தாஜ் மகால்
தாஜ் மகால் (Taj Mahal), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.
தாஜ் மகால் | |
---|---|
தெற்குப் பகுதியில் இருந்து தாஜ்மகாலின் காட்சி | |
அமைவிடம் | ஆக்ரா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
ஏற்றம் | 171 மீ (561 அடி) |
கட்டப்பட்டது | 1632–1653[1] |
கட்டிடக்கலைஞர் | உஸ்தாத் அகமது லகோரி |
கட்டிட முறை | முகலாயக் கட்டிடக்கலை |
பார்வையாளர்களின் எண்ணிக்கை | 3 மில்லியன் (in 2003) |
வகை | பண்பாடு |
வரன்முறை | i |
தெரியப்பட்டது | 1983 (7-வது அமர்வு) |
உசாவு எண் | 252 |
நாடு | இந்தியா |
பிரிவு | ஆசியா-பசிபிக் |
தோற்றம்
தொகுபொ.ஊ. 1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஜ், அவர்களது 14 ஆவது பிள்ளையான குகாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஜ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், பூங்கா ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின. பேரரசன் ஷாஜகானே இக் கட்டிடத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகின்றது: [சான்று தேவை]
தாஜ்மகால், பாரசீகக் கட்டிடக்கலை மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது. சிறப்பாக, தைமூரிய, முகலாயக் கட்டிடங்களான ஸ்ள்ள தைமூரின் சமாதி, ஹுமாயூன் சமாதி, ஷா ஜகான் கட்டுவித்த, டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் ஆகிய கட்டிடங்கள் இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்தன. முன்னைய கட்டிடங்கள் சிவப்பு நிற மணற்கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஷா ஜகான் வெண்ணிறச் சலவைக்கற்களைப் பயன்படுத்தியுள்ளான். இவன் காலத்தில் கட்டிடங்கள் மிகவும் திருந்திய நிலையை அடைந்தன.
கட்டிடக்கலை
தொகுசமாதி
தொகுதாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக்கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர் வடிவம் கொண்டதும், வளைவு வடிவிலான நுழை வாயில், பெரிய குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு கட்டிடம். பெரும்பாலான முகலாயச் சமாதிகளைப் போலவே இதன் அடிப்படைக் கூறுகளும் பாரசீகக் கட்டிடக்கலை சார்ந்தனவாகும். இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர்கள் நீளம் கொண்ட கனக் குற்றி வடிவமானது.
இதன் வடிவமைப்பு கட்டிடத்தின் எல்லாப் பக்கங்களிலுமே சமச்சீரானது. அடித்தளத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்கு மினார்கள் அமைந்துள்ளன. கட்டிடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது.
இக் கட்டிடத்தின் சலவைக்கல் குவிமாடம் ஏறத்தாழ 35 மீட்டர் உயரம் கொண்டது. வெங்காய வடிவம் கொண்ட இக் குவிமாடம் 7 மீட்டர் உயர உருளை வடிவமான அமைப்பின் மீது உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. இதன் உச்சியில் தாமரை வடிவ அலங்கார அமைப்பின் மீது அழகான கலசம் காணப்படுகிறது. பாரசீக, மற்றும் இந்து அம்சங்களை உடையதாகக் காணப்படும் இது கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது. இக் கலசம் 1800 ஆம் ஆண்டுவரை தங்கத்தினால் ஆனதாக இருந்ததாகவும் பின்னர் வெங்கலத்துக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதன் உச்சியில் இஸ்லாம் மதத்தைக் குறிக்கும் பிறை உள்ளது. இப் பெரிய குவிமாடத்தைச் சுற்றிலும் நான்கு சிறிய குவிமாடங்கள் உள்ளன. இவையும் பெரிய குவிமாடத்தைப் போலவே வெங்காய வடிவம் கொண்டவை. வட்டமான வரிசைகளில் அமைந்த தூண்களில் தாங்கப்பட்டுள்ள இச் சிறிய குவிமாடங்களுக்குக் கீழிருக்கும் கூரை திறந்து உள்ளதால் அவற்றினூடாக கட்டிடத்தின் உட்பகுதிக்கு சூரிய ஒளி செல்லக்கூடியதாக உள்ளது. கூரைப்பகுதியில் உள்ள சுவர்களின் மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகள் கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகின்றன.
