், புனைவியலின் (romanticism) வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியது.[1][2] ஒரு கோட்பாட்டாளனாகவும், இசையமைப்பாளனாகவும், இசைத்துறைக்கும் இவர் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். 1778 இல் காலமானார். இவரது உடல் 1794 ஆம் ஆண்டில் பாரிசில் உள்ள பந்தியனில் அடக்கம் செய்யப்பட்டது.

இழான் இழாக்க்கு உரூசோ
காலம்18ம் நூற்றாண்டுத் தத்துவம்
(நவீன தத்துவம்)
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிசமூக ஒப்பந்த கோட்பாடு
முக்கிய ஆர்வங்கள்
அரசியல் தத்துவம்,இசை, கல்வி, இலக்கியம், தன்வரலாறு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
General will, amour-propre, மனிதத்தின் இயற்கையான நல்லியல்புகள்
செல்வாக்குச் செலுத்தியோர்
கையொப்பம்

வரலாறு

தொகு

உரூசோ, இன்றைய சுவிட்சர்லாந்திலுள்ள செனீவாவில் பிறந்தார். தனது வாழ்நாள் முழுவது அவர் தன்னை ஒரு செனீவாவின் குடிமகனாகவே விபரித்துக்கொண்டார். இவர் பிறந்து ஒன்பதாவது நாளிலேயே இவரது தாயார் மகப்பேறு கோளாறினால் இறந்துவிட்டார். கைக்கடிகார உற்பத்தியாளரான இவரது தந்தையும், தொழிலில் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறைவாசத்துக்குப் பயந்து, 1722 இல், உரூசோவைக் கைவிட்டுச் சென்றுவிட்டார். உரூசோவின் இளமைக்காலப் படிப்பு, புளூட்டாக்கின் வாழ்க்கைகள் மற்றும் கல்வீனியம் சார்ந்த நூல்கள் ஆகியவற்றை வாசிப்பது மட்டுமே. இவர் பொதுப் பூங்காக்களில் இருந்தே இந் நூல்களை வாசித்தார். தனது வளர்ச்சியின் மிகப் புனிதமான பகுதி எனப் பின்னர் இவர் இதனை விபரித்தார். மதகுருவின் தங்கை இவருக்கு அளித்த உடல்சார்ந்த தண்டனைகள் தனது பாலியல் நடத்தைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக உரூசோ தனது குற்ற ஏற்புரை என்னும் நூலில் விளக்கியுள்ளார். இவர் பல வினோதமான பாலியல் நடத்தைகளைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

பிரெஞ்சுச் சீமாட்டியுடன் தொடர்பு

தொகு

இவர் ஒரு சட்டத்துறைப் பதிவாளரிடமும், செதுக்கு வரைஞர் (engraver) ஒருவரிடமும் தொழில் பயிலுனராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், தனது 16 வயதில், 1728 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி செனீவாவை விட்டு வெளியேறினார். பிரெஞ்சுக் கத்தோலிக்கச் சீமாட்டியான பிரான்சுவா லூயி டி வாரென் (Françoise-Louise de Warens) என்பவரை இவர் சந்தித்தார். உரூசோவிலும் 13 வயது மூத்தவரான இவர் பின்னர் ரூசோவின் காதலி ஆனார். இச் சீமாட்டி, ரூசோவைக் கத்தோலிக்கப் பள்ளிக்கு அனுப்பி இவர் பிரபுக்களுக்கு உரிய கல்வி கற்பதற்கு வழி செய்தார். அங்கே அரிசிட்டாட்டிலைப் படித்தது மட்டுமன்றி, இலத்தீன், நாடகக் கலை போன்றவற்றிலும் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

உரூசோவின் இசைக்குறியீடு

தொகு
 
1736 - 1737 வரை ரூசோ, சீமாட்டி டி வாரெனுடன் வாழ்ந்த வீடு. இப்போது ரூசோவின் பெயரிலான ஒரு அருங்காட்சியகமாக உள்ளது.

எண்ணிடப்பட்ட இசைக் குறியீட்டுக்கான புதிய முறை ஒன்று குறித்து பிரெஞ்சு அறிவியல் அக்கடமியில் விளக்குவதற்காக 1742 ஆம் ஆண்டில் இவர் பாரிசுக்குச் சென்றார். இவருடைய முறை, ஒரே வரியில் அமைந்த எண்களையும், புள்ளிகள், கால்புள்ளிகளையும் கொண்டது. எண்கள் சுரங்களுக்கு இடையிலான இடைவெளிகளையும், புள்ளிகளும், கால்புள்ளிகளும் தாளப் பெறுமானங்களையும் குறித்தன. இம்முறை அச்சிடலுடன் இசைவாக இருப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது நடைமுறைச் சாத்தியமானது அல்ல என்று அக்கடமி இதனைப் புறந்தள்ளிவிட்டது. எனினும், உலகின் சில பகுதிகளில் இம்முறை இன்னும் பயன்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது.

