மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்


தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் பகுதிகளில் பேசப்படும் தமிழ் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் என்றழைக்கப்படுகிறது. இலங்கையில் வழக்கத்திலுள்ள பேச்சுத் தமிழ் வழக்குகளில் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் இப்பிரதேசத்திற்கே உரிய வட்டார வழக்குகள் கொண்டு தனி ஒரு பேச்சு வழக்காகத் திகழ்கிறது. மட்டக்களப்பு பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் மற்றும் இலங்கையின் திருகோணமலை, கொழும்பு, மலையகப் பிரதேசங்களில் வழக்கத்திலுள்ள பேச்சுத் தமிழில் இருந்து குறிப்பிடத்தக்களவு வேறுபட்டுக் காணப்படுகிறது.

மட்டக்களப்புப் பேச்சுத் தமிழானது மட்டக்களப்புத் தமிழகத்திற்கு உரியதாயினும் நகர மற்றும் கிராமங்களில் தன்னகத்தே சற்று வேறுபட்டுக் காணப்படுகின்றது. கல்வி, அபிவிருத்தி, பிற சமூகத்தினருடனான தொடர்புகள் என்பன இதற்குக் காரணம் எனலாம். முஸ்லிம்கள் சமூகத்தை அண்டிய பிரதேசத் தமிழர்களின் பேச்சுத் தமிழ் முஸ்லிம்களின் பேச்சுத் தமிழிலுள்ள சொற்களைக் கொண்டதாகவும், கிராமங்களில் பண்டைய தமிழ்ச் சொற்கள் மாறாமலும், நகரத்திலுள்ள பேச்சு வழக்கில் ஆங்கில சொற்களின் பாவனை அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயங்கள்.

மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் கிழக்கு மாகாணத்திலுள்ள இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், போர்த்துக்கல் பரங்கியர், கரையோர வேடர்கள் ஆகியோரிடையே பேசப்படுகின்றது. திருகோணமலை பேச்சு வழக்கு யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழை ஒத்துக் காணப்படுகிறது.[1] ஆயினும், திருகோணமலை பேச்சு வழக்கு மட்டக்களப்பு பேச்சு வழக்குடன் நில அமைவு போன்ற காரணங்களினால் நெருங்கிய தொடர்புடையது. கமில் சுவெலபில் என்ற மொழியியலாளரின் கருத்துப்படி மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ், பேசப்படும் எல்லா தமிழ் வழக்குகளிலும் அதிகம் இலக்கியத் தன்மை வாய்ந்ததாகவுள்ளது. இது சில பழைய பண்புகள் பாதுகாக்கின்றது. சில கவர்ச்சியூட்டும் மாறுதல்களை மேம்படுத்துகையில் தமிழின் ஏனைய வழக்குகளைவிட இது உண்மைத் தன்மையான இலக்கிய விதிமுறையைத் தக்க வைத்துள்ளது. அத்துடன் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் சில மிகவும் குறிப்பிட்ட சொற்களஞ்சிய பண்புகளைக் கொண்டு, அதன் ஒலியியல் தனிக்கூறு தொடர்பால் ஏனைய இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகளுடன் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை தனக்கே உரித்தான சில சொற்களையும் கொண்டுள்ளது.[2][3] அத்துடன், மட்டக்களப்புத் தமிழர்கள் பேசும் தமிழ் வடமொழிக்கலப்பு மிகவும் குறைவாகவுள்ளமை, மிகப்பழைய விளிப்புப் பெயர்களையும் அசைச்சொற்களையும் கொண்டு காணப்படல் இதன் மற்றுமொரு சிறப்புக் காரணம்.[4]

பெயர்க் காரணம் தொகு

மட்டக்களப்பு என்பது தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தைக் குறிப்பதாயினும். மட்டக்களப்பு என்பது மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் எல்லையில் அமைந்துள்ள வெருகல் கங்கையிலிருந்து, அம்பாறை மாவட்டத்தின் எல்லையாகிய குமுக்கன் ஆறு வரையுமான பரந்த பகுதி மட்டக்களப்பு என்றே அழைக்கப்பட்டது.[5][6] எனவே "மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்" என்பது தற்போதைய மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசுவோரின் தமிழ்ப் பேச்சு வழக்காகும்.

உச்சரிப்பு தொகு

எழுத்து தொகு

 
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பகுதி: வெருகல் முதல் குமுக்கன் ஆறு வரையான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள்

மட்டக்களப்புப் பேச்சுத் தமிழில் சில எழுத்துகள் மாறி உச்சரிப்புக்குள்ளாகின்றன. அவை தனிச் சொற்களாகவும் பல சொற்களாகவும் மாறி ஒலிக்கின்றன.[5]

‘ன’கரமும், ‘ற’கரமும் தொடர்ந்து வரும் சொற்கள் முறையே ‘ண’கரமும் ‘ட’கரமுமாக உச்சரிக்கப்படுகின்றன.

