சு. தியடோர் பாஸ்கரன்

சூழியல் எழுத்தாளர்
(தியடோர் பாஸ்கரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சு. தியடோர் பாஸ்கரன் (பி. 1940) ஒரு தமிழக எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட வரலாற்றாளர், சூழலியல் ஆர்வலர் என அறியப்படுபவர்.

சு. தியடோர் பாஸ்கரன்
பிறப்பு1940 (அகவை 83–84)
தாராபுரம், பிரிக்கப்படாத கோயம்புத்தூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது
திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு, இந்தியா)
தொழில்திரைப்பட வரலாற்றாளர், எழுத்தாளார், அரசுப் பணியாளர்
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்சென்னை கிருத்துவக் கல்லூரி
காலம்1976-தற்காலம் வரை
கருப்பொருள்தமிழ்த் திரைப்படங்கள், காட்டுயிர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி மெசேஜ் பியரர்ஸ்
தி ஐ ஆஃப் தி செர்பன்ட்
குறிப்பிடத்தக்க விருதுகள்சிறந்த திரைப்பட புத்தகத்திற்கான தங்கத் தாமரை விருது (தி ஐ ஆஃப் தி செர்பன்ட்)
துணைவர்திலகா

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பாஸ்கரன் தாராபுரத்தில் 1940இல் பிறந்தார். பாளையங்கோட்டை சென். ஜான் கல்லூரியில் இடைநிலை வகுப்புப் படித்து பின்னர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலை (வரலாறு) பட்டம் பெற்றார். பட்டம் பெற்றவுடன், தமிழக அரசு ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராக இரண்டாண்டுகள் பணி புரிந்தார். 1964ல் இந்திய தபால் துறையில் சேர்ந்தார். திருச்சியில் இரண்டாண்டுகள் கோட்ட மேலாளராகப் பணிபுரிந்தபின் வேலூருக்கும் பின்னர் மேகாலயாவிற்கும் பணிமாற்றம் செய்யப்பட்டார். அவர் மேகாலயாவிலிருந்த போது 1971ல் வங்காளதேச விடுதலைப் போர் மூண்டது. அப்போது பாஸ்கரன் தபால் தந்தித் துறையையும் பாதுகாப்புத் துறையையும் இணைக்கும் தனி அதிகாரியாக (Special Officer For War Efforts) நியமிக்கப்பட்டார். தபால் துறையில் பணிபுரிந்து கொண்டே திரைப்பட வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தபால் துறையில் படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டின் தலைமை தபால் அதிகாரியாக (Chief Postmaster General) ஓய்வு பெற்றார். தற்பொழுது தன் மனைவி திலகாவுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.[1][2]

திரைப்பட வரலாற்றாளர்

தொகு

1972ல் பாஸ்கரன் திரைப்பட வரலாற்றைப் பற்றிய ”சிவ தாண்டவம்” என்ற தனது முதல் கட்டுரையை கசடதபற இதழில் வெளியிட்டார். வங்காள மொழி இயக்குனர் சித்தானந்த தாஸ்குப்தாவின் டான்ஸ் ஆஃப் சிவா என்ற ஆவணப்படத்தைப் பற்றியது அந்தக் கட்டுரை. பின் அவரது நண்பரும் அமெரிக்க வரலாற்று ஆய்வாளருமான சார்லஸ் ஏ. ரயர்சன் அவரைத் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி ஆய்வு செய்யத் தூண்டினார். பாஸ்கரன், தமிழ்நாடு வரலாற்றுக் கழகம் கொடுத்த நல்கையின் துணையுடன் இரண்டாண்டுகள் பணியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, 1974ல் தன் ஆய்வைத் தொடங்கினார். திரைப்படங்களைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள 1975ல் திரைப்பட பகுப்பாய்வு வகுப்பொன்றில் சேர்ந்தார். அங்கு அவருக்குப் பாடம் கற்பித்த பேராசிரியர் பி.கே. நாயர் அவரை புனேயிலுள்ள தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகத்தின் மேலாண்மைக் குழுவில் நியமித்தார். இரண்டாண்டுகள் அங்கு பல பழைய திரைப்படங்களைப் பார்த்து ஆய்வுகளை மேற்கொண்டார். 1976ல் விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பியவுடன், கல்கத்தாவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்குக் கல்கத்தா திரைப்பட சங்கத்தில் உறுப்பினரானார்.[1][3]

இந்தியத் திரைப்படத் தணிக்கை முறை பற்றி அவர் எழுதிய கட்டுரையை 1977ம் ஆண்டு அலிகாரில் நடைபெற்ற இந்திய வரலாற்று பேராயத்தில் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. இக்கட்டுரையும் வேறு சிலவும் சேர்ந்து 1981ல் தி மெசேஜ் பியரர்ஸ் (The Message Bearers) என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தன. சென்னை மாகாணத்தில் பிரித்தானிய ஆட்சிக்குப் பெரிதாக எதிர்ப்பு இல்லை என்று அப்போது பரவலாக நிலவிய கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் இப்புத்தகம் அமைந்திருந்தது. அதுவரை பயன்படுத்தப் பட்டிராத பல தரவுகளையும், ஆதாரங்களையும் பயன்படுத்தி தேசிய இயக்கத்தில் தமிழ்த் திரைப்பட மற்றும் நாடகத் துறையினரின் பங்கினை விவரித்த இந்த நூல் தமிழ்த் திரைப்பட வரலாற்றுத் துறையில் முன்னோடித் தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. அவருடைய இரண்டாவது நூல், "பாம்பின் கண்" என்று பொருள்படும், தி ஐ ஆஃப் தி செர்பன்ட் (The Eye of the Serpent) 1996ல் வெளியானது. தமிழ்த் திரைப்படத் துறையைப் பற்றிய அறிமுக நூலான இதற்கு சிறந்த திரைப்படத்துறை புத்தகத்திற்கான தங்கத் தாமரை விருது வழங்கப்பட்டது.[1][3]

