அ. தா. பன்னீர்செல்வம்

(அன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சர் ஏ. டி. பன்னீர்செல்வம்[1] (ஜூன் 1, 1888 - மார்ச் 1, 1940, இயற்பெயர்: அன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம்) சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், (1930-1939), சென்னை மாநிலத்தின் நிதி உள்துறை அமைச்சராகவும் (1937) இருந்தவர். இங்கிலாந்தில் பார் அட் லா (Bar at Law) பட்டம் பெற்றவர். ஆங்கில அரசு அவருக்கு ராவ் பகதூர், சர் பட்டங்களை வழங்கி சிறப்பித்தது. இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கில அரசின் போர்க்கால அமைச்சரவைக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். இவர் ஓமன் தீபகற்பத்தில் விமானம் விபத்தில் உயிரிழந்தார். பன்னீர் செல்வம் மறைந்த நாளை ஆண்டு தோறும் துக்கநாளாக கடைப்பிடிக்கும்படி தன்னுடைய தொண்டர்களுக்கு தந்தை பெரியார் விடுதலை நாளிதழ் மூலம் அறிவுறுத்தினார்.திருவாரூர் மாவட்டத்திற்கு ஏ.டி.பன்னீர் செல்வம் மாவட்டம் என்று பெயரிடப்பட்டிருந்தது அவருடைய சிறப்புக்குச் சான்று.

அ. தா. பன்னீர்செல்வம்
A. T. Pannirselvam
ஏ. டி. பன்னீர்செல்வம் உடையார்
சென்னை மாகாண உட்துறை அமைச்சர்
பதவியில்
1934–?
பிரதமர்பொபிலி அரசர்
ஆளுநர்ஜான் எர்சுக்கின்
பதவியில்
1 ஏப்ரல் 1937 – 14 சூலை 1937
பிரதமர்கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
ஆளுநர்ஜான் எர்சுக்கின்
சென்னை மாகாண நிதி அமைச்சர்
பதவியில்
1 ஏப்ரல் 1937 – 14 சூலை 1937
பிரதமர்கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
ஆளுநர்ஜான் எர்சுக்கின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1888
பெரும்பண்ணையூர், பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு1 மார்ச்சு 1940 (1940 -03-01) (அகவை 51)
ஓமான் குடா
குடியுரிமைபிரித்தானிய இந்தியர்
தேசியம்தமிழர்
அரசியல் கட்சிநீதிக்கட்சி
துணைவர்பாப்பம்மாள்
தொழில்அரசியல்வாதி

தோற்றம்.

தொகு

பன்னீர் செல்வம் 01-06-1888 –ல் திருவாரூர் அருகேயுள்ள பெரும்பண்ணையூரில் (செல்வபுரத்தில்) தந்தை தாமரைச்செல்வத்துக்கும் தாயார் இரத்தினம் அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். (மூத்தவர் செபாஸ்டின் திருச்செல்வம்). இவருடைய சமயம் கிறித்தவம். இவருடைய முன்னோர்கள் தென் ஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த திருக்கோவிலூருக்கு அருகிலுள்ள வேட்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எப்போது கிறித்தவ சமயத்தைச் சார்ந்தனர் என்ற சரியான ஆதாரம் கிடைக்கவில்லை. ஒன்பது தலைமுறைகளுக்கு முன்னர் முத்தையா (16ம் நூற்றாண்டு) என்பவரின் காலத்தில் தங்கள் குடும்பம் கிறித்தவத்தைத் தழுவியதாக பன்னீர் செல்வத்தின் பெரிய தந்தை முத்தையா என்ற வழக்கறிஞர் தங்கள் குடும்ப வரலாற்றில் எழுதிவைத்துள்ளார். பன்னீர் செல்வத்தின் பாட்டானார் பெயர் அன்னாசாமி (தாமரைசெல்வத்தின் தந்தை).

தந்தையின் உழைப்பும் நேர்மையும்

தொகு

பன்னீர் செல்வத்தின் தந்தை தாமரைச்செல்வத்திற்கு படிக்கும் தறுவாயில் அடிக்கடி நோய்வாய்ப்பட்டதால் நாகை புனித வளனார் கல்லூரி உயர்நிலைப் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் நாகையில் இரயில்வே எழுத்தராகப் பணியாற்றினார். அங்கும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டதால் பணியிலிருந்து விலகினார். பின் தந்தையார் மற்றும் தமையானாரின் வற்புறுத்தலின் பேரில் குடும்ப நிலங்களைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றார். அதுமுதல் தன் கடின உழைப்பினால் 100 ஏக்கராக இருந்த நன் செய் நிலங்களை 200 ஏக்கராகப் பெருக்கினார். பின்னாளில் நிலம் பிரிக்கப்பட்டபோது தான் சம்பாதித்தது என எண