புளோரன்சு நைட்டிங்கேல்

இங்கிலாந்து சமூக செயற்பாட்டாளர், புள்ளியியலாளர் மற்றும் நவீன தாதியியலின் நிறுவனர்

புளோரன்சு நைட்டிங்கேல் (Florence Nightingale, மே 12, 1820ஆகஸ்ட் 13, 1910) நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி. போரில் காயப்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் தொடங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.

புளோரன்சு நைட்டிங்கேல்
பிறப்பு12-5-1820
புளோரன்ஸ், தசுக்கனிப் பேரிடம்
இறப்பு13-8-1910
பார்க்கு ஒழுங்கை, இலண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம்இங்கிலாந்து
மற்ற பெயர்கள்விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை
கல்விமருத்துவம்
பணிசெவிலியர்
அறியப்படுவதுநவீன செவிலியத் துறையின் முன்னோடி
கையொப்பம்

வாழ்க்கைக் குறிப்புகள்

தொகு

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

இவர் பிரித்தானியச் செல்வச் செழிப்பான உயர்குடிக் குடும்பமொன்றில் இத்தாலி, புளோரன்சு நகரில் பிறந்தார்.[1] இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் (1889-1880), தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்)(1794–1875). வில்லியம் நைட்டிங்கேலின் இயற்பெயர் வில்லியன் எட்வார்ட் ஷோர். இவரது தாயாரின் மாமனான பீட்டர் நைட்டிங்கேல் என்பவருடைய மரண சாசனத்தின் மூலம் அவருடைய சொத்துக்கள் வில்லியத்துக்குச் சேர்ந்தன. அத்துடன், வில்லியம், நைட்டிங்கேல் என்னும் பெயரையும் நைட்டிங்கேல் குடும்பச் சின்னங்களையும் கூட அவர் ஏற்றுக்கொண்டு வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் ஆனார். புளோரன்சின் தாய்வழிப் பாட்டனான வில்லியம் சிமித் [2] )அடிமை முறை ஒழிப்புக்காக வாதாடியவராவார்.

 
எம்ப்லீ பார்க், புளோரன்ஸ் நைட்டிங்கேலின் குடும்ப வசிப்பிடம், இப்பொழுது ஒரு பாடசாலையாக உள்ளது.

கிறிஸ்தவர் என்ற முறையில் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாக தாதியர் சேவையை அவர் உணர்ந்தார். 1837 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின், குறிப்பாகத் தாயாரின் எதிர்ப்புக்கும், துன்பத்துக்கும் மத்தியில், தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் என்னும் தனது முடிவை புளோரன்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார். இவ் விடயத்தில் தொடர்ந்து தாதியர் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டமை அச்சேவையில் இவரது பெருவிருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதாகவும் அடையாளம் காணப்படுகிறது. அக் காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். தாதியர் சமையலாட்களாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது.

புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில், இலண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.

1846 ஆம் ஆண்டில் ஜேர்மனி பயணத்தில் கண்ட கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் கவனிப்பும் மருத்துவச் சேவையும் இவரை மிகவும் கவர்ந்தன.

தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதியுடனான தனது உறவை முறித்துக் கொண்டார். பின்னாளில், சிறந்த அரசியல் வாதியும், போர்ச் செயலராக்ப் பணியாற்றியவருமான சிட்னி ஹேர்பேர்ட் என்பவரை ரோமில் சந்தித்து அவர்பால் ஈர்க்கப்பட்டார். சிட்னி ஹேர்பேர்ட் ஏற்கனவே மணமானவர். எனினும் இருவரும் வாழ்நாள் முழுதும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கிரீமியாவில் நைட்டிங்கேல் ஆற்றிய பணிகளுக்கும், பொதுவாக அவரது துறையில் ஆற்றிய பணிகளுக்கும், ஹேர்பேட் வசதிகள் செய்து கொடுத்ததுடன் ஊக்கமும் கொடுத்து வந்தார். புளோரன்சும் ஹேர்பேட்டின் அரசியல் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.

1851 ஆம் ஆண்டு 4 மாதங்கள் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் பெற்ற பயிற்சி மூலம் தாதியியல் பால் இவரது கவனம் தீவிரமடைந்தது.

