வெ. இராமலிங்கம் பிள்ளை

காந்தியவாதி
(நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (Venkatarama Ramalingam Pillai)(அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் அகிம்சை பற்றியும் இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுகிறார்.

நாமக்கல் கவிஞர்
வெ. இராமலிங்கம் பிள்ளை
பிறப்புவெ. இராமலிங்கம்
(1888-10-19)அக்டோபர் 19, 1888
மோகனூர், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு
இறப்புஆகத்து 24, 1972(1972-08-24) (அகவை 83)
தேசியம்இந்தியர்,
மற்ற பெயர்கள்காந்தியக் கவிஞர்
அறியப்படுவதுகவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள்மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள் முதலியன.
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்
சமயம்இந்து சமயம்
பெற்றோர்வெங்கடராமன் பிள்ளை
அம்மணியம்மாள்
வாழ்க்கைத்
துணை
முத்தம்மாள்
சௌந்தரம்மாள்[1]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன் பிள்ளை, அம்மணியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை மோகனூரில் காவல்துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது தாயார் பக்தியுள்ள குடும்ப பெண்மணி ஆவார். இவர் தங்கள் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை ஆவார். நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் பள்ளி கல்வி பயின்றார். 1909இல் இளங்கலை கல்வியினை திருச்சிராப்பள்ளியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் பயின்றார். இவர் ஆரம்பகாலத்தில் நாமக்கல் வட்டாச்சியர் அலுவலகத்தில் எழுதாளராகவும், பின்னர் தொடக்க பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரசு தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரசு தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1930இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூசண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.

‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட இவரின் நினைவாக இவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவரின் மலைக்கள்ளன் நாவல் எம். ஜி. ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.

கவிஞரின் நாட்டுப்பற்று

தொகு

முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.

’கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’

என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.

புகழ்பெற்ற மேற்கோள்கள்

தொகு
  • 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'
  • தமிழன் என்றோர் இனமுன்று
தனியே அதற்கோர் குணமுண்டு'
  • 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'
  • 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

மொழிப்பற்று

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ் அன்னைக்குத் திருப்பணி செய்வோமே
தரணிக்கே ஓரணி செய்வோமே
அமிழ்தம் தமிழ் மொழி என்றாரே
அப்பெயர் குறைவது நன்றாமோ

நாமக்கல்லாரின் படைப்புகள்

தொகு
  • இசை நாவல்கள்-3
  • கட்டுரைகள்-12
  • தன்வரலாறு-1
  • புதினங்கள்-5
  • இலக்கியத் திறனாய்வுகள்-7
  • கவிதைத் தொகுப்புகள்-10
  • நாடகம்-2
  • உரை-2
  • மொழிபெயர்ப்பு-4.
  1. அவளும் அவனும்;1944; தமிழ்ப்பண்ணை, சென்னை; பக்.vi+370.
  2. அரவணை சுந்தரம் (நாடகம்)
  3. இசைத்தமிழ்
  4. என் கதை (சுயசரிதம்)
  5. கம்பன் கவிதை இன்பக்குவியல்
  6. கம்பனும் வால்மீகியும்
  7. கலையின்பம்; கவிஞர் பதிப்பகம்,241 ராஜவீதி, கோயமுத்தூர்.
  8. கவிஞன் குரல்
  9. கவிதாஞ்சலி; 1957; கவிஞர் பதிப்பகம், ராஜவீதி, கோயம்புத்தூர் [2]
  10. கற்பகவல்லி (புதினம்)
  11. காதல் திருமணம் (புதினம்); கவிஞர் பதிப்பகம், ராஜவீதி, கோயமுத்தூர்.
  12. காணாமல் போன கல்யாணப் பெண் (புதினம்)
  13. காந்தி அஞ்சலி; கவிஞர் பதிப்பகம், ராஜவீதி, கோயமுத்தூர்.
  14. காந்திய அரசியல்
  15. கீர்த்தனைகள்
  16. சங்கிலிக்குறவன்; 1954 திசம்பர்; ராமன் பதிப்பகம், சென்னை. (சிறுகதை)
  17. சங்கொலி
  18. தமிழன் இதயம்
  19. தமிழ்மொழியும் தமிழரசும்
  20. தமிழ்த்தேன்
  21. தாயார் கொடுத்த தனம்
  22. திருக்குறளும் பரிமேலழகரும்
  23. திருவள்ளுவர் திடுக்கிடுவார்; 1959 ஆகத்து; இன்பநிலையம், சென்னை.
  24. திருக்குறள் கருத்துரை
  25. திருக்குறள் புது உரை; கவிஞர் பதிப்பகம், ராஜவீதி, கோயமுத்தூர்.
  26. தேசபக்தர் மூவர்
  27. தேமதுரத்தமிழோசை; முதற்பதிப்பு 1957 சூன்; கவிஞர் பதிப்பகம், ராஜவீதி, கோயமுத்தூர். (தேமதுரத்தமிழோசை, தமிழ்ப்பற்று, இனவேற்றுமை, தமிழிந்தொன்மை, தென்மொழியும் வடமொழியும், தமிழ்மரபு, தொல்காப்பியம், 'தமிழ்' என்ற பெயர் ஆகிய கட்டுரைகள் அடங்கிய தொகுதி); 132 பக்கங்கள்
  28. நாமக்கல் கவிஞர் பாடல்கள்; தொகுப்பாசிரியர் புலவர் தணிகை உலகநாதன்; தி லிட்டில் பிளவர் கம்பெனி, தி.நகர், சென்னை - 17; 306 பாடல்களைக்கொண்ட தொகுதி), 506 பக்கங்கள்
  29. பிரார்த்தனை
  30. மரகதவல்லி (புதினம்)
  31. மலர்ந்த பூக்கள்; கவிஞர் பதிப்பகம்,241 ராஜவீதி, கோயமுத்தூர்.
  32. மலைக்கள்ளன் (புதினம்) பழனியப்பா பிரதர்ஸ், 4 வெங்கடேச நாய்க்கன் தெரு, சென்னை 5
  33. மாமன்மகள் (நாடகம்)
  34. வள்ளுவரின் உள்ளம்

மத்திய அரசும் , மாநில அரசும் செய்த சிறப்பு

தொகு

கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.

நினைவு இல்லம்

தொகு

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன.

மேலும் காண்க

தொகு

காட்சிக்கூடம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ் அறிஞர்கள் அறிவோம்: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை. தினமணி. 5 சனவரி 2014.
  2. கல்கி, 1957-02-10, படித்துப் பாருங்கள், பக்.78

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._இராமலிங்கம்_பிள்ளை&oldid=4145070" இலிருந்து மீள்விக்கப்பட்டது