மலேசிய அரசியலமைப்பு 153-ஆவது பிரிவு

மலேசிய அரசியலமைப்பில் ஒரு பிரிவாகும்

மலேசிய அரசியலமைப்பு 153-ஆவது பிரிவு (ஆங்கிலம்: Article 153 of the Constitution of Malaysia; மலாய்: Perkara 153 Perlembagaan Malaysia); என்பது மலேசிய அரசியலமைப்பில் ஒரு பிரிவாகும்.

இந்தப் பிரிவு மலாய்க்காரர்கள் (see note) மற்றும் சபா; சரவாக் மாநிலங்களின் பூர்வீகவாசிகளின் சிறப்பு நிலையைப் "பாதுகாக்கும்" பொறுப்பை மலேசியாவின் மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களுக்கு வழங்குகிறது.

மற்ற சமூகங்களின் நியாயமான நலன்கள் மற்றும் பொதுச் சேவை; பொது உதவித் தொகை; பொதுக் கல்வி ஆகியவற்றுக்கான வழி முறைகளையும் மலேசிய அரசியலமைப்பு 153-ஆவது பிரிவு குறிப்பிடுகிறது.

பொது

தொகு

153-ஆவது பிரிவு, மலேசிய அரசியலமைப்பில் மிகவும் சர்ச்சைக்குரிய பிரிவுகளில் ஒன்றாகும். பல்வேறு இனப் பின்னணிகளைக் கொண்ட மலேசியர்களிடையே தேவையற்ற, இனவாத வேறுபாட்டை, இந்தப் பிரிவு உருவாக்குவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.[1][2]

ஏனெனில் இது பெரும்பான்மையான மக்கள்தொகை கொண்ட பூமிபுத்ரா மக்களுக்கு மட்டுமே பயனளிக்கும் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. 153-ஆவது பிரிவை ரத்து செய்வது பற்றி விவாதிப்பது சட்டவிரோதமானது.[3]

விவாதம் செய்வதற்கு தடை

தொகு

நாடாளுமன்றத்தில் கூட, 153-ஆவது பிரிவை ரத்து செய்வது பற்றி விவாதிப்பது சட்டவிரோதமானது என அரசியலமைப்பின் தற்காலிக விதியாக, (அத்தியாயம்: 10 பிரிவு 4); (Article 10 section 4) வரையறுக்கப்பட்டு உள்ளது. [4]

அதைப் பற்றி விவாதம் செய்வதற்குத் தடை இருந்த போதிலும், அந்தப் பிரிவு தொடர்பான விசயங்கள், மலேசியர்கள் இடையே தனிப்பட்ட முறையிலும் மற்றும் பகிரங்கமாகவும் விவாதிக்கப் படுகின்றன.[5]

அந்த அரசியலமைப்பு பிரிவைச் செயல் படுத்துவதற்கு எதிரான கருத்துகளும் உள்ளன; வெளிப்படையான ஆதரவுகளும் உள்ளன. இருப்பினும்கூட, அந்த அரசியலமைப்பு பிரிவு, பலராலும் உணர்ச்சிகரமான விசயமாகப் பார்க்கப் படுகின்றது.

அந்தப் பிரிவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள் அல்லது அந்தப் பிரிவை எதிர்க்கும் அரசியல்வாதிகள் பெரும்பாலும் இனவெறியர்கள் என முத்திரை குத்தப் படுகிறார்கள்.

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சட்டப் பிரிவு

தொகு

சீனத் தொழிலாளர்கள் மற்றும் இந்தியத் தொழிலாளர்கள் மலாயாவிற்குள் குடியேறியதால், மலாயா பூர்வீக மக்களைப் பாதுகாப்பதற்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சட்டப் பிரிவு. முந்தைய சட்டங்களின் தொடர்ச்சியில், இந்த மலேசிய அரசியலமைப்பு 153-ஆவது பிரிவு முதன்மையாகக் கருதப் படுகிறது.

1957-ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு, சீனர்களும் இந்தியர்களும் பொதுவாகவே, வசதி பெற்ற நகரவாசிகளாகக் கருதப் பட்டனர்.

