மா சே துங்
மா சே துங் (ⓘ, Mao Zedong, டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 1, 1949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்.
மாவோ சேதுங் Mao Zedong | |
---|---|
毛泽东 | |
சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் | |
பதவியில் மார்ச் 20, 1943 – செப்டம்பர் 9, 1976 | |
Deputy | லு சாஃவ்சி லின் பியாவோ வாங் ஒங்வென் |
முன்னையவர் | சாங் வெந்தியான் (பொதுச் செயலர்) |
பின்னவர் | உவா கோபெங்கு |
நடுவண் மக்கள் அரசின் தலைவர் | |
பதவியில் அக்டோபர் 1, 1949 – செப்டம்பர் 27, 1954 | |
பிரதமர் | சோ என்லாய் |
சீனாவின் 1வது அரசுத்தலைவர் | |
பதவியில் செப்டம்பர் 27, 1954 – ஏப்ரல் 27, 1959 | |
பிரதமர் | சோ என்லாய் |
Deputy | சூ தே |
பின்னவர் | லு சாஃவ்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாவோசான், உனான், சிங் பேரரசு | திசம்பர் 26, 1893
இறப்பு | செப்டம்பர் 9, 1976 பெய்ஜிங், சீனா | (அகவை 82)
இளைப்பாறுமிடம் | தலைவர் மாவோ நினைவகம், பெய்ஜிங் |
அரசியல் கட்சி | சீனப் பொதுவுடமைக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | குவோமின்டாங் (1925–1926) |
துணைவர்(கள்) | லூவோ இக்சி (1907–1910) யாங் காயூயி (1920–1930) கே சீசென் (1930–1937) சியாங் கிங் (1939–1976) |
பிள்ளைகள் | 10 பேர் |
பெற்றோர் | மாவோ யிச்சாங் வென் கிமெய் |
முன்னாள் கல்லூரி | உனான் பல்கலைக்கழகம் |
கையெழுத்து | |
மத்திய குழு உறுப்பினர்
ஏனைய பதவிகள்
| |
பெற்றோர்
தொகுமாவோ 1893 ஆம் ஆண்டில்சீனாவில் ஹூனான் மாகாணத்தின் ஷாவ்ஷான் என்ற கிராமத்தில் பிறந்தார். மா சே துங்கின் தந்தை பெயர் மா ஷென் செங், தாயாரின் பெயர் வென் குய்மெய்.
மாவோவின் தந்தை இரண்டு வருடங்களே பள்ளிக்குப் போனவர். ஆரம்பத்தில் ஏழை விவசாயியாக இருந்தார். ஏராளமான கடன்கள் ஆகி விட்டபடியால் ராணுவத்தில் போய்ச் சேர்ந்தார். பல வருடங்கள் இராணுவ சேவை செய்த பின் தன் கிராமத்துக்கு திரும்பி வந்தார். சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு சிறு வியாபாரங்கள் செய்தார். அதன் மூலம், இழந்த நிலத்தைத் திரும்பப் பெற்றார். அவருடைய குடும்பமும் நடுத்தர விவசாயக் குடும்பம் என்ற நிலையை அடைந்தது. வெகு விரைவிலேயே மேலும் அதிக நிலங்களை வாங்கி பணக்கார விவசாயி என்ற நிலையை எட்டினார்.
அதிக நிலத்தில் விவசாயம் செய்வதால் கிடைத்த உபரி தானியத்தை பக்கத்து நகரங்களுக்கு அனுப்பி விற்பனை செய்தார். விவசாய வேலையைக் கவனிக்க ஒரு முழு நேரப் பண்ணையாளையும் நியமித்தார். அத்துடன் ஏழை விவசாயிகளிடமிருந்து தானியங்களை விலைக்கு வாங்கி அவற்றை நகரத்திலுள்ள வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்று வந்தார். ஒவ்வொரு மாதமும் பதினைந்தாம் தேதியன்று அவருடைய கூலியாட்களுக்கு அரிசியும் முட்டைகளும் கொடுப்பார். ஆனால் இறைச்சி ஒரு போதும் அளித்ததில்லை.
மாவோவின் தந்தைக்கு ஆரம்பத்தில் தெய்வ பக்தி கிடையாது. அவருக்கு தர்மம் செய்வதே பிடிக்காது. மாவோவின் தந்தையிடம் பணம் சேரச் சேர அவர் கிராமத்திலிருந்து மற்ற நிலங்களை ஒத்திக்கு வாங்க ஆரம்பித்தார். ஒரு சமயத்தில் அவருடைய கையிருப்பு மூவாயிரம் டாலர் வரை இருந்தது. ஒரு முறை காட்டு வழியில் போய்க் கொண்டிருந்த போது புலியால் தாக்கப்படாமல் தப்பித்த நிகழ்ச்சிக்குப் பிறகு புத்தரைத் தொழ ஆரம்பித்தார்.