அடித்தளத்தின் மூலைகளில் கட்டப்பட்டுள்ள மினார்கள் எனப்படும் கோபுர அமைப்புக்கள் 400 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கின்றன. இவை மரபுவழியாக இஸ்லாமிய மசூதிகளில் காணப்படும், தொழுகைக்காக மக்களை அழைப்பதற்குப் பயன்படும் மினார்களைப் போல் அமைக்கப்பட்டுள்ளன. கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் உருளை வடிவ அமைப்பைக் கொண்ட இவை ஒவ்வொன்றையும் சுற்றி, இடையில் அமைக்கப்பட்டுள்ள உப்பரிகைகள் அவற்றை மூன்று சம அளவான பகுதிகளாகப் பிரிக்கின்றன. இவற்றின் உச்சியிலும் ஒரு உப்பரிகையும் அவற்றின் மேல் குவிமாடங்களுடன் கூடிய கூடுபோன்ற அமைப்புக்களும் காணப்படுகின்றன. இக் குவிமாடங்கள், முதன்மைக் கட்டிடத்திலுள்ள குவிமாடங்களின் அதே வடிவில் சிறிய அளவுள்ளவையாகவும் அங்குள்ளதைப் போன்றே தாமரை வடிவ அலங்காரம், கலசம் ஆகியவற்றைக் கொண்டனவாகவும் உள்ளன.
-
மீன்முள்ளு அமைப்பு
-
செடி கொடி அழகூட்டல்
-
Spandrel detail
-
செதுக்கு ஓவியம்
வெளிப்புற அழகூட்டல்
தொகுதாஜ்மகாலின் வெளிப்புற அழகூட்டல், முகலாயக் கட்டிடக்கலை சார்ந்த பிற கட்டிடங்களோடு ஒப்பிடும்போது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக் கட்டிடத்தின் வெளிப்புற அழகூட்டல், நிறப்பூச்சு, சாந்துப்பூச்சு அல்லது கற்கள் பதித்தல் மூலம் செய்யப்பட்டுள்ளது. மனித உருவங்களையோ பிற விலங்கு உருவங்களையோ அழகூட்டல்களில் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ள இஸ்லாமிய மரபுகளுக்கு இணங்க அழகூட்டல்களில், வனப்பெழுத்துக்களும், செடி கொடி வடிவங்களும் பயன்பட்டுள்ளன. தாஜ்மகாலில் பயன்படுத்தப்பட்டுள்ள வனப்பெழுத்துக்கள் "துலுத்" எனப்படும் வகையைச் சார்ந்தது. இவற்றைப் பாரசீக வனப்பெழுத்துக் கலைஞரான அமானத் கான் என்பவரால் உருவாக்கியுள்ளார். இவ் வனப்பெழுத்துக்கள் சலவைக்கல்லில், சூரியகாந்தக்கற்கள் பதித்து உருவாக்கப்பட்டவை.
உட்புற அழகூட்டல்
தொகுதாஜ்மகாலின் உட்புறக் கூடம் மரபுவழியான அழகூட்டல்களையும் தாண்டிச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. உட்கூடம் எண்கோண வடிவானது. இதன் எல்லாப் பக்கங்களிலும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன எனினும் தெற்குப் பக்கப் பூங்காவை நோக்கியுள்ள கதவு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. உட்புறச் சுவர்கள் சுமார் 25 மீட்டர் உயரம் கொண்டவை. இவற்றின் மேல் சூரிய உருவினால் அழகூட்டப்பட்ட "போலி"க் குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது.