எ.கா:
ன்று – ஒண்டு
ன்று – கண்டு
கொன்று – கொண்டு
ன்றி - பண்டி

ஐகாரம் உள்ள சொற்கள் அகரமாக ஒலித்தல்:

எ.கா:
வைத்து – ச்ச
பச்சை – பச்
ம்பது – ம்பது

ஐகாரத்தை அடுத்த தகார ஒலி சகரமாகவும் மேலும் ஐகாரம் எகரமாகவும் ஒலித்தல்:

எ.கா:
வைத்த – வச்ச (தகாரம், சகரம்)
வைத்த – வெச்ச (ஐகாரம், எகரம்)

‘ஏன்’ எனும் விகுதி ‘அன்’ ஆக மாறி மிகுந்து ஒலித்தல்.

எ.கா:
வந்தேன் – வந்தன்
வருவேன் – வருவன்
படிப்பேன் – படிப்பன்

ழகர ஒலி ளகரமாக ஒலித்தல்.

எ.கா:
வாழைப்பழம் – வாளைப்பழம்
ழை – மளை

மெல்லின மெய்யீறு குற்று கரம் ஏற்றல்

எ.கா:
ண் – மண்ணு
பொன் - பொன்னு

ஏகார உயிர் ‘ஆ’, ‘ஓ’ என மாறி ஒலித்தல்

எ.கா:
சேவல் – சாவல்
பேடு - போடு

லகர மெய்யான ஈற்றோசை குறைந்து ஒலித்தல்

எ.கா:
மறுகால் – மறுகா
இருந்தால் – இருந்தா

அதிக திரிபுடன்

எ.கா:
அல்லவா- எலுவா

சொற்கள் தொகு

 
மட்டக்களப்புத் தமிழகம் கூறும் மட்டக்களப்புத் தமிழ்ச் சொற்கள் சில

சில சொற்கள் குறிலாகவும் நெடிலாகவும் மாறுபட்டு மட்டக்களப்புத் தமிழ் உச்சரிப்பில் ஒலிக்கின்றன. சில திரிபுபட்டும், பழந்தமிழ் தொடர்பு கொண்டும், இலக்கிய ஆட்சி முறைக்கு ஏற்பவும் உச்சரிக்கப்படுகின்றன. அவ்வாறான சில பொதுவழக்காற்றுச் சொற்கள் உதாரணங்களுடன் இங்கே தரப்பட்டுள்ளது.[5]

மட்டக்களப்புத் தமிழ் விளக்கம்
அங்கால (அங்கு + ஆல்) அங்கு
அசவு விறகு, பாய் போன்றவற்றை அடுக்கி வைக்கப் பயன்படுவது.
அசுப்பு நடமாட்டம்
ஆவலாதி வம்பளத்தல்
எழுவான் கரை (கதிரவன் எழும் திசை - கிழக்கு), ஒரு ஊரின் பெயர்
ஏமாந்தி ஏமாந்தவன்(ள்)
ஓய்யாரம் எழில்
ஒளும்பு எழும்பு என்பதன் சிதைவு
ஓர்மை துணிவு
கச்சை கோவணம்
கக்கிசம் பெருங்கவலை
கடப்பு தெருவாசல் (இதை அனைவரும் கடந்து செல்வதால் கடப்பு என்றாயிற்று)
காலமே காலை நேரம்
குமுதம் பேரொலி செய்து விளையாடல்
கொச்சிக்காய் மிளகாய் (கொச்சி நாட்டிலிருந்து வந்தது என்ற பொருளில்)
கொள்ளி விறகு - எ.கா: குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி (புறநாநூறு), கொள்ளி வாய்ப் பேய்க் குழவிக்கு (கலிங்கத்துப் பரணி)
சவளக்கடை (செளளம் + கடை) ஒரு ஊரின் பெயர்
சள்ளு தொந்தரவு
சுள்ளி காய்ந்த குச்சி
செங்கல் மங்கல் மாலை நேரம்
திறாவுதல் தடவுதல்
நாசமறுப்பு தொல்லை (நாசம் + அறுப்பு) என்பதன் மங்கல வழக்கு
பரிசாரி வைத்தியன் (பரிகாரி)
பறவாதி பேராசைக்காரன் (பேராசையால் பறந்து திரிபவன்)
படுவான் கரை (கதிரவன் மறையும் திசையாகிய மேற்கு), ஒரு ஊரின் பெயர்
பிசினி பெரும்உலோபி (அவனது கையில் பணம் எப்பொதும் பிசின் போல் ஒட்டிக்கொண்டிருக்கும் யாரிடமும் வழங்கப்படமாட்டாது)
மூசாப்பு வானம் கருமையாக இருத்தல்
விசர் பைத்தியம்
வெள்ளை வெங்காயம் உள்ளி
ஏனம் பாத்திரம்
ஏலா இயலாது என்பதன் திரிபு
ஒசில் அழகு(திருப்புகழ் 1, 58) நடைமுறையில் வஞ்சிப்புகழ்ச்சியில் பயன்படுகிறது
ஒள்ளுப்பம் கொஞ்சம் (ஒட்பம் என்ற பழந்தமிழ்ச்சொல்லின் திரிபு)

