மட்டக்களப்புத் தேசம்
மட்டக்களப்புத் தேசம் கிழக்கிலங்கையில் அமைந்திருந்த பழந்தமிழ்க் குடியிருப்புக்களில் ஒன்றாகும். காலனித்துவக் குறிப்புக்களில் இப்பகுதி, மட்டிக்கலோ (Matecalo);[4] பெற்றிகலோ (Baticalo);[5] என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 1683 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட "சம்மாந்துறைச் செப்பேடுகளும்" ஏனைய போர்த்துக்கேயர் – ஒல்லாந்தர் வரலாற்றாவணங்களும் மட்டக்களப்புத் தேசம் பற்றிய குறிப்புக்களைக் கொண்டிருக்கின்றன.[6] இன்று மட்டக்களப்புத் தேசம் இல்லாதொழிந்து விட்டாலும், மட்டக்களப்பு - அம்பாறை மக்களின் வாய்மொழியிலும், ஏனைய பிரதேச இலங்கைத் தமிழர் மத்தியிலும், அவ்விரு மாவட்டத்தவருமே "மட்டக்களப்பார்" என இனங்காணப்படுகின்றனர்.
மட்டக்களப்புத் தேசம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
????–1961 | |||||||||||
தலைநகரம் | 1628 வரை சம்மாந்துறை, புளியந்தீவு 1628–1961 | ||||||||||
அரசாங்கம் | ஊர்ப்போடியார் தலைமையில் வன்னிமை ஆட்சி | ||||||||||
வரலாறு | |||||||||||
• ஈழப் பழங்குடிகளும் தமிழகத்திலிருந்தான குடியேற்றங்களும் | ???? | ||||||||||
1961 | |||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• 1881 | 105558 | ||||||||||
• 1953 | 270043 | ||||||||||
|
வரலாறு
தொகுவடக்கே வெருகலாற்றிலிருந்து, தெற்கே குமுக்கனாறு வரை பரந்திருந்த நிலப்பரப்பே மட்டக்களப்புத் தேசம் என்று பல குறிப்புக்கள் சொல்கின்றன.[7][8] இவ்வெல்லையை, வடக்கே கோணேச்சரத்திலிருந்து, தெற்கே கதிர்காமம் வரை கூட நீட்டிப்பதுண்டு.[9] கிழக்கின் வரலாற்று நூல்களில் ஒன்றான மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், இப்பகுதியின் வரலாற்றை, கிறிஸ்துவுக்கு முந்திய சகாப்தத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. நாகர்கள், திமிலர், வேடர் முதலானோரின் பண்டைய குடியிருப்பாக இப்பகுதி காணப்பட்டதாக, அந்நூல் கூறுகின்றது.[10][11] நாகர்முனை[12] "மண்டுநாகன்சாலை" முதலான இடப்பெயர்களும், அவற்றின் நாகர்களுடனான தொடர்பைக் காட்டி நிற்கின்றது.
பாரதத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் இங்கு குடியமர்ந்த மக்கள் பற்றியும் பூர்வ சரித்திரம் குறிப்பிடுகின்றது. ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலிலிருந்து நாகர்முனையில் பூசனை புரியக் குடியேறிய வீரசைவர்கள்[13] காலம், வீரசைவத்தின் புத்தெழுச்சிக் காலமான கி.பி 12ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
மட்டக்களப்புத் தேசத்தின் உகந்தை, கதிரவெளி, வாகரை முதலிய இடங்களில் கிடைத்த பெருங்கற்கால சாசனங்களும், வெல்லாவெளிப் பிராமிச் சாசனங்களும் இப்பகுதியின் தொன்மைக்குச் சான்று கூறுகின்றன.[14]
தலைநகர்
தொகுபோர்த்துக்கேயர் மட்டக்களப்புக்கு வந்தபோது அங்கு, பழுகாமம், பாணமை, சம்மாந்துறை, மற்றும் ஏறாவூர் என்று மூன்று அல்லது நான்கு வன்னிபங்கள் (வன்னிமைச் சிற்றரசுக்கள்) இருந்ததாக அறிய முடிகின்றது.[15] இவற்றுள் சம்மாந்துறையை அண்டிய பகுதியே இப்பகுதியின் தலைநகராக விளங்கியது என்பதற்கு மேலும் பல மேலைத்தேயத்தவர் குறிப்புகள் சான்றாகின்றன. மட்டக்களப்பு மன்னரைத் தாம் சந்தித்ததாக, ஒல்லாந்தரும் போர்த்துகேயரும் குறிப்பிடும் இடம், சம்மாந்துறையாகவே காணப்படுகின்றது.
