ஜான் டைலர்
ஜான் டைலர் (John Tyler, மார்ச் 29, 1790 – சனவரி 18, 1862) அமெரிக்க அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் 10-வது அரசுத் தலைவராக 1841 முதல் 1845 வரை பணியாற்றியவர். இவர் 1840 ஆம் ஆண்டின் அரசுத்தலைவர் தேர்தலில் வில்லியம் ஹென்றி ஹாரிசன் விக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போது ஜான் டைலர் துணைத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். அரசுத்தலைவராகப் பதவியேற்று ஒரு மாதத்தில் 1841 ஏப்ரலில் ஹாரிசன் இறந்ததை அடுத்து, டைலர் அரசுத்தலைவரானார். ஜான் டைலர் அவர் மாநிலங்களின் உரிமைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அரசுத் தலைவராக, இவர் மாநிலங்களின் அதிகாரங்களை மீறும் போது மட்டுமே தேசியவாத கொள்கைகளைக் கடைப்பிடித்தார். எதிர்பாராதவிதமாக இவர் அரசுத்தலைவரானதும், என்றி கிளே மற்றும் பிற அரசியல்வாதிகளின் அரசுத்தலைவர் கனவுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்ததால், இரு முக்கிய அரசியல் கட்சிகளிடமிருந்தும் டைலர் ஒதுக்கப்பட்டார்.
ஜான் டைலர் John Tyler | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் 10-வது அரசுத்தலைவர் | |
பதவியில் ஏப்ரல் 4, 1841 – மார்ச் 4, 1845 | |
துணை அதிபர் | எவருமில்லை |
முன்னையவர் | வில்லியம் ஹென்றி ஹாரிசன் |
பின்னவர் | ஜேம்ஸ் போக் |
ஐக்கிய அமெரிக்காவின் 10-வது துணை அரசுத்தலைவர் | |
பதவியில் மார்ச் 4, 1841 – ஏப்ரல் 4, 1841 | |
குடியரசுத் தலைவர் | வில்லியம் ஹென்றி ஹாரிசன் |
முன்னையவர் | ரிச்சார்ட் எம். ஜான்சன் |
பின்னவர் | ஜார்ஜ் டல்லாசு |
வர்ஜீனியாவுக்கான மேலவை உறுப்பினர் | |
பதவியில் மார்ச் 4, 1827 – பெப்ரவரி 29, 1836 | |
முன்னையவர் | ஜான் ரான்டொஃப் |
பின்னவர் | வில்லியம் ரைவ்சு |
வர்ஜீனியாவின் 23-வது ஆளுநர் | |
பதவியில் டிசம்பர் 10, 1825 – மார்ச் 4, 1827 | |
முன்னையவர் | யேம்சு பிளசென்ட்சு |
பின்னவர் | வில்லியம் ஜைல்சு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சார்லசு நகரம், வர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்கா | மார்ச்சு 29, 1790
இறப்பு | சனவரி 18, 1862 ரிச்மண்டு, அ.மா.கூ | (அகவை 71)
இளைப்பாறுமிடம் | ரிச்மண்டு |
அரசியல் கட்சி | சனநாயகக் குடியரசு (1811–1828) சனநாயகக் கட்சி (1828–1834) விக் (1834–1841) சனநாயகக் குடியரசு (1844) எதுவுமில்லை (1841–1844 1844–1862) |
துணைவர்(கள்) | லெட்டீசியா கிறித்தியான் மார்ச் 29, 1813 - செப்டம்பர் 10, 1842 (இறப்பு) ஜூலியா கார்டினர் (சூன் 26, 1844) |
பிள்ளைகள் | 15 |
பெற்றோர் | ஜான் டைலர், மூத்தவர் மேரி ஆர்மிஸ்டெட் |
முன்னாள் கல்லூரி | வில்லியம், மேரி கல்லூரி |
தொழில் | அரசியல்வாதி, வழக்கறிஞர் |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | அமெரிக்க ஐக்கிய நாடு வர்ஜீனியா |
சேவை ஆண்டுகள் | 1813 |
தரம் | கப்டன் |