ஏழ்மை இந்தியத் தொழிலாளர்கள்

தொகு

தோட்டப் புறங்களில் வாழ்ந்த ஏழ்மை நிலையிலான இந்தியத் தொழிலாளர்கள் கருத்தில் கொள்ளப் படவில்லை. நகர்ப் புறங்களில் வசதியாக வாழ்ந்த மலேசிய சீனர்களைக் கொண்டு அனுமானிக்கப் பட்டது.

அதே சமயத்தில் பூமிபுத்ரா மக்கள் பெரும்பாலும் ஏழை விவசாயிகளாக அல்லது கைத்தொழிலாளர்களாக இருந்தனர் என்றும் குறிப்பிடப் பட்டது.

தோற்றம்

தொகு

மலேசிய அரசியலமைப்பு 153-ஆவது பிரிவின் முதல் விதி: "இந்தப் பிரிவின் விதிகளின்படி அரசாங்கம் செயல்பட வேண்டும்" என்று குறிப்பிடுகிறது.

ரீட் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. மலேசியாவின் நிலுவையில் இருந்த சுதந்திரத்திற்கு முன்னதாக ஓர் அரசியலமைப்பிற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த ரீட் ஆணையம்.

ரீட் ஆணையம்

தொகு

மலாயாவை சுயமாகச் சுதந்திரமாக ஆளும் ஒரு கூட்டமைப்புக்கு ஓர் அரசியலமைப்பை வகுக்க வேண்டும்; அதற்கு ஓர் ஆணையத்தை நியமிக்க வேண்டும்; என அந்த அரசியலமைப்பு மாநாடு முன்மொழிந்தது.[6] அந்த முன்மொழிவை இரண்டாம் எலிசபெத் ராணியாரும்; மலாயா மலாய் ஆட்சியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.

அத்தகைய ஓர் உடன்படிக்கைக்கு இணங்க, காமன்வெல்த் நாடுகளின் அரசியலமைப்பு வல்லுநர்களைக் கொண்டு ஓர் ஆணையம் அமைக்கப் பட்டது. அதற்குப் பெயர் ரீட் ஆணையம்.

ரீட் ஆணையத்தின் அறிக்கை

தொகு

புதிய அரசியலமைப்பிற்குப் பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்காக வில்லியம் ரீட் (Lord William Reid) என்பவரின் தலைமையில் அந்த ஆணயம் அமைக்கப் பட்டது.

ரீட் ஆணையத்தின் அறிக்கை 11 பிப்ரவரி 1957-இல் தயாரித்து முடிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரித்தானிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு பணிக்குழு; மலாயா ஆட்சியாளர்களின் சம்மேளனம்; மலாயா கூட்டமைப்பு அரசாங்கம்; ஆகிய மூன்று தரப்பினரால் ரீட் ஆணையத்தின் அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் இவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மலாயாவின் அரசியலமைப்பு இயற்றப்பட்டது.[7]

மலாய்க்காரர்களின் சிறப்பு நிலை

தொகு

"சுதந்திரமான மலாயாவில் அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமைகள், சமச் சலுகைகள் மற்றும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்; இனம் மற்றும் மத அடிப்படையில் பாகுபாடு இருக்கக் கூடாது" என்பதை உறுதிப் படுத்துமாறு ரீட் ஆணையத்திடம் துங்கு அப்துல் ரகுமான் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

இருப்பினும், மலாய்க்காரர்களின் சிறப்பு நிலை அவசியமானது என்பதை அப்போதைய ஆளும் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பில் (United Malays National Organisation) இருந்த பலர் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடப்பட்டது.

சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிகள் மலாயா அரசியலமைப்பு பிரிவின் 3, 152 மற்றும் 153 (Articles 3, 152 and 153 of the Constitution) பிரிவுகளாகச் சேர்க்கப் பட்டன.[8][9]

மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை

தொகு

அப்போது, துங்கு அப்துல் ரகுமான், கூட்டணிக் கட்சியின் தலைமைக் கட்சியான அம்னோவின் (UMNO) கட்சியின் தலைவராக இருந்தார். இந்தக் கூட்டணி அமைப்பு பின்னர் பாரிசான் நேசனல் ஆனது. துங்கு அப்துல் ரகுமான் மலேசியாவின் முதல் பிரதமரானார்.

