மைசூர் ஓவியம்
மைசூர் ஓவியம் (Mysore painting) என்பது தென்னிந்திய ஓவியப் பாணியின் ஒரு முக்கிய வடிவமும், கருநாடகத்தின் மைசூர் நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் உருவாகிய ஒவியப் பாணியும் ஆகும். அதனை மைசூர் ஆட்சியாளர்கள் ஊக்குவித்து, பேணி வளர்த்தனர்.[1] கருநாடகத்தின் ஓவியம் நீண்ட, சிறப்பு வாய்ந்த வரலாற்றைக் கொண்டதுடன், இதன் ஆரம்பம் அஜந்தா காலம் (கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு) வரை செல்கிறது. மைசூர் ஓவியப் பாணி ஆரம்பம் விஜயநகர அரசர்களின் ஆட்சியின் (கி.பி 1336–1565) விஜயநகரக் காலம் முதல் ஆரம்பமாகியது. விஜயநகர ஆட்சியாளர்களும் அவர்களின் நிலக் குடிமையாளர்களும் இலக்கியம், கலை, கட்டடக்கலை, சமயம், மெய்யியல் உரையாடல்கள் ஆகியவற்றை உற்சாகப்படுத்தினர். தலிகோட்டா சண்டையின் பின் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியுடன் அங்கிருந்த அரச ஆதரவு கலைஞர்கள் மைசூர், தஞ்சாவூர் போன்ற பல பகுதிதிகளுக்கும் புலம் பெயர்ந்தனர். உள்ளூர் கலைப் பாரம்பரியங்கள், மரபுகள் ஆகியவற்றை உள்வாங்கி, முன்னைய விஜயநகர ஓவியப் பாணியை மெதுவாக தென் இந்தியாவில் பல ஓவிய வடிவங்களாக மலரச் செய்தனர். இதில் தஞ்சாவூர் ஓவியப் பாணியும் மைசூர் ஓவியப் பாணியும் உள்ளடங்கியது.
மைசூர் ஓவியம் அதனுடைய நேர்த்தி, அடக்கமான நிறங்கள், கவனமிக்க விபரங்கள் ஆகியவற்றால் அறியப்படுகின்றன. இவ் ஓவியங்களின் மையப் பொருளாக இந்து தொன்மவியல் காட்சிகளிலிருந்து பெறப்பட்ட இந்து கடவுளர்களையும் தேவர்களையும் கொண்டு காணப்பட்டது.[2]
வரலாறு
தொகுகி.பி 1565 இல் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியும் தலிகோட்டா சண்டையில் ஹம்பி கொள்ளையிடப்பட்டதும், அப் பேரரசுக்கு ஆதரவான, அதில் தங்கியிருந்த ஓவியர்களின் குடும்பத்தை இக்கட்டுக்கு உள்ளாக்கியது. ஆயினும், முதலாம் இராச உடையார் (கி.பி 1578–1617) ஸ்ரீரங்கப்பட்டணத்தில் விஜயநகர ஓவியர்களின் குடும்பங்கள் சிலவற்றிற்கு தங்கள் சேவையைத் தொடர வழி ஏற்படுத்தி இக்குடும்பத்தவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தார்.[2]
இராச உடையாருக்குப் பின் வந்தவர்களும் ஓவியர்களுக்கு ஆதரவளித்து, கோயில்களிலும் அரண்மனைகளிலும் தொன்மவியல் காட்சிகளை வரையச் செய்தனர். ஆனாலும் பிரித்தானியர் ஒரு பக்கத்திலும், ஐதர் அலி, திப்பு சுல்தான் என்போர் மறு பக்கத்தில் இருந்து நடத்திய போர்களினால் இவ் ஓவியங்களில் ஒன்றும் மிஞ்சாமல் நாசமாகியது. உடையாரிடமிருந்து ஐதரும் திப்புவும் மைசூர் ஆட்சியைப் பெற்றனர். ஆனாலும், ஐதர், திப்பு ஆட்சியில் கலைஞர்கள் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்பட்டனர். தும்கூருக்கும் சிராவுக்கும் இடையிலுள்ள நெடுச்சாலையிலுள்ள நரசிம்ம சுவாமி கோயில் ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரிடம் சேவை செய்த நல்லப்பன் என்பவரால் கட்டப்பட்டது. திப்புவின் ஆட்சியில் சிறந்த விஜயநகரப் பாணி சுவரோவியங்கள் மெதுவாக மைசூர், தஞ்சாவூர் ஓவியப் பாணிகளில் தோற்றம் பெற்றது. புல்லலூர்ப் போரின் சுவரோவிய விபரங்கள், தாரியா தௌலத் பாக் அரண்மனை ஓவியங்கள் என்பன மைசூர் ஓவியங்களுக்கு முதன்மை எடுத்துக்காட்டுகள் ஆகும்.
1799 இல் திப்பு சுல்தான் இறப்புக்குப் பின் மைசூர் உடையார்களினாலும், இரண்டாம் சரபோஜி காலத்து மூன்றாம் கிருட்டிணராச உடையாரினாலும் (கி.பி 1799–1868) மீண்டும் ஆட்சிக் உள்ளாகி, மைசூரின் பண்டைய பாரம்பரியங்கள் இசை, சிற்பம், ஓவியம், நடனம், இலக்கியம் ஆகியவற்றிற்கான ஆதரவு அதிகரித்தது.
மூலப் பொருட்கள்
தொகுமைசூரில் இருந்த பண்டைய ஓவியர்கள் மூலப் பொருட்களை தாங்களாகவே தயார் செய்தனர். நிறங்கள் இயற்கை மூலங்களிலிருந்து, குறிப்பாக மரக்கறி, கனிப்பொருட்கள், இவலைகள், கற்கள், பூக்கள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டது. தூரிகைகள் அணில் மயிரிலிருந்து நேர்த்தியான வேலைக்காகவும், மிக நுட்பமான கோடுகளுக்கு புற்களின் சிறப்பு வகைகளிலிருந்தும் பெறப்பட்டன. நீண்ட கால நோக்கில், மரக்கறி, மண் என்பன பயன்படுத்தப்பட்டன. தற்போதும் மைசூர் ஓவியங்கள் புதிதாகவும் பளபளப்பாகவும் தோற்றமளிக்கின்றன.[2]
உசாத்துணை
தொகு- ↑ Kumar, Rakesh. Encyclopaedia of Indian paintings. Anmol Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8126131225.
- ↑ 2.0 2.1 2.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2016-02-04.
மேலதிக வாசிப்பு
தொகு- Kossak , Steven (1997). Indian court painting, 16th-19th century.. New York: The Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87099-783-1. (see index: p. 148-152)
- Welch, Stuart Cary (1985). India: art and culture, 1300–1900. New York: The Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-944142-13-4.
வெளி இணைப்புகள்
தொகு- தமிழகத்தின் அரிய ஓவியங்கள் பரணிடப்பட்டது 2016-06-14 at the வந்தவழி இயந்திரம்
- Mysore Traditional Paintings