பூங்கா
தொகுதாஜ்மகால் கட்டிடத் தொகுதி, 300 மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு முகலாயப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நடை பாதைகள், பூங்காவின் நான்கு காற்பகுதிகளையும் 16 பூம்படுகைகளாகப் பிரிக்கின்றன. கட்டிடத்துக்கும் தொகுதியின் நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியின் நடுவில் ஒரு குளம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு அச்சில் நின்று பார்க்கும்போது கட்டிடத்தின் விம்பம் இக் குளத்தில் தெரியுமாறு அமைந்துள்ளது. பூங்காவின் பிற இடங்களில் மர வரிசைகளுடன் கூடிய பாதைகளும், செயற்கை நீரூற்றுக்களும் காணப்படுகின்றன. பாரசீகப் பூங்காக்களின் வடிவமைப்பைப் பின்பற்றி அமைக்கப்பட்ட முகலாயப் பூங்காக்கள், முகலாயப் பேரரசர் பாபரினால் இந்தியாவுக்கு அறிமுகமானது. இது நான்கு ஆறுகள் பாயும் சுவர்க்கத்திலுள்ள பூங்காவுக்கான ஒரு குறியீட்டு வடிவமாகும். முகலாய இஸ்லாமிய நூலொன்றில், சுவர்க்கம் என்பது, மையத்தில் அமைந்துள்ள ஒரு ஊற்றிலிருந்து நான்கு திசைகளிலும் பாயும் ஆறுகளைக் கொண்ட ஒரு பூங்கா எனக் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான முகலாயப் பூங்காக்கள், சதுர வடிவானவையாகவும், சமாதியையோ அல்லது ஒரு காட்சிக் கூடத்தையோ அதன் மையப் பகுதியில் கொண்டதாக அமைந்திருப்பது வழக்கம். ஆனால், இந்த வழக்கத்துக்குப் புறம்பாக தாஜ்மகாலில் சமாதி ஒரு பக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. யமுனை ஆற்றுக்கு மறு பக்கத்தில், மஹ்தாப் பாக் அல்லது நிலவொளிப் பூங்கா கண்டு பிடிக்கப்பட்டிருப்பதுடன், இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம், யமுனை நதியையும், நிலவொளிப் பூங்காவையும் உட்படுத்தி இத்தொகுதியை வடிவமைத்து இருக்கலாம் எனக் கருத்து வெளியிட்டுள்ளது. இங்கே யமுனை ஆற்றை, சுவர்க்கத்தின் ஆறுகளில் ஒன்றாக வடிவமைப்பில் சேர்த்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. தாஜ்மகால் பூங்காவுக்கும், ஷாலிமாரில் உள்ள பூங்காவுக்கும் அவற்றின் அமைப்பிலும், அவற்றிலுள்ள, ஊற்றுக்கள், செங்கல் மற்றும் சலவைக்கற்கள் பதித்த நடைபாதைகள், வடிவவியல் உருக்களில் அமைந்த செங்கல் வரம்பிட்ட பூம்படுகைகள் ஆகிய கட்டிடக்கலைக் கூறுகளில் காணப்படும் ஒற்றுமையும், ஷாலிமாரை அமைத்த, அலி மர்தான் என்னும் பொறியாளரே தாஜ்மகால் பூங்காவையும் அமைத்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இப் பூங்காவைப் பற்றிய பழையகாலக் குறிப்புகள், இங்கே பலவிதமான பூஞ்செடிகளும், பழமர வகைகளும் ஏராளமாக இருந்ததாகக் கூறுகின்றன. முகலாயப் பேரரசு சரிவடையத் தொடங்கியதோடு இப் பூங்காவின் பராமரிப்பும் குறைந்தது. இப்பகுதி பிரித்தானியர் கைக்குப் போனபோது அவர்கள் இப் பூங்காவின் அமைப்பை மாற்றி இலண்டனில் உள்ளது போன்ற புற்றரைகளை அமைத்தனர்.
வெளிக் கட்டிடங்கள்
தொகுதாஜ்மகால் தொகுதி மூன்று பக்கங்களில் செந்நிற மணற்கற் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. யமுனை ஆற்றை நோக்கியுள்ள பக்கத்தில் சுவர்கள் இல்லை. சுவருக்கு வெளியே ஷா ஜகானின் ஏனைய மனைவியர்களுடையவை உட்பட மேலும் பல சிறிய சமாதிக் கட்டிடங்கள் உள்ளன. இவற்றுள் சற்றுப் பெரிய கட்டிடம் மும்தாஜின் விருப்பத்துக்குரிய பணிப்பெண்ணுடையது. இவற்றுட் பெரும்பாலானவை, அக்காலத்து சிறிய முகலாயச் சமாதிக் கட்டிடங்களைப் போல் செந்நிற மணற்கற்களால் ஆனவை. சுற்றுச் சுவர்களின் உட்பக்கங்களில், வளைவுகளுடன் கூடிய தூண் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இந்தியாவின் இந்துக் கோயில்களில் காணப்படும் அம்சம் முகலாயக் கட்டிடங்களில் பயன்பட்டது.