(காண்க: மலேசிய அமைச்சரவைகளின் பட்டியல்)

துங்கு அம்னோவின் தலைவர் பதவிக்கு வந்தபோது, மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் மலாயாவுக்கு விசுவாசமாக இருப்பது குறித்து சந்தேகம் தெரிவித்தார்.

அதன் விளைவாக, மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப் படுவதற்கு முன்பு அந்தச் சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.[10]

நாட்டிற்கு பிளவுபடாத விசுவாசம்

தொகு

இருப்பினும், "இந்த நாட்டிற்குத் தங்களின் பிளவுபடாத விசுவாசத்தைத் தெரிவிப்பவர்களை மலாயா நாட்டு மக்களாக நாம் வரவேற்போம். மலாய்க்காரர்களைப் போலவே அவர்களுக்கும் உரிமைகள் மற்றும் சலுகைகள் இருக்கும்" என்று துங்கு கூறினார்.[11]

ரீட் ஆணையம் தயாரிக்கப்படும் போது மலாய்க்காரர்களுக்கு தற்போது உள்ள சலுகைகளில் கூடுதலான நில ஒதுக்கீட்டுச் சலுகை வழங்கப்பட வேண்டும் எனும் பரிந்துரை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

"ஒரு குறிப்பிட்ட சேவையில, புதிதாகச் சேர்பவர்களில் கால் பங்கிற்கு மேல் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் இருக்கக் கூடாது" என்ற பொது விதியுடன் பொதுச் சேவைகளில் சேருவதற்கான ஒதுக்கீட்டை ஆணையம் கண்டறிந்தது.

மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை

தொகு

சில வணிகங்களுக்கான அனுமதிகள் அல்லது உரிமங்களை வழங்குவது தொடர்பாகச் செயல்பாட்டு ஒதுக்கீடுகள் இருந்தன. "முக்கியமாகச் சாலைப் போக்குவரத்து அனுமதிகள் அல்லது உரிமங்கள்; மற்றும் வாடகைப் பயணி வாகனங்களுக்கான அனுமதிகள் அல்லது உரிமங்கள்."

மேலும், "உதவித் தொகைகள், உதவிச் சம்பளம், கல்வி நோக்கத்திற்கான பிற வகையான உதவிகள்" போன்றவற்றில் மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை வழங்குவது."

ரீட் ஆணையத்தின் பரிந்துரை

தொகு

மற்ற சமூகங்களுடன் ஒப்பிடுகையில், மலாய்க்காரர்களுக்கான சிறப்புச் சலுகைகள் திடீரென மீட்கப்பட்டால், அவர்கள் கடுமையான நியாயமற்ற பாதகங்களுக்கு உள்ளாவார்கள் என்று ரீட் ஆணையம் பரிந்துரை செய்தது.

அதனால், தற்போதுள்ள மலாய்க்காரர்களுக்கான சிறப்புச் சலுகைகள் தொடர வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்தது. இருப்பினும், "சரியான நேரத்தில் தற்போதைய சலுகை விருப்புத் தேர்வுகள் குறைக்கப்பட வேண்டும். இறுதியில் நிறுத்தப்பட வேண்டும்" என்றும் ஆணையம் பரிந்துரைத்தது.

15 ஆண்டுகளில் மறுபரிசீலனை

தொகு

இந்தச் சிறப்புச் சலுகை விதிகள், அடுத்து வரும் 15 ஆண்டுகளில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்; அது குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் "இந்தச் சிறப்புச் சலுகை விதிகளைத் தக்க வைப்பது அல்லது குறைப்பது அல்லது முழுவதுமாக நிறுத்துவதைப் பற்றி நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும்" என்றும் ரீட் ஆணையம் பரிந்துரைத்தது.