டைலர், வர்ஜீனியாவில் ஒரு செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்தார்.[1] அரசியல் எழுச்சி இடம்பெற்ற காலத்தில் டைலர் ஒரு முக்கிய தேசிய புள்ளி ஆனார். அமெரிக்காவின் ஒரேயொரு அரசியல் கட்சியாக இருந்த சனநாயகக் குடியரசுக் கட்சி 1820களிலே பிளவடைந்தது. டைலர் ஆரம்பத்தில் சனநாயகவாதியாக இருந்தாலும், ஆன்ட்ரூ ஜாக்சனின் "ரத்துச் செய்த" சர்ச்சையில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்தார்.[2] வங்கிப் போரின் போது நிறைவேற்றதிகாரத்தை ஜாக்சன் அதிகரித்ததைக் கண்டித்தார்.[3] இவையெல்லாம் அவரை விக் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட வைத்தது. டைலர் வர்ஜீனியாவின் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், ஆளுநராகவும், கீழவை உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும் பதவியில் இருந்தார்.[4]
அரசுத்தலைவர் ஹாரிசன் பதவியில் இருந்த போது இறந்ததை அடுத்து, டைலர் தேர்தல் இல்லாமல் அரசுத்தலைவரான அமெரிக்காவின் முதலாவது துணைத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். அமெரிக்க அரசியல் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்படுவதைத் தவிர்ப்பதற்காக, டைலர் உடனடியாக அரசுத்தலைவராகப் பதவியேற்று வெள்ளை மாளிகைக்குக் குடி புகுந்தார்.[5] விக் கட்சியினரின் பல கோட்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணாக இருந்ததை டைலர் அறிந்து, கட்சியின் பல மசோதாக்களை தனது வீட்டோ மூலம் நிராகரித்தார். இவரின் பல முடிவுகள் கடியின் முடிவுகளுக்கு எதிராக அமைந்தன. டைலரின் முக்கியமான பல அமைச்சர்கள் இவரது பதவிக் காலத்தில் தமது பதவிகளைத் துறந்து வெளியேறினார்கள். அத்துடன், டைலர் விக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். டைலரின் வீட்டோ ஒன்று அமெரிக்க சட்டமன்றத்தினால் அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக நிராகரிக்கப்பட்டது. உள்ளூர் அரசியலில் இவர் பல பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், வெளிநாட்டு அரசியலில் இவர் பல வெற்றிகளைக் கண்டார். பிரித்தானியாவுடனான வெப்ஸ்டர்-ஆசுபர்ட்டன் உடன்பாடு,[6] சின் சீனாவுடனான வாங்கியா உடன்பாடு என்பவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
1839 இல் டெக்சசு குடியரசு மெக்சிக்கோவில் இருந்து பிரிந்தது. டெக்சசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு வளம் கூட்டும் என டைலர் நம்பினார்.[7] 1844 தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்தாலும், அவரால் விக் கட்சியினரிடம் இருந்தும், சனநாயகவாதிகளிடம் இருந்தும் அவருக்கு ஆதரவு வராததால், போட்டியில் இருந்து விலகி, டெக்சசை இணைப்பதற்கு ஆதரவாக இருந்த சனநாயகவாதி யேம்சு போல்க் என்பவருக்கு தேர்தல் பிரசாரத்தில் ஆதரவளித்தார். போல்க் 1844 தேர்தலில் வெற்றி பெற்றார். டைலர் தாம் பதவியில் இருந்து விலகுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக டெக்சசை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு கையெழுத்திட்டார். போல்க்கின் ஆட்சியில் டெக்சசு இணைந்தது.[8] 1861 இல் அமெரிக்க உள்நாட்டுப் போர் அரம்பித்த நிலையில், டைலர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் அவர் சில மாதங்களில் காலமானார். டைலர் அமெரிக்க வரலாற்றில் ஒரு தெளிவற்ற அரசியல் தலைவராகவே பார்க்கப்படுகிறார்.
