உமாயூனின் சமாதி
உமாயூனின் சமாதி (இந்தி: हुमायूँ का मक़बरा, உருது: ہمایون کا مقبره Humayun ka Maqbara) என்பது முகலாயப் பேரரசர் உமாயூனின் சமாதிக் கட்டிடம் ஆகும்.[1] இது உண்மையில் பல கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு தொகுதியாக உள்ளது. இது இந்தியாவின் தலை நகரமான தில்லியில், நிசாமுத்தீன் கிழக்குப் பகுதியில், 1533 ஆம் ஆண்டில் உமாயூன் கட்டுவித்த புராணா கிலா எனப்படும் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. கிபி 1562 ஆம் ஆண்டில் உமாயூனின் மனைவியான அமீதா பானு பேகம் இதனைக் கட்டுவிக்கத் தொடங்கினார். இதனை வடிவமைத்தவர் மிராக் மிர்சா கியாத் என்னும் பாரசீகக் கட்டிடக் கலைஞர். இவ்வளவு பெரிய கட்டிடத்தில் சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல் தடவை ஆகும்.
உமாயூன் சமாதி, தில்லி | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iv |
உசாத்துணை | 232 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1993 (17வது தொடர்) |
இக் கட்டிடத் தொகுதி, முக்கியமான கட்டிடமாகிய பேரரசர் உமாயூனின் சமாதிக் கட்டிடத்தை உள்ளடக்கியுள்ளது. இங்கேயே அவரது மனைவியான அமீதா பேகம், பின்னாட் பேரரசரான சா சகானின் மகன் தாரா சிக்கோ ஆகியோரதும்; பேரரசர் சகாந்தர் சா, பரூக்சியார், ராஃபி உல்-தார்சத், ராஃபி உத்-தௌலத், இரண்டாம் ஆலம்கீர் போன்ற பல முகலாயர்களதும் சமாதிகளும் இங்கே உள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள இது முகலாயக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இக் கட்டிடமும் இதனோடிணைந்ததும் பாரசீகப் பூங்காக்களின் பாணியில் அமைந்ததுமான சார்பாக் பூங்காவும் அதற்கு முன் இந்தியாவில் எப்போதும் காணப்படாத வகையில் அமைந்ததோடு, பிற்கால முகலாயக் கட்டிடங்களுக்கு ஒரு மாதிரியாகவும் அமைந்தது.
தனது மூதாதையர்களில் ஒருவரும், ஆசியாவைக் கைப்பற்றியவருமான தைமூரின், சமர்க்கண்டில் உள்ள குர்-இ அமீர் என்னும் சமாதியைத் தழுவிச் சமாதிக் கட்டிடத்தை பாரடைசுப் பூங்காவில் அமைக்கும் வழக்கம் தொடங்கியது முதல் முகலாயப் பேரரசரும் உமாயூனின் தந்தையுமான பாபரின் சமாதியிலேயே. பாக்-இ பாபர் எனப்படும் பாபரின் சமாதி, ஆப்கனிசுத்தானின், காபுலில் அமைந்துள்ளது. எனினும், உமாயூனின் சமாதிக் கட்டிடம் அவரது தந்தை பாபரின் அடக்கமான அளவையுடைய சமாதிக் கட்டிடத்திலிருந்து பெருமளவுக்கு வேறுபட்டுக் காணப்படும் ஒரு கட்டிடம் ஆகும். பாபருடன் தொடங்கி உமாயூனின் சமாதியில் பெரும் முன்னேற்றத்தைப் பெற்ற சமாதிக் கட்டிடக் கட்டிடக்கலை ஆக்ராவில் பின்னாளில் கட்டப்பட்ட தாஜ்மகாலில் அதன் உச்சநிலையை அடைந்தது எனலாம்.
இது கட்டப்பட்ட நிலம் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. முகலாய அரசர்களால் மதிக்கப்பட்டவரும், மிகவும் பெயர் பெற்றவருமான நிசாமுத்தீன் ஔலியா எனப்படும் சூபி குருவின் சமாதிக் கட்டிடமான நிசாமுத்தீன் தர்காவுக்கு அருகில் இருந்ததால் இந் நிலம் தெரிவு செய்யப்பட்டது. இக் குருவின் தங்குமிடமும் அருகிலேயே இருந்தது. பின்னாளில் 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்தின்போது கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் சா சஃபாரும் மூன்று இளவரசர்களும் ஆங்கிலேயத் தளபதி ஒட்சனால் பிடிக்கப்பட்டு ரங்கூனுக்கு நாடுகடத்தப்படும்வரை இங்கேயே தஞ்சம் அடைந்திருந்தனர்.