மலாயா அரசியலமைப்பு திருத்தம்

தொகு

தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட மலேசிய அரசியலமைப்பு 153-ஆவது பிரிவில் மலாயாவின் ஓராங் அஸ்லி பழங்குடி மக்களுக்கான சிறப்புச் சலுகை விதிகள் பற்றி எதுவும் குறிப்பிடப் படவில்லை.

1963-ஆம் ஆண்டில் சிங்கப்பூர், சபா மற்றும் சரவாக் ஆகிய நிலப்பகுதிகள் மலாயாவில் இணைந்தன.

அதன் மூலம், கிழக்கு மலேசியா: (சபா; சரவாக்) பழங்குடி மக்களுக்கும்; மலாய்க்காரர்களுக்கான சிறப்புச் சலுகைகள் போன்ற சிறப்புச் சலுகைகளை வழங்கும் வகையில் மலாயா அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது. பின்னர் சபா, சரவாக் பழங்குடி மக்களுக்கும் மலாய்க்காரர்களின் பூமிபுத்ரா தகுதி வழங்கப்பட்டது.

சர்ச்சைகள்

தொகு

மலேசியாவில் வாழும் சீனர்கள்; இந்தியர்கள் பலரும் தாங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப் படுவதாக உணர்கின்றனர். ஏனெனில் 19-ஆம் நூற்றாண்டில் இருந்து, அவர்கள் தலைமுறை தலைமுறைகளாக மலாயாவில் வாழ்ந்து வருகின்றனர். 1950-களின் பிற்பகுதி வரை, வாழ்ந்த சீனர்கள் இந்தியர்கள் சிலருக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்படவில்லை.

இருப்பினும், சீனர்கள்; இந்தியர்கள் பொருளாதார நோக்கங்களுக்காக மட்டுமே மலாயாவிற்கு வந்தனர் என்றும்; தோட்டங்கள் மற்றும் சுரங்கங்களில் வேலை செய்தனர் என்றும்; பெரும்பாலான மலாய்க்காரர்கள் நினைக்கின்றனர்.

மலேசியப் புதிய பொருளாதாரக் கொள்கை

தொகு

1970-களில், மலாய்க்காரர்களுக்கும் மலாய்க்காரர்கள் அல்லாதவருக்கும் இடையே நிலவும் பொருளாதார ஏற்றத் தாழ்வைத் தீர்க்க, "மலேசியப் புதிய பொருளாதாரக் கொள்கை" (ஆங்கிலம்: "Malaysian New Economic Policy") உருவாக்கப்பட்டது. அதன் மூலமாகக் கணிசமான அளவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் செய்யப் பட்டன.

1980 - 1990ஆம் ஆண்டுகளில், மலாய்க்காரர் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கு மேலும் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. அத்தகைய நடவடிக்கைகளுக்காக பொதுவான எதிர்ப்புகள் எழுந்தாலும், மே 1969 இனக் கலவரத்திற்குப் பிறகு அந்த எதிர்ப்புகள் தளர்ந்து போயின.

சட்டப் பிரிவின் தெளிவற்ற நிலை

தொகு

மலேசியாவின் தொடக்கக் காலத்தில் இருந்தே இந்த மலேசிய அரசியலமைப்பு 153-ஆவது பிரிவு சர்ச்சைக்கு உரியதாக இருந்து வருகிறது. குறிப்பாக, அன்றைய மலாய்க்காரர்களின் பொருளாதார நிலையை முன் வைத்து சட்டப்பிரிவு 153 இயற்றப் பட்டதா அல்லது பூமிபுத்ரா என்பதன் மூலம் அவர்களைச் சிறப்புக் குடிமக்களாக அங்கீகரிப்பதற்காக இயற்றப் பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, நாடாளுமன்றத்தில் ஒரு முறை, 153-ஆவது சட்டப் பிரிவின் அவசியத்தைப் பற்றி பகிரங்கமாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.

