முடியாட்சி

(மன்னராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முடியாட்சி (monarchy) என்பது, அரசின் ஒரு வடிவம் ஆகும். இதில், அதியுயர் அதிகாரம் முழுமையாகவோ அல்லது பெயரளவுக்கோ ஒரு தனிப்பட்டவரிடம் இருக்கும். இவரே அரசின் தலைவராவார். அத்துடன் இவர் நாட்டு மக்களிலும் வேறான தனி உரிமைகளைக் கொண்டிருப்பார். இந்த அரசுத் தலைவர் மன்னர், அரசர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுவார். முடியாட்சியில் மன்னருக்கான அதிகாரமானது தற்காலத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. மன்னருக்கு முழுமையான அதிகாரமற்று முற்றிலும் குறியீடாக (கிரீடம் பெற்ற குடியரசு), பகுதியளவு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் (அரசியலமைப்பு முடியாட்சி), முற்றிலும் சர்வாதிகாரம் (முழுமையான முடியாட்சி) என்று வேறுபடுகிறது. பாரம்பரியமாக மன்னர் இப்பதவியில் அவர் தனது வாழ்நாள் முழுவதும் அல்லது பதவியில் இருந்து விலகும் வரை வகிப்பார். அதன்பிறகு மரபுரிமையில் அடுத்த அரசர் பதவிக்கு வருவார்.   ஆனால் தேர்தலின் வழியாகக்கூட முடியாட்சிகளில் மன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

  குறைநிலை அரசியல்சட்ட முடியாட்சி
  துணைத்தேசிய முடியாட்சி (பகுதிப் பட்டியல்)

முடியாட்சி என்பதற்குத் தெளிவான வரைவிலக்கணம் கிடையாது. ஐக்கிய இராச்சியம், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள அரசியல்சட்ட முடியாட்சிகளில் அரசுத் தலைவருக்கு முழுமையான அதிகாரம் கிடையாது. இதனால், எல்லையற்ற அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருத்தல் என்பதை முடியாட்சியை வரையறுக்கும் ஒரு இயல்பாகக் கொள்ள முடியாது. தலைமுறை ஆட்சி ஒரு பொது இயல்பாக இருப்பினும், தேர்வு முடியாட்சிகளும் உள்ளன. எடுத்துக் காட்டாக வத்திக்கானின் அரசராகக் கருதப்படும் திருத்தந்தையை கர்தினால்கள் தேர்வு செய்கின்றனர். சில நாடுகளில் தலைமுறை அரசுரிமை இருந்தாலும் அவை குடியரசாகக் கொள்ளப்படுகின்றன.

13 ஆம் நூற்றாண்டில் வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் முடிசூட்டுவிழாவில் திருமுழுக்கு பெறும் காட்சி.

19 ம் நூற்றாண்டு வரை முடியரசானது மிகவும் பொதுவான வடிவமாக இருந்தது, ஆனால் இது நீண்டகாலம் நீடிக்கவில்லை. இப்போது பொதுவாக அரசியலமைப்பு முடியாட்சியே நிலவுகிறது.  இதில் மன்னர் ஒரு சட்ட மற்றும் சடங்கு பாத்திரத்தையே வகிக்கிறார், அரசருக்கு குறைந்த அதிகாரம் அல்லது அரசியல் அதிகாரம் இல்லாத நிலையோ உள்ளது:  எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத அரசியலமைப்பின் கீழ், மற்றவர்கள் ஆளும் அதிகாரத்தை கொண்டுள்ளனர். தற்சமயம் உலகில் 47 நாடுகள் முடியாட்சி முறையைக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் 19 நாடுகள் பொதுநலவாய நாடுகள் குழுவைச் சேர்ந்தவை. இவை ஐக்கிய இராச்சியத்தின் அரசர் அல்லது அரசியைத் தமது அரசுத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளன. வத்திக்கான் நகரத்தைத் தவிர, அனைத்து ஐரோப்பிய முடியாட்சிகளும் அரசியலமைப்பு முடியாட்சிகளாகும்,   ஆனால் சிறிய நாடுகளில் உள்ள அரச இறையாண்மையானது பெரிய நாடுகளின் அரசர்களைவிட தங்கள் நாடுகளில் பெரிய அரசியல் செல்வாக்கைக் கொண்டதாக உள்ளது. கம்போடியா, ஜப்பான், மலேசியாவில் மன்னராட்சி என்றாலும், அவர்கள் அதிகாரத்தின் அளவுக்கு கணிசமான மாறுபாடுகள் உள்ளன. அவை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆட்சி செய்தாலும், புரூணை, மொராக்கோ, ஓமன், கத்தார், சவூதி அரேபியா, சுவாசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள எந்தவொரு தனித்துவமான அதிகாரத்தையும் விட அதிகமான அரசியல் செல்வாக்கை அரசியலமைப்பாலோ அல்லது பாரம்பரியங்களாலோ மன்னர்களால் தொடர்ந்து பயன்படுத்துவது தொடர்கிறது.