போர்த்துக்கேயர் மட்டக்களப்பைக் கைப்பற்றிய போது, அவர்களால், புளியந்தீவில் கோட்டை ஒன்று அமைக்கப்பட்டது. 1638இல் கண்டி - இடச்சுக் கூட்டணியால் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின், அக்கோட்டை ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. அன்றிலிருந்து, காலனித்துவ ஆட்சியாளர்களின் மட்டக்களப்புத் தலைநகராக, புளியந்தீவே விளங்கியது.
காலனித்துவ ஆட்சிக் காலம்
தொகுபோர்த்துக்கேயரைத் தொடர்ந்து மட்டக்களப்பை ஒல்லாந்தர் ஆண்டபோது, அது பதினொரு பற்றுக்களாக (ஆட்சி நிருவாகப் பிரிவு) விளங்கியது. ஏறாவூர், மண்முனை, போரதீவு, கரைவாகு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று எனும் முக்குவர் ஆட்சிக்குட்பட்ட ஏழு பற்றுக்களும், தெற்கே இருந்த பாணமையும், மேற்கே இருந்த நாடுகாடு (அல்லது நாதனை), வடக்கே இருந்த கோறளை, கரவெட்டி என்று இந்த பதினொரு பற்றுக்களும் ஒல்லாந்தரால் "மாகாணங்கள்" என்றே அழைக்கப்பட்டன.[16]
ஜாகொப் பேர்னாட் எனும் அதிகாரியின் குறிப்புகளும், ""நாடுகாடு கல்வெட்டுப் பரவணி" எனும் பழம்பாடலும், "நாடுகாடுப்பற்று" எனும் புதிய பற்று, மட்டக்களப்பின் ஏனைய பத்து பற்றுக்களுடன் மிகப் பிற்காலத்திலே இணைக்கப்பட்டிருக்கின்றது என்பதைக் கூறுகின்றன.[17][18] எனினும் கூடிய சீக்கிரத்திலேயே, அப்பற்று, அதன் மக்களால் கைவிடப்பட்டு,[19] மக்கள் சிதறுண்டு வாழ்ந்த சிறுபகுதி மட்டும், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து "வேகம்பற்று" என இனம்காணப்பட்டது.
1950களில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது இறைவரி உத்தியோகத்தர் பிரிவுகள் (இன்றைய பிரதேச செயலாளர் பிரிவுகளை ஒத்த நிர்வாகப் பிரிவு) காணப்பட்டன: பாணமைப்பற்று, அக்கரைப்பற்று, நிந்தவூர்-கரைவாகுப்பற்று, சம்மாந்துறைப்பற்று, மண்முனைப்பற்று வடக்கு, போரதீவு - மண்முனைதென் எருவிற்பற்று, விந்தனைப்பற்று, ஏறாவூர்-கோறளைப்பற்று, வேகம்பற்று என்பன அவை.[20]
மாவட்டம் இரண்டகமானமை
தொகுசுதந்திரத்தின் பின், தென்கிழக்கிலங்கையின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க, கல்லோயாத் திட்டம், இலங்கை அரசால் முன்மொழியப்பட்டது. 1949இல் ஆரம்பித்த அத்திட்டம், 1953இல் முடிவடையும் வரை, பெருமளவான சிங்களக் குடியேற்றம், மட்டக்களப்புப் பகுதியில் ஏற்பட்டது.[21] 1959 தேர்தல்தொகுதி மீள்நிர்ணயப் பரிந்துரைகளின் கீழ், பழைய நாடுகாட்டுப் பகுதியில், 19.03.1960 அன்று, "அம்பாறை" எனும் புதிய தேர்தல் மாவட்டம் உருவானது. எனவே, 1960இன் இறுதியில், மட்டக்களப்பின் தென்பகுதியில், பொத்துவில், கல்முனை, நிந்தவூர், அம்பாறை எனும் நான்கு தேர்தல் மாவட்டங்கள் அமைந்திருந்தன.
10.04.1961 அன்று இந்நான்கு தேர்தல் மாவட்டங்களையும் ஒன்றிணைத்து, புதிய நிர்வாக மாவட்டமொன்றை இலங்கை அரசு பிரகடனம் செய்தது. இதன்மூலம், பாரம்பரியமிக்க தமிழர் தாயகமான மட்டக்களப்புத் தேசம், மட்டக்களப்பு, அம்பாறை எனும் இரு மாவட்டங்களாகத் துண்டாடப்பட்டது.[22][23] 1978 இலங்கைச் சட்டத் திருத்தத்துக்கு அமைய, இந்த நான்கு ஓரங்கத்தவர் தேர்தல் மாவட்டங்களும் அகற்றப்பட்டு, பல்லங்கத்தவர் தெரிவாகும் "திகாமடுல்ல" தேர்தல் மாவட்டமும் உருவாக்கப்பட்டது.[24] பதுளைக்குரிய "தெகியத்த கண்டி" பிரதேசமும் பிற்காலத்தில், அதனுடன் இணைக்கப்பட்டு, இன்றைய அம்பாறை மாவட்டம் முழுமை பெற்றது.