மலேசியச் சமூக ஒப்பந்தம் எனும் ஓர் உரையில், லீ குவான் யூ சொன்னது:[12]

லீ குவான் யூ உரை

தொகு

"வரலாற்றின் படி, மலாய்க்காரர்கள் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்புதான் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மலேசியாவிற்குள் குடியேறத் தொடங்கினார்கள். இன்று மலேசியாவில் உள்ள மலாய்க்காரர்களில், மூன்றில் ஒரு பகுதியினர் (39%), மலாயாவில் புதிதாகக் குடியேறியவர்கள்."

"அம்னோவின் பொதுச் செயலாளர் டத்தோ சையத் ஜாபர் அல்பார், அவரே இரண்டாம் உலகப் போருக்கு சற்று முன்பு தான், தன்னுடைய முப்பதாவது வயதில் இந்தோனேசியாவில் இருந்து மலாயாவுக்கு வந்தவர்."

"எனவே, ஒரு குறிப்பிட்ட இனக் குழுவினர் தங்களை மட்டும் மலேசியர்கள் என்றும்; மற்ற இனத்தவர்கள் தங்கள் ஆதரவின் மூலமாக மட்டுமே மலேசியர்களாக மாற முடியும் என்று நினைப்பது தவறானது; நியாயமற்றது."[13]

மலேசியா யாருக்குச் சொந்தம்?

தொகு

அரசாங்கத்தின் கொள்கைகளை லீ குவான் யூ மேலும் விமர்சித்தார்:

"அதிகப் போட்டித் தன்மையில் மலாய்க்காரர் அல்லாத சமூகங்கள், உருவாக்கிய உயர்க் கல்வியாளர்கள் போன்று மலாய்க்காரக் குடிமக்களும் அந்த நிலைக்குச் செல்ல வேண்டும். அதைத்தான் செய்ய வேண்டும். மூடத்தனமான கோட்பாட்டை ஊட்டக் கூடாது.

"மலேசியா யாருக்குச் சொந்தம்? மலேசியர்களுக்குச் சொந்தமானது. ஆனால் மலேசியர்கள் யார்?" அவ்வாறு லீ குவான் யூ மலேசிய நாடாளுமன்றத்தில் பேசியது பலரை வருத்தப் படுத்தியது. குறிப்பாகக் கூட்டணியைச் சேர்ந்த அரசியல்வாதிகளை வேதனைப் படுத்தியது.

அரசியல் உறவுகள் சீர்குலைவு

தொகு

அப்போது மலேசியாவின் நிதி அமைச்சராக இருந்த டான் சியூ சின் "மலேசியாவின் வரலாற்றில் லீ குவான் யூ, ஒரு மிகப் பெரிய சீர்குலைக்கும் சக்தி" ; "மலேசியச் சீனர்களை ஏமாற்றும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்" என்று லீ குவான் யூவை வர்ணித்தார்.

துங்கு தன் பார்வையில் லீ குவான் யூ ஒரு தீவிரவாதி எனும் கருத்தை முன்வைத்தார்.

சிங்கப்பூர் வெளியேற்றம்

தொகு

சிங்கப்பூரின் 1963-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், எதிர்க்கட்சியான சிங்கப்பூர் கூட்டணிக் கட்சியை (Singapore Alliance Party), மலேசியாவின் அம்னோ கட்சி பகிரங்கமாக ஆதரித்தது. இதற்குப் பதிலடியாக 1964-ஆம் ஆண்டு மலேசியத் தேர்தலில், சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சி பல வேட்பாளர்களை நிறுத்தியது.

அதனால் சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும் அம்னோவுக்கும் உறவுகள் மேலும் மோசம் அடைந்தன.[14] அரசியல் பதற்றங்களின் தொடர்ச்சிப் பின்னணியில், 1964-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஓர் இனக் கலவரம். 36 பேர் பலியானார்கள்.

அதன் பின்னர் 1965-ஆம் ஆண்டில், மலேசியக் கூட்டணியில் இருந்து சிங்கப்பூர் வெளியேறியது. லீ குவான் யூ சிங்கப்பூரின் முதல் பிரதமரானார்.

