தமிழ் இசைக்கருவிகள்
தமிழ் இசைக்கருவிகள் என்பன தமிழர் பயன்படுத்திய இசைக் கருவிகளாகும். சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள், மட்டுமல்லாது பாணர், பாடினியர், விறலியர்(ஆடல் மகளிர்) போன்றோர், பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் துணையோடு சிறப்பாகப் பாடி உள்ளனர். பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பாக ஆற்றுப்படை நூல்கள் அக்காலத்தியத் தமிழர் தம் இசைத்திறத்தை எடுத்தியம்புகின்றன. யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம் முதலான இசைக்கருவிகள் இருந்துள்ளன. இசையைத் தொழிலாகக் கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் நூற்பா தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது.
தெய்வ முணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப <ref>தொல். அகத்திணையியல் - 18</ref/>
இங்கு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று பறை.
யாழ்
தொகுதொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை (குரலிசை), நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை)ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். இதனால், பண்டைநாளில், நரம்புக் கருவியாகிய யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம். அக்காலத்தில் வழக்கில் இருந்த எல்லாவகை யாழ்களும் விட்டிசைக்கும் கருவிகளே. (Digital Instrument). ஒரு நரம்பு ஒரு சுருதியை மட்டுமே ஒலிக்கும். யாழில் கூட்டப்பட்ட பாலை யாதோ அதை மட்டுமே வாசிக்க முடியும். ஒருசுரத்தை மீட்டினால் அதுவே தொடர்ந்து ஒலிக்குமன்றி அடுத்த சுரத்தினொடு இயைபுபடாது. (பாலை என்பது ஆரோகணம் அவரோகணமாக அமைந்த சுரங்களின் வட்டம். “ஏரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின், ஓரேழ் பாலை நிறுத்தல் வேண்டி” சிலம்பு 3:70-1 பாலை -scale)[1]
சிலப்பதிகாரத்தில்
தொகுசிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையில் அரங்கேற்ற ஊர்வலத்தில் இடம் பெற்ற இசைக் கருவிகள் பண்டைத் தமிழரின் மறைந்தொழிந்த யாழ்களான முளரி யாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்தண்டி வீணை முதலானவையாகும். யாழினை 'நரம்பின் மறை'(தொல்.1:33 2-3)எனத் தொல்காப்பியரும், 'இசையோடு சிவணிய யாழின் நூல்' எனக் கொங்குவேளிரும் குறிப்பிட்டுள்ளனர்.
திருமுறையில் குறிப்பிடப்படும் தமிழ் இசைக்கருவிகள்
தொகுதிருமறையில் சொல்லப்பட்ட மற்ற இசைக்கருவிகளான வீணை, கொக்கறை, குடமுழவு முதலியனவற்றைப் பற்றி “கல்லாடம்” நூலில் விளக்கங்கள் காணப்படுகின்றன. பன்னிரெண்டாவது திருமுறையான பெரியபுராணத்தில் மற்றொரு இசைக்கருவியான குழல் செய்வதைப் பற்றியும், இசைப்பதைப் பற்றியும் சொல்லப்படுகின்றது.[2]
- ஆகுளி
- இடக்கை
- இலயம்
- உடுக்கை
- ஏழில்
- கத்திரிகை
- கண்டை
- கரதாளம்
- கல்லலகு
- கல்லவடம்
- கவிழ்
- கழல்
- காளம்
- கிணை
- கிண்கிணி
- கிளை
- கின்னாரம்
- கொக்கரை
- குடமுழா
- குழல்
- கையலகு
- கொக்கரை
- கொடுகொட்டி
- கொட்டு
- கொம்பு
- சங்கு
- சச்சரி
- சலஞ்சலம்
- சல்லரி
- சிரந்தை
- சிலம்பு
- சின்னம்
- தகுணிச்சம்
- தக்கை
- தடாரி