கிரிமியன் போர்

தொகு

ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ், ஐக்கிய இராச்சிய மற்றும் ஒட்டோமான் பேரசுப் படைக் கூட்டணிக்குமிடையே 18541856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார்.[3]

கிரீமியப் போரில் காயமடைந்த வீரர்களுடைய நிலைமை மோசமாக இருப்பது குறித்த அறிக்கைகள் போர் முனையில் இருந்து பிரித்தானியாவுக்குக் கசிந்தபோது புளோரன்ஸ் அது குறித்துத் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது சிற்றன்னை உட்பட அவரால் பயிற்றுவிக்கப்பட்ட 38 தாதியரும் துருக்கியில் இருந்த ஐக்கிய இராச்சியத்தின் முதன்மை முகாமிற்கு நவம்பர் 1854ம் ஆண்டு சென்றடைந்தனர்.[4] நவம்பர் தொடக்கத்தில் நைட்டிங்கேல் ஸ்கட்டாரியில் இருந்த செலிமியே முகாமுக்குச் சென்றார். அங்கே நிர்வாக அலட்சியத்தினால், போரிற் காயமுற்ற வீரர்கள் அதிக பணியால் களைத்திருந்த மருத்துவப் பணியாளரால் சரிவரக் கவனிக்கப் படாமையைக் கண்டார்கள். மருந்துத் தட்டுப்பாடும் சுகாதாரக் குறைவும் உயிராபத்து விளைவுக்கும் தொற்றுக்களும் அம்முகாமில் காணப்பட்டன. நோயாளருக்கான உணவைத் தயாரிப்பதற்கான வசதிகளும் இருக்கவில்லை.

புளோரன்ஸ் சூழல் தூய்மையாக இல்லாததாலேயே நோய்கள் பரவுகின்றன என்னும் கொள்கையுடையவர். அதன் சார்பில் தீவிரமாக வாதடியும் வந்தார். இதனால், புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது தாதியர் குழுவும்முகாமின் மருத்துவமனையையும், கருவிகளையும் முழுமையாகச் சுத்தப்படுத்தியதுடன், நோயாளர் கவனிப்பையும் ஒழுங்குபடுத்தினர்.[5] எனினும் இவர் காலத்தில் ஸ்கட்டாரியில், இறப்பு வீதம் குறியவில்லை. மாறாக, அதிகரித்துவந்தது.[6] அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது அங்கேயே கூடுதலான இறப்புக்கள் நிகழ்ந்தன. அவருடைய முதல் மாரிகாலத்தின்போது 4,077 வீரர்கள் அங்கே இறந்தனர். போர்க் காயங்களினால் இறந்ததிலும் 10 மடங்கு கூடுதலானோர், டைபாய்ட், வாந்திபேதி (cholera), வயிற்றோட்டம் (dysentery) ஆகிய நோய்களுக்குப் பலியாயினர். அளவுக்கதிகமான இட நெருக்கடி, குறைபாடுள்ள கழிவு வாய்க்கால்கள், காற்றோட்டம் இன்மை ஆகியவற்றால், முகாமின் தற்காலிக மருத்துவ மனை நோயாளருக்கு உயிராபத்தை விளைவித்தது. இந் நிலை காரணமாக, 1855 ஆம் ஆண்டில் ஒரு சுகாதாரக் குழு பிரித்தானிய அரசினால் ஸ்கட்டாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது புளோரன்சும் அவரது தாதியரும் வந்து 6 மாதத்துக்குப் பின்னராகும். இவர்கள் வாய்க்கால்களைச் சுத்தப்படுத்தி, காற்றோட்டத்தையும் மேம்படுத்தினர். இதனால் இறப்புவீதம் பெருமளவு குறைந்தது.[6][7]

மருந்துத் தட்டுப்பாடும் குறையூட்டமும் அதிக பணியுமே நோயாளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென புளோரன்ஸ் நைட்டிங்கேல் கருதினார். படைவீரரின் உடல்நிலை குறித்து அரசாணைக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் போது வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திலிருப்பதுவும் முக்கிய காரணமெனக் கருத ஆரம்பித்தார். இந்தப் போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதாரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப்பதில் பெரும்பங்கை வகித்தது.

பிரித்தானியாவில் இருந்த இராணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும் சூழலையும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார். மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புகள் (Notes on Hospitals), அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட தாதியர்பணி பற்றிய குறிப்புகள் (Notes on Nursing)[8], "உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்" (Notes on Matters Affecting the Health), "பிரித்தானிய இரணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும் (Efficiency and Hospital Administration of the British Army) என்பவை நைட்டிங்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில.[8][9]

நாடு திரும்பல்

தொகு

போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக பிபிசியினால் கருதப்பட்டார். அவர் சற்று நாட்களில் நோய்வாய்ப்பட நேர்ந்தது. போரில் அவரது பணியின் மூலம் ஏற்பட்ட தகைவே(மனவுளைச்சல்) அதற்கான மூலகாரணியென எண்ணப்படுகிறது.

