மா. சு. சம்பந்தன்
மா. சு. சம்பந்தன் அல்லது தொடர்பன் என அறியப்படும் மாரம்பேடு சுப்பிரமணியன் சம்பந்தன் (பிறப்பு: 25 மே 1923; காணாமல்போனது: 25 செப்டம்பர் 2011) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர், பேச்சாளர், தனித்தமிழ்ப் பற்றாளர் மற்றும் பெரியாரியச் சிந்தனையாளர் ஆவார்.[1]
மா. சு. சம்பந்தன் | |
---|---|
மதராசு மாநகராட்சி உறுப்பினர் | |
பதவியில் 1959–1964 | |
தொகுதி | கச்சாலீஸ்வரர் வட்டம் (கோட்டம் 20) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 மே 1923 மாரம்பேடு, மதராசு மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பிள்ளைகள் | இளங்கோவன் மணிவண்ணன் உதயகுமார், வெற்றிவேல், செல்வகுமார். |
பெற்றோர் | சுப்பிரமணியன் (தந்தை) |
பிறப்பும் கல்வியும்
தொகுதற்போதைய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாரம்பேடு எனும் ஊரில், சுப்பிரமணியன் என்பாருக்கு மகனாக 25 மே 1923 அன்று பிறந்தார் சம்பந்தன்.
சென்னை முத்தியால்ப்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வியை பயின்றார். இளவயதில் பல நூல்களையும் இதழ்களையும் விரும்பிப் படித்துவந்த சம்பந்தனுக்கு, முத்தியால்பேட்டை பள்ளியில் தமிழாசிரியராக இருந்த புலவர் மா. இராசமாணிக்கனார், தமிழ்ப் பற்று ஊட்டி, கட்டுரைப் பயிற்சியளித்து எழுதத் தூண்டியுள்ளார். அதன் விளைவாக, வ. ராமசாமி ஆசிரியராக இருந்த ‘பாரத தேவி’ இதழில், "பண்டை நாகரிகமே வேண்டும்" என்கிற தலைப்பில் தன்னுடைய முதல் கட்டுரையை 1940-இல் எழுதினார் சம்பந்தன்.
முத்தியால்பேட்டை பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் கோயம்புத்தூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவந்த பின் எழுதிய அந்தக் கட்டுரை குறித்து, ‘மிகவும் அருமையான பல விடயங்களைக் கொடுத்திருக்கிறார் அந்த அன்பர்’ என தமிழன் இதழின் ஆசிரியர் கோ.த.சண்முகசுந்தரம் பாராட்டினார். ‘பி.ஏ. பட்டம் கிடைத்திருந்தாலும் அவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமோ என்னவோ! இந்தப் புகழுரை பெரும் பட்டமாகவே தோன்றியது அப்போது!’ என சம்பந்தன் பின்னாளில் குறிப்பிட்டார் .[2]
இதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாம் இடைநிலை வகுப்பு பயின்றார். 1942ஆம் ஆண்டில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் சி.பா.ஆதித்தனார் தொடங்கிய தமிழன் இதழில், பாரதிதாசன் பற்றிய கட்டுரையை எழுதினார்.[3] . மேலும் அவ்விதழில் "பெரியோர் வாழ்க்கை" என்ற பகுதியில் கோ. துரைசாமி (G. D. Naidu) பற்றி சம்பந்தன் எழுதிய கட்டுரை (30 சனவரி 1944), எழுத்து மீதான ஈடுபாட்டை அவரிடம் தீவிரப்படுத்தியதாகக் கருதப்படுகிறது.[2]
இலக்கியப் பணி
தொகுபதிப்பாசிரியர்
தொகுஎழுத்தும் பதிப்பும்தான் தன் வாழ்க்கை என்று தீர்மானித்த சம்பந்தன், 1947-இல் ‘தமிழர் பதிப்பகத்தைத் தொடங்கினார். அதன் மூலம் கா.அப்பாத்துரையின் ‘வருங்காலத் தமிழகம்’, மு.வரதராசனின் ‘கி.பி. 2000’, கி.ஆ.பெ.விசுவநாதத்தின் ‘வானொலியிலே’, கவிஞர் தமிழ்ஒளி-யின் ‘வீராயி’ ஆகிய நூல்களை வெளியிட்டார்.