சொற்பிறப்பு தொகு

முடியாட்சியை ஆங்கிலத்தில் குறிக்கும் சொல்லான "monarch" (இலத்தீன்: monarcha) என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லான μονάρχης, monárkhēs இருந்து வருந்தது. தற்போதைய பயன்பாட்டில், முடியாட்சி என்ற சொல் வழக்கமாக பரம்பரை ஆட்சியின் பாரம்பரிய முறைமையை குறிக்கிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட முடியாட்சிகள் அரிதானதாக இருந்தன.

மன்னர் தலைமையின் பட்டப் பெயரைப் பொறுத்து, முடியாட்சியானது பல்வேற நாடுகளில் கிங்டம், பிரின்சிபாலிட்டி, டச்சீ, பேரரசர், பேரரசு, சாம்ரோம், எமிரேட், சுல்தானகம், கஹானேட் போன்றவாறு குறிப்பிடப்படுகிறது.

வரலாறு தொகு

 
முடியாட்சி அதிகாரத்தின் சின்னங்களான செங்கோல் மற்றும் குளோபஸ் க்ருசிகெர் ஆகியவற்றை ஏந்திய போலந்தின் மூன்றாம் சிங்கிஸ்முட் மன்னர்.

வாரிசு தலைமை அல்லது பரம்பரை அரசாட்சி என்று அறியப்படும் சமூக பரம்ரை ஆட்சிமுறை வடிவமானது வரலாற்றுக்கு முந்தையது. மரபுசார் பழங்காலத்தில் மன்னர் பெரும்பாலும் ஆங்கிலத்தில் "கிங்" (king) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து, எகிப்திய மற்றும் மெசொப்பொத்தேமியா முடியாட்சிகள், அதேபோல் புரோடோ-இந்தோ-ஐரோப்பிய சமயக் காலங்களில், மன்னர் என்பவர் புனிதத்தன்மை கொண்டவர்கள், அல்லது வழிபாட்டுக்கு உரிய பேரரசர் எனக் கருதப்பட்டனர்.

இடைக்காலத்தில் ரோமானிய சாம்ராச்சிய மன்னர்கள் கிறித்தவத்தின் பாதுகாப்பாளராகவும் "தெய்வீக உரிமைபடைத்த அரசர்கள்" என்ற கருத்தை உருவாக்க புனித அம்சங்களுடன் இணைக்கப்பட்டனர்.  சீனா, ஜப்பானிய, நேபாள மன்னர்களும் நவீன காலத்திய கடவுளாக வாழ்கின்றனர்.

பழங்காலத்தில் இருந்து, முடியாட்சியின் ஜனநாயக வடிவங்கள் வேறுபடுகின்றன, அங்கு நிர்வாக சக்திகள் குடிமக்களின் பங்களிப்பு அற்ற அவைகள் மூலம் கையாளப்பட்டன.

பழங்கால ஜெர்மனியில், அரசதிகாரம் என்பது முதன்மையான ஒரு புனித அம்சம் கொண்டதாக கருதப்பட்டது, மேலும் அரசர் என்பவர் சில மரபினரின் பரம்பரையின் நேரடி வாரீசாக இருந்தார், அதே சமயம் அவையோர்களால் அவர் அரச குடும்பத்தில் தகுதி வாய்ந்த அங்கத்தினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1649 இல் இங்கிலாந்தின் பாராளுமன்றம் ஆங்கிலேய முடியாட்சியைத் தற்காலிகமாக தூக்கியெறிந்து, 1776 ஆம் ஆண்டின் அமெரிக்கப்புரட்சி மற்றும் 1792 பிரெஞ்சுப் புரட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து பாராளுமன்றவாதமும், முடியாட்சி எதிர்ப்புவாதமும் நவீன காலத்தில் எழுச்சியடையத் தொடங்கியது. 19 ம் நூற்றாண்டு அரசியலின் பெரும்பகுதி, முடியாட்சிக்கான எதிர்ப்பு வாதம் மற்றும் முடியாட்சியாளர் பழமைவாதம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள பிளவுகளால் வகைப்படுத்தப்பட்டது.