மாவோவின் தாயாருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர் பெருந்தன்மையும் ஈவிரக்கமும் கொண்ட அன்பான பெண்மணி. பஞ்ச காலங்களில் தங்களை நாடி வரும் ஏழைகளுக்கு அவர் அரிசியைத் தானமாகக் கொடுப்பதுண்டு. அவர் புத்தரை தினமும் தொழுவார். பிள்ளைகளையும் தெய்வ பக்தி உடையவராக்கினார்.
இளமை
தொகு1893 ஆம் ஆண்டில்சீனாவில் ஹூனான் மாகாணத்தின் ஷாவ்ஷான் என்ற கிராமத்தில் பிறந்தார். ஆறு வயதான போது அவருடைய தாய் மற்றும் தம்பியுடன் விவசாய வேலைகளுக்கு அனுப்பப்பட்டார். எட்டு வயதானபோது கிராமத்திலுள்ள ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதிகாலையிலும் இரவிலும் நிலத்தில் வேலை செய்ய வேண்டும். பகலில் படிக்க வேண்டும். பள்ளி ஆசிரியரின் கண்டிப்பின் காரணமாக மாவோ தனது பத்து வயதில் கிராமத்தை விட்டு ஓடி விட்டார். அவரது குடும்பத்தினர் அவரை கண்டுபிடித்து கிராமத்துக்கு கொண்டு வந்தனர். அடி கிடைக்கும் என்று பயந்து கொண்டிருந்த மாவோவிடம் அவருடைய தந்தையார் இதமாக நடந்து கொண்டார். ஆசிரியரும் சற்று நிதானமாக நடந்து கொண்டார்.
மாவோவிற்கு எழுதப் படிக்கத் தெரிந்தவுடன் வீட்டுக் கணக்கு வழக்குகளையும் அவர் பார்க்க வேண்டியிருந்தது. கணக்கெழுதும் வேலையை இரவில் செய்ய வேண்டியிருந்தது. வயது அதிகரிக்கத் தந்தையுடன் வாக்குவாதங்கள் அதிகரித்தன. ஒரு முறை வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்கள் முன்பு தந்தையுடன் வாக்குவாதம் வலுத்து, மாவோ வீட்டை விட்டு ஓடினார். குளத்தில் குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். அவரை சமாதானப்படுத்தி தந்தை சில சலுகைகள் கொடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
மாவோ 13ம் வயதிலேயே தனது பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு நாள் முழுவதும் வயல் வேலைகளில் ஈடுபட்டார். இரவில் கணக்கு வழக்குகளை பார்த்தார். மாவோவிற்கு 14 வயது ஆன பொழுது அவருடைய தந்தையார் 20 வயதுடைய ஒரு பெண்ணை அவருக்கு மணமுடித்து வைத்தார். அந்தப் பெண்ணுடன் மாவோ ஒரு நாள் கூட வாழ்ந்ததில்லை.
அரசியல் ஆரம்பம்
தொகுஎச்சரிக்கை தரும் வார்த்தைகள் (Words of Warning) என்ற நூலைப் படித்து சீனாவின் பலவீனங்களையும் மேற்கத்திய நாடுகளின் வலிமையையும் தெரிந்து கொண்டார். அந்த நூலைப் படித்ததிலிருந்து பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டும் என்று ஆவல் மாவோவுக்கு ஏற்பட்டது. இதனால் தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் உதவியால் படித்தார்.
இந்த நேரத்தில் சீனாவை 17 ஆம் நூற்றாண்டு முதல் ஆண்டு வந்த ஷிங் மரபின் அரசு சீர்கேடுகளுக்கெதிராக 1911 இல் ஒரு புரட்சி மூண்டது. அப்போது மா-சே-துங் 18 வயது மாணவராக இருந்தார். இந்தப் புரட்சி மூண்ட சில மாதங்களுக்குள்ளே ஷிங் அரசு கவிழ்க்கப்பட்டது. சீனா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த புரட்சியால், சீனாவில் ஒரு நிலையான, ஒற்றுமையான அரசை ஏற்படுத்த முடியவில்லை. இது நீண்ட காலக் குழப்பத்திற்கும், உள்நாட்டுப் போருக்கும் வித்திட்டது. இந்த நிலைமை 1949 வரையிலும் நீடித்தது. இளைஞர் மா-சே-துங்கை இடதுசாரி அரசியல் கொள்கைகள் மிகவும் கவர்ந்தன. 1920 ஆம் ஆண்டில் அவர் கொள்கைப் பற்று மிகுந்த ஒரு பொதுவுடைமையாளராக விளங்கினார். 1921 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுவித்த 12 பெருந்தலைவர்களுள் ஒருவராக மா-சே-துங் திகழ்ந்தார்.