பழமொழிகள் தொகு

மட்டக்களப்பு மாநிலத்தில் பாவிக்கப்படும் பழமொழிகளிலும் அப்பிரதேசத்திற்குரிய தமிழ்ப் பேச்சு வழக்கு காணப்படுகின்றது. சில பழமொழிகள் அப்பிரதேசத்திற்கே உரித்தான தனித்துவம் வாய்ந்தவை. உதாரணத்திற்குச் சில பழமொழிகள்:[7]

  • ஆர்குத்தியும் அரிசானால் சரி.
சாதாரண வழக்கில்: யார் இடித்தாலும் அரிசி நெல்லிலிருந்து வெளியே வந்தால் சரியே.
  • ஐயர் வீட்டு நாய்க்கு அலியார் வீட்டுச் சோறு.
சாதாரண வழக்கில்: ஐயர் வீட்டு நாய் இசுலாமியர் வீட்டிலும் செல்லப்பிராணி.
  • ஓடாவி வீடு ஓட்டை வீடு.
சாதாரண வழக்கில்: தச்சன் வீடாக இருந்தும் அது ஓட்டையாகவே உள்ளது.
  • காய்ந்த மாடு கம்பில விழுந்தது போல.
சாதாரண வழக்கில்: பசியுள்ள ஓர் மாடு கம்பைக் (தானியம்) கண்டதுபோல்.
  • வேலிக் கட்டைக்குப் பிறந்தாலும் போடிப் பட்டம் குறையாது.
சாதாரண வழக்கில்: வேலிக் கட்டைக்குப் பிறந்தாலும் பண்ணையார் தகுதி குறையாது.

பழந்தமிழ்ச் சொற்கள் தொகு

கிழக்கிலங்கையின் வரலாறு கி.மு. 5ம் நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து அது சங்க கால தமிழ் நாட்டு மக்களுடன் நெருங்கிய தொடர் கொண்டிருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். அத்தொடர்பானது பேச்சு வழக்கில் தற்போதும் காணப்படுவது சிறப்பம்சம்.[5][8]

தொல்காப்பியர் காலச் சொற்கள் இன்றும் கிராமப்புற பேச்சு வழக்கில் காணப்படுகிறது. கா, அதர், குடி, மருங்கு, மறுகா, கரப்பு, அரவம், செக்கல், யாமம், கடுவன் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, என வரூஉம்
ஆயேழ் சொல்லும் அசை நிலைக் கிளவி (தொல்காப்பியம் - சொல் 279)
பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அச்செங்கோலின்
செய் தொழிற் கீழ்ப்பட்டாளோ இவள்? இவள் காண்டிகா! (மருதக்கலி)
காணிகா வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்
ஆய மட மகளிர் எல்லீருங் கேட்மின் (சிலப்பதிகாரம்)

இன்றும் கிராமப்புறங்களில் கா அசைச் சொல் மரியாதையாக வயதானவரை அல்லது தமக்கு நெருக்கமானவரை அழைக்கப் பயன்படுகிறது. “என்னகா பாடு?” என்பது ‘எப்படிச் சுகம்?’ என்று வினவ பாவிக்கப்படுகிறது.

