பஞ்சமுக வாத்தியம்

(பஞ்சமுக வாத்தியம் (இசைக்கருவி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி ஆகும். குடமுழா, குடபஞ்சமுகி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டில் சில பெருங்கோவில்களில் மட்டும் இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது. சிவனின் ஐந்து முகங்களைக் குறிப்பதால் இது பஞ்சமுக வாத்தியம் என்று அழைக்கப்படுகிறது.[1]

ஐம்முக முழவம்

தோற்றமும் குறிப்புகளும்

தொகு

குடபஞ்சமுகி எனும் பஞ்சமுகவாத்தியம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் சோழ மண்டலத்தில் மட்டுமே தோன்றிய தாளக் கருவி. இதனை யாமளதந்திரம் போற்றும் பாரசைவர்களே இயக்குவர். முட்டுக்காரர் எனும் இம்மரபினர் சிவபெருமானின் நிருத்தத்திற்காகவே இதனை இசைப்பர். இக்கருவியின் ஐந்து முகங்களையும் சதாசிவனுடைய ஐந்து முகங்களாகப் போற்றுவர். சோழர்கள் காலத்தில் இருந்த இந்த தாளக்கருவி இன்று அருகி மறைந்து விட்டது. திருவாரூரில் காமிகாகம பூஜைகளுக்கும், விழாக்களுக்கும் இசைக்கப்பட்டு வருகிறது. [2]

கோவில் இசைக்கருவி

தொகு

இது பெரும்பாலும் கோவில்களில் இடம் பெற்றிருக்கும் நித்ய பூசை நடைபெறும் காலங்கள், சிறப்பு அபிசேக ஆராதனைகள், பண்டிகைகள், கோவில் விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் இடம்பெறும் போது பஞ்சமுக வாத்தியம் என்ற இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது.

திருவாரூர் கோவிலில் உள்ள பஞ்சமுக வாத்தியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் அமைப்பு: ஒரு முகம் பாம்பு சுற்றியது போல் உள்ளது. மற்றொன்று ஸ்வஸதிக போன்ற வடிவில் அமைந்துள்ளது. வேறொரு முகம் தாமரைப்பூ வடிவிலுள்ளது. பிரிதொன்று எவ்வித அடையாளமின்றி உள்ளது. நடுவில் உள்ள ஐந்தாவது முகம் பெரியதாக இருக்கிறது. பஞ்ச முகங்கள் மான் தோலால் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகத்திலும் கட்டபட்டுள்ள தோலின் கனம் வேவ்வேறு அளவுகளில் இருப்பதால் பஞ்சமுக வாத்தியத்தை இசைக்கும்போது வெவ்வேறு வகையான ஒலி எழுகிறது. இதில் உள்ள ஐந்து முகங்களும் ஐந்து வகையான ஒலியை எழுப்பும் தன்மை கொண்டவனவாக உள்ளன. [1] இந்த இசைக்கருவியில் ஒவ்வொரு முகத்திலும் தனித்தனியாக அடிக்கப்படும்போது ஏழு முறையும் ஐந்திலும் சேர்ந்து அடிக்கும் போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும்.

இது போன்ற தோல் இசைக்கருவியினை வாசிக்க பயிற்சி தேவைப்படுகிறது. இசை நுணுக்கங்களும் உண்டு. பெரும்பாலும் தேர்ச்சிபெற்ற கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கிறார்கள்.

அமைப்பு

தொகு

ஐந்து முகங்கள் கொண்ட அடிப்பக்கம் செம்பு (தாமிரம்) அல்லது வெண்கலத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். மேற்பாகம் தோல் பயன்படுத்தி இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். சுமார் 150 கிலோ எடைகொண்ட பஞ்சமுக வாத்தியம் கைகலால் எடுத்துச் செல்லமுடியாது. இதனால் சக்கரம் இணைக்கப்பட்ட இரும்புச் சட்டங்களினுள் அமைக்கப்பட்டிருக்கும். இடம் விட்டு இடம் நகர்த்திச் செல்ல ஏதுவாக இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு மிகவும் அருகி வருகிறது.

கோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற கண்காட்சியில் 700 - 800 ஆண்டுகள் பழைமையான சில இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று முற்றிலும் செம்பால் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றரை டன் எடை உள்ள பஞ்சமுக வாத்தியம். [3]


இவையையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 எல். ரேணுகாதேவி (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ். p. 16.
  2. மா. சந்திரமூர்த்தி தொகுத்த “தமிழ்நாட்டுச் சிவாலயங்கள்” எனும் நூலில், குடவாசல் பாலசுப்பிரமணியம் எழுதிய “திருவாரூர் - தியாகராஜர் கோயில்” கட்டுரை பக்கம் -222-223
  3. தமிழ் செம்மொழி மாநாடு - கண்காட்சி மறக்க முடியாத மகிழ்ச்சி: மாணவிகள் உற்சாகம்

வெளியிணைப்புகள்

தொகு

கிராமிய இசையை மீட்க ஒரு சி.டி[தொடர்பிழந்த இணைப்பு]

தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சமுக_வாத்தியம்&oldid=3597754" இலிருந்து மீள்விக்கப்பட்டது