பெல்டா

மலேசிய கூட்டரசு நில மேம்பாட்டு நிறுவனம்

பெல்டா அல்லது மலேசிய கூட்டரசு நில மேம்பாட்டு நிறுவனம் (மலாய்: Lembaga Kemajuan Tanah Persekutuan (LKTP); ஆங்கிலம்: Federal Land Development Authority) (FELDA); என்பது மலேசியப் பிரதமர் துறையின் (Prime Minister Department) கீழ் செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும். 1956-ஆம் ஆண்டு சூலை மாதம்; மலேசிய நிலம் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது.[1]

மலேசிய கூட்டரசு நில மேம்பாட்டு நிறுவனம்
Federal Land Development Authority
Lembaga Kemajuan Tanah Persekutuan
தற்போதைய பெல்டா சின்னம்

கோலாலம்பூர் பெல்டா கோபுரம்
துறை மேலோட்டம்
அமைப்பு6 சூலை 1956; 68 ஆண்டுகள் முன்னர் (1956-07-06)
ஆட்சி எல்லை மலேசிய அரசாங்கம்
தலைமையகம்Felda Tower, Platinum Park, No. 11, Persiaran KLCC, 50088 கோலாலம்பூர், மலேசியா.
அமைப்பு தலைமைகள்
மூல அமைப்புமலேசியப் பிரதமர் துறை
வலைத்தளம்www.felda.gov.my

மலேசியாவின் கிராமப்புற ஏழை மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில், நில மேம்பாட்டு வனப்பகுதிகளில், புதிதாக குடி அமர்த்துவதை முதன்மையாகக் கொண்ட ஓர் அரசு நிறுவனமாக இந்த அமைப்பு தொடக்கப்பட்டது. இருப்பினும் தற்போது இந்த நிறுவனம் பணப்பயிர்களுக்காக சிறு சிறு வேளாண் பண்ணைகளைத் திறப்பதில் மிகையாகக் கவனம் செலுத்துகிறது.

அத்துடன் 1990-ஆம் ஆண்டுகளில் இருந்து, பெல்டா நிறுவனம் புதிய குடியேற்றங்களைஉருவாக்கவில்லை; ஆனாலும் அந்த நிறுவனம் பலதரப்பட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.[1]

பொது

தொகு
 
ஜொகூர், ஆயர் ஈத்தாம் பெல்டா திட்டம், 2016
 
ஜொகூர், கூலாய் புக்கிட் பத்து நிலத்திட்டம், 2016
 
சபா, லகாட் டத்து, சகபாட் நிலத்திட்டம், 2013

பெல்டா திட்டங்கள், ஏழை மலாய்க்காரர்களுக்கு உதவுவதற்காக மட்டும் உருவாக்கப்பட்டவை அல்ல; மாறாக பெல்டா எல்.பி.ஜே (Felda LBJ) மற்றும் பெல்டா லூரா பிலுட் (Felda Lurah Bilut) போன்ற சில தொடக்கக்கால நில மேம்பாட்டுத் திட்டங்கள்; மலேசிய சீனர்கள்; மற்றும் மலேசிய இந்தியர்கள் போன்ற பிற மலேசிய இனங்களின் குடியேற்றக்காரகளையும் ஏற்றுக்கொண்டன.

அத்துடன் சபா மற்றும் சரவாக்கில் உள்ள பெல்டா திட்டங்களில் குடியேறியவர்கள் பல்வேறு இனங்கள் மற்றும் பரம்பரையினரைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். 2000-ஆம் ஆண்டு வரை பெல்டா, 9,000 சதுர கிலோமீட்டர் நிலத்தில் நில மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கியுள்ளது; அவை பெரும்பாலும் செம்பனைத் தோட்டங்கள் ஆகும்.

வரலாறு

தொகு

துன் அப்துல் ரசாக் உசேன், வறுமையில் அவதிப்படும் கிராமப்புறச் சமூகத்தின், சமூக மற்றும் பொருளாதார நிலையை மாற்ற வேண்டும் எனும் நோக்கத்தில் பெல்டா நில மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கினார்.[2]

அவர் மலேசிய துணைப் பிரதமராகவும், மலேசிய ஊரக வளர்ச்சி அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில், பெல்டா திட்டத்தை அறிமுகப் படுத்தினார். இந்தத் திட்டம் கிராமப்புற ஏழைகளுக்கு மிகவும் தேவையான முன்னேற்றத்தை அளிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டது.[2]

முதல் திட்டம்

தொகு

பெல்டாவினால் நிதியளிக்கப்பட்ட முதல் குடியேற்றமானது, கிளாந்தான் ஆயர் லானாஸ் பகுதியில் அமைந்தது. மார்ச் 1957-இல் 1,680 எக்டேர் பரப்பளவு கொண்ட நிலத் திட்டத்தில் 400 குடியேறிகள் இடம்பெயர்ந்தனர். குடியேறியவர்களில் பெரும்பாலோர் பூமிபுத்ராக்கள்; ஏழை கிராமப் புறங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும்; நிலம் இல்லாதவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது.[3]