இந்த நிலம், அடிமை வம்சத்தினர் காலத்தில் நசிருத்தீனின் மகனான சுல்தான் கெக்குபாத்தின் தலைமையிடமான கிலோக்கேரி கோட்டையைச் சேர்ந்ததாக இருந்தது.
வரலாறு
தொகு1556 ஆம் ஆண்டு சனவரி 20 ஆம் தேதி உமாயூன் மறைந்த பின்னர் அவரது உடல் தில்லியில் உள்ள அவரது அரண்மனையிலேயே அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் 1558 ல் காஞ்சர் பெக்கினால் இவ்வுடல் பஞ்சாப்பில் உள்ள சிர்கிந்த் என்னும் இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே 1571 ஆம் ஆண்டில் உமாயூனின் சமாதி முடிவடையும் கட்டத்தில் இருந்தபோது அப்போதைய முகலாயப் பேரரசரும் உமாயூனின் மகனுமான அக்பர் அதனைப் பார்வையிட்டார்.
எனினும் உமாயூனின் அரசியான அமீதா பானு பேகம் 1652 ஆம் ஆண்டில் தில்லியில் புதிய சமாதிக் கட்டிடத்தைக் கட்ட உத்தரவிட்டார். இதனைக் கட்டுவதற்கு அக் காலத்தில் 15 இலட்சம் ரூபாவுக்குச் சமமான தொகை செலவானதாகத் தெரிகிறது. பல வரலாற்றாளர்கள் இவ்வரசியை அரச குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவரான ஹாஜி பேகம் என்பவருடன் சேர்த்துக் குழம்பியுள்ளார்கள். ஆனால் அக்பர் காலத்தில் எழுதப்பட்ட 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விரிவான ஆவணம் ஒன்றின்படி, ஹாஜி பேகம் என்பவர், உமாயூனின் தாயின் சகோதரரின் மகனாவார். இவர் பின்னர் உமாயூனின் சமாதிக் கட்டிடத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
மிகச்சில சமகால வரலாற்றாளர்களில் ஒருவரான அப்த் அல்-காதிர் பதாவுனி என்பவர் இதன் கட்டுமானம் பற்றிய குறிப்புக்களைத் தந்துள்ளார். இவரது கூற்றுப்படி இதனைக் கட்டிய கட்டிடக்கலைஞர் மிரா மிர்சா கியாசு வட மேற்கு ஆப்கானிசுத்தானில் உள்ள ஏரத் என்னும் இடத்தைச் சேர்ந்தவர். ஏரத்திலும், இன்றைய உசுபெக்கிசுத்தானில் உள்ள புக்காராவிலும், இந்தியாவின் பிற இடங்களிலும் பல கட்டிடங்களை இவர் வடிவமைத்துள்ளார். ஆனால் உமாயூன் சமாதிக் கட்டிடம் முற்றுப்பெற முன்னரே இவர் இற்ந்து விட்டதனால், இவரது மகன் சையத் முகம்மத் இபின் மிராக் கியாத்துட்டீன் கட்டிடத்தைத் தனது தந்தையின் வடிவமைப்பின்படி 1571 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்.
1611 ஆம் ஆண்டில் இச் சமாதிக்குச் சென்ற ஒரு ஆங்கிலேய வணிகரான வில்லியஃம் ஃபின்ச் என்பார் இதன் மைய அறையின் உட்பகுதி குறிந்த விபரங்களைத் தந்துள்ளார். அங்கே விலையுயர்ந்த கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தது பற்றியும், தூய வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட கூடாரம் ஒன்று அங்கு இருந்ததாகவும், புனித நூல்களும், உமாயூனின் வாள், தலைப்பாகை, காலணிகள் என்பன அங்கே வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தகவல் தந்துள்ளார்.
