தமிழ்ஒளி
தமிழ்ஒளி (இயற்பெயர்: விசயரங்கம், 21 செப்டம்பர் 1924 – 29 மார்ச்சு 1965) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர்.[1] கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். திராவிடர் கழகத் தொண்டராக இருந்து பிற்காலத்தில் பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டவர். 'பட்டியலின மக்களின் இழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதினார்.
தமிழ்ஒளி | |
---|---|
பிறப்பு | விசயரங்கம் 21 செப்டம்பர் 1924 ஆடூர் அகரம், தென் ஆற்காடு மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 29 மார்ச்சு 1965 பாண்டிச்சேரி (தற்போது புதுச்சேரி), இந்தியா | (அகவை 40)
தொழில் | எழுத்தாளர், கவிஞர் |
மொழி | தமிழ் |
தேசியம் | தமிழர் |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி நிலையம் | கரந்தைத் தமிழ்க் கல்லூரி |
வகை | கவிதை, கதை, கட்டுரை, இலக்கியத் திறனாய்வு, மேடை நாடகம், குழந்தைப் பாடல் |
கருப்பொருள் | பொதுவுடைமை, திராவிடம், தலித்தியம் |
இலக்கிய இயக்கம் | திராவிடர் கழகம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி * தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் |
பிறப்பும் கல்வியும்
தொகுஅன்றைய தென்னாற்காடு மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் அகரம் என்னும் சிற்றூரில் சின்னையா ,செங்கேணி அம்மாள் என்னும் இணையருக்குப் பிறந்தார். விசயரங்கம் என்பது தமிழ் ஒளியின் இயற்பெயர் ஆகும். பட்டுராசு என்றும் செல்லமாக அவரை அழைத்தனர்.
தமது தொடக்கக் கல்வியைப் புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் கற்றார். உயர்கல்வியைக் கலவைக் கல்லூரியில் படித்தார். மாணவரா யிருந்தபோதே பாரதியார்,பாரதிதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். பாரதிதாசனின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது.[1] நாள்தோறும் குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றார். தமிழ் ஒளி திராவிடர் கழக மாணவர் மாநாட்டில் கலந்துகொண்டு பாரதிதாசன் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கவிதையை அம்மாநாட்டில் படித்தார்.[சான்று தேவை] பாரதிதாசனின் பரிந்துரையின் அடிப்படையில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். இக் காலகட்டதில் திராவிட நாடு, குடிஅரசு, புதுவாழ்வு ஆகிய திராவிட இதழ்களிலும் கவிதைகளை எழுதினார்.
படைப்புகள்
தொகுதமிழ் ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே நாளை வரவேற்று கவிஞர் குயிலன் நடத்திய முன்னணி இதழில் கவிதை எழுதினார்:
கோழிக்கு முன் எழுந்து
கொத்தடிமை போல் உழைத்து
பாடுபட்ட ஏழை முகம் பார்த்து
பதைபதைத்து
கண்ணீர் துடைக்க வந்த
காலமே நீ வருக
.........
‘அன்பே இருட் கடலில்
ஆழ்ந்திருந்த வந்த முத்தே
முழு நிலவே மே தினமே
வாராய் நீ
வாராய் உனக்கென்றன்
வாழ்த்தை இசைக்கின்றேன்— [1]
1949-இல் 'புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்' என்னும் கவிதை எழுதினார். மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்படவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை.
'ஒரு கவிஞன் வாழ்ந்ததற்கு அடையாளமே அவனுடைய படைப்புகள்தாம்' என்று எழுதினார். நிலை பெற்ற சிலை, வீராயி, மே தின ரோஜா ஆகிய மூன்று காவியங்களும் தலித்து மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தலித்து மக்களின் விடுதலை அவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றை விவரிக்கின்றன. வீராயி என்னும் காவியத்தில் கதைத் தலைவி வீராயி ஒரு தலித்துப் பெண்ணாகக் காட்டப் படுகிறாள். 5 சிறுகதைத் தொகுதிகள் அவர் எழுதினார். தமிழ் ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர், தலித்துகள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள். இடதுசாரி இயக்கப் படைப்பாக்கங்களில் சாதியச் சிக்கல்களை நேரடியாகப் பேசப்படாமல் இருந்த காலத்தில் தமிழ் ஒளி சாதியத்தையும் தலித்துகளின் விடுதலையையும் பாடினார். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார். தாமரை இதழில் வனமலர் என்னும் தலைப்பில் சில உருவகக் கதைகளை எழுதினார். ஐம்பதுகளின் இறுதியில் தமிழ் ஒளி திரைப்படத்துறையில் கால் வைத்தார். உலகம் (1953) திரைப் படத்தில் ஒரு பாடலும் அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957) திரைப்படத்தில் ஒரு பாடலும் எழுதினார்.
