மையச் சைபீரிய உயர்நிலம்

மையச் சைபீரிய உயர்நிலம் (Central Siberian Plateau, ரஷ்யன்:Среднесиби́рское плоского́рье, Srednesibirskoye ploskogorye) ரஷ்யாவின் யெனிசேய் மற்றும் லேனா ஆறுகளுக்கு இடையில் சைபீரியாவின் பெரும்பகுதியில் அமைந்துள்ள, மாறுபடும் உயரங்களைக் கொண்ட, தெளிவாக வரையறுக்கப்பட்ட மேற்பரப்புகளாலான உயர்நிலம். இதன் மிக உயரமான இடம் 1,701 மீ (5,581 அடி) உயரமுள்ள புத்தோரன் மலைகளாகும். 3.5 மில்லியன் சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ள இந்த உயர்நிலம், கிழக்கு சைபீரிய மேட்டுப்பகுதியில் யாகுடியா, கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம் மற்றும் இர்கூட்ஸ்க் மாகாணங்களில் விரவியிருக்கின்றது.

மையச் சைபீரிய உயர்நிலத்திலம்

இதன் வடக்கே அனபார் உயர்நிலமும் புத்தோரன் மலைகளும், தெற்கே கிழக்கு சயான் மலைத்தொடர் மற்றும் பைக்கால் மலைகளும் உள்ளன. உயர்நிலத்தின் கிழக்கே யாகுட்ஸின் தாழ்வான நிலமும் லேனா உயர்நிலமும் அமைந்துள்ளன. மையச் சைபீரிய உயர்நிலம் சைபீரியாவின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கியுள்ளது.[1]

காலநிலைதொகு

வட ஆசியாவின் நடுப்பகுதியில் உள்ள இந்த உயர்நிலத்தின் புவியியல் நிலை, வெப்பம் மிகுந்த கடல்களிலிருந்து அதன் தொலைவு மற்றும் ஆர்க்டிக் பெருங்கடலின் தாக்கம் ஆகியவற்றால் அதன் காலநிலையின் முக்கியக்கூறுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த உயர்நிலத்தின் காலநிலை குறுகிய இளவெப்பக் கோடைகாலங்கள் மற்றும் நீண்ட மற்றும் கடுமையான குளிர்காலத்தைக் கொண்ட கண்டநிலைக் காலநிலையாகும். வெப்ப மற்றும் குளிர்ந்த பருவங்களுக்கிடையே பெரியளவு வெப்பநிலை மாற்றம் ஏற்படுகின்றது.

தெற்கு மற்றும் தென்மேற்கில் சராசரி ஜனவரி வெப்பநிலை சுமார் −22 °C, வடக்கில் -44 °C, மற்றும் சராசரி ஜூலை வெப்பநிலையைப் பொறுத்தவரை, இது முறையே தெற்கில் +25 °C மற்றும் வடக்கில் +12 °C என்றவாறு அமைகிறது. மையச் சைபீரிய உயர்நிலம் அதன் கிழக்கு மாகாணங்களில் கண்டக்காலநிலையின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மூலம் வகைப்படுத்தப்படுகிறது. யாகுட்டியாவில், முழுமையான வெப்பநிலை மாற்றம் 100 °C யை எட்டுகின்றது, மேலும் வெப்பமான மற்றும் குளிரான மாதங்களின் சராசரி வெப்பநிலையின் வேறுபாடு 55-65 °C ஆகும். மிகவும் கடுமையான குளிர்காலம் வில்யூய் உயர்நிலத்தில் (மையச் சைபீரிய உயர்நிலத்தின் மையப் பகுதியில்) உள்ளது, அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை பெரும்பாலும் - 60 °C க்கும் கீழே உள்ளது .

இந்தப் பகுதிகளின் சில இடங்களில் மிகக்குறைந்த அளவே மழை பொழிகின்றது, அவை பருவங்களிடையே மிகவும் சீராகவும் பரவலாகவும் நிகழ்கின்றன. தெற்கில் ஆண்டுக்கு சராசரியாக 250-300 மி.மீ, வடக்கில் ஆண்டுக்கு 400-500 மி.மீ (புடோரானா பீடபூமியில் அதிகபட்ச மழைப்பொழிவு - வருடத்திற்கு 700-800 மி.மீ) [2]. பெரும்பாலான மழைப்பொழிவு கோடையின் இரண்டாம் பாதியில் நிகழ்கிறது: பெரும்பாலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இது முழு நீண்ட குளிர்ந்த காலத்தை விட 2-3 மடங்கு அதிகமாகப் பொழியும். வெவ்வேறு ஆண்டுகளில் மழையளவின் தீவிரமான ஏற்ற இறக்கங்கள் பொதுவானவை. டுடீன்காவில், வறண்ட ஆண்டில் 125 மி.மீ மட்டுமே மழை பொழியும், மழைமிகுந்த ஆண்டில் 350 மி.மீ வரை பொழியும்; கிராஸ்னயார்ஸ்க் நகரில், ஆண்டு மழைப்பொழிவு 127 முதல் 475 மி.மீ வரை இருக்கும்.[3]