கட்டிடக்கலை
தொகுகண்ட கற்களால் கட்டப்பட்ட உயரமான சுற்று மதில்களைக் கொண்ட இவ்வளாகத்தின் மேற்கிலும், தெற்கிலும் உள்ள நுழைவாயில்களில் இரண்டு மாடிகள் உயரம் கொண்ட வாயிற் கட்டிடங்கள் உள்ளன. 16 மீட்டர் உயரமான இக் கட்டிடத்தின் உட்செல்லும் வழிக்கு இரு பக்கங்களிலும் அறைகள் காணப்படுகின்றன. முதன்மை நுழைவாயில் ஆறு மூலைகள் கொண்ட விண்மீன் வடிவத்தால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
கண்டகற்களாலும், சிவப்பு மணற்கற்களாலும் கட்டப்பட்ட சமாதிக் கட்டிடத்தில், சலவைக்கற்கள் போர்த்து பொருளாகவும், தள ஓடுகளாகவும் பயன்படுவதுடன், அழகூட்டல் மறைப்புக்கள், கதவு நிலைகள், தாழ்வாரங்கள், முதன்மைக் குவிமாடம் என்பனவும் சலவைக்கற்களால் ஆக்கப்பட்டுள்ளன. இக் கட்டிடம் எட்டு மீட்டர் உயரமும், 12,000 ச மீட்டர் பரப்பளவும் கொண்டதும், வளைவு அமைப்புக்களினால் தாங்கப்படுவதுமான பரந்த தாங்கு மேடை ஒன்றின்மீது அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் கட்டிடம் சதுரமான தள வடிவம் கொண்டது எனினும், இதன் மூலைகள் வெட்டப்பட்டிருப்பதால் ஒரு பல்கோணம் போலத் தோற்றம் தருகின்றது. கண்டகற்களால் கட்டப்பட்ட கட்டிடத்தின் அடிப்பீடம் 56 சிற்றைறைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 100க்கு மேற்பட்ட கல்லறைகள் உள்ளன.
பாரசீகக் கட்டிடக்கலையில் செல்வாக்குக்கு உட்பட்ட இக் கட்டிடம் 47 மீட்டர் உயரம் கொண்டது. இதன் ஒரு பக்கம் 90 மீட்டர் (300 அடி) நீளமானது. உயர்ந்த கழுத்துப் பகுதியின் மீது பாரசீகப் பாணியிலான இரட்டைக் குவிமாட அமைப்புக்கொண்ட முதல் இந்தியக் கட்டிடம் இதுவாகும். 42.5 மீட்டர் உயரம் கொண்ட இதன் உச்சியில் 6 மீட்டர் உயரமான முடிவுத் தண்டு பொருத்தப்பட்டுள்ளது. இம் முடிவுத்தண்டின் உச்சியில் தைமூரியச் சமாதிகளில் இருப்பதுபோல் பிறைவடிவம் காணப்படுகின்றது.
இரட்டை அல்லது இரட்டை அடுக்காக அமைந்த குவிமாடத்தின் வெளி அடுக்கு அதன்மீது போர்த்தப்பட்டுள்ள வெள்ளைச் சலவைக்கல் போர்வையைத் தாங்குகிறது. உட்புற அடுக்கு உள் மண்டபத்தின் வளைவாக அமைந்த கூரைக்கு வடிவம் கொடுக்கிறது. வெள்ளைச் சலவைக்கல்லாலான குவிமாடத்துக்கு முரண்தோற்றம் தரும் வகையில் கட்டிடத்தின் ஏனைய பகுதிகள் மணற்கல்லின் சிவப்பு நிறம் காட்டுகின்றன. எனினும் இச் சிவப்பு மணற்கற்களின் ஒரே தன்மைத்தான தோற்றத்தைக் குறைக்கும் வகையில் அவற்றில் ஆங்காங்கே வெள்ளை மற்றும் கருப்புச் சலவைக்கற்களாலும், மஞ்சள் மணற்கற்களாலும் இழைப்புவேலைகள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Akbar: The Greatest Mogul. Munshiram Manoharlal. p. 191.
வெளி இணைப்புகள்
தொகு- Humayun's Tomb Archaeological Survey of India
- Compilation of Indian Heritage Sites பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
- AKTC revitalisation of the Humayun’s Tomb Gardens பரணிடப்பட்டது 2004-12-04 at the வந்தவழி இயந்திரம்
- Humayun's Tomb on Delhi-Tourism-India.com பரணிடப்பட்டது 2008-03-08 at the வந்தவழி இயந்திரம்
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: உமாயூனின் சமாதி
- படிமங்கள்
- Satellite picture by Google Maps
- Panoramic view on Humayun's Tomb at WHTour பரணிடப்பட்டது 2008-05-03 at the வந்தவழி இயந்திரம்
- Humayun’s Tomb slideshow பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம் at Fotopedia