தமிழ் நாட்டுடன் தொடர்புபட்ட சொற்கள் தொகு

இலங்கையிலுள்ள தமிழ் பேச்சு வழக்குகளுக்கு அப்பால் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் தமிழ் நாட்டின் ஒருசில பேச்சு வழக்குகளால் தாக்கம் பெறுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்துவது மதுரைத் தமிழ் ஆகும். மதுரைப் பேச்சு வழக்கிலுள்ள தனித்துவமான சொற்கள் இங்கேயும் பாவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சில எடுத்துக்காட்டுகள்:[9]

மதுரையிலும் மட்டக்களப்பிலும் பேசப்படும் தமிழ் விளக்கம்
குத்துமதிப்பு அளவிடு பொருளை துலாக்கோல் இட்டு எடை போடாமல் குத்துயரத்தால் மதிப்பிடல்
நூனாயம் பேசுறான் நூல்நயம் பேசுகிறான்
அகராதி எல்லாம் தெரிந்தவன்
பைய மெதுவாக
சீனி சர்க்கரை
மண்டை தலை
வெள்ளனே சீக்கிரம், காலைலயே
கருக்கல் சாயங்காலம்(6- 7 மணி)
உசுப்பு எழுப்பு
ஆணம் குழம்பு
ஒசக்க மேலே
உறக்கம் தூக்கம்
சாத்தி வை ஓரமாக வைப்பது
கொல்லை வீட்டின் பின் பக்கம்
பஸ் புடுச்சு போகனும் பேருந்து ஏறிப் போகனும்
கொத்தவரங்காய் சீனி அவரைக்காய்
களவு திருட்டு

உறவுமுறைச் சொற்கள் தொகு

ஈழத்தின் பலவிடங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்துத் தமிழ் வழக்கிலுள்ள சொற்கள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழிலும் பாரிய மாறுதலற்றுக் காணப்படுகின்றது.

எழுத்துத் தமிழ் பேச்சுத் தமிழ்
கணவன் புருசன்
மனைவி பெண்சாதி, பொஞ்சாதி
பிள்ளை பிள்ள, புள்ள
ஆண் பிள்ளை ஆம்பு(பி)ளப் பி(பு)ள்ள
பெண் பிள்ளை பொம்பு(பி)ளப் பி(பு)ள்ள
மகன் மகன், தம்பி
மகள் மகள், பி(பு)ள்ள
அண்ணன் அண்ணா, அண்ணாச்சி
அக்கா அக்கா, அக்காச்சி
தங்கை தங்கச்சி

தற்காலத்தில் அப்பாவை அப்பா என்றும், அம்மாவை அம்மா என்றும் அழைக்கிறார்கள். அச் சொற்கள் முறையே அப்பு அல்லது ஐயா, ஆச்சி என முன்பு அழைத்தனர்.

பெற்றோரின் பெற்றோரை இன்று அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா, என அழைக்கப்படுகிறார்கள். முன்பு இவர்கள் பெத்தப்பு, பெத்தாச்சி, அம்மாச்சி, அப்பாச்சி, ஆச்சி என அழைக்கப்பட்டனர்.

பெற்றோரின் உடன் பிறந்ததோர் பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, சித்தி என தற்போது அழைக்கப்படுகின்றனர். முன்பு இவர்கள் பெரியப்பு, சின்னப்பு, பெரியாச்சி, சின்னாச்சி, பெரியையா, சின்னையா என அழைக்கப்பட்டனர்.

அக்காவின் கணவரை அத்தான் என்றும், தங்கையின் கணவரை மச்சான் என்றும், அண்ணாவின் அல்லது தம்பியின் மனைவியை மச்சாள் அல்லது அண்ணி என்றும், மாமா, மாமியின் மகனை மச்சான் என்றும், அவர்களின் மகளை மச்சாள் என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது

மனைவி கணவனை ‘இஞ்சேருங்க' (யாழ்ப்பாணம்: 'இஞ்சாருங்கோப்பா') என்று அழைத்து வந்தனர். மனைவி கணவனையும், கணவன் மனைவியும் 'அப்பா' என்று அழைக்கும் வழக்கமும் உள்ளது. தற்போது அனேகமாக கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் உள்ளது.

மட்டக்களப்புச் சொல் வேறுபாடு தொகு

பிறபகுதிகளிலிருந்து மட்டக்களப்புப் பேச்சுத் தமிழை வேறுபடுத்திக் காட்டும் சில சொற்கள் உள்ளன. அச்சொற்களைக் கொண்டே குறிப்பிட்ட நபர் எப்பகுதிப் பேச்சுத் தமிழ் பேசுகிறார் என அடையாளம் கண்டுகொள்ள முடியும். சில சொற்கள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழுக்கு உரியனவாகவும், சில யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழுக்கு உரியனவாகவும் காணப்படுகின்றன. அப்படியான சொற்கள் சில அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் பொருள்
பொடியன் பெடியன் சிறுவன்
பொட்டை பெட்டை சிறுமி
பிறகு பேந்து பின்பு
பைய ஆறுதலா மெதுவாக
டக்கென்டு (‘டக்’ என்று) கெதியா விரைவாக
வருவாங்களா? வருவினமோ? வருவார்களா?
கிறுகி திரும்பி திரும்பி
போயிற்று வாறன் போட்டு வாறன் போய் வருகிறேன்

இலக்கணம் தொகு

தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள் தொகு

மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்களில் பாரிய வேறுபாடுகள் இல்லாதன. யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் காணப்படும் முன்னிலைச் சுட்டுச் சொற்களான உவன், உவள், உது, உவை, உவடம், உங்கை, உந்தா ஆகிய சொற்கள் அற்றவை. இதைக் கொண்டே எப்பகுதி தமிழ் பேசுகின்றனர் என்பதை அடையாளம் காண முடியும்.

தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள் அட்டவணை:

- எழுத்துத் தமிழ் பேச்சுத் தமிழ்
ஒருமை பன்மை ஒருமை பன்மை
தன்மை நான் நாங்கள் நான் நாங்க
முன்னிலை நீ நீங்கள் நீ நீங்க
படர்க்கை ஆண்பால் (அ.சுட்டு) இவன் - இவன் இவங்க
ஆண்பால் (சே.சுட்டு) அவன் - அவன் அவங்க
பெண்பால் (அ.சுட்டு) இவள் - இவள் -
பெண்பால் (சே.சுட்டு) அவள் - அவள் -
பலர்பால் (அ.சுட்டு) - இவர்கள் - இவங்க, இவையள்
பலர்பால் (சே.சுட்டு) - அவர்கள் - அவங்க, அவையள்
அஃறிணை (அ.சுட்டு) இது இவை இது இது, இதுகள்
அஃறிணை (சே.சுட்டு) அது அவை அது அது, அதுகள்

வேற்றுமை உருபுகள் தொகு

இப்பபகுதி பேச்சுத்தமிழில் வேற்றுமை உருபுகள் சேரும்போது எழுத்துத் தமிழிலிருந்து வேறுபடுகிறது. யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழை அண்மித்தும் இப்பகுதிக்குரிய ஒலிப்பைப் பெற்று வேறுபட்டுக் காணப்படுகிறது.

வேற்றுமை உருபு எழுத்துத் தமிழ் யாழ்ப்பாணத் தமிழ் மட்டக்களப்புத் தமிழ்
1 - அவன் அவன் அவன்
2 அவனை அவனை அவன
3 ஆல் அவனால் அவனாலை அவனால
ஓடு அவனோடு அவனோடை அவனோட
4 கு அவனுக்கு அவனுக்கு அவனுக்கு
5 இன் அவனின் அவனிலும் அவனிலும்
6 அது அவனது, அவனுடைய அவன்ரை அவன்ட
7 இல் அவனில் அவனிலை அவனில

இடம், பால், காலம் தொகு

இடம், பால், காலம் காட்டும் விகுதிகள் சொற்களுடன் சேரும்போதும் வேறுபடும் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழுடன் சில வேறுபாடுகளைக் கொண்டு காணப்படுகிறது.

விளக்கம் எழுத்துத் தமிழ் பேச்சுத் தமிழ் குறிப்புகள்
இடம் பால் எண் காலம்
தன்மை
தன்மை - ஒருமை இறந்த செய்தேன் செய்தனான் -
தன்மை - ஒருமை நிகழ் செய்கிறேன் செய்யிறன் -
தன்மை - ஒருமை எதிர் செய்வேன் செய்வன் -
தன்மை - பன்மை இறந்த செய்தோம் செய்தம், செய்தனாங்கள் -
தன்மை - பன்மை நிகழ் செய்கிறோம் செய்யிறம் -
தன்மை - பன்மை எதிர் செய்வோம் செய்வம் -
முன்னிலை
முன்னிலை - ஒருமை இறந்த செய்தாய் செய்தாய், செய்தனீ -
முன்னிலை - ஒருமை நிகழ் செய்கிறாய் செய்யிறா -
முன்னிலை - ஒருமை எதிர் செய்வாய் செய்வா -
முன்னிலை - பன்மை இறந்த செய்தீர்கள் செய்தீங்க, செய்தனீங்க -
முன்னிலை - பன்மை நிகழ் செய்கிறீர்கள் செய்யிறீங்க -
முன்னிலை - பன்மை எதிர் செய்வீர்கள் செய்வீங்க -
படர்க்கை, உயர்திணை
படர்க்கை ஆண் ஒருமை இறந்த செய்தான் செஞ்சான், செய்தவன் -
படர்க்கை ஆண் ஒருமை நிகழ் செய்கிறான் செய்யிறான் -
படர்க்கை ஆண் ஒருமை எதிர் செய்வான் செய்வான் -
படர்க்கை ஆண் பன்மை இறந்த - செய்தாங்க எழுத்துத் தமிழில் இல்லை
படர்க்கை ஆண் பன்மை நிகழ் - செய்யிறாங்க எழுத்துத் தமிழில் இல்லை
படர்க்கை ஆண் பன்மை எதிர் - செய்வாங்க எழுத்துத் தமிழில் இல்லை
படர்க்கை பெண் ஒருமை இறந்த செய்தாள் செய்தாள், செய்தவள் -
படர்க்கை பெண் ஒருமை நிகழ் செய்கிறாள் செய்யிறாள் -
படர்க்கை பெண் ஒருமை எதிர் செய்வாள் செய்வாள் -
படர்க்கை பலர் - இறந்த செய்தார்கள் செய்தவை, செஞ்சவங்க -
படர்க்கை பலர் - நிகழ் செய்கிறார்கள் செய்யிறாங்க -
படர்க்கை பலர் - எதிர் செய்வார்கள் செய்வாங்க -
படர்க்கை, அஃறிணை
படர்க்கை ஒன்றன் - இறந்த செய்தது செய்தது -
படர்க்கை ஒன்றன் - நிகழ் செய்கிறது செய்யிது -
படர்க்கை ஒன்றன் - எதிர் செய்யும் செய்யும் -
படர்க்கை பலவின் - இறந்த செய்தன செய்ததுகள் -
படர்க்கை பலவின் - நிகழ் செய்கின்றன செய்யுதுகள் -
படர்க்கை பலவின் - எதிர் செய்யும் செய்யுங்கள் -

