முதுகுளத்தூர் கலவரம்
முதுகுளத்தூர் கலவரம் (Mudukulathur Riots) அல்லது இராமநாதபுரம் கலவரம் என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் 1957 ஆம் ஆண்டு சூலை முதல் செப்டம்பர் மாதம் வரை மறவர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் ஆகிய இரு சமூகத்தினர் இடையே நடந்த கலவரமாகும். காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியால் காங்கிரஸ், பார்வர்டு பிளாக் கட்சிகளின் சண்டை சாதி சண்டையாக மாறியது.[1]
முதுகுளத்தூர் கலவரம் Mudukulathur Riot | ||||
---|---|---|---|---|
தேதி | செப்டம்பர் 10, 1957 | |||
அமைவிடம் | 9°21′00″N 78°31′00″E / 9.350006°N 78.516694°E | |||
தரப்புகள் | ||||
| ||||
வழிநடத்தியோர் | ||||
பின்னணி விவரம்
தென் தமிழக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று முதுகுளத்தூர் கலவரம் ஆகும். முத்துராமலிங்கத் தேவர் முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு 1957 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாள் அன்று இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேவரின் ஆதரவு பெற்ற பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் சசிவர்ண தேவர் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் இராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னர் கலவரமாக மாறியது. பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அனேக ஆதரவளித்து வந்த மறவர் இனத்தவர்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தேவேந்திர குல வேளாளர் இனத்தவர்களும் பெருமளவில் மோதிக் கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு வேகமாக பரவியது. இதில் பலர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கபட்டன.[2] இதைத் தொடர்ந்து 1957களில் நடந்த பள்ளர் இன மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் இன மக்களின் சார்பில் கலந்து கொண்ட ஆறு பேரில் இமானுவேலும் ஒருவர். இவர் வேலுச்சாமி நாடாரால் அழைத்து வரப்பட்டார், அடுத்த நாள் செப்டம்பர் 11, 1957 அன்று அவர் படுகொலை செய்யப்பட்டார். முதல்நாள் முழுவதும் வேலுச்சாமி நாடார் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது, முத்துராமலிங்க தேவருக்கு சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக[சான்று தேவை] அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் விசுவாசிகளே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சந்தேகிக்க கூட முடியாத முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தது மிகப்பெரிய தவறு என நீதிமன்றம் விடுதலை செய்தது, முத்துராமலிங்க தேவர் மீது காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த பகை காரணமாக முத்துராமலிங்கத் தேவரை வேண்டுமென்று சதி வழக்கில் சேர்த்ததாக கூறப்படுகிறது. பரமக்குடி, முதுகுளத்தூர், சிவகங்கை வட்டங்களில் பரவிய இக்கலவரத்தில் இரு சாதியரும் நேரடியாக மோதிக்கொண்டதில் 17 தேவேந்திர குல வேளாளர் சாதியினர் கொல்லப்பட்டனர். காவல் துறை துப்பாக்கிச் சூட்டிற்கு மறவர் சாதியைச் சேர்ந்த 13 பேர் பலியாகினர். மேலும் மொத்தம் 2,842 வீடுகள் தீ வைக்கப்பட்டன. இவற்றில் 2,735 வீடுகள் தேவேந்திர குல வேளாளர் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் ஆகும்.[3]
நீதி விசாரணை
இம்மானுவேலைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய, கீழ்த்தூவல் கிராமத்துக்கு காவலர் சென்றனர். அங்கு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில், ஐந்து மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இறந்ததாக தெரிகிறது. ஆனால் ஐந்து பேரைப் பிடித்து அடித்து, கைகளையும், கண்களையும் கட்டி, குளக்கரையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர் என்று கீழ்த்தூவல் மக்கள் குற்றம் சாட்டினர்.[2] இதைப் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு, வருவாய்த் துறை வாரியத்தின் உறுப்பினர் எஸ். வெங்கடேசுவரனுக்கு அரசாங்கம் உத்தரவிட்டது. அவர் கீழத்தூவல்க்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அரசாங்கத்திடம் அவர் அறிக்கை கொடுத்தார். இதில் ஐந்து பேர் மாண்டனர். அவர்களை கட்டி வைத்து தான் சுட்டுக் கொல்லபட்டார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை எதிர்க்கட்சியினர் ஏற்றனர். இது தொடர்பாக, சட்டசபையில் அப்போதைய தமிழக முதல்வர் காமராசர் தலைமையிலான மந்திரிசபை மீது அக்டோபர் 28, 1957 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத் தீர்மானத்தை கம்யூனிசத் தலைவர் எல். கல்யாணசுந்தரம் கொண்டு வந்தார். அப்போதைய திமுக தலைவர் அண்ணா பேசும்போது, முதுகுளத்தூர் கலவரத்தில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை கண்டு கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை தெரியும் என்று வலியுறுத்தினார். விவாதத்துக்கு நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் பதில் அளிக்கையில், ஐந்து மறவர்களின் கைகளைக் கட்டி காவல்துறை சுட்டுக்கொன்றதாக கூறப்பட்ட புகாரை ஒப்புக்கொண்டார். முடிவில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 28 பேர்களும், எதிராக 146 பேர்களும் வாக்களித்தனர். தி.மு.கழகம் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. [2]
மேற்கோள்கள்
- ↑ முதுகுளத்தூர், கலவரம் (1997). "மோதல்கள் மாற்றங்களின் புவியியல் பரவல்". Rediff.com. http://m.rediff.com/news/jun/30caste1.htm. பார்த்த நாள்: ஏப்ரல் 4, 2014.
- ↑ 2.0 2.1 2.2 "1957 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரம்". மாலை மலர். ஏப்ரல் 16, 2011. Archived from the original on ஏப்ரல் 21, 2011. Retrieved ஏப்ரல் 6, 2014.
- ↑ தினகரன் (1958). முதுகுளத்தூர் கலவரம் 1958, பக்கம்: 117 முதல் 118 வரை. Retrieved ஏப்ரல் 6, 2014.