இதழாசிரியர்
தொகு‘தமிழர் மலர்’ என்னும் கையெழுத்து இதழ், ‘முருகு’, ‘மதி’ என்னும் மாத இதழ்கள் ஆகியவற்றுக்கு ஆசிரியராக இருந்து நடத்திவந்த சம்பந்தன், ‘எங்கள் நாடு’ நாளேட்டின் துணை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
பிற பணிகள்
தொகுதமிழர் கழகம், தமிழர் பேரவை, ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்த சம்பந்தன், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். சென்னை கன்னிமாரா நூலகத்தில், இளநிலை அலுவலராக சில காலம் பணிபுரிந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தின், 'செனட்' உறுப்பினராகவும் பணியாற்றினார்.
களப்பணி
தொகுபாட மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் நீதி மொழியாகவும் தமிழ் வளர வேண்டும் என விரும்பியமையால் "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை தமிழறிஞர்கள் இணைந்து மேற்கொண்ட நடைப்பயணத்தில் பங்கேற்றார்.[3]
படைப்புகள்
தொகுமேடைத் தமிழின் முதல் நூல், வாழ்க்கை வரலாறு, நகர வரலாறு, கவின் கலை வரலாறு, தமிழில் அச்சு-பதிப்பு-பதிப்பாளர் பற்றிய ஆராய்ச்சி, தமிழ் இதழியல்-இதழாளர்கள் பற்றிய வரலாற்றாய்வு என எழுத எடுத்துக்கொண்ட தலைப்புகள் சார்ந்து, தான் மேற்கொண்ட தேடலும் ஆய்வும் குறித்து அந்த நூல்களின் முன்னுரையில் சம்பந்தன் விரிவாக எழுதியுள்ளார்
ஆண்டு | தலைப்பு | வகை | பதிப்பகம் |
---|---|---|---|
1947 | சிறந்த பேச்சாளர்கள் | ||
1949 | சென்னை மாநகர் | ||
திருச்சி விசுவநாதம் | |||
1954 | இங்கர்சால் | ||
குமுறும் உள்ளம் | |||
திரு.வி.க. | |||
1959 | அச்சுக்கலை [4] | ||
1980 | அச்சும் பதிப்பும் [5] | மணிவாசகர் பதிப்பகம் | |
1981 | எழுத்தும் அச்சும் | ||
1989 | தமிழ் இதழியல் வரலாறு | ||
1990 | தமிழ் இதழியல் களஞ்சியம் | ||
தமிழ் இதழியல் சுவடுகள் [6] | தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் | ||
1998 | தொடர்பன் கட்டுரைகள் | கட்டுரைத் தொகுப்பு |
அரசியல்
தொகுதிராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் பின்னாளைய முதலமைச்சருமான "பேரறிஞர்" கா. ந. அண்ணாதுரை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 1959 சென்னை மாநகராட்சித் தேர்தலில் கச்சாலீஸ்வரர் வட்டத்தில் போட்டியிட்டு வென்றார் சம்பந்தன்.[3] “தோழர் சம்பந்தன் அவர்கள் அடக்கமானவர். நல்ல அறிவுத் தெளிவு பெற்றவர்; அமைதியாகப் பணியாற்றும் பண்புள்ளவர்... தமிழ்ச் சமுதாயத்துக்கு நல்ல பணியாற்றுவார் என்பதில் சந்தேகமில்லை” என வெற்றி விழாவில் அண்ணா பேசினார் [‘நம் நாடு’ 25.05.1959].[2]
தன் பதவிக்காலத்தில் தமிழ் அல்லாச் சொற்களான ஸ்ரீ, ஸ்ரீமதி, அபேட்சகர் போன்றவற்றை, முறையே திரு, திருமதி, வேட்பாளர் என்று மாற்றிப் பயன்படுத்த தீர்மானம் கெணர்ந்து நிறைவேற்றிப் பயன்படுத்தச் செய்தார்.[3]
தனி வாழ்க்கை
தொகுஇவருக்கு ஐந்து மகன்கள் உள்ளனர். மூத்த மகனின் பெயர் இளங்கோவன் ஆவார். அவரது வீடு சென்னை நகர் பகுதிகளில் ஒன்றான, பிராட்வே - மண்ணடி பகுதியில், லிங்கி செட்டித் தெருவில் இருந்தது.
