தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
தஞ்சை சரசுவதிமகால் நூலகம் என்பது இந்திய ஒன்றியம் தமிழ்நாட்டின், தஞ்சாவூரின், தஞ்சை அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள ஒரு நூலகம் ஆகும். இது உலகில் உள்ள தொன்னூலகங்களில் ஒன்றாக சிறப்பாகக் கருதப்படுகின்றது.
தோற்றம்
தொகு- சுமார் 617 ஆண்டுகளுக்கு முன்னர் (பொ.ஊ. 1400 களிலே) இருந்த சோழர்கள் காலத்தில் தோன்றி[1], அவர்கள் பணியால் வளர்ச்சி யடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாகத் திகழ்கின்றது.
- கல்வெட்டில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி (ARE 168, 169, 1961-62) இந்நூலகம் முதலில் சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம் எனவும் இந்நூலகத்தில் பணி புரிந்தவர்கள் சரசுவதி பண்டாரிகள் எனவும் வழங்கப்பட்டனர். பொ.ஊ. 1122 முதலே இருந்ததற்கான அடிக்கோள்கள் உள்ளன.
சிறப்புகள்
தொகு- இங்குத் தமிழ், தெலுங்கு, சமற்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன் (இடாய்ச்சு), இலத்தீன், கிரேக்கம் முதலிய பலமொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப்பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் உள்ளன.
- வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், மதம், தத்துவம் முதலிய பலகலைகளில் சிறந்த நூல்கள் உள்ளன.
- 16, 17 நூற்றாண்டுகளில் தஞ்சையை ஆண்ட நாயக்க அரசர்கள் சமற்கிருதம், தெலுங்கு, தமிழ் நூல்களைப் கொண்டு வந்து சேர்த்தனர்.
- தஞ்சாவூர் மராத்திய அரசர்கள் மேலும் பல நூல்களைச் சேர்த்து நூல்நிலையமாக மாற்ற, ஊக்கத்தோடு செயற்பட்டனர். அதில் தலைசிறந்தவர் இரண்டாம் சரபோசி ஆவார்.
- இந்நூலகத்திற்கு வெளியே கொலுமண்டபமாக இருந்த ஒரு மண்டபத்திலே,1807-இல் கிழக்கிந்தியக் கம்பெனியாரால் நிறுவப்பெற்ற சரபோசி மன்னரின் உருவச்சிலை அழகாக அமைந்துள்ளது.
- 1871 இல் அரசாங்கத்தார் நூல் நிலையத்திலுள்ள நூல்களின் பட்டியொன்றை தயாரிக்குமாறு இடாக்டர் பரனெல் என்னும் நீதிபதிக்குப் பணித்தனர். அவர் இந்த நூல் நிலையமே உலக முழுவதிலும் மிகப் பெரியதும் மிக முக்கியமானதுமாகும் என்று கூறினார்.
- 1918 இல் தஞ்சை மராட்டிய மன்னரின் சந்ததியர், தமது சொந்த உடைமையாக்கி, இந்நூலகத்தை அரசாங்கத்திடம் ஒப்புவித்தனர்.
- அதன்பின் சம்புநாதபட்டு இலாண்டகே, காகல்கர், பதங்க அவ தூதர் முதலிய பல சிறந்த அறிஞர்களின் பரம்பரையிலிருந்து ஏராளமான நூற்றொகுதிகள் இந்நூலகத்தில் சேர்க்கப்பட்டன.
- இப்பொழுது தமிழ்நாடு அரசால் மேலாண்மை செய்யப்படுகிறது.
இதன் நூல்கள்
தொகு- இங்கு ஏறத்தாழ 25,000 சமற்கிருத நூல்கள், பதினொரு இந்திய மொழிகளில் உள்ளன.
- வரலாற்றுப் புகழ்வாய்ந்த கையெழுத்தாலான அஞ்சல் மடல்களும், அவற்றுடன் படங்களும், இருக்கின்றன.
- 400 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நந்திநாகரி என்னும் எழுத்தில் உள்ள சுவடிகள் உள்ளன.
- 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, திருவாசகம், திவாகரம், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம், திருக்குறள் முதலிய நூல்களும் உள்ளன.
- பொ.ஊ. 1476 இல், காகிதச் சுவடிகளில் எழுதப்பட்டட சமற்கிருத நூலும் உள்ளது.
- பொ.ஊ. 1703 இல், சுவடியில் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி உள்ளது.
- ஐரோப்பா, இந்தியா நாடுகளில் உள்ள அழகிய நகரங்களின் படங்கள். உடற்கூறு, தாவரம் முதலிய கலைக்களுக்குரிய பல நிறப்படங்களும், சிறந்த ஓவியங்களும் உள்ளன.
- மகாராட்டிர அரசர்கள் அலுவலகங்களில் பயன்படுத்திய 'மோடி' எழுத்துக்களாலான கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன.
- பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட சாமுத்திரிகா என்ற அரியநூல் ஒன்றும் உள்ளது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
உசாத்துணை
தொகு1. ஆ. குணசேகரன், தஞ்சை சரசுவதிமகால் நூலகம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி,டி.கே சாலை, சென்னை-18, ஆண்டு குறிப்பிடபடவில்லை ஆனால் சான்றுரை ஒன்றில் 10.8.2004 என்னும் நாள் குறிப்பிட்டுள்ளது. பக்கங்கள் 262.
அமைவிடம்
தொகு- ↑ சான்று தேவை