ஆட்சி
தொகுஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி பல எதிர்ப்புகளுக்கிடையில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தது. 1927 ஆம் ஆண்டிலும், 1934 ஆம் ஆண்டிலும் இக்கட்சிக்குப் பெருந்தோல்விகள் ஏற்பட்டன. 1935 ஆம் ஆண்டுக்குப் பிறகு மா-சே-துங் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பின் கட்சியின் வலிமை படிப்படியாக வளர்ந்தது. 1954 ஆம் ஆண்டில் அப்போது சியாங் கே ஷாக் தலைமையிலிருந்த தேசிய அரசை எதிர்த்து ஒரு பெரும் போரைத் தொடங்கும் அளவுக்குப் பொதுவுடைமைக் கட்சி வலிமைப் பெற்றது. இந்தப் போர் ஈராண்டுகள் நீடித்தது. நிலப்பரப்பு முழுவதும் பொதுவுடைமையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
சவால்கள்
தொகுமுப்பது ஆண்டுக் காலம் உள்நாட்டுப் போர்களினால் அலைக்கழித்த பின்னரே சீனா, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என்ற முறையில் மா-சே-துங்கின் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது சீனாவில் வறுமை தலை விரித்தாடியது. நாடு வளர்ச்சியடையாமல் மிகவும் பின் தங்கியிருந்தது. பழைய மரபுகளில் ஊறிப் போயிருந்த கோடிக்கணக்கான மக்கள் படிப்பறிவில்லாத குடியானவர்களாக இருந்தனர். ஆட்சியைப் பிடித்தபோது மா-சே-துங்- கிற்கு 56 வயது. புதிய சீனாவை உருவாக்கும் மாபெரும் பணி அவர் முன் மலைபோல் எழுந்து நின்றது.
'வலிமையும் வளமும் மிகுந்த சீனா' என்ற இலட்சிய இலக்கை பின்பற்றிய மாவோ, நவீன தொழில் முன்னேற்றம் அடைந்த நாட்டை நிறுவ முயன்றார். எனினும், இவருடைய முக்கியத்துவம் வாய்ந்த சமூக, அரசியல் திட்டங்களின் காரணமாக சீனாவின் வளர்ச்சி முடங்கி, பொருளாதாரம் சீர்குலைந்து, சமூகக் கொந்தளிப்புகள் உருவாகி, பரவலான பட்டினி நிலை ஏற்பட்டது; மில்லியன் கணக்கில் மக்கள் மாண்டனர்.
மாவோ தன் இறுதிக் காலம் வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக் குழுவையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இதற்கு அவரது அரசியல் சாதுரியமும் ஆளுமையும் உதவியது.
சீன அரசியலில் பெரும் செல்வாக்கினை மா-சே-துங் செலுத்தத் தொடங்கினார். 1976 ஆம் ஆண்டின் மா-சே-துங் இறுதி வரையில், அவர் செயற்படுத்திய கொள்கைகளால் சீனா முழுவதுமாக மாறியிருந்தது.நாடு முழுவதும் நவீன மயப்படுத்தப்பட்டது. குறிப்பாக, சீன நாட்டின் தொழில் மயமாக்கும் போக்குகள் வேகமாக நடைபெற்றதன.பொதுக் கல்வி முறைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.பொதுச் சுகாதாரம் அனைவருக்கும் கிடைத்திட உறுதி செய்யப்பட்டது. இந்த மாற்றங்கள் உலகம் முழுவதிலும் நிகழ்ந்தன. ஆதலால், மா-சே-துங்கினை அடையாளப்படுத்திட வேறுபல காரணங்களும் இருந்தன.
சீன முதலாளித்துவ பொருளாதார முறை, பொதுவுடைமை ஆக்கப்பட்டது. அதேபோல்,அரசியல் ஆட்சி முறை பொது ஏகாதிபத்தியத்தை அடிப்படையாகக்கொண்டு நிறுவப் பெற்றது. தொன்றுதொட்டு சீன மக்கள் ஆழ்ந்த குடும்பப் பற்று மிக்கவர்களாகவே இருந்து வந்துள்ளனர். மா-சே-துங் இதனைத் தீவிர நாட்டுப் பற்று உணர்வாக மாற்றிக் காட்டினார். மேலும், கன்ஃபூசிய கொள்கைகளுக்கு எதிராகச் மாவோ உருவாக்கிய சீன அரசு தீவிரமான பரப்புரையினை முடுக்கிவிட்டதற்கு பலன் இல்லாமலில்லை.