இறப்பு
தொகுடைலர் தனது வாழ்நாள் முழுவதும், உடல்நிலை பாதிக்கப்பட்டவராகக் காணப்பட்டார். 1862 சனவரி 12 இல் குளிர், தலைச்சுற்று வந்து மயக்கமடைந்தார். சனவரி 18 இல் இவர் பக்கவாதத்தினால் காலமானார்.[9]
டைலர் கூட்டமைப்புடன் கூடுச் சேர்ந்திருந்தமையால், அவரின் இறப்பு வாசிங்டனால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படாத ஒரேயொரு அமெரிக்க அரசுத்தலைவரின் இறப்பு ஆகும். தனது இறுதி நிகழ்வுகள் எளிமையான முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என டைலர் கேட்டுக் கொண்டிருந்தாலும், கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் டைலரை புதிய நாட்டின் வீரனாக அறிவித்து மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார். அவரது சவப்பெட்டியின் மீது கூட்டமைப்பின் கொடியால் மூடப்பட்டது.[10] இவரது உடல் ரிச்மண்டில் ஆலிவுட் இடுகாட்டில் புதைக்கப்பட்டது.[10] டைலரின் நினைவாக டெக்சாசின் ஒரு நகருக்கு டைலர் எனப் பெயரிடப்பட்டது.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ Chitwood, pp. 4–7, 12; Crapol, pp. 30–31.
- ↑ Chitwood, pp. 112–20.
- ↑ Chitwood, pp. 35–40.
- ↑ Chitwood, pp. 73–81.
- ↑ "John Tyler: Life in Brief". Miller Center of Public Affairs, University of Virginia. Archived from the original on சனவரி 31, 2017. பார்க்கப்பட்ட நாள் சனவரி 29, 2017.
- ↑ Roseboom, p. 124.
- ↑ Crapol, pp. 176–78.
- ↑ "Joint Resolution of the Congress of the United States, December 29, 1845". Yale Law School. பார்க்கப்பட்ட நாள் May 14, 2014.
- ↑ Jones, Jeffrey M.; Jones, Joni L. "Presidential Stroke: United States Presidents and Cerebrovascular Disease (John Tyler)". Journal CMEs. CNS Spectrums (The International Journal of Neuropsychiatric Medicine). பார்க்கப்பட்ட நாள் July 20, 2011.
- ↑ 10.0 10.1 Seager, p. 472.
- ↑ "Tyler Texas – History". City of Tyler, Texas. Archived from the original on April 27, 2014. பார்க்கப்பட்ட நாள் April 27, 2014.
உசாத்துணைகள்
தொகு- Chitwood, Oliver Perry (1964) [Orig. 1939, Appleton-Century]. John Tyler, Champion of the Old South. Russell & Russell. இணையக் கணினி நூலக மைய எண் 424864.
- Roseboom, Eugene H. (1970). A History of Presidential Elections. Macmillan Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-604890-3.
- Crapol, Edward P. (2006). John Tyler, the Accidental President. University of North Carolina Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8078-3041-3.
- Seager, Robert, II (1963). And Tyler Too: A Biography of John and Julia Gardiner Tyler. New York: McGraw-Hill. இணையக் கணினி நூலக மைய எண் 424866.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)
வெளி இணைப்புகள்
தொகு- பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் ஜான் டைலர்
- White House biography
- John Tyler: A Resource Guide from the Library of Congress
- Biography by Appleton's and Stanley L. Klos
- U.S. Senate Historian's Office: Vice Presidents of the United States—John Tyler
- John Tyler in Union or Secession: Virginians Decide at the Library of Virginia
- Biography at Encyclopedia Virginia/Library of Virginia
- POTUS – John Tyler
- Tyler's letters refusing government intervention, April and May 1842