அகப்பொருள் தலைவன்

(தலைவன், அகத்திணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குடும்பத் தலைவன், சமூகத் தலைவன், அரசியல் தலைவன், அரசன், அவைத் தலைவன் ஆகியோரை நாம் அறிவோம். இவர்கள் இக்காலத்திலும் கொள்ளப்படும் வாழ்வியல் மாந்தர்கள். இலக்கியங்களில் பாட்டுடைத் தலைவன் எனப்படும் கதை அல்லது வரலாற்று மனிதனும் உண்டு. இவர்கள் எல்லாரும் புறப்பொருள் மாந்தர்கள். இவர்கள் வாழ்வியல் மாந்தர்களாயின் ‘திரு’ என்னும் அடைமொழியுடன் குறிப்பிடப்படும். இலக்கியத் தலைவனாயின் அவனது பெயர் அவனது இயற்பெயராலும், பண்புப் பெயராலும், அன்மொழித்தொகைப் பெயராலும் குறிப்பிடப்படும். எப்படியோ புறத்திணையில் வரும் தலைவன் பெயர் அவனை மட்டும் உணர்த்தும் வகையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அகப்பொருளில் தலைவன் என்னும் சொல் தனிப்பட்ட ஒருவனை உணர்த்தாது. காதல் வாழ்க்கையில் காதலனாகவும், இல்லற வாழ்க்கையில் கணவனாகவும் வாழும் எவனையும் குறிக்கும். தமிழ் இலக்கண இலக்கியங்கள் இவனைப்பற்றிக் கூறும் செய்திகள் தமிழரின் வாழ்க்கையைப் புலப்படுத்துகின்றன.

தலைவனைத் தலைமகன், கிழவன், கிழவோன் என்றெல்லாம் குறிப்பிடுவர்.

  • அவனுக்கு அவள், அவளுக்கு அவன் என உரிமை உண்டாவதைக் கிழவன், கிழத்தி என்னும் சொற்களால் குறிப்பிடுவர். (கிழமை = உரிமை)

இந்த அகத்திணைத் தலைவனின் பங்கு இன்னதெனத் தொல்காப்பியம் தொகுத்துக் காட்டுகிறது.

பொது [1]

தொகு

எந்தச் சூழலில் தலைவன் பேசுவான்?

கற்பொடு புணர்ந்த கௌவை

திருமணம் செய்து வையுங்கள் என வெளிப்படையாகப் பேசுவது ‘கற்பொடு புணர்ந்த கௌவை’. தன் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை எனின் வற்புறுத்துவான். பருவ காலத்தில் திருமணத்தை வலியுறுத்துவான். தலைவியை உடன்கொண்டு செல்லும்போது இடைவழியில் தலைவியின் பெற்றோர் தடுக்கும்போது திருமணத்தை வலியுறுத்துவான். தலைவியை அவளது சுற்றம் மீட்டுக்கொண்டு செல்லும்போது கலங்கிக் கதறுவான்.

ஊதியம் கருதிய ஒருதிறம்

இளமை சில காலந்தான், ஈட்டும் தகுதி தனக்கு இருக்கிறது, பொருள் இல்லாவிட்டால் இழிவு, இருந்தால் பெருமை, அன்பின் (காதல்) விரிவு, தலைவியை விட்டுப் பிரிதல் தாங்கிக்கொள்ள இயலாத ஒன்று – என்பனவற்றையெல்லாம் எண்ணிப் பொருளீட்டத் துணியும்போது பேசுவான்.

தூது

அரசனுக்காகத் சூது செல்லும்போது தனக்கு வரும் புகழ், செல்லாதபோது தனக்கு வரும் மானக்கேடு ஆகியவற்றைப் பேசுவான்.

மேலே சொல்லப்பட்ட மூன்றும் ஒருவகை.