வினைச் சொற்களின் பயன்பாடுகள் தொகு

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் நான்கு வகையான பேச்சு வகைகள் காணப்பட, மட்டக்களப்புப் பேச்சுத் தமிழில் மூன்று வகையான பேச்சு வகைகள் காணப்படுகின்றன. மரியாதை மிகு பேச்சு வகை, சாதாரண பேச்சு வகை, மரியாதை அற்ற பேச்சு வகை என காணப்படும் இவற்றில், யாழ்ப்பாண வழக்கில் காணப்படும் இடைநிலை பேச்சு வகை இல்லை. ஆனாலும் இந்த இடைநிலை பேச்சு வகை மட்டக்களப்பு வழக்கிலும் தற்போது சிறிதளவு காணப்படுகிறது. வடக்கிற்கும் கிழக்கிற்குமான தொடர்பு இதற்கான காரணமாக இருக்கலாம்.

பலவேளைகளில் மரியாதை மிகு பேச்சு வகையுடம் சாதாரண பேச்சு வகை அல்லது மரியாதை அற்ற பேச்சு என இரு வகையான பேச்சு வகைகள் மாத்திரம் காணப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. மரியாதை மிகு பேச்சு வகையே பாரியளவு பாவனையில் உள்ளது. இவ்வாறு பேசுவது நாகரீகப் பண்பாகக் கருதபப்டுகிறது. ஆயினும் கிராமப்புறங்களில் இதற்கு விதிவிலக்குகளும் உள.

மட்டக்களப்புப் பேச்சுத் வழக்கிற்கும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிற்கும் சிறியளவு வேறுபாடு காணப்படுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் என்னவெனில், யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் காணப்படும் மாத்திரையளவு மட்டக்களப்புப் பேச்சுத் வழக்கில் குறைந்து ஒலிக்கும்.
உதாரணம்:

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு: வாங்கோ - இங்கு ஓகாரம் பாவிக்கப்படுகிறது
மட்டக்களப்புப் பேச்சுத் வழக்கு: வாங் - இங்கு அகரம் பாவிக்கப்படுகிறது
மரியாதை மிகு பேச்சு வகை சாதாரண நிலை பேச்சு வகை மரியாதை அற்ற பேச்சு வகை
வாருங்கள்/வாங்க வா வா
சொல்லுங்கள்/சொல்லுங்க சொல், சொல்லு சொல்லு
கேளுங்கள்/கேளுங்க கேள், கேளு கேளு
சொல்லுங்கள்/சொல்லுங்க சொல், சொல்லு சொல்லு
என்ன சொன்ன நீங்கள்? என்ன சொன்ன நீ? என்ன சொன்ன நீ?

சுட்டுப்பெயர் சொற்களும் இரண்டு வகையான பேச்சு வழக்கை மாத்திரம் கொண்டுள்ளன.