பல நாடுகள் 20 ம் நூற்றாண்டில் முடியாட்சியை அகற்றின, குறிப்பாக முதலாம் உலகப் போரின்போது அல்லது இரண்டாம் உலகப் போரின்போது குடியரசுகளாக மாறின. குடியரசுக்காக வாதிடுதலை குடியரசுக் கட்சியினர் என்று அழைப்பர், அதே நேரத்தில் முடியாட்சிக்கு ஆதரவான வாதத்தை முடியாட்சிவாதிகள் என்று அழைக்கின்றனர். நவீன சகாப்தத்தில், முடியாட்சியானது பெரிய நாடுகளைவிட சிறிய நாடுகளில் கூடுதலாக உள்ளன.[2]

பண்புகள் தொகு

முடியாட்சியானது பெரும்பாலும் மரபுரிமை ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சியில் மன்னர் தன் ஆயுள் முழுவதும் மன்னராக இருப்பார். (சில முடியாட்சிகளில் மன்னர்களின் வாழ்நாள் முழுவதும் ஆள்தில்லை: உதாரணமாக, மலேசியாவின் யாங் டி பெர்துவான் அகோங் ஐந்து வருட காலத்திற்கு ஆள இயலும்) மேலும் மன்னர் இறக்கும் போது அவரின் குழந்தை அல்லது அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் அதிகாரத்தை அடைவார். வரலாற்று காலத்திலும் நவீன நாளிலும் பெரும்பாலான பேரரசர்கள், அரச குடும்பத்தில் பிறந்து அரசவையை பார்த்து வளர்ந்தவர்களே. பெரும்பாலும் முடியாட்சியினல் எதிர்காலத்தில் மன்னராக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்படும் வாரீசுக்கு எதிர்கால ஆட்சிப் பொறுப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

முடியாட்சி முறைமையின் குறைகள் தொகு

ஒரு அரசனால் ஒரு நாட்டின் அரசு ஆளப்படுவதே முடியாட்சி அல்லது மன்னராட்சி எனப்படும். முடியாட்சியை மக்களாட்சியுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். முடியாட்சி ஆட்சியமைப்பில் பல குறைகள் உண்டு.

 • சட்டமியற்றல், நிர்வாகம், நீதிபரிபாலனம் ஆகியவற்றின் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும். அதாவது, அரசனே பொதுவாக மூன்று அம்சங்களையும் கட்டுப்படுத்துபவனாக அமைகின்றான். இது சர்வதிகாரத்துக்கு வழி சமைக்கின்றது.
 • சர்வதிகாரம்
 • மக்கள் அதிகாரம் அற்றோராக இருத்தல்.
 • அரசு கொள்கையடிப்படையில் அமையாமல், அரசனின் விருப்பு/வெறுப்பு திறன்/திறன் இன்மை ஏற்ப அமைய ஏதுவாகின்றது.
 • அரசன் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டியவனாக இருக்கின்றான். அல்லது குறைந்த பட்சம் நல்ல அமைச்சர் மற்றும் பிற துறைசார் திறன்களைத் தேடிக்கொள்ள வேண்டியவனாக இருக்கின்றான். இது தனிமனிதனுக்கு பாரிய ஒரு சுமை.
 • கருத்து வேறுபாட்டுக்கு இடமின்மை. எப்படிப்பட்ட நல்லாட்சி மன்னன் ஆட்சியிலும் அவனது ஆட்சிக்கு எதிராக கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்யும். எதிரான கருத்துக்களுடன் ஒத்து அல்லது ஏற்றுப்போகவேண்டும், இல்லாவிட்டால் அதை வன்முறையால் அடக்கவேண்டும்.
 • பிறப்பு-சாதியை வலியுறுத்தும். பொதுவாக முடியாட்சி ஆட்சி மகன்வழியாகவே உரிமை கொள்ளப்படுகின்றது. தனது இருப்பை பிறப்பு வழியால் நியாயப்படுத்தும் ஒரு முறை பிறப்பு வழிச் சாதிய முறையையும் நியாப்படுத்தும்.
 • சமூக வர்க்க அசைவியக்கம் மட்டுப்படுதல்.
 • உரிமைப் போர்கள்: முடியாட்சி ஆட்சிமுறையில் அண்ணன் தம்பி, பல மனைவிமார் மகன்கள் என ஆட்சிபீட உரிமைக் கோரிக்கைக்காக நாட்டைப் போருக்கு இட்டுச் செல்வதை வரலாற்றில் காணலாம். தனிமனித அல்லது குடும்பப் பிரச்சினைகள் ஒரு நாட்டின் பிரச்சினையாக்கப்பட்டுப் போருக்கு காரணமாகின்றன.
 • வர்க்க இடைவெளி: அரசனுக்கும் மக்களுக்கும் பொருளாதார இடைவெளி பெரிதென்பதால், மக்களுடைய வாழ்வியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தருவதிலோ, மக்களின் வாழ்வுத்தரத்தை மேம்படுத்துவதிலோ அரசன் திறனுடன் இயங்குவதற்குத் தடையாக இருக்கும்.
 • திறன் இன்மை: பிறப்பால் அரசுரிமை பெற்ற ஒரு அரசன் அரசை வழிநடத்துவதற்குரிய திறனைத் தன்னகத்தே இயல்பாக கொண்டிருப்பான் என எதிர்பார்க்க முடியாது.
 • ஒரு மிகத்திறன் படைத்த கொண்ட அரசன் அரசு அமைத்தாலும், அப்படிப்பட்ட ஒரு அரசன் அவனைப் பின் தொடர்வது முடியாமல் போகும்போது, நாடு சீரழிந்து போகின்றது.
 • பிற திறன்படைத்தவர்கள் அரசாட்சி செய்வதற்கு வழியின்மை.
 • வரலாற்றில் அரசன் ஆடம்பரமான சாதாரண மக்களோடு ஒப்பீடு செய்யமுடியாத வாழ்வுநிலையைக் கொண்டிருந்தையே முடியாட்சி முறையில் காணலாம்.