அவர்களுக்கு ரப்பர் அல்லது செம்பனை பயிரிட 4 எக்டேர் முதல் 6 எக்டேர் வரை நிலம் வழங்கப்பட்டது; மற்றும் அவர்களின் பயிர்கள் முதிர்ச்சி அடையும் வரை மாதம் தோறும் ஊதியம் வழங்கப்பட்டது.[3]

இரண்டாவது திட்டம்

தொகு

இரண்டாவது பெல்டா திட்டம் 1958-இல் மேற்கு பகாங், பெந்தோங் நகருக்கு அருகிலுள்ள லூரா பிலுட் எனும் இடத்தில் திறக்கப்பட்டது. இந்தத் திட்டம் 2946 எக்டேர் நிலத்தில் ரப்பர் பயிரிடுதலை மையமாகக் கொண்டது.[4]

1960 - 1970-களில், அரசாங்கக் கொள்கை பல்வகைப்படுத்தலை வலியுறுத்தத் தொடங்கியது. ரப்பரின் உலக விலை திடீரென வீழ்ச்சி அடைந்து, பாதிக்கப் படுவதைத் தவிர்க்கும் முயற்சியாக, பல்வகைப் பயிரிடுதலில் கவனம் செலுத்தப்பட்டது.

செம்பனைத் திட்டம்

தொகு

1961-ஆம் ஆண்டில், பெல்டாவின் முதல் செம்பனைத் திட்டம் 3.75 சதுர கிலோமீட்டர் (1.45 சதுர மைல்) நிலப்பரப்புடன் திறக்கப்பட்டது. பெல்டா குடியேற்றங்களுக்குள், செம்பனை படிப்படியாக முக்கியப் பணப் பயிராக மாறியது. 2000-ஆம் ஆண்டு வாக்கில், பெல்டா திட்டங்களின் கீழ், 6,855.2 சதுர கிலோமீட்டர்கள் (2,646.8 சதுர மைல்) நிலம், செம்பனைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது.[5]

1958 - 1990-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 112,000 க்கும் மேற்பட்ட மலேசியர்கள், மலேசியா முழுவதும் உள்ள பெல்டா காலனிகளில் குடியேற்றப்பட்டனர்.[6] இவர்களில் 6% மலேசிய இந்தியர்கள் என அறியப் படுகிறது. மலேசியாவில் உள்ள பெல்டா திட்டங்களில் ஒவ்வொரு திட்டத்திலும் ஏறக்குறைய 6% மலேசிய இந்தியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.[7]

இன்றைய நிலை

தொகு

1990 முதல் புதிய நிலத் திட்டங்கள் எதுவும் நிறுவப்படவில்லை; புதிய குடியேறிகள் அல்லது குடியேற்றவாசிகளை ஏற்றுக் கொள்வதும் அந்த ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. சபாவின் கிழக்குப் பகுதியில் உள்ள லகாட் டத்துவில் உள்ள சகபாத் II நிலத் திட்டம்தான் அண்மைய நிலத் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மலேசிய அரசாங்கம் 1996-இல் பெல்டாவை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றியது; அதற்கு நிதி சுயாட்சியையும் வழங்கியது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "The Federal Land Development Agency (Felda) was established in July, 1956 under the Land Development Ordinance (1956) under the Ministry of Land and Co-operative Development". Roundtable on Sustainable Palm Oil (RSPO). பார்க்கப்பட்ட நாள் 19 September 2024.
  2. 2.0 2.1 "TUN Abdul Razak Hussein formed the Federal Land Development Authority (FELDA) to change the social and economic condition of the poverty-stricken rural community". The Edge Malaysia. பார்க்கப்பட்ட நாள் 19 September 2024.
  3. 3.0 3.1 "Felda proud of its achievements". New Straits Times. 7 July 2009. 
  4. Aziz, Noreen Noor Abd; Wan Haslin Aziah Wan Hassan; Nur Adilah Saud (19 December 2012). "The Effects of Urbanization towards Social and Cultural Changes among Malaysian Settlers in the Federal Land Development Schemes (Felda), Johor Darul Takzim". Procedia - Social and Behavioral Sciences 68: 911. doi:10.1016/j.sbspro.2012.12.276. பன்னாட்டுத் தர தொடர் எண்:1877-0428. 
  5. Simeh, Arif & Tengku Ahmad, Tengku Mohd. Ariff (2001). "The Case Study on the Malaysian Palm Oil" பரணிடப்பட்டது 18 திசம்பர் 2005 at the வந்தவழி இயந்திரம். Retrieved 19 February 2006.
  6. "Profil FELDA" (PDF). பார்க்கப்பட்ட நாள் 3 April 2021.
  7. "Insights from Malaysia's land settlement scheme" (PDF). Asia Pacific Viewpoint. பார்க்கப்பட்ட நாள் 19 September 2024.
  8. "Mengenai Felda". பார்க்கப்பட்ட நாள் 3 April 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்டா&oldid=4166799" இலிருந்து மீள்விக்கப்பட்டது