மரியாதை மிகு பேச்சு வகை சாதாரண நிலை பேச்சு வகை
நீங்கள் நீ
உங்கள் உன்
உங்களுக்கு உனக்கு

பிறமொழிச் சொற்கள் தொகு

போத்துக்கேய, டச்சு, ஆங்கில மற்றும் அரபு ஆகிய மொழிகளின் செல்வாக்கு மட்டக்களப்புப் பேச்சுத் தமிழில் கலந்து காணப்படுகின்றன. போத்துக்கேய, டச்சு, ஆங்கில ஆட்சிகள் இப்பிரதேசங்களில் காணப்பட்மை மற்றும் போத்துக்கேய, அராபிய வாரிசுகள் இப்பிரதேசங்களில் கலந்திருப்பது என்பன இப்பகுதித் தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதற்கான முக்கிய காரணம் எனலாம்.

போத்துக்கேய மொழிச் சொற்கள் தொகு

போத்துக்கேய மொழியிலிருந்து தமிழில் கலந்த சொற்கள்.[5]

பேச்சுத் தமிழ் பொருள் போத்துக்கீச மூலம்
அலவாங்கு கடப்பாரை alawanco
அன்னாசி ஒருவகைப் பழம் anoná
ஆசுப்பத்திரி மருத்துவமனை hospital
உரோதை சில்லு roda
கடுதாசி கடிதம் carta
கதிரை நாற்காலி cadeira
குசினி அடுக்களை cozinha
கோப்பை கிண்ணம் copo
சப்பாத்து காலணி sapato
தாச்சி இரும்புச் சட்டி tacho
துவாய் துவாலை toalha
தவறணை மதுபானம் கிடைக்கும் இடம் taberna
பாண் ரொட்டி pão
பீங்கான் செராமிக் தட்டு palangana
பீப்பா மரத்தாழி pipa
பேனை எழுதுகோல் pena
யன்னல் சாளரம் janella
வாங்கு நீண்ட மர இருக்கை banco
விசுக்கோத்து ஈரட்டி biscoito
வின்னாகிரி காடி vinagre

டச்சு மொழிச் சொற்கள் தொகு

டச்சு மொழியிலிருந்து தமிழில் கலந்த சொற்கள்.[5]

பேச்சுத் தமிழ் பொருள் டச்சு மூலம்
இறாக்கை பற்சட்டம் rak
இலாட்சி இழுப்பறை laadje
கந்தோர் பணிமனை kantoor
கேத்தல் கெண்டி ketel
நொத்தாரிசு ஆவண எழுத்துபதிவாளர் notaris
போத்தல் புட்டி bottel
வங்குறோத்து நொடிப்பு நிலை, ஓட்டாண்டி bankerot

ஆங்கில மொழிச் சொற்கள் தொகு

ஆங்கில மொழியிலிருந்து தமிழில் கலந்த சொற்கள்.[5]

பேச்சுத் தமிழ் பொருள் ஆங்கில மூலம்
இஞ்சினியர் பொறியியலாளர் engineer
ஏக்கர் சதுர கஜம் உள்ள நிலப்பரப்பு acre
சூப்பு ரசம் coup
செக்கு காசோலை cheque
சேட்டு மேற்சட்டை shirt
பென்சில் கரிக்கோல் pencil
மார்க்கட்டு சந்தை market
யார் மூன்று அடி நீளம் yard
வில் கட்டணச்சீட்டு bill
விண்ணன் கெட்டிக்காரன் winner
நொட்டு பாப்பம் (பார்ப்போம்) ஒன்றும் செய்யமுடியாது not to do

அரபு மொழிச் சொற்கள் தொகு

அரபு மொழியிலிருந்து தமிழில் கலந்த சொற்கள்.[5]

அரபு வழி பொருள்
ஈமான் நம்பிக்கை
சுன்னத்து விருத்தசேதனம்
செய்த்தான் பிசாசு
மவுத்து இறப்பு
மெளலவி இசுலாம் மார்க்கப்பண்டிதர்
கலால் அங்கீகரிக்கப்பட்டது
கறாம் நிராகரிக்கப்பட்டது
சலாம் வணக்கம்

வேறு மொழிச் சொற்கள் தொகு

போத்துக்கேய, டச்சு, ஆங்கில மற்றும் அரபு ஆகிய மொழிகளைத் தவிர பாரசீக மொழி, ஹிந்தி, உருது மொழிகளின் தாக்கமும் உள்ளது. இவை பேச்சுத் தமிழில் மிகக் குறைவாகவே பயன்பாட்டில் உள்ளதாயினும், தமிழ் நாட்டுடன் உள்ள தொடர்கள் இப்பகுதியில் அச்சொற்கள் பற்றிய விளங்கிக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. சில சொற்கள் பின்வருமாறு:
பாரசீக மொழிச் சொற்கள்