சீனப் பொதுவுடைமை அரசின் கொள்கைகளை மா-சே-துங் தன்னிச்சையாகச் செயல்படுத்த முனைந்ததில்லை. சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின் நிர்வகித்தது போல், ஒரு தனி மனித ஆதிக்கத்தை மா-சே-துங் நிறுவிட எண்ணியதில்லை. இருந்தபோதிலும்,1949 முதல் 1976 முடிய ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள், அதாவது மா-சே-துங் இறப்பு வரையிலும், சீன அரசின் முக்கியத் தலைவராகவே இருந்துவந்தார். சீனாவில் 1950-களில் தொடங்கப் பெற்ற, "முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்" என்ற இயக்கத்திற்கு மூல முதற்காரணமாகக் கருதப்படுவர் மா-சே-துங் ஆவார்[1]. பின்னாட்களில் இந்த இயக்கம் தோல்வியடைந்ததாகக் கூறப்பட்டது. அதுபோல, 1960-களில் மா-சே-துங் தீவிரமாக ஆதரித்த மற்றொரு திட்டம் "மாபெரும் தொழிலாளர் வர்க்கப் பண்பாட்டுப் புரட்சி" என்பதாகும்.இதனை ஏனைய தலைவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.இந்தத் திட்டத்தால் இருதரப்பினரிடையே உள்நாட்டுப் போர் மூளக் காரணமாயிற்று.சீனப் பொதுவுடைமைக் குடியாட்சி அரசில் மா-சே-துங்கின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
பிளவுபடுத்துவது புரட்சிகரமானது (To Split is Revolutionary) பிளவு தூய்மை படுத்துகின்றது (Split Purifies). ஒன்று எப்பொழுதுமே இரண்டாகும் (One always becomes Two). இரண்டு எப்பொழுதுமே ஒன்றாகாது (Two never becomes One) என்பவை மா சே துங் இனால் 1960 இல் கூறப்பட்ட வார்த்தைகளாகும்[2]
மா சே துங்-இன் அரசு பற்றிய கருத்துக்கள்
தொகுமக்கள் புரட்சியை அடுத்து பாட்டாளிகள் சர்வாதிகார அரசே நிலவ வேண்டும் என்பது மார்க்சிய கருத்தாகும். அதை மா சே துங் நிராகரித்து சீனாவில் தொழிலாளர்களையும் சிறிய பூர்சுவாக்களையும், தேசிய பூர்சுவாக்களையும் கொண்ட கூட்டுச் சர்வாதிகாரம் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பூர்சுவாக்களின் பங்களிப்புகள் அவசியம் என மாவோ வலியுறுத்தினார். இதனால் புரட்சிக்குப் பின்னர் பூர்சுவாக்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் மார்க்சியத்தைப் புறந்தள்ளினார். மேலும், அவர்கள் தொடர்ந்து ஒரு வர்க்கமாக இயங்கிட அனுமதித்தார். இதுதவிர, திருத்தியமைக்கப்பட்ட கல்வி முறையின் மூலமாகப் பூர்சுவாக்களிடையே நிலவிவரும் பழைய மனப்பான்மைகளைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும் என்றார்.
மூன்றாம் உலக நாடுகளின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் புரட்சிக்கான சக்திகள் மாவோவின் அரசு பற்றிய மக்கள் கம்யூனிசக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கிளர்ந்தெழுகின்றனர். இந்த கம்யூனிசங்களில் மக்களை ஒழுங்கமைப்பதன் வாயிலாக தமது நலன்களைப் பேணும் தீர்மானங்களை தாமே மேற்கொள்வதற்கும் அவை உதவும் என்றும் அதன் மூலம் அரசின் முக்கியத்துவத்தினை படிப்படியாக குறைக்க முடியும் என்றும் நம்பினார். சீனக் குடிமைச் சமத்துவ சமூகம் பொதுவுடைமைக் கோட்பாட்டை நோக்கி முன்னேறுவதற்கு மக்கள் கம்யூனிசங்களை ஒழுங்கமைப்பது இன்றியமையாதது எனவும் மாவோ கருதினார்.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "மா - சே - துங் (1893–1976)". koodal.com. Mahizham Infotech. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Communist Unity—Time for Introspection". Mainstream Weekly. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2017.
வெளி இணைப்புகள்
தொகு- பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் மா சே துங்
- ChineseMao.com: Extensive resources about Mao Zedong பரணிடப்பட்டது 2013-09-06 at the வந்தவழி இயந்திரம்
- CNN profile
- Collected Works of Mao at the Maoist Internationalist Movement
- Collected Works of Mao Tse-tung (1917–1949) Joint Publications Research Service
- Mao quotations
- Mao Zedong Reference Archive at marxists.org
- Oxford Companion to World Politics: Mao Zedong
- Spartacus Educational biography
- Bio of Mao at the official Communist Party of China web site பரணிடப்பட்டது 2013-09-09 at the வந்தவழி இயந்திரம்