விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 6, 2011

1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இப்போட்டிகள் 1979 சூன் 9 முதல் சூன் 23 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இலங்கையும் பங்கு பற்றின. ஆப்பிரிக்க நாடுகள் எதுவும் பங்கேற்கவில்லை. பதிலாக கனடாவுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. இனவொதுக்கல் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 60 பந்துப் பரிமாற்றங்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரண்டாவது தடவையும் உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. மேலும்..


ம. சிங்காரவேலர் (1860-1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடைமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சிங்காரவேலர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார். வழக்குரைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடர்ந்த இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளாலும் காந்தியச் சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டார். இவர் இந்தியாவில் முதன்முறையாக மே நாளைக் கொண்டாடியவர். மேலும் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னைத் தொழிற்சங்கத்தை 1918இல் தொடங்கினார். காமராஜர் தொடங்கிய மதிய உணவுத்திட்டத்தினை அவருக்கு முன்பே வெற்றிகரமாகச் சென்னையில் நடத்திக் காட்டியவர். காந்தியின் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் பங்கு கொண்டு தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் "இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!" என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார். இவரைப் போற்றும் விதமாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என்று தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியுள்ளது. மேலும்..