  • ஜமீன்
  • சிபார்சு
  • சிப்பாய்
  • சுமார்
  • பந்தோபஸ்து

இந்துஸ்தானி மொழிச் சொற்கள்

  • அசல்
  • அந்தஸ்து
  • ஆஜர்
  • உசார்
  • தபால்

ஹிந்தி மொழிச் சொற்கள்

  • அச்சா

சமகாலப் போக்கு தொகு

பழந்தமிழ்ச் சொற்கள் மற்றும் வடமொழிச் சொற்கள் அரிதாகக் காணப்படுவதற்கு மட்டக்களப்புத் தமிழகம் பிறபகுதி மக்களுடன் தொடர்படாமைதான் காரணங்களில் ஒன்று எனக்கூறப்படுகிறது.[10] உலகமயமாதல் பல மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கையில் மொழியும் பல தாக்கங்களுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்று. இதற்கு மட்டக்களப்புப் பேச்சுத் தமிழும் விலக்கல்ல. இப்பகுதித் தமிழுக்கு உள்ள தனித்துவம் காக்கப்படுவது கிராமங்களிளன்றி நகரங்களிலல்ல.

பேராசிரியர் கமில் சுவெலபில் அவர்களின் மொழியியல் ஆய்வு அறுபதுகளில் வெளியானது.[1][10] பல தசாப்தங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்பேச்சு வழக்கு புறத்தாக்கங்களுக்கு உள்ளாவதை தவிர்க்கவும் முடியாது. உதாரணமாக; கிராமப்புறங்களில் காணப்படும் “கா”அசைச் சொல் சேர்ந்த பேச்சு (என்னகா பாடு?) இன்று நாகரீகமற்ற ‘கிராமத்துப் பேச்சு’ எனப் பார்க்கப்படுகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ் எனும் நூலின் சிறப்புரையில் மட்டக்களப்புப் பேச்சு வழக்கின் இன்றைய நிலை பற்றிக் குறிப்பிடுவதனைக் காணலாம்.[8] அங்கு இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பற்றிய நூல்கள் தொகு

  • மட்டக்களப்புத் தமிழகம்
  • மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள் சொற்றொடர்களின் அகராதி
  • பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்
  • மட்டக்களப்பு மாநிலப் பழமொழிகள் அகரவரிசை
  • நீரரர் நிகண்டு
  • மட்டக்களப்புச் சொல்வெட்டு
  • மட்டக்களப்புச் சொல்நூல்
  • மட்டக்களப்பு மாநில உபகதைகள்

இந்நூல்களில் அதிகமானவை ஈழத்துப் பூராடனாரால் எழுதப்பட்டன. இவ்வாசிரியரின் பிறநூல்களிலும் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பற்றிய விடயங்கள் அல்லது அதை அறிந்து கொள்வதற்கான விடயங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக 'மட்டக்களப்பியல்', 'மீன்பாடும் தேன்நாடு', 'மட்டக்களப்பில் இருபாங்குக் கூத்துக்கலை' ஆகிய நூல்களைக் குறிப்பிடலாம்.[11][12][13]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Kuiper, L.B.J (March 1964). "Note on Old Tamil and Jaffna Tamil". Indo-Iranian Journal (Springer Netherlands) 6 (1): 52–64. doi:10.1007/BF00157142. 
  2. Kamil Zvelebil, "Some features of Ceylon Tamil" Indo-Iranian Journal 9:2 (June 1966) pp. 113-138.
  3. Subramaniam, Folk traditionas and Songs..., p.9-10
  4. மட்டக்களப்பு மாநாட்டு நினைவு மலர், 1996 {{citation}}: |first= missing |last= (help)
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 வி. சீ. கந்தையா.
  6. "ஆய்வுக் கட்டுரை". Archived from the original on 2012-02-29. பார்க்கப்பட்ட நாள் 2012-06-29.
  7. "மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள் சொற்றொடர்களினதும் பழ மொழிகளினதும் அகராதி - நூலகம்".
  8. 8.0 8.1 வாகரைவாணன்.
  9. "Tawp – Indian Masala".[தொடர்பிழந்த இணைப்பு]
  10. 10.0 10.1 வாகரைவாணன், ப. 18.
  11. "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழ்ப்பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் இயற்கை எய்தினார்!".
  12. "Account Suspended". Archived from the original on 2014-09-01. பார்க்கப்பட்ட நாள் 2012-06-22.
  13. "வல்லமை -".[தொடர்பிழந்த இணைப்பு]

உசாத்துணை தொகு

  • வி. சீ., கந்தையா (1964). மட்டக்களப்புத் தமிழகம். மட்டக்களப்பு: ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம். 
  • வாகரைவாணன், வாகரைவாணன் (2005). பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ். மட்டக்களப்பு: ஆரணியகம். 

வெளி இணைப்புகள் தொகு