விக்டோரிய அரசியின் வேண்டுகோளை ஏற்று, படைவீரர்களின் உடல்நலன் குறித்த அரசு ஆணைக்குழுவை அமைப்பதிலும் அவ்வாணைக்குழுவிற்குத் தேவையான அறிக்கைகள் ஆயத்தப்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டார். பெண்ணாகையால் இவ்வாணைக்குழுவிற்குத் தலைமை தாங்க இவருக்கு அனுமதி இருக்கவில்லை.[10][11] சிட்னி ஹேர்பேர்ட் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அறிக்கையில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் முன்னின்று செயலாற்றினார்.[12] She often referred to herself in the masculine, as for example "a man of action" and "a man of business".[13] மேற்குறித்த ஆணைக்குழுவின் செயற்பாட்டின் மூலம் படை வீரர்களது மருத்துவ கவனிப்பு மாற்றம் பெற்றதுடன் இராணுவத்தினருக்கான மருத்துவப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது.

பிற்கால வாழ்க்கையும் பணிகளும்

தொகு
 
ஹம்ப்ஷயரில் உள்ள சென். மார்கிரட் தேவாலய வளவில் அமைந்துள்ள புளோரன்ஸ் நைட்டிங்கேலின் சமாதி.

துருக்கியிலிருந்த போது நவம்பர் 29 1855 அன்று இவரது பணியினைக் கௌரவிக்கும் முகமாக நடந்த கூட்டத்தில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது. நன்கொடைகள் குவிந்தன. இந்நிதியத்தின் பணத்தில் £45000களைக் கொண்டு புனித தோமையர் மருத்துவமனையில் யூலை 9 1860 அன்று நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக புளோரன்ஸ் நைட்டிங்கேல் தாதியிய மற்றும் செவிலியர் பயிற்சிக்கூடம் என அறியப்படுகிறது. இவரெழுதிய தாதியியற் குறிப்புகள் என்னும் 139 பக்கங்களுடைய புத்தகம், நைட்டிங்கேல் பயிற்சிக்கூடத்திலும் ஏனைய தாதியர் பயிற்சிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அமைந்தது. தாதியியலுக்கான ஒரு நல்ல அறிமுகமாகவும் இந்நூல் கருதப்படுகிறது.

தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் இவர் தோற்றுவித்தார். 1882 ஆம் ஆண்டளவில் நைட்டிங்கேல் தாதியர் பரவலாகச் சேவை புரிந்தனர். புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1883 இல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார். 1907 இல் ஓர்டர் ஒவ் மெரிட் எனும் விருதையும் இவர் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி இவராவார்.

குரோனிக் ஃபட்டீக் சின்ட்ரோம் (Chronic Fatigue Sydnrome)(அதீத களைப்பு ஏற்படல்) எனும் நோய் இவருக்கு இருந்ததாக கருதப்படுகிறது. இவரது பிறந்த நாள் இந்நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நாளாக உள்ளது. 1896 ஆம் ஆண்டளவிலிருந்து படுத்த படுக்கையானார். 1910, ஆகஸ்ட் 13 ஆம் நாள் தனது 90 ஆம் வயதில் மிகவும் அமைதியாக தனது அறையில் மரணமெய்தினார்.[14] Park Lane.[15] இவர் இறந்த போது வெஸ்ட்மின்ஸ்டர் அபியில் புதைக்க அரசு முன்வந்த போதும், அவரது உறவினர்களால் அது மறுக்கப்பட்டது.[16][17] புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உடல் ஈஸ்ட் வெலோவிலுள்ள புனித மார்கரட் தேவாலய இடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளது.[16][17]

தரவியல் பங்களிப்புக்கள்

தொகு

சிறுவயதில் கணிதத்தில் திறமையுள்ளவராயிருந்த இவர் தனது தந்தையாரின் கற்பித்தலில் அப்பாடத்தில் வல்லவாரானார். குறிப்பாகத் தரவியலில் ஆர்வமுள்ளவராக இருந்த இவர், தனது ஆய்வறிக்கைகளில் தரவியலை பெரியளவில் பயன்படுத்தினார்.