காணாமல் போதல்
தொகுஎங்கு சென்றாலும் நடந்தே சென்றுவரக் கூடிய இயல்புடைய சம்பந்தன், எங்கு செல்கிறார், எப்போது திரும்புவார் என்கிற தகவல்களை எப்போதும் வீட்டினரிடம் சொல்லிச் சென்றதே இல்லை. 25 செப்டம்பர் 2011 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்குச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.[2]
மா. சு. சம்பந்தன் | |
---|---|
காணாமல்போனது | 25 செப்டம்பர் 2011 (அகவை 88) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தகுதி | காணாமல் போய் 13 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 29 நாட்கள் |
புகழ்
தொகு"இன்று ஒரு நூலை எழுதுவதற்குத் துணைபுரியும் தொழில்நுட்பக் கருவிகளின் பின்னணியிலிருந்து பார்க்கும்போது, மிகக் குறைந்த வசதிகளுடன் தனிநபராக சம்பந்தன் மேற்கொண்டவை தன்னேரிலாத முயற்சிகளாகப் பிரமிப்பூட்டுகின்றன" என்றார் எழுத்தாளர் சு.அருண் பிரசாத்[2]
தமிழ்நாடு அரசு மா. சு. சம்பந்தனின் மரபுரிமையாளர்களுக்கு ரூ பத்து இலட்சம் அளித்து அவரது நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக 2023 ஆம் ஆண்டு அறிவித்தது.[7]
விருதுகள்
தொகுஆண்டு | விருது | வழங்கியவர் / அமைப்பு | குறிப்பு |
---|---|---|---|
1966 | தமிழக அரசின் பரிசு | முதல்வர் மு. பக்தவத்சலம், | 'அச்சுக்கலை' நூலுக்காக |
1982 | முதல்வர் ம. கோ. இராமச்சந்திரன், | 'அச்சும் பதிப்பும்' நூலுக்காக | |
1986 | தமிழக அரசின் பரிசு | 'தமிழ் இதழியல் வரலாறு' நூலுக்காக | |
1997 | திரு.வி.க.விருது[8] | தமிழ் வளர்ச்சித் துறை, | |
2003 | சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது | நீதியர் கி. கோவிந்தராசன் | செப்டம்பர் 27 அன்று வழங்கப்பட்டது[8]
(பொன்னாடை ; ₹. 1,00,000; விருதிற்கான வெள்ளிப்பட்டயம் ) |
2003 ? | பாவேந்தர் விருது[8] | தலைநகரத் தமிழ்ச்சங்கம் | |
2003 ? | இலக்கியமாமணி[8] |
மேற்கோள்கள்
தொகு- ↑ தினமணி நாளேடு
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "மா.சு.சம்பந்தன் 100 |தொடர்பன் என்னும் தனிநபர் இயக்கம்!". Hindu Tamil Thisai. 2023-05-25. பார்க்கப்பட்ட நாள் 2023-05-26.
- ↑ 3.0 3.1 3.2 3.3 தினத்தந்தி, 2003 செப்டம்பர் 28, பக்.1
- ↑ 'அச்சுக்கலை' நூலுக்கு, 1966 ஆண்டு, தமிழக அரசின் முதல்வர் பக்தவத்சலம் பரிசு வழங்கினார்.
- ↑ அச்சும் பதிப்பும் - மணிவாசகர் பதிப்பகம் - நூலுலகம்
- ↑ https://www.commonfolks.in/books/m-s-sambandhan
- ↑ A, Jayashree (2023-04-07). "பரிவுத்தொகை அறிவிக்கப்பட்ட 5 தமிழ் எழுத்தாளார்கள் யார்.. யார்? - அவர்களின் படைப்புகள் என்னென்ன? - முழுவிபரம்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2023-05-25.
- ↑ 8.0 8.1 8.2 8.3 தினத்தந்தி, 2003 செப்டம்பர் 28, பக்.1