முக்கியமாகச் சலவைக்கல்லால் அமைக்கப்பட்ட முதன்மை நுழைவாயில் முந்திய பேரரசர்கள் காலத்து முகலாயக் கட்டிடங்களை நினைவூட்டுகிறது. இது சமாதிக் கட்டிடத்தை ஒத்த வளைவுகளையும், புடைப்புச் சிற்பங்களையும், பதிப்பு அழகூடல்களையும் கொண்டுள்ளது.
கட்டுமானம்
தொகுஆக்ரா நகருக்குத் தெற்கே உள்ள நிலமொன்றில் தாஜ்மகால் கட்டப்பட்டது. மகாராஜா ஜெய் சிங் என்பவருக்குச் சொந்தமான இந்த நிலத்தைப் பெறுவதற்காக, ஷா ஜகான் அவருக்கு ஆக்ரா நகரின் மையப்பகுதியில் பெரிய நிலமொன்றை வழங்கினார். ஏறத்தாழ மூன்று ஏக்கர் நிலப்பரப்புக் கொண்ட பகுதி அகழப்பட்டு மண் நிரப்பி இறுக்கப்பட்டு ஆற்று மட்டத்திலிருந்து 50 மீட்டர் உயரத்துக்கு நிரப்பப்பட்டது. முதன்மைக் கட்டிடப் பகுதியில் ஆழமான கிணறு போன்ற அமைப்புகள் தோண்டப்பட்டு கற்களும், சிறு பாறைகளும் இட்டு நிரப்பி அத்திவாரம் இடப்பட்டது. மூங்கிலால் ஆன சாரமரங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்துவதற்காக செங்கற்களால் தற்காலிக அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வமைப்புக்கள் மிகவும் பெரிதாக இருந்ததால் இதை அகற்றுவதற்குப் பல ஆண்டுகள் ஆகக்கூடுமென்று அக்காலத்து மேற்பார்வையாளர்கள் கருதியதாகத் தெரிகிறது. மரபுவழிக் கதைகளின்படி கட்டிடம் கட்டி முடிந்ததும், இந்தத் தற்காலிக அமைப்பில் இருந்து எவரும் கற்களை எடுத்துத் தாங்களே வைத்துக் கொள்ளலாம் என அறிவித்தானாம் இதனால் ஓரிரவிலேயே இவ்வமைப்புக்கள் அகற்றப்பட்டனவாம். சலவைக்கற்களை கட்டிடக் களத்துக்கு எடுத்துச் செல்வதற்கு 15 கிலோமீட்டர் நீளமான சாய்தளப் பாதை ஒன்று மண் போட்டு இறுக்கி அமைக்கப்பட்டதாம். 20 தொடக்கம் 30 எருதுகளைக் கொண்ட குழுக்களைக் கொண்டு இதற்கென உருவாக்கப்பட்ட வண்டிகளில் கற்களை ஏற்றி இழுத்துவந்ததாகச் சொல்லப்படுகின்றது. இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை.[2]
கறுப்பு நிறத் தாஜ் மஹால்
தொகுதாஜ் மஹாலைத் தன் பிரியமான மனைவிக்காகக் கட்டியெழுப்பச் சொன்ன மன்னன் ஷாஜகான் அதே சமயம் தன்னைக் குறிக்கும் வகையிலும் தாஜ்மஹாலைப் போன்ற தோற்றம் கொண்ட கறுப்பு நிறத் தாஜ் மஹாலைக் கட்டியெழுப்பியுள்ளதாகவிருந்த சந்தேகத்தின்படி ஆராய்ச்சியாளர்கள் அத்தாஜ்மஹால் இருந்த இடத்தின் சான்றுகளை ஆராய்ந்துள்ளனர்.அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர் தாஜ்மகால் கட்டப்பெற்ற சில தூரங்களில் கறுப்பு நிறத் தாஜ் மஹாலைப் போன்ற தோற்றம் அங்கு காணப்படவில்லை ஆனால் அதன் அமைப்புகள்,கற்கள் போன்றனவற்றையும் கண்டெடுத்துச் சான்றுகளைப் பார்த்தனர் அவ்வாறு கறுப்பு நிறத் தாஜ் மஹால் கட்டப்படவில்லை எனவும் இன்று விளக்குகின்றனர்.ஆனால் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட ஒரு குளம் ஒன்றின் மீது மாலை நேரங்களில் தாஜ் மகாலின் தோற்றமானது கறுப்பு நிற வடிவில் தெரிவதும் குறிப்பிடத்தக்கது.அதாவது ஷாஜகான் கவலையில் ஆழும் பொழுது கறுப்பு நிறத் தோளாடை போர்த்தப்பெற்ற இக்குளத்திலிருந்து பிரியமான மனைவி மும்தாஜ் மஹாலுக்குக் கட்டியெழுப்பிய தாஜ்மகாலைப் பார்த்து வந்தார் என்பதும் தாஜ்மகாலின் நிழல் அக்குளத்தில் விழும்பொழுது கறுப்பு நிறமாகத் தோன்றுவதும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.