கீழே வரும் இரண்டும் வேறுவகை

பாசறை

பாசறையில் காதலி நினைவு வரும்போது பேசுவான். போர் முற்றுப்பெற்ற பின்னர்த் தேரை விரைந்து ஓட்டும்படி பாகனிடம் கூறுவான். காவலாளிகளிடம் பேசுவான்.

பரத்தை

பரத்தையிடம் சென்று திரும்பி, தலைவியின் ஊடலைத் தணிக்கக் கெஞ்சுவான்.

வேட்கை, காதலியிடம் பேச்சுக்கொடுத்தல், அவளைத் தொட்டுப் பயிற்றுவித்தல், இடம் பெற்றுத் தழுவுதல், தோழியின் துணையைப் பெற்றுக் கூடுதல், மடலேறுதல் (ஆண்களுக்கான விதி) பற்றிக் கூறுதல் முதலானவை காதல் வாழ்க்கையில் நிகழும்.

கற்பு வாழ்க்கைக் காலத்தில் எப்போதெல்லாம் தலைவன் பேசுவான் என்னும் செய்தி தொல்காப்பியத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

முதலிரவு புணர்ச்சியின்போது
மகிழ்ச்சிக் களிப்பில்
உரிமையில் அச்சம் தோன்றும்போது
நன்னெறி பற்றி நினைக்கும்போது
தலைவியின் பெருமையை எண்ணும்போது
கடவுளை வேண்டித் தோழி தொழும்போது
தோழியின் துன்ப அலையை மாற்றும்போது
தலைவி கைப்பட உணவு அமிழ்தம் என்னும்போது
தலைவிக்குப் பூச் சூட்டும்போது
அந்தணர், சான்றோர் ஒழுக்க நெறியை எடுத்துரைக்கும்போது
திருமணத்துக்கு முன் நிகழ்ந்தவற்றை எண்ணும்போது
தலைவியின் குற்றங்கள் வானத்தில் எழுதிய எழுத்தைப் போல அழிந்த மகிழ்ச்சியின்போது
தான் முன்பு செய்த குற்றங்களைத் தலைவி பொறுத்துக்கொண்டதை வாயிலர்களிடம் பாராட்டும்போது
மகப்பேற்றுக்குப் பின்னர் நெய்நீர் ஆடி, ஐயர் அமரரைக் காட்டிச் சடங்கு செய்த பின் மனைவியிடம் உறவு கொள்ளும்போது
மனைவியின் காலடியைப் படுக்கையில் தடவிக் கொடுக்கும்போது
தலைவியுடன் இருப்போரை விலக்கும்போது
பிரிதும்போது கலங்கும் தலைவி, தோழி ஆகியோரைத் தேற்றும்போது
பிரிவது பிழை என்று பிரிய அஞ்சும்போது

தலைவன் பேசுவான். மேலும்

தோழியின் மடமையைப் போக்கும்போது
வேற்று நாட்டிலிருந்து திரும்பும்போது
வேற்று நாட்டில் சிறப்புப் பெறும்போது
தேர்ப்பாகனை விரைந்து ஓட்டச் சொல்லும்போது
காமக் கிழத்தியும் மனைவியும் மாறுபடும்போது தான் பட்ட துன்பத்தை விளக்கும்போது
வினை முடிந்தபின் பெருமிதத்தோடு விருந்தளிக்கும்போது
மாலையுடன் வரவேற்கும் கேளிருடன் உரையாடும்போது
உதவிய வாயில்களோடு பண்ணிசைத்து மகிழும்போது

என்று 33 காலங்களில் தலைவன் உரையாட்டு நிகழும்.

அடிக்குறிப்பு

தொகு
  1. தொல்காப்பியம் அகத்திணை 44
  2. தொல்காப்பியம் களவியல் 9-12
  3. தொல்காப்பியம் கற்பியல் 5

காண்க

தொகு
தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர் | வரைவின் மகளிர் | பரத்தையர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகப்பொருள்_தலைவன்&oldid=4138444" இலிருந்து மீள்விக்கப்பட்டது