வெ. துரையனார்
வெ. துரையனார் அடிகள் (மே 12, 1891 - சனவரி 5, 1973) தென்னாப்பிரிக்காவில் பிறந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர்.
வெ. துரையனார் அடிகள் | |
---|---|
பிறப்பு | துரைசாமி மே 12, 1891 ரூடிபோர்ட், தென்னாப்பிரிக்கா |
இறப்பு | சனவரி 5, 1973 தமிழ்நாடு, இந்தியா | (அகவை 81)
அறியப்படுவது | இந்திய விடுதலைப் போராட்டம் |
பெற்றோர் | வெங்கடாசலம் பிள்ளை, செல்லத்தாச்சி |
வாழ்க்கைத் துணை | துவளம்மாள் |
பிள்ளைகள் | திருச்சிற்றம்பலம், அருள்நந்தி சிவம், திருநாவலர் காந்தி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதுரையனார் அடிகளார் வெங்கடாசலம் பிள்ளை, செல்லத்தாச்சி ஆகியோருக்கு மகனாகத் தென்னாப்பிரிக்காவில் உள்ள திரான்சுவால் என்ற இடத்தில் உள்ள ரூடிபோர்டு என்ற ஊரில் துரையனார் அடிகள் பிறந்தார். இவரின் இளமைப்பெயர் துரைசாமி என்பதாகும். தமிழறிஞர் மறைமலையடிகளாரிடம் தமிழ் படிக்க வந்த பிறகு தம் பெயரைத் துரையனார் அடிகள் என மாற்றிகொண்டவர்.
தந்தை வெங்கடாசலம் பிள்ளையின் முன்னோர்கள் மொரீசியசு, தென்னாப்பிரிக்காவிற்கு வணிகம் செய்யச் சென்றவர்கள். தென்னாப்பிரிக்காவில் இருந்தபொழுது இந்தியர்கள் நடத்திய கால்பந்து கிரிக்கெட், குத்துச்சண்டை முதலிய தற்காப்புக்கலைகளில் நன்றாகப் பயின்றவர் துரையனார் அடிகள்.
விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றல்
தொகுமகாத்மா காந்தி நடத்திய அமைதிவழி சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டு 1909 ஆம் ஆண்டில் துரையனார் அடிகள் சோகன்சுபர்க் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு திங்கள் அந்தச் சிறையில் இருந்த பிறகு நீதியரசர் வெர்னோன் முன்னிலையில் நிறுத்தபட்டு, அடையாளச் சீட்டு கொளுத்தியமைக்கும், இல்லாமைக்கும் ஆறு மாதம் தண்டிக்கப்பெற்று, உள்ளூர்ச் சிறைச்சாலையில் பதினைந்து நாளும் டீப்குளுஃப் சிறையில் ஆறு மாதங்களும் அடைக்கப்பெற்றார்.
தமிழகம் வருகை
தொகுதுரையனார் தமிழ் படிக்கவென தம் தாயாருடன் தமிழ்நாடு வந்தார். சென்னையில் பல்லாவரத்தில் வாழ்ந்த மறைமலை அடிகளாரிடம் நன்கு தமிழ் கற்றார். பின்னர் மறைமலை அடிகளாரிடம் கருத்து மாறுபட்டு வெளியேறி, சுவாமிமலை வந்து 1912 முதல் தங்கியிருந்தார்.
சுவாமிமலையில் தங்கியிருந்த பொழுது கும்பகோணம் பகுதியில் நடந்த பல்வேறு இந்திய விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்டார். குறிப்பாகக் கிலாபத்து இயக்கம், மதுவிலக்கு இயக்கம், தீண்டாமை இயக்கம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு ஏழாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.
1930 இல் திருச்சியில் நடந்த உப்புச்சத்தியாக்கிரகத் திட்டமிடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். 100 பேர் கொண்ட ஒரு குழுவுக்குத் தலைமையேற்று வேதாரண்யத்தில் போராட்டம் நடத்தியபொழுது கைதுசெய்யப்பட்டு, கடலூர்ச் சிறையில் அடைக்கப்பெற்றார். பின்னர் துரைசாமியார் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். காந்தி - இர்வின் ஒப்பந்தப்படி கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பெற்றனர்.
துரைசாமியார் சட்டமறுப்பு இயக்கத்தில் (1932) ஈடுபட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, திருச்சியிலும், பின்னர் மதுரைச் சிறையிலும் இருந்தார்கள். மதுரைச்சிறையில் இருந்தபொழுது துரையனாரின் துணைவியார் துளவம்மாள் இறந்துவிட்டார்.
அரசியலில்
தொகு1936 இல் தஞ்சாவூர் மாவட்ட காங்கிரசுக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 இல் குடந்தை நகரமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எழுதிய நூல்கள்
தொகு- திருவியன் மதியம் (அறவாழ்வு வலியுறுத்தும் நூல்)
- திராவிடத் தமிழர்களின் பண்டைக்கால வரலாறு
- வெ.துரையனார் அடிகள் தன் வரலாறு நூல் (1995, பதிப்பு: மு. இளங்கோவன்)
மறைவு
தொகுதுரையனார் 05.01.1973 இல் மறைந்தார்.