மதன் மோகன் (இசையமைப்பாளர்)
மதன் மோகன் கோலி (Madan Mohan Kohli) (25 ஜூன் 1924–14 ஜூலை 1975), மதன் மோகன் என்று நன்கு அறியப்பட்ட இவர், 1950கள், 1960கள் மற்றும் 1970களில் இந்திய இசை அமைப்பாளராக இருந்தார். இந்தித் திரையுலகில் மெல்லிசை மற்றும் திறமையான இசையமைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இந்திப் படங்களுக்கு இவர் இசையமைத்த கசல்களுக்காக இவர் குறிப்பாக நினைவுகூரப்படுகிறார். பாடகர்களான லதா மங்கேஷ்கர், முகமது ரபி மற்றும் தௌலத் மஹ்மூத் ஆகியோருடன் சேர்ந்து பல சிறந்த படைப்புகளை வெளியிட்டுள்ளார்.[1] [2]
மதன் மோகன் Madan Mohan | |
---|---|
பிலிம் இன்டியா எனும் இதழில் மதன் மோகன், 1946 | |
பிறப்பு | மதன் மோகன் கோலி 25 சூன் 1924 பகுதாது, ஈராக்கு |
இறப்பு | 14 சூலை 1975 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 51)
தேசியம் | இந்தியா |
பணி | இசையமைப்பாளர், பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1950–1975 |
பிள்ளைகள் | சஞ்சீவ் கோலி சமீர் கோலி |
விருதுகள் | 1971: சிறந்த இசையமைப்பாளருக்கான தேசியத் திரைப்பட விருது – தஸ்தக் (1970) |
இளமை வாழ்க்கை
தொகுமதன் மோகன், ஜூன் 25,1924 அன்று ஈராக்கின் பகுதாதில் பிறந்தார். அங்கு இவரது தந்தை ராவ் பகதூர் சுனிலால் கோலி ஈராக்கிய காவல் படைகளில் கணக்காளராக பணிபுரிந்தார். மதன் மோகனின் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகள் மத்திய கிழக்கில் கழிந்தன.[3] 1932 க்குப் பிறகு, இவரது குடும்பம் பஞ்சாப் மாகாணத்தின் ஜீலம் மாவட்டத்திலுள்ள சக்வால் என்ற தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர்.[4] இவரது தந்தை வணிக வாய்ப்புகளைத் தேடி மும்பை சென்றார். இலாகூரில் உள்ள உள்ளூர் பள்ளியில் பயின்றார். இலாகூரில் தங்கியிருந்தபோது, ஒரு குறுகிய காலத்திற்கு கர்தார் சிங் என்பவரிடமிருந்து பாரம்பரிய இசையின் அடிப்படைகளை கற்றுக்கொண்டார். இருப்பினும் இசையில் முறையான பயிற்சியைப் பெறவில்லை.[5] சிறிது காலத்திற்குப் பிறகு, இவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. மும்பையில், தனது 11 வயதில், அனைத்திந்திய வானொலியில் ஒளிபரப்பப்படும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் ம்தன் மோகன் பாடத் தொடங்கினார். 17 வயதில், தேராதூனிலுள்ள கர்னல் பிரவுன் கேம்பிரிட்ஜ் பள்ளியில் பயின்றார். அங்கு தனது பள்ளிப்படிப்பின் கடைசி ஆண்டுகளை முடித்தார்.[6]
தொழில் வாழ்க்கை
தொகுஆரம்பகால தொழில்
தொகு1943ஆம் ஆண்டு இராணுவத்தில் இரண்டாவது லெப்டினன்ட்டாக சேர்ந்தார். இரண்டாம் உலகப் போர் முடியும் வரை இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். பின்னர் இராணுவத்திலிருந்து விலகி தனது இசை ஆர்வத்தைத் தொடர மும்பை திரும்பினார். 1946 ஆம் ஆண்டில், இலக்னோ அனைத்திந்திய வானொலியின் திட்ட உதவியாளராக சேர்ந்தார். அங்கு உஸ்தாத் பயாசு கான், உஸ்தாத் அலி அக்பர் கான், பேகம் அக்தர் மற்றும் தலத் மஹ்மூத் போன்ற பல்வேறு கலைஞர்களுடன் தொடர்பு கொண்டார். இந்த நாட்களில் அனைத்திந்திய வானொலியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் இவர் இசையமைப்பார். 1947 ஆம் ஆண்டில், தில்லியின் அனைத்திந்திய வானொலிக்கு சிறிது காலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த மதன் மோகனுக்கு 1947 ஆம் ஆண்டில் பெக்சாத் லக்னாவி எழுதிய இரண்டு கசல்களைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு, 1948 ஆம் ஆண்டில் தீவான் ஷாரர் எழுதிய இரண்டு தனி கசல்களைப் பதிவு செய்தார். 1948 ஆம் ஆண்டில், இசையமைப்பாளர் குலாம் ஐதரின் (ஷாஹீத் படத்திற்கான இசையமைப்பாளர்) கீழ் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடும் முதல் வாய்ப்பு கிடைத்தது, இருப்பினும் இந்த பாடல்கள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை அல்லது படத்தில் பயன்படுத்தப்படவில்லை. 1946 மற்றும் 1948 க்கு இடையில், தோ பாய் படத்திற்காக இசையமைப்பாளர்களான எஸ். டி. பர்மனுக்கு உதவியாளராக இருந்தார்.[7]
இசை வாழ்க்கை
தொகு1950 ஆம் ஆண்டில் முகமது ரபியுடன் சேர்ந்து ஆங்கேன் படத்தின் மூலம் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார். பின்னர், அதா படத்தின் மூலம் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பணியாற்றினார். ஷராபி படத்திற்காக இவர் இசையமைத்த இரண்டு பாடல்கள் தேவ் ஆனந்துக்காக படமாக்கப்பட்டவை. மேலும் முகமது ரபியின் மிகவும் பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்றாகும். மதன் தனது திரைப்படங்களுக்காக பாடலாசிரியர்களான ராஜா மெஹ்தி அலி கான், கைபி ஆசுமி மற்றும் ராஜீந்தர் கிரிஷன், ஸாஹிர் லுதியான்வி மற்றும் மச்ரூக் சுல்தான்புரி ஆகியோரை பாடல்களை எழுத வைத்தார்.