இவ்வாறு பிரிக்கப்பட்ட இரு மாவட்டங்களிலும், பழமைவாய்ந்த பற்றுக்கள் புதிய மட்டக்களப்பு மாவட்டத்தில் அப்படியே தொடர, அம்பாறை மாவட்டத்தில், இனப்பரம்பல் வேற்றுமைக்கேற்ப, அவை வருமாறு பிரிந்தொழிந்து போயுள்ளன:
- அக்கரைப்பற்று - அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, திருக்கோவில்
- கரைவாகுப்பற்று - கல்முனை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி,காரைதீவு[25]
- சம்மாந்துறைப்பற்று - சம்மாந்துறை, இறக்காமம், நிந்தவூர்
- பாணமைப்பற்று - லகுகலை, பொத்துவில்
- நாதனை,நாடுகாடுப்பற்று/வேகம்பற்று- அம்பாறை, தமணை, உகணை[26]
- விந்தனைப்பற்று - மகாஓயா, பதியத்தலாவை.[27]
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ https://www.flickr.com/photos/bcartssrilanka/6102503485/ Ceylon Map 1822
- ↑ Partha S Ghosh (2203)"Ethnicity Versus Nationalism: The Devolution Discourse in Sri Lanka" p.269
- ↑ Robert Muggah (2008)"Relocation failures in Sri Lanka: a short history of internal displacement and resettlement" pp.88, 91
- ↑ Donald Ferguson (1927) "The Earliest Dutch Visits to Ceylon" pp.9,15
- ↑ Walter I Hamilton (1820)"Geographical, Statistical, and Historical Description of Hindostan and the Adjacent Countries" Vol-2
- ↑ A.Velupillai (1971) "Ceylon Tamil Inscriptions" Part 01, p.62-64
- ↑ Census of Ceylon, 1946 – Volume 1, Part 1 – p.112
- ↑ Tambyah Nadaraja (1972), "The Legal System of Ceylon in Its Historical Setting" p.4
- ↑ வெல்லவூர்க் கோபால் (2005) "மட்டக்களப்பு வரலாறு, ஓர் அறிமுகம்" ப.15
- ↑ எஃப்.எக்சு.சி.நடராஜா (1962) "மட்டக்களப்பு மான்மியம்"
- ↑ சா.இ.கமலநாதன், கமலா கமலநாதன் (2005) "மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம்"
- ↑ Nirmala Ramachandran (2004) "The Hindu Legacy to Sri Lanka" p.103
- ↑ சா.இ.கமலநாதன், கமலா கமலநாதன் (2005) "மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம்" பப.15,16
- ↑ சி.பத்மநாதன் (2013) "இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள்-II" பப/.1-26
- ↑ Michael Roberts, (2004) "Sinhala consciousness in the Kandyan period: 1590s to 1815" p.75
- ↑ Dennis B.McGilvray (2008) "Crucible of Conflict" p.66
- ↑ Dennis B.McGilvray (2008) pp. 74-77
- ↑ "Jacob Burnand (1794) "Memorial Compiled By Late Chief Jacob Burnand for his successor Johannas Philippus Wambeek" p.284
- ↑ S. O. Canagaratnam (1921) "Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon" p.81
- ↑ Census of Ceylon, 1953, Volume 1, p.42
- ↑ G. H. Peiris (2006)"Sri Lanka, challenges of the new millennium" p.228
- ↑ Partha S Ghosh (2203)"Ethnicity Versus Nationalism: The Devolution Discourse in Sri Lanka" p.269
- ↑ Robert Muggah (2008)"Relocation failures in Sri Lanka: a short history of internal displacement and resettlement" pp.88, 91
- ↑ Jayatissa De Costa (1985)"Law of Parliamentary Elections" p.25-28
- ↑ Report of First Delimitation Commission of Ceylon September 1946, p.149-150
- ↑ Mu Cin̲n̲attampi (2007) "A glimmer of hope: a new phase in constitutional reforms in Sri Lanka" p.110
- ↑ S. L. Gunasekara (2002) "The Wages of Sin" p.101