புறநானூற்றில் அரசனின் அதிகார கட்டமைப்பு தொகு

 • "புறநானூற்றுப் பாடல்களில் ஒரு தனிமனிதனின் அதிகாரம், "மன்னன்" என்ற தளத்தில் நேரடியாகக் கட்டப்படுவதை எளிதாக ஒருவர் கண்டு கொள்ளலாம். மன்னன் எதிரிநாட்டு மக்கள்குப் பயங்கரமானவன்; எதிர்நாட்டை தீயிட்டுக் கொளுத்துபவன், எதிரிநாட்டுப் பெண்களுக்கு அச்சம் தரத்தக்கவன்;...சிதைத்தலில் வல்ல நெடுந்தகை அவன். இப்படி உடல் சார்ந்து வேற்றுநாட்டின் மேல் அதிகாரத்தை காட்டும் மன்னன் செயல்கள் புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றில் பரக்கக் காணலாம். இது வெளிப்படையான செயல்பாடு. ஆனால் தன் ஆளுகைக்கு உட்பட்ட தன்நாட்டு மக்களின் மனத்தில், அவர்கள் அறியாமலேயே, தன் அதிகாரத்தை அவர்கள் தானே முன்வந்து இயல்பாக ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு மனவியலைக் கட்டமைக்கிற சொல்லாடல்தான் அதிகார அரசியலின் உச்சகட்ட தந்திரமாக படுகின்றது." [3]
 • "மன்னன் - புலவர் உறவில் பளிச்செனப் படுவது ஒருவர் வள்ளல்; ஒருவர் இரவலர் என்று கட்டப்பட்டுள்ள முரண்தான். எப்பொழுதுமே அதிகாரம் தன்னைவிட எளிய உருவகங்களை உருவாக்கி, அவைகள் தன்னை சார்ந்து வாழும்படியான ஒரு அமைப்பை வடிமைத்து கொள்ளும்." [4]
 • "புலவர் கடிந்துகொள்ளும் போதும் அதிகாரத்திற்கு எதிரான குரல் ஒலிப்பது போலத் தோன்றினாலும், இத்தகைய சொல்லாடல்களிலும் உள்ளுறைந்து வினைபுரிவது மன்னனின் அதிகாரக்கட்டமைப்புச் செயல்பாடுதான். தன்னை விமர்சிக்கிற குரலையும் உள்வாங்கி, தன்னைத் திருத்தி வளர்த்தெடுத்துக் கொள்ளும் மாமனிதன் என்ற கட்டுமானமே இத்தகையே சொல்லாடல் மூலம் மனத்தில் பதிவாகின்றது." [5]
 • "தாயைத் தியாகம் செய்யும்படியாகவும், அரசின் அதிகாரத்துக்கு ஏற்ப மகனை வளர்த்துக் கொடுக்கும்படியாகவும் தாயின் மனோபாவத்தை வடிவமைக்கின்றது." [6]

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. Stuart Berg Flexure and Lenore Carry Hack, editors, Random House Unabridged Dictionary, 2nd Ed., Random House, New York (1993)
 2. Veenendaal, Wouter (2016-01-01). Wolf, Sebastian. ed (in en). State Size Matters. Springer Fachmedien Wiesbaden. பக். 183–198. doi:10.1007/978-3-658-07725-9_9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783658077242. http://link.springer.com/chapter/10.1007/978-3-658-07725-9_9. 
 3. க. பஞ்சாங்கம். (2004). தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள். புதுவை: வல்லினம். பக் 80-81.
 4. க. பஞ்சாங்கம். (2004). தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள். புதுவை: வல்லினம். பக் 81.
 5. க. பஞ்சாங்கம். (2004). தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள். புதுவை: வல்லினம். பக் 82.
 6. க. பஞ்சாங்கம். (2004). தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள். புதுவை: வல்லினம். பக் 85.

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Monarchy
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முடியாட்சி&oldid=3590162" இருந்து மீள்விக்கப்பட்டது