எவரெசுட்டு மலையுச்சியில் 26 மே 1953 அன்று இந்திய தேசியக் கொடியை ஏற்றிய[சான்று தேவை] டென்சிங் நோர்கேயைப் பாராட்டிக் கவிதை எழுதினார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மின் உற்பத்தி நிலையம் அமைத்தபோதும் கவிதை படைத்தார். சோவியத் ஒன்றியம், 4 அக்டோபர் 1957 அன்று இசுப்புட்னிக் 1 (Sputnik 1) செயற்கைக்கோளை ஏவியபோது வரவேற்றும், அணுக்குண்டு அச்சுறுத்தலை எதிர்த்தும் கவிதைகள் வரைந்தார். குழந்தைகளுக்கான பாடல்களையும் எழுதியுள்ளார்.
சக்தி நாடக சபாவுக்காக சிற்பியின் காதல் என்னும் நாடகம் எழுதினார். அக்கதை வணங்காமுடி என்னும் பெயரில் திரைப்படமாக உருவாகியது.
- கவிஞனின் காதல் - 1947
- நிலை பெற்ற சிலை -1947
- வீராயி - 1947
- மே தின ரோசா -
- விதியோ வீணையோ -1961
- கண்ணப்பன் கிளிகள் - 1966
- புத்தர் பிறந்தார் (முற்றுப் பெறாத காவியம்)
- கோசலக் குமாரி - 1966
- மாதவிக் காவியம் - 1995
- சிலப்பதிகாரம் காவியமா நாடகமா
- திருக்குறளும் கடவுளும்
- தமிழர் சமுதாயம்
புனை பெயர்களும் இதழ்களும்
தொகுதமிழ் ஒளி, விஜய ரங்கம் விஜயன் சி.வி.ர என்பன அவருடைய புனை பெயர்கள் ஆகும். முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை போன்ற இதழ்களில் பணியாற்றினார். சனயுகம் என்னும் திங்கள் இதழைத் தம் சொந்த முயற்சியில் நடத்தி மார்க்கியக் கருத்துகளைப் பரப்பினார்.
அறிஞர்களின் அரவணைப்பு
தொகுஅறிஞர் மு. வரதராசன், எழுத்தாளர்கள் பூவண்ணன், விந்தன், செயகாந்தன் போன்றோர் தமிழ் ஒளியைப் பாராட்டினார்கள்.[சான்று தேவை] மா.சு. சம்பந்தன், தமிழ் ஒளியின் கவிதைகளை வெளியிட்டார். செ. து. சஞ்சீவி தமிழ் ஒளியின் எழுதிய கவிதைகளையும், காவியங்களையும் திரட்டித் தொகுத்து வெளியிட்டார்.
மறைவு
தொகுதமிழ்ஒளி 1965 மார்ச்சு 29 அன்று பாண்டிச்சேரியில் (தற்போது புதுச்சேரி) தன் 41-ஆம் அகவையில் காலமானார்.[2]
புகழ்
தொகுதமிழ்ஒளி பற்றி "பன்மொழிப் புலவர்" கா. அப்பாத்துரை “என்னுடைய காலத்தில், என் அருகில் இப்படி ஒரு மகத்தான கவிஞர் இருந்திருக்கிறார் என்பதை என்னால் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டதே!” என்றார்.[3]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழ்ஒளி". web.archive.org. 2014-01-23. Archived from the original on 2014-01-23. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ பி.தயாளன் (2013-06-20). "பாட்டாளிகளைப் பாடிய கவிஞர் தமிழ் ஒளி". www.keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-20.
- ↑ "தவிர்க்க முடியாத தமிழ்க் கவி". Hindu Tamil Thisai. 2023-09-21. பார்க்கப்பட்ட நாள் 2023-09-21.
- நினைக்கப்பட வேண்டியவர்கள் (பன்னாட்டு தமிழ் மொழி அறக்கட்டளை)
- தமிழ்ஒளியின் வரலாறு (சாகித்திய அகாதமி )
- தமிழ்ஒளியின் சிறந்த கவிதைகள் (தொகுப்பு:செ.து.சஞ்சீவி,சாகித்திய அகாதமி)