அமில மழை
தொகுதாஜ் மஹால் அமில மழையால் மெல்ல மெல்ல சேதமடைந்து வருகிறது.[3] அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.[4] 1996 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதி மன்றம் தாஜ்ம ஹாலைச் சுற்றி உள்ள 10,400 சதுர கிலோ மீட்டர் பகுதியில் உள்ள அனைத்து தொழிலகங்களும் நிலக்கரிக்குப் பதில் இயற்கை எரிவாயுவையே பயன்படுத்த வேண்டும் என ஆணையிட்டது.[5]
தூய்மைப்படுத்தல் நடவடிக்கை
தொகுதாஜ்மகால் மீது களிமண் பூசி தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் நடவடிக்கையை தொல் பொருள் ஆய்வுத்துறை தொடங்க உள்ளதாகவும் வெயில், மழை, பனி, காற்றினால் பரவு தூசி போன்ற காரணங்களினால் உலகப் பிரசித்திப் பெற்ற இந்த தாஜ்மகால் கட்டடம் மாசு படிந்து வருகின்றது என்றும் கவலையான தகவல்கள் வெளிவருகின்றன.[6] அத்துடன் தாஜ்மகாலை காண உலகெங்கும் இருந்து கிட்டத்தட 25 லட்சம் பயணிகள் வந்து செல்வதாகவும், தாஜ்மகாலை கட்டடத்தைச் சுற்றி குப்பை கூளங்கள், பசுவின் சாணம் போன்றனவும் பரவிக்கிடக்கின்றனவாம். அத்துடன் தாஜ்மகால் வரும் சுற்றுலாப் பயணிகளது உடைமைகளை வைத்துக்கொள்வதற்கான அறை வசதிகள், மலசலக்கூடங்களுக்கான வழிகாட்டு அடையாளக் குறிகள் போன்றனவும் போதிய அளவில் இல்லை எனும் செய்திகளும் வருகின்றன. இவை பொறுப்பானவர்களின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது.[7]
தாஜ்மகால் பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து
தொகுசுவாமி விவேகானந்தர் தாஜ்மகாலைப் பார்த்த போது கூறிய கருத்து: "இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால் அதிலிருந்துகூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும். இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டைக் கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் ஆறுமாதமாவது தேவைப்படும்."[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Dutemple, Lesley A (2003). The Taj Mahal. Lerner Publications Co. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8225-4694-9.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Koch, பக். 239.
- ↑ "News – Environment: India's famed Taj Mahal is losing its lustre". iol.co.za. Archived from the original on ஏப்ரல் 27, 2006. பார்க்கப்பட்ட நாள் April 29, 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Morley, Ian (April 11, 2007). "ArchitectureWeek – Culture – Saving the Taj Mahal – 2007.0411". architectureweek.com. பார்க்கப்பட்ட நாள் April 2, 2011.
- ↑ "Why is the Taj Trapezium Zone and why is it called so?". Times of India. May 4, 2008. Archived from the original on மார்ச் 1, 2012. பார்க்கப்பட்ட நாள் April 2, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ தாஜ்மகால் சுத்தப்படுத்தும் நவீன நடவடிக்கை[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "தாஜ்மகாலை சுத்தம் செய்ய மத்திய அரசு முடிவு". Archived from the original on 2011-09-19. பார்க்கப்பட்ட நாள் 2011-01-11.
- ↑ எழுந்திரு! விழித்திரு!; சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு; 6; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 440