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்தொகு

பெரும்பாலான நிலப்பரப்பு ஊசியிலைக் காடுகளால் சூழப்பட்டுள்ளன (குறிப்பாக லார்ச் மரம் ஏராளமாக உள்ளது). உயர்நிலத்தின் முதன்மை ஆறு கீழைத் துங்கூஸ்கா ஆகும்.

கீழைத் துங்கூஸ்கா ஆற்றின் (புடோரானா உயர்நிலம்) அருகிலுள்ள பைன் காடு [4] பேவதாரு-லார்ச் மற்றும் தேவதாரு மரக்காடுகளின் தெற்கு பகுதியில் லார்ச் காடுகள் அமைந்துள்ளன. உயர்நிலத்தின் வடக்குப் பகுதி மலை தூந்திராவால் சூழப்பட்டுள்ளது. மையச் சைபீரிய உயர்நிலத்தின் தெற்கில் உள்ள பள்ளத்தாக்குகளில், வனப்படுகைகள் (கன்ஸ்க் மற்றும் கிராஸ்னயார்ஸ்க் வனப்படுகைகள்) மற்றும் புல்வெளிகள் (பாலகன் புல்வெளிகள்) உள்ளன.

உயரங்களின் குறிப்பிடத்தக்க மாற்றங்களால் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பண்புகள் அதன் உயிர்சூழல் மண்டலத்தை தீர்மானிக்கிறது. எனவே, 250-400 மீ உயரத்தில் கீழை துங்கூஸ்காவின் கீழ் பகுதிகளின் மலைகளில், கரிய ஊசியிலையுள்ள தைகாவையும், மேலே ஒளியுள்ள ஊசியிலை லார்ச் காடுகளையும், 500-700 மீ உயரத்தில் மலை லார்ச் வனப்பகுதிகள் அல்லது ஆல்டர் புதர்களையும், 700-800 மீட்டருக்கு மேல் உயரும் மாசிஃப்களின் சிகரங்கள் ஒரு மலைப்பாங்கான பாறை தூந்திராவையும் கொண்டுள்ளன.[3]

அருகிலுள்ள நிலப்பகுதிகளைக் காட்டிலும் இப்பகுதியின் விலங்குலகம் மிகவும் மாறுபட்டது. தைகாவில் பழுப்பு நிறக் கரடி, எல்க் கடமான், ஆர்க்டிக் ஓநாய், முயல், சேபிள் ஆகியவை காணப்படுகின்றன, மேலும் தூந்திராவில் துருவ மான் மற்றும் ஆர்க்டிக் நரி ஆகியவையும் காணப்படுகின்றன. இந்த உயர்நிலத்திலுள்ள ஆறுகள் மீன்களால் மிகவும் நிறைந்தவை, அவற்றில் மிகவும் மதிப்புமிக்க இனங்கள் ஸ்டர்ஜன், தைமென் மற்றும் வெள்ளை மீன்கள். பறவைகளில், கேபர்கெய்லி மற்றும் ஹேசல் க்ரூஸ் ஆகியவற்றைக் குறிப்பிடத்தகுந்தவை.[2]

கனிமங்கள்தொகு

புவியியல் அடிப்படையில் சைபீரியப் பொறிகளுக்காக அறியப்படும் இந்த நிலப்பரப்பு இயற்கை வளம் மிகுந்தது. நிக்கல், தாமிரம், இரும்பு, அலுமினிய தாதுக்கள், கிராஃபைட், பாறை உப்பு, எண்ணெய், இரும்புத் தாது, தங்கம், பிளாட்டினம், வைரங்கள் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவளி ஆகியவை கிடைக்கப்பெறுகின்றன.

சான்றுகள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

ஆள்கூறுகள்: 68°00′N 95°00′E / 68.000°N 95.000°E / 68.000; 95.000