வரைபடங்களில் 153-ஆவது பிரிவு

தொகு

கீழே உள்ள இரண்டு விளக்கப் படங்கள் மலேசிய அரசியலமைப்பு 153-ஆவது பிரிவின் விதிகளைச் சுருக்கமாகக் கூறுகின்றன. மலாய்க்காரர்கள் மற்றும் சபா மற்றும் சரவாக் (ஒட்டுமொத்தமாக, "பூமிபுத்ராக்கள்") பூர்வீகவாசிகளின் சிறப்பு நிலைப்பாட்டை 153-ஆவது பிரிவு எவ்வாறு கையாள்கிறது என்பதை முதல் படம் காட்டுகிறது.

மற்ற சமூகங்களின் நியாயமான நலன்களை அது எவ்வாறு கையாள்கிறது என்பதை இரண்டாவது படம் காட்டுகிறது.

படம் 1: பூமிபுத்திரர்களின் சிறப்பு நிலை

 

படம் 2: மற்ற சமூகங்களின் சட்டபூர்வமான நலன்கள்

 

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு

^ Terms used in Article 153 to categorise people ('Malays', 'natives') are defined in Article 160 of the Constitution of Malaysia. (English · Malay) and 161a (English · Malay). Perhaps unintuitively, only "a person who professes the religion of Islam" may be a 'Malay' (orang Melayu) in the sense of the constitution (for other contexts, see the article at Malays (ethnic group). This restriction, if not those about "conform[ing] to Malay custom" and "habitually speak[ing] the Malay language", would seem to affect many Orang Asli, a group defined in Article 160 but not mentioned in Article 153. The term bumiputera is neither used nor defined in the constitution.

மேற்கோள்கள்

தொகு
  1. Means,, Gordon P. (1991). Malaysian Politics: The Second Generation. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் ISBN 0-19-588988-6. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022. {{cite book}}: Check |isbn= value: invalid character (help)CS1 maint: extra punctuation (link)
  2. Means, p. 7.
  3. Means, pp. 14, 15.
  4. Adam, Kelly. "Article 153 of Malaysia's Constitution and the Human Right to Non-Discrimination - In the modern Malaysia, the privileges set in the article still remains in force. Article 10 section 4 of the Malaysian constitution permits the active parliament in making it illegal for any party to question article 153. Under the sedition act of the constitution, it is illegal to question the article inclusive of the parliament members with the freedom to discuss any of its provisions without considering the external censure fear (Jomo & Wong, 2008, p. 313)" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
  5. "Article 153: Our aim was to stimulate discussion - The Malaysian Bar". www.malaysianbar.org.my. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
  6. See paragraphs 74 and 75 of the report by the Federation of Malaya Constitutional Conference
  7. Wu Min Aun (2005).The Malaysian Legal System, 3rd Ed., pp. 47 and 48.: Pearson Malaysia Sdn Bhd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-74-3656-5.
  8. Adam, Samuri & Fadzil, p. 153–155.
  9. Ooi, Jeff (2005). "Social Contract: 'Utusan got the context wrong'" பரணிடப்பட்டது 2005-10-30 at the வந்தவழி இயந்திரம்.
  10. Putra, Tunku Abdul Rahman (1986). Political Awakening, p. 31. Pelanduk Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-978-136-4.
  11. Putra, Tunku Abdul Rahman (1986). Political Awakening, p. 32. Pelanduk Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-978-136-4.
  12. Parmer,, J. Norman (1966). "Malaysia 1965: Challenging the Terms of 1957". Asian Survey, vol. 6, no. 2, University of California Press,: 111–18. https://doi.org/10.2307/2642106. பார்த்த நாள்: 25 February 2022. 
  13. "SPEECH BY SINGAPORE'S PRIME MINISTER, MR. LEE KUAN YEW, Parliament of Malaysia". The National Archives of Singapore (DURING THE DEBATE IN THE FEDERAL PARLIAMENT). 27TH MAY, 1965. http://www.nas.gov.sg/archivesonline/data/pdfdoc/lky19650527.pdf. பார்த்த நாள்: 26 February 2022. 
  14. Goh, Cheng Teik (1994). Malaysia: Beyond Communal Politics, pp. 36–37. Pelanduk Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-978-475-4.

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் காண்க

தொகு