தரவுகளை வரைபடமாக்கி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். பலவிதமான வரைபுகளை உருவாக்கி அவற்றின் மூலம் தரவுகளை வகைப்படுத்தி அறிக்கைகளில் பயன்படுத்தினார்.

இந்தியாவின் கிராமப்புறங்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட புளோரன்ஸ் நைட்டிங்கேல் சீர்திருத்தப்பட்ட மருத்துவ மற்றும் கிராம கவனிப்புச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கியமானவராய் இருந்தார்.

1858 இல் பதவியேற்றதன் மூல அரச தரவியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியானார்.

இலக்கியத்துக்கும் பெண்ணியக்கத்திற்குமான பங்களிப்புக்கள்

தொகு

மருத்துவ மற்றும் தாதியியற் துறைகளிலேயே இவர் புழ் பெற்றிருந்தாலும், இங்கிலாந்தின் பெண்ணியத்தில் முக்கியமான ஒருவருமாவார்.

1850-1852காலப்பகுதியில் சுயபரிசோதனை, உயர்குடி மற்றும் தன் குடும்பப் பெண்களின் வாழ்க்கை பற்றி யோசித்த புளோரன்ஸ் நைட்டிங்கேல், தனது சிந்தனைகளை "சமய மெய்யியல் தேடலுடையவர்களுக்கான சிந்தனைகள்" என்ற நூலாக எழுதினார். இந்நூல் மூன்று பாகங்களுடையது. மூன்றும் சேர்த்து இந்நூல் வெளியிடப்படவில்லையாயினும் 'கசான்ட்ரா' எனும் ஒரு பகுதி ரே ஸ்ட்ரக்கி என்பவரால் 1928ம் ஆண்டு வெளியிடப்பட்டு த காஸ் (The Cause) எனும் பெண்ணிய வரலாற்று நூலில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது.

கசான்ட்ரா, கல்வி கற்றிருந்த போதும் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் தாய் மற்றும் அக்கா நடத்திய சோர்வான வாழ்க்கை போன்று பெண்கள் அதீத பெண்மையால் கையாலாகாதவர்களாய்ப் ஆக்கப்படுவதைக் கண்டிக்கிறது.சமூக சேவைக்காக அவர்களது வசதியான வாழ்வை புளோரன்ஸ் நிராகரித்தார். இவ்வாக்கம் தனது யோசனைகள் மக்களால் உள்வாங்கப்படாது போய்விடுமோ என்ற புளோரன்சின் கவலையைப் பிரதிபலிக்கிறது. கசான்ட்ரா என்பவள் அப்பலோவின் பெண்பூசாரியாவாள். தெய்வீக தீர்க்கதரிசனம் பெறுபவளாயினும் இவளது எச்சரிக்கைகள் கணக்கிலெடுக்கப்படுவதில்லை.

சாதனையும் நினைவு கூரலும்

தொகு
 
இளம் வயதில் புளோரன்ஸ் நைட்டிங்கேல்

பராமரிப்பு, செயலில் கவனம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை என்பவற்றைக் கடைப்பிடித்ததன் மூலம் அனைத்துத் தாதியர்க்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

தரவியல் பயன்பாட்டில் இவர் தனது காலத்தினை விட முற்போக்கான சிந்தனை மற்றும் செயற்பாடுகள் உடையவராயிருந்தார்.

நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிக்கூடத்தின் சேவை இன்றும் தொடர்கிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம் ஒன்று லண்டனிலும் இன்னுமொன்று இவரது வீடான கிளெய்டன் ஹவுசிலும் உள்ளன.

உலகத் தாதியர் தினம் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகிறது.

கே எல் ஏம் (KLM) விமான நிறுவனம் தங்கள் எம் டி (MD)-11 விமானமொன்றிற்கு புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரை இட்டிருக்கிறது.

இஸ்தான்புல்லில் உள்ள மூன்று வைத்தியசாலைகள் இவர் பெயரைக் கொண்டுள்ளன.

ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெல்லி மருத்துவ நிலையம் (இத்தாலியின் முதல் பல்கலைக்கழகஞ் சார் மருத்துவமனை)தாதியியலில் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக தாதியருக்கு உதவும் படுக்கையருகே வைக்கும் கம்பியில்லா இணைப்புக் கொண்ட கணினியொன்றிற்கு 'பெட்சைட் புளோரன்ஸ்' (bedside Florence) எனப் பெயரிட்டுள்ளது.

புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரைத் தாங்கியுள்ள பல நிறுவனங்கள் தாதியியல் சார்ந்தவையாயினும், கனடாவிலுள்ள நைட்டிங்கேல் ஆராய்ச்சி மையம் புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு இருந்ததாக நம்பப்படும் அதீத களைப்பு ஏற்படல் நோய் (Chronic Fatigue Sydnrome) பற்றி ஆராய்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Florence Nightingale's birthplace with photo of commemorative plaque
  2. "Pedigree of Shore of Sheffield, Meersbrook, Norton and Tapton". Rotherham Web. பார்க்கப்பட்ட நாள் 2012-05-17.
  3. Gill, CJ; Gill, GC; Gillian C. Gill (Jun 2005). "Nightingale in Scutari: Her Legacy Reexamined". Clinical Infectious Diseases 40 (12): 1799–1805. doi:10.1086/430380. பன்னாட்டுத் தர தொடர் எண்:1058-4838. பப்மெட்:15909269. 
  4. Gill, Christopher J.; Gillian C. Gill (2005). "Nightingale in Scutari: Her Legacy Reexamined". Clinical Infectious Diseases 40: 1799–1805. doi:10.1086/430380. http://www.journals.uchicago.edu/doi/abs/10.1086/430380. பார்த்த நாள்: 2007-10-07. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. Florence Nightingale, Avenging Angel by Hugh Small (Constable 1998)
  6. 6.0 6.1 "Report on Medical Care". British National Archives (WO 33/1 ff.119, 124, 146–7). Dated 1855-02-23.
  7. Nightingale, Florence (1999-08). Florence Nightingale: Measuring Hospital Care Outcomes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86688-559-5. பார்க்கப்பட்ட நாள் 2010-03-13. {{cite book}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  8. 8.0 8.1 Nightingale, Florence (1974. First published 1859). "Introduction by Joan Quixley". In ... (ed.). Notes on Nursing: What it is and what it is not. Blackie & Son Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-397-55007-3. {{cite book}}: |editor= has numeric name (help); Check date values in: |year= (help)
  9. Nightingale, Florence (1974. First published 1859). "Preface". In ... (ed.). Notes on Nursing: What it is and what it is not. Glasgow & London: Blackie & Son Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-216-89974-5. {{cite book}}: |editor= has numeric name (help); Check date values in: |year= (help); Unknown parameter |isbn-status= ignored (help)
  10. In an 1861 letter, Nightingale wrote "Women have no sympathy. […] Women crave for being loved, not for loving. They scream out at you for sympathy all day long, they are incapable of giving any in return, for they cannot remember your affairs long enough to do so. … They cannot state a fact accurately to another, nor can that other attend to it accurately enough for it to become information.".
  11. In the same 1861 letter she wrote, "It makes me mad, the Women's Rights talk about 'the want of a field' for them -- when I would gladly give $500 a year for a Woman secretary. And two English Lady superintendents have told me the same thing. And we can't get one..."
  12. Cook, Sir Edward Tyas (1914). The Life of Florence Nightingale: 1862–1910. http://books.google.com/?id=totpAAAAMAAJ&pg=PA15&lpg=PA15&dq=They+scream+out+at+you+for+sympathy+all+day+long#v=onepage&q=iota&f=false. 
  13. Stark, Myra. "Florence Nightingale's Cassandra". The Feminist Press, 1979, p.17.
  14. வார்ப்புரு:Openplaque
  15. "Miss Nightingale Dies, Aged Ninety". The New York Times. 1910-08-15. http://www.nytimes.com/learning/general/onthisday/bday/0512.html. பார்த்த நாள்: 2007-07-21. "Florence Nightingale, the famous nurse of the Crimean war, and the only woman who ever received the Order of Merit, died yesterday afternoon at her London home. Although she had been an invalid for a long time, rarely leaving her room, where she passed the time in a half-recumbent position, and was under the constant care of a physician, her death was somewhat unexpected. A week ago she was quite sick, but then improved, and on Friday was cheerful. During that night alarming symptoms developed, and she gradually sank until 2 o'clock Saturday afternoon, when the end came." 
  16. 16.0 16.1 http://www.countryjoe.com/nightingale/joe_grave.jpg
  17. 17.0 17.1 "Florence Nightingale: The Grave at East Wellow". Countryjoe.com. பார்க்கப்பட்ட நாள் 2010-03-13.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரன்சு_நைட்டிங்கேல்&oldid=4176265" இலிருந்து மீள்விக்கப்பட்டது