உரூசோவின் பிள்ளைகள்

தொகு
 
உரூசோ தூதரின் செயலாளராகப் பணிபுரிந்த காலத்தில், பிரான்சின் தூதரகமாக இருந்த கட்டிடம்.

1743 தொடக்கம் 1744 வரை, வெனிசில் இருந்த பிரான்சு தூதருக்கு இவர் செயலாளராக இருந்தார். 11 மாதங்கள் வரை பணிபுரிந்த பின்னர் இவர் பணிநீக்கப்பட்டார். விசாரணைக்குப் பயந்து இவர் அங்கிருந்து பாரிசுக்குத் தப்பிச் சென்றார். அங்கே அவர் ஓரளவு படித்திருந்த தையல்காரி ஒருவருடன் நட்புக்கொண்டு அவருடன் வாழ்ந்தார். உரூசோவின் கூற்றுப்படி அவருக்கு இத் தையல்காரி மூலம் ஐந்து பிள்ளைகள் பிறந்தன. பிள்ளைகள் பிறந்தவுடனேயே அவை அனாதை இல்லங்களுக்கு அனுப்பப்பட்டன. அனாதை இல்லத்துப் பிள்ளைகளின் இறப்பு வீதம் அதிகமாக இருந்த அக் காலத்தில் இப் பிள்ளைகளில் பல இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கல்வி, பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றில் அறியப்பட்ட கோட்பாட்டாளராக விளங்கிய உரூசோ, தனது பிள்ளைகளைக் கைவிட்டது குறித்து இவரது எதிரிகள் இவரைக் கடுமையாக விமர்சித்தனர். தான் ஒரு ஏழைத் தந்தை என்றும், அநாதை இல்லங்களில் பிள்ளைகள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் என்றும் உரூசோ கூறினார்.

ரூசோவின் நூல்கள்

தொகு

ரூசோ எழுதிய தத்துவ நூல் சமுதாய ஒப்பந்தம் (The Social Contract) ஆகும். "மனிதன் சுதந்திரமாகப் பிறக்கின்றான். ஆனால், அடிமை சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளான்" என்னும் வாக்கியத்துடன் தொடங்கும் இந்நூல் கி.பி.1762-இல் வெளியானது. அந்நூலில் அரசன் என்பவன் மக்களின் நலனுக்காகவும் மக்களோடு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பயனாகவும் உருவாக்கப்பட்டவனாவான். மக்களின் உரிமைகளைப் போற்றிப் பாதுகாக்கும் வரையில்தான் அவன் அரசன் என்றழைக்கப்படுவான். அவ்விதிகளை அவ் அரசன் மீறுவானேயானால் மக்களும் தம்மைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்த விதிகளை மீற முயற்சிப்பர் என அந்நூல் எடுத்துரைக்கிறது. அதன்பிறகு அவர் எழுதிய எமிலி (Emile) எனும் நூலில்தான் குழந்தைகளுக்கான கல்விப் பயிற்று முறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.[3]

ரூசோவின் கல்விச் சிந்தனைகள்

தொகு

ரூசோ தமது கல்வி சார்ந்த தத்துவக் கருத்துக்களைச் சமூக ஒப்பந்தம், எமிலி ஆகிய நூல்களின் வழியாக முன்வைத்தார். ரூஸோவின் இயற்பண்புவாதத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படும் கல்விக் கோட்பாடுகளின் சிறப்பியல்புகள் பின்வருமாறு:

குழந்தைகள் இயற்கையோடு இயைந்து வளர அனுமதிக்கப்பட வேண்டும், அவர்கள் இயற்கையின் போக்கில் இயற்கையின் நியதிகளின் படி வாழவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார் ரூஸோ. இதுவே அவரின் தலையாய குறிக்கோளாக அமைந்திருந்தது. இவர் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது கல்வியே என்றார். அதேவேளை வாழ்க்கைக்குக் குழந்தைகளைத் தயாரிப்பது கல்வியின் பணியன்று; வாழ்க்கையே கல்வி ஆகுமென்று வலியுறுத்தினார்.

குழந்தைகளுக்குக் கல்வியை வழங்குவதைக் காட்டிலும் கல்வியைப் பெறுவதற்கான நிலைக்கு அவர்களை ஆயத்தப்படுத்துதல் அவசியம். வாழ்வியல் சூழலில் காணப்படும் பல்வேறு சிக்கல்களுக்கான தீர்வுகளைக் குழந்தைகள் தாமே தீர்க்க வழிகாட்டுதல் வேண்டும் என்றார். இதற்காகக் கல்வியில் சிக்கலைத் தீர்க்கும் முறை, விளையாட்டு முறை, தாமே கண்டறி முறை முதலான கற்பித்தல் முறைகளை ரூசோ முன்மொழிந்தார்.