இவை தவிர ஆங்கிலத்திலும் தமிழிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல புத்தகங்களை பாஸ்கரன் எழுதியுள்ளார். அவரது கட்டுரைகள் ஆராய்ச்சி இதழ்களிலும் வெகுமக்கள் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. திரைப்படங்கள் பற்றி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் விரிவுரை ஆற்றியுள்ளார். பெங்களூரிலுள்ள நேஷனல் இன்ஸ்ட்டிடூயுட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (மேற்கல்விக்கான தேசிய கல்விக்கழகம்) என்ற ஆய்வுக்கழகத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2000ம் ஆண்டு கம்பன் கழகத்தின் கி.வா.ஜ பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 2001இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் (ஆன் ஆர்பர்) தமிழ்த் திரைப்படங்கள் பற்றி கற்பித்தார். 2003 ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளின் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார். 1998-2001 காலகட்டத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குனராகப் பணியாற்றினார். தற்பொழுது அந்நூலகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[3][4][5]

பாஸ்கரன் 2010ம் ஆண்டு வெளிவந்த அவள் பெயர் தமிழரசி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சூழலியல் ஆர்வலர்

தொகு

பாஸ்கரன் ஒரு சூழலியல் மற்றும் காட்டுயிர் ஆர்வலர். இவர் முன்னர் மதிப்புறு காட்டுயிர் பாதுகாவலராக இருந்துள்ளார். தற்போது உலகக் காட்டுயிர் நிதியத்தின் இந்தியக் கிளையின் (WWF - India) அறங்காவலர் குழுவில் இடம் பெற்றுள்ளார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தி டான்ஸ் ஆஃப் தி சாரஸ் (The Dance of the Sarus, சாரசின் நடனம்)என்னும் பெயரில் 1998இல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பாஸ்கரன் புகழ்பெற்ற விலங்கியலாளரான உல்லாஸ் காரந்தின் தி வே ஆஃப் தி டைகர் (The way of the Tiger) என்ற நூலை ”கானுறை வேங்கை” (2006) என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.[1]

கூற்றுக்கள்

தொகு

சூழலியல் பற்றி பாஸ்கரனின் சில கூற்றுகள்:

தமிழர்களைப் போல இயற்கையைப் போற்றியவர்களும் இல்லை...தமிழர்களைப் போல இயற்கையை மறந்தவர்களும் இல்லை

முன்னோர்கள் வளர்த்த தாவரங்களின் பெயர்களைக்கூட மறந்துவிட்டோம். அரணைக்கும் ஓணானுக்கும் வித்தியாசம் தெரியாமல் வளர்கிறார்கள் நம் பிள்ளைகள். பாட்டுப் பாடி தும்பிப் பிடிக்கத் தெரியாமல் வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் நம் குழந்தைகள்."[6]

எழுதியுள்ள நூல்கள்

தொகு

ஆங்கிலம்

தொகு
  • தி மெசேஜ் பியரர்ஸ் - The Message Bearers: The nationalist politics and the entertainment media in South India, 1880-1945, Chennai: Cre-A (1981).
  • தி ஐ ஆஃப் தி செர்பெண்ட் - The Eye of the Serpent: An introduction to Tamil cinema, Chennai: East West Books (1996)
  • தி டான்ஸ் ஆஃப் தி சாரஸ் - The Dance of the Sarus: Essays of a Wandering Naturalist, Oxford University Press (1999)
  • ஹிஸ்டரி துரூ தி லென்ஸ் - History through the Lens - Perspectives on South Indian Cinema, Hyderabad: Orient Blackswan (2009)
  • சிவாஜி கணேசன் - Sivaji Ganesan: Profile of an Icon, Wisdom Tree, Delhi (2009)
  • (தொகுப்பு) தி ஸ்பிரிட் ஆஃப் தி பிளாக் பக் - (ed.) The Spirit of the Black Buck, Penguin (2010)

தமிழ்

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Interview with Theodore Baskaran". Kalachuvadu Magazine. May 2007. Archived from the original on 2010-01-04. பார்க்கப்பட்ட நாள் 2010-10-07.
  2. "Verse and versatility". த இந்து. 20 December 2003. Archived from the original on 31 ஜனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 3.2 Muthukumaraswamy, P.314-5
  4. "An archive for Tamil studies". Frontline (magazine). 19 August 2000. Archived from the original on 25 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2010.
  5. Roja Muthiah Research Library Annual Report (2008-09)
  6. தொகுப்பு த. செ. ஞானவேல். (2006). தமிழ் மண்ணே வணக்கம். சென்னை: விகடன் பிரசுரம்.

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._தியடோர்_பாஸ்கரன்&oldid=3925002" இலிருந்து மீள்விக்கப்பட்டது