- தட்டழி (தோலிசைக் கருவிகளில் ஒன்று, திருச்செந்துறைக் கோயில் கல்வெட்டு குறிக்கிறது)
- தத்தளகம்
- தண்டு
- தண்ணுமை
- தமருகம்
- தாரை
- தாளம்
- துத்திரி
- துந்துபி
- துடி
- தூரியம்
- திமிலை
- தொண்டகம்
- நரல் சுரிசங்கு
- படகம்
- படுதம்
- பணிலம்
- பம்பை
- பல்லியம்
- பறண்டை
- பறை
- பாணி
- பாண்டில்
- பிடவம்
- பேரிகை
- மத்தளம்
- மணி
- மருவம்
- முரசு
- முரவம்
- முருகியம்
- முருடு
- முழவு
- மொந்தை
- யாழ்
- வங்கியம்
- வட்டணை
- வயிர்
- வீணை
- வீளை
- வெங்குரல்[3]
யாழ்நூல்
தொகுகர்நாடக இசையின் பெருமையான இசைக்கருவியான வீணை, கோட்டு வாத்தியம் இவைகளுக்கு இணையாக தமிழிசையில் சொல்லப்படும் இசைக்கருவி யாழ். வீணை பற்றிய குறிப்புகள் பல இலக்கியங்களில் காணப்பட்டாலும், யாழிசைக்கு ஒரு சிறப்பான முதலிடம் தரப்பட்டிருந்ததை காணமுடிகிறது. வீணையைப் போன்றே யாழும் கம்பி அல்லது நரம்புகளை இழுத்துக் கட்டப்பட்டு கைகளால் இசைக்கப்படும் கருவியாக இருந்திருக்கிறது. சுவாமி விபுலாநந்தாவின் “யாழ் நூலில்” யாழினைப் பற்றி பல விவரங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
யாழிசையும் மிடற்றிசையும்
தொகுசங்ககாலத்தில் யாழிசைக்கும் மிடற்றிசைக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. யாழிசையின் அடிப்படையில்தான் மிடற்றிசை(வாய்ப்பாட்டு) வழங்கியது. அதாவது மிடற்றுப்பாடல் யாழிசையோடு சேர்த்துத்தான் பாடப்பட்டது. மிடறும் நரம்பும் இடைத்தெரிவின்றி இசைக்கப் பெறுதல் வேண்டும் என்பது பண்டைய இசை நியதி. மிடற்றிசை யாழிசையோடு பருந்தின் நிழல்போல ஒன்றியிருக்க வேண்டும். முதல்நிலைக் கருவியான மிடறும் கடைநிலைக் கருவியான யாழும் பருந்தும் நிழலும் போல இயங்கவேண்டும். இதனால் குரலிசையானது யாழிசைக்கேற்ப அதன் குறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும்.[4] அதாவது யாழோடு பாடினால் கமகங்கள் இல்லாமல் பாட வேண்டும் என்பது உறுதி.
அக்காலத்தில் ஆதார சுருதி இசைப்பதற்கான ‘சுருதிப் பெட்டி’, தம்புரா போன்ற கருவிகள் இல்லை. எனவே, முதலில் மிடற்றிசைக்கேற்ற சுருதி குழலில் சேர்க்கப்படும். பின்னர், குழல் வழி யாழும் யாழ் இசையின் வழி முழவு முதலிய கருவிகளின் ஓசையும் அமையும். குழல்வழி யாழும் யாழின் வழி மிடற்றிசையும் அமைந்தன.[5] இதற்குச் சான்றாக சீவக சிந்தாமணியில் உதயணன்- காந்தருவ தத்தைக்கு நடைபெறும் இசைப்போட்டியில் எவ்வளவோ திறமையாகப் பாடிய காந்தருவதத்தையும் ‘கம்பிதத்துடன்’ பாடியதால் தோற்றதாக அறிவிக்கப்பட்டாள். அதாவது, சீவகன் வாசித்த யாழில் வராத கமகம் அவள் பாட்டில் வந்ததால் அவள் தோற்றாள் என அறிவிக்கப்பட்டது. யாழின் குறைகளுக்கு உட்பட்டுத்தான் பாட வேண்டும். எனவே, அந்தக் காலத்தில் கமகம் இல்லாமல்தான் பாடினர் எனலாம்.
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ சோ. சிவசுப்பிரமணியன் தமிழிலக்கியங்களும் தமிழிசையும் பரணிடப்பட்டது 2014-06-07 at the வந்தவழி இயந்திரம்
- ↑ ஆனாய நாயனார் புராணம் பாடல்:13, 23, 28
- ↑ திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்
- ↑ பி.டி.ஆர். கமலைத்தியாகராசன், “இசைத்தமிழின் உண்மை வரலாறு”
- ↑ அரும்பதவுரை :சிலப்பதிகாரம். 3:139 -153