விடைக்கொடி

(நந்திக்கொடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விடைக்கொடி அல்லது நந்திக்கொடி என்பது உலகளாவிய சைவர்களின் உத்தியோகபூர்வமான கொடியாக ஏற்றுக்கொள்ளபட்ட கொடி ஆகும்.[1] இலங்கையிலும், புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகளிலும், இந்துக்களின் சமயம் சார்ந்த நிகழ்வுகள் கொண்டாடப்படும் போதும், இக்கொடியை ஏற்றுவது வழக்கமாக இருக்கின்றது.

விடைக்கொடி, சைவக்கொடி.

நந்திக்கொடி

தொகு

சைவர்களின் முழுமுதல் இறைவனான சிவபிரானின் கொடியாகவும், ஊர்தியாகவும், விளங்குவது தர்மத்தின் வடிவான இடபமே என்பது அவர்தம் நம்பிக்கை. வெண்ணிறக் காளையின் சின்னம் பொறித்த இடபக்கொடியை ஏந்தியவரான சிவனை, "ரிஷபத்வஜ" என்று வடமொழி இலக்கியங்கள் துதிக்கின்றன. சிவனது காளைக்கொடியைக் குறிக்கும் வகையில், ஆனேறு, விடை, சே, இடபம், பெற்றம் முதலிய பெயர்களால் அவனது கொடியைப் புகழ்ந்து, தமிழ் இலக்கியங்களும், திருமுறைகளும் பாடுவதைக் காணலாம். புறநானூறு "வால்வெள்ளேறே சிறந்த சீர்கெழு கொடியும்" (கடவுள் வாழ்த்து) என்றும், அப்பர் "விடைக்கொடியான்" (தி.4:4:6) என்றும், சம்பந்தர், "ஏறார் கொடி எம் இறை" (தி.2:35:05) என்றும், மணிவாசகர், "சேவார் வெல்கொடிச்சிவன்" (போற்றித்திருவகவல்.4) என்றும் பாடுவது, ஓரிரு சான்றுகளாகும்.


தமிழகத்தை ஆண்ட பல்லவர்களின் கொடியாக விளங்கியதும் இந்த விடைக்கொடியே ஆகும். யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் தங்கள் சின்னமாக விடைக்கொடியையே பயன்படுத்தியுள்ளனர்.இலங்கையின் சிங்கள மன்னருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவனும், வீரசைவனுமான கலிங்க மாகன், நந்திக்கொடியையே தன் கொடியாகப் பயன்படுத்தினான் என்பது தொன்மம்.[2]

வரலாறு

தொகு
 
கோபுர உச்சியில் நந்திக்கொடி அசைந்தாடும் கொழும்பு முருகன் கோவில்.

தற்போது உலகெங்கும் சைவக்கொடியாகப் பட்டொளி வீசும் விடைக்கொடியானது, இலங்கையைச் சேர்ந்த சைவப்பிரமுகர் விடைக்கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா அவர்களின் சிந்தனையில் விளைந்த பயன் ஆகும். விடைக்கொடி சமயக்கொடியாக முன்வைக்கப்பட்ட பின்புலம் பற்றி அன்னார் வருமாறு கூறுகின்றார்:

இதனால் ஏற்பட்ட ஆதங்கமே, சைவர்களுக்குரிய விடைக்கொடியைப் பரவலாக்க அன்னார் எடுத்த முயற்சி ஆகும். சி.தனபாலா அவர்களின் ஆலோசனைக்கமைய, தமிழகக் கலைஞர் மதுரை இரவீந்திர சாஸ்திரி அவர்களால் ஆகமவிதிப்படி, விடைக்கொடி வடிவமைக்கப்பட்டது. இது முதன்முதலாக இரத்மலானை இந்துக் கல்லூரியில் 1998இல் ஏற்றப்பட்டது.[4]இலங்கையின் சைவ அமைப்புக்களின் ஒன்றியமாக விளங்கும், அகில இலங்கை இந்து மாமன்றம், உலகெங்கும் பரந்துவாழும் எல்லாச் சைவர்களும் நந்திக்கொடியையே தமது சமயக்கொடியாக ஏற்றுக்கொண்டு, சமய நிகழ்வுகளில் பயன்படுத்தவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

அடுத்தடுத்த ஆண்டுகளில், தருமபுரி ஆதீன பீடாதிபதி சீர்வளர்சீர் சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீமத் மௌன குமாரசாமித் தம்பிரான், பேரூர் ஆதீனம் கயிலைக்குருமணி குரு மகாசன்னிதாம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார்,குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருவாவடுதுறை ஆதீனம் காசி விஸ்வநாதன், அமெரிக்க ஹவாய் ஆதீன இரண்டாம் பீடாதிபதி போதிநாத வேலன்சாமி போன்றோருக்கு விடைக்கொடி வழங்கப்பட்டதுடன், குறித்த ஆதீனங்களும் அதை உலக சைவக்கொடியாக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டன. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், இலங்கை, தமிழகம் மாத்திரமன்றி, தென்னாபிரிக்கா, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் விடைக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதுடன்,அங்கங்கு அமைந்திருந்த சமய அமைப்புக்கள்,அதைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றன.[3] [4]

பயன்பாடு

தொகு

சைவக்கொடியிலுள்ள பெற்றத்தின் வெண்ணிறம், தூய்மையையும், அதன் பின்னணியாக விளங்கும் செந்நிறம், சிவம் - சைவம் - செம்மை என்பவற்றையும் குறிப்பிடுகின்றன. சைவன் ஒருவனுக்கு இருக்கவேண்டிய தன்னலமின்மை, இறைபக்தி, அமைதி என்பனவற்றை, இடபத்தின் திருக்கோலம் விளக்குகின்றது.[5]

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட சமயக்கொடி என்பதால், அரசு விழாக்களில் சைவரைப் பிரதிநிதித்துவம் செய்ய, விடைக்கொடியே ஏற்றப்படுகின்றது. புலம்பெயர் தமிழர் வதியும் நாடுகளிலும், சமய நிகழ்வுகள் இடம்பெறும் போதெல்லாம், விடைக்கொடி ஏற்றப்படுவது வழமை. உலக சைவப் பேரவையின் அனுசரணையில், சிவனிரவு கொண்டாடப்படும் வாரம் முழுவதும், இலங்கையில் கொடிவாரம் அனுட்டிக்கப்படுவதுடன், சைவர் யாவரும் விடைக்கொடி தரித்து, அது தொடர்பான விழிப்பூட்டலிலும் ஈடுபடுகின்றனர்.[6]

அடிக்குறிப்புகள்

தொகு
  1. DBS.Jeyaraj,2013
  2. வாகரை வாணன், 2004, பப.1 - 10
  3. 3.0 3.1 தனபாலா.சி, 2008, ப.21,22
  4. 4.0 4.1 தனபாலா.சி, 2013, ப.12
  5. Hinduism Today, 2008
  6. தமிழ்மிரர் செய்திகள், 2016

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடைக்கொடி&oldid=3703038" இலிருந்து மீள்விக்கப்பட்டது