வனிதா மதில்

வனிதா மதில் (Vanitha Mathil)("பெண்கள் சுவர்") என்பது ஜனவரி 1 2019 அன்று கேரள மாநிலம் முழுவதும் பாலினப் பாகுபாட்டிற்கு எதிராக ஆண் பெண் சமத்துவத்தினை வலியுறுத்தி பெண்களால் நடத்தப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டம் ஆகும். இந்த மனிதச் சுவர் பெண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டது. காசர்கோட்டில் துவங்கிய இச்சங்கிலி திருவனந்தபுரம் வரை சுமார் 620 கிலோமீட்டர்கள் (390 மைல்கள்) தூரம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் முப்பது முதல் ஐம்பது இலட்சம் பெண்கள் வரை பங்கேற்றனர்.

வனிதா மதில்
கொல்லத்தில் பெண் மனித சுவர்
நாள்1 சனவரி 2019
அமைவிடம்கேரளா, இந்தியா
வகைமனிதச் சங்கிலி
ஏற்பாடு செய்தோர்கேரள அரசு
பங்கேற்றோர்50 இலட்சம் வரை

பின்னணி

தொகு

கேரளாவில், சபரிமலையில் உள்ள இந்து கோயிலில் பாரம்பரியமாக 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் ஐயப்பனை வழிபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மாதவிடாய் பிரச்சனை காரணமாகப் பெண்கள் இக்கோயிலுக்குச் செல்ல தடை செய்யப்பட்டதாகச் சிலர் கூறினர். ஆனால் பக்தர்கள் தெய்வத்தின் பிரம்மச்சரிய இயல்பு காரணமாக தங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறினர். ஆனால் செப்டம்பர் 2018இல், இந்திய உச்ச நீதிமன்றம், தனது வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பில், அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குள் செல்ல அனுமதித்தது, உயிரியல் வேறுபாடுகளின் அடிப்படையில் எந்த பாகுபாடும் தெரிவிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று குறிப்பிட்டது. மாநில இடதுசாரி ஜனநாயக முன்னணி இத்தீர்ப்பை வரவேற்றது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இத்தீர்ப்பை எதிர்த்து போராட்டங்களைத் தொடங்கின. தீர்ப்பு மற்றும் அதைச் செயல்படுத்த மாநில அரசு எடுத்த முடிவுக்குப் பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

சுவர்

தொகு

15 திசம்பர் 2018 அன்று, கேரள முதல்வர் பிணறாயி விஜயன் 176 சமூக மற்றும் அரசியல் அமைப்புகளைச் சந்தித்த பிறகு, மாநிலத்தின் மறுமலர்ச்சி மதிப்புகளைப் பாதுகாக்கப் புத்தாண்டு தினத்தில் பெண்கள் சுவர் நடத்தப்படும் என்று அறிவித்தார்.[1][2] இந்நிகழ்விற்கான கருத்துப் பாடல் பிரபா வர்மாவினால் வெளியிடப்பட்டது.[3]

1 சனவரி 2019 அன்று மாலை 4:00 மணிக்கு 620 கிலோமீட்டர்கள் (390 மைல்கள்) தூரத்திற்கு மூன்று முதல் ஐந்து மில்லியன் பெண்களால் ஆன மனித சுவர் தேசிய நெடுஞ்சாலையில் உருவாக்கப்பட்டது. மாநிலத்தின் வட முனையான காசர்கோட்டில் கேரளாவின் சுகாதார மற்றும் சமூக நீதி அமைச்சர் கே. கே. சைலஜாவால் தொடங்கப்பட்டு, தெற்கில் உள்ள திருவனந்தபுரத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவி பிருந்தா காரத்துடன் மனித சுவர் முடிந்தது. ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாட்டாளர்கள் காசர்கோட்டில் இந்நிகழ்வில் பங்கேற்றவர்களைத் தாக்க முயன்றதாகக் கூறப்பட்டது.

அதே நாளில், கேரளாவில் நடந்த நிகழ்வுக்கு ஆதரவாக, புதுதில்லி,[4] மும்பை[5] மற்றும் சென்னை உள்ளிட்ட மற்ற இந்திய நகரங்களில் வனிதா மதிலுக்கு ஆதரவு தெரிவிக்கப் பெண்கள் சுவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.[6]

கேரளாவில் ஏற்படுத்தப்பட்ட பெண்கள் மனித சுவர் உலகின் நான்காவது பெரிய மனிதச் சங்கிலி ஆனது. இது பெண்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மனிதச் சங்கிலியாகும்.[7]

மாவட்டங்களில்

தொகு

மலப்புரம் மாவட்டம், கோழிக்கோடு மாவட்ட எல்லையில் உள்ள கொண்டோட்டி ஐக்கரப்பாடியிலிருந்து மலப்புரம் மற்றும் பெரிந்தல்மன்னா வழியாக பாலக்காடு மாவட்ட எல்லையில் உள்ள புலமந்தோல் அங்காடி வரை, 55கிமீ தூரத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மனித சங்கிலியும் நடைபெற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kerala gears up for massive Women's Wall event: All you need to know". தி நியூஸ் மினிட். 31 December 2018. https://www.thenewsminute.com/article/kerala-gears-massive-womens-wall-event-all-you-need-know-94256?amp. 
  2. "It's official: 'Women's wall' is a state govt programme". Times of India. 6 December 2018. https://m.timesofindia.com/city/thiruvananthapuram/its-official-womens-wall-is-a-state-govt-programme/articleshow/66960568.cms. 
  3. "Slew of spirited musical expression for women's wall". United News of India. 29 December 2018. http://www.uniindia.com/slew-of-spirited-musical-expression-for-women-s-wall/south/news/1452171.html. 
  4. "Sabarimala row HIGHLIGHTS: Delhi women support 'Women's wall' campaign, demonstrate outside Kerala House". 2 January 2019. 
  5. "Women form human chain in Mumbai to support Kerala 'Women's Wall'". 2 January 2019. 
  6. "Chennai women form Vanitha Mathil in solidarity with Kerala Women's Wall". 1 January 2019. 
  7. "In case you haven't noticed yet, the women's wall in Kerala was the fourth largest human chain ever". 

 

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வனிதா மதில்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனிதா_மதில்&oldid=3743580" இலிருந்து மீள்விக்கப்பட்டது