கல்வி முறையில் நினைவாற்றல் திறனை விட செயல் வழிக் கற்றல் மூலம் கற்றலை நிலைப்படுத்திட வேண்டும். அதற்கு கற்றல் கற்பித்தல் நிகழ்வில் குழந்தை மைய கற்றல் (Child Centered Learning Approach) அணுகுமுறையை வலியுறுத்தினார். மேலும் கற்பித்தலின்போது கற்றல் உபகரணங்களின் பயன்பாட்டின் இன்றியமையாத தன்மையைக் குறிப்பிட்டார். கற்போரின் விருப்பு, வெறுப்புகள் மற்றும் திறன்கள் ஆகியவற்றிற்கேற்ப கல்வியின் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டும் என்றார் ரூசோ.[4]

கற்றலில் புலன்வழிக் கற்றலை முதன்மைப்படுத்தினார் ரூசோ. இவரின் கல்வி சார்ந்த தத்துவக் கருத்துக்கள் அனைத்தும் குழந்தை உளவியலை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவர் இயற்கையே இதயத்தின், ஆன்மாவின் வழிகாட்டி என்று அறைகூவல் விடுத்தார்.

ரூசோவின் கல்வித் திட்டங்கள்

தொகு

குழந்தைப் பருவம் (பிறப்பு முதல் 2வயது வரை)

தொகு

இப்பருவத்தில் புதிய அனுபவங்களைப் பெற பெற்றோர் பல்வேறு வாய்ப்புகள் வழங்க வேண்டும். தாய்,தந்தையரின் மிகையான கட்டுப்பாடுகள் பொருத்தமற்றது. இப்பருவத்தில் பின்பற்றலும் போலச் செய்தலும் மிகுதியாக வெளிப்படும் என்பதால் நன்னடத்தைப் பண்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். இப் பருவத்தில் இசை, நடனம் கற்பிக்கப்படுதலை ரூஸோ முன்வைத்தார்.

பிள்ளைப் பருவம் (02-12 வயது வரை)

தொகு

இப்பருவத்தில் பார்த்தல்,கேட்டல்,பேசுதல் உள்ளிட்ட புலன்களின் நேரடி அனுபவத்தைப் பெறவாய்ப்புகள் கொடுக்கப்படுதல் நல்லது. இதற்கு விளையாட்டு முறையும் (Play Way Method) செயல் வழிக்கற்றல் (Learning by Doing) போன்றவை இன்றியமையாதது என்று வலியுறுத்தினார்.

முன் இளமைப் பருவம் (12-15 வயது வரை)

தொகு

இது அறிவு வளர்ச்சிக்கான பருவமாகும். புவியியல், வானவியல் முதலானவற்றை கற்க வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இப்பருவத்தினருக்குக் கல்வியை அளிக்கக் கூடாது. கல்வியைப் பெறுவதற்கான திறன், தொழிற்பயிற்சி, ஆராய்ச்சி மனப்பான்மை ஆகியவற்றை அளிக்க வாய்ப்புகள் வழங்குதல் வேண்டும் என்றார்.

இளமைப் பருவம் (15 - 19 வயது வரை)

தொகு

இப்பருவத்தினருக்குச் சமூக உணர்வும், சமுதாயத் தொடர்பும் வளர்ச்சியுறும். ஆதலால், வரலாறு, இலக்கியம், சமூக அறிவியல் போன்றன பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றார்.

முதிர்ச்சிப் பருவம் (20 வயதுக்கு மேல்)

தொகு

இப்பருவத்தினருக்கு இலக்கியம், நாடகம் ஆகியவற்றைக் கற்பித்து சமுதாயப் பொருத்தப்பாடு அடையச் செய்ய வேண்டும். உலக அனுபவமும் சுற்றுப்புற அறிவும் மேம்பட, களப் பயணம் அவசியமாகும். அரசியல் ஈடுபாடு உருவாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.

குழந்தைகள் இயல்பாக இயற்கை சூழல், மனிதர்கள், பொருட்கள் ஆகிய ஊடகங்கள் மூலமாகக் கல்வியைப் அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.ரூசோவின் கல்விக் கொள்கையில் இயற்கை முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Preromanticism Criticism". Enotes.com. பார்க்கப்பட்ட நாள் 23 February 2009.
  2. See also Robert Darnton, The Great Cat Massacre, chapter 6: "Readers Respond to Rousseau: The Fabrication of Romantic Sensitivity" for some interesting examples of contemporary reactions to this novel.
  3. "ரூசோ - வரலாற்று நாயகர்!". பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2017.
  4. "ரூஸோவின் தத்துவக் கருத்துக்களும் தற்காலக் கல்வி முறையும்". பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழான்_இழாக்கு_உரூசோ&oldid=2955126" இலிருந்து மீள்விக்கப்பட்டது