ஐம்பதுகளின் பிற்பகுதி, அறுபதுகளின் முற்பகுதி மற்றும் எழுபதுகளின் முற்பகுதியில் மதன் மோகனின் இசை வாழ்க்கை புகழ் பெற்றதாக இருந்தது. அன்பாத், அதாலத், அன்பத், துல்ஹான் ஏக் ராத் கி, மேரா சயா, தஸ்தக், ஹன்ஸ்டே சக்ம், ஹீர் ராஞ்சா, சல்பாஸ், மகாராஜா மற்றும் மவுசம் போன்ற பல படங்கள் இதில் அடங்கும். 1970 ஆம் ஆண்டில், மேற்கத்திய இசையின் மாறிவரும் காலங்களில், ராஜீந்தர் சிங் பேடியின் இயக்கத்தில் தஸ்தக் திரைப்படத்தில் ராகங்களை அடிப்படையாகக் கொண்டு இசையினை வழங்கினார். இப்படத்திற்காக சிறந்த இசை இயக்கத்திற்கான 1971 ஆம் ஆண்டின் தேசிய திரைப்பட விருதினையும் வென்றார். லதா மங்கேஷ்கர் பாடிய படத்தின் பாடல்கள் இன்றும் அவரது மிகச்சிறந்த பாடல்களாக கருதப்படுகின்றன.[8]
வோ கௌன் தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான 1964 பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இறுதியில் புதுமுகம் இலட்சுமிகாந்த்-பியாரேலால் ஆகிய இரட்டை இசையமைப்பாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இறப்பு
தொகுமதனின் தொடர்ச்சியான போராட்டங்கள் அவரது தொழில் வாழ்க்கையை பாதித்தன. மேலும் அதிகமாக குடிக்கத் தொடங்கினார். கல்லீரல் ஈரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த இவர் ஜூலை 14,1975 அன்று இறந்தார். [9]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ishtiaq Ahmed (16 September 2016). "The Punjabi contribution to cinema - XII". The Friday Times (newspaper). https://www.thefridaytimes.com/the-punjabi-contribution-to-cinema-xii/.
- ↑ Arunachalam, Param (21 June 2015) Bollywood Retrospect: The musical legacy of composer Madan Mohan in 5 songs. DNA India. Retrieved 9 November 2018.
- ↑ Manek Premchand (27 December 2018). Yesterday's Melodies Today's Memories. Notion Press. pp. 251–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-64429-877-0.
- ↑ His Journey. madamohan.in.
- ↑ Snapshot. madanmohan.in.
- ↑ Book extract: Mohammed Rafi – Golden Voice of the Silver Screen. DNA India (3 January 2016). Retrieved 9 November 2018.
- ↑ Late Mohammed Rafi was a music director's delight, says author Sujata Dev. The Times of India. 30 September 2015.
- ↑ Incredible Sweet Sound – Madan Mohan பரணிடப்பட்டது 25 அக்டோபர் 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Sanjeev Kohli gets candid about his father the Late Madan Mohan. M.filmfare.com (12 May 2018). Retrieved 9 November 2018.
நூல் ஆதாரப்பட்டியல்
தொகு- Gulzar; Govind Nihalani; Saibal Chatterjee (2003). Encyclopaedia of Hindi Cinema. Popular Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-066-5.
வெளி இணைப்புகள்
தொகு- madanmohan.in, website on Madan Mohan, created and maintained by his sons
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Madan Mohan
- Eternal composition called Madan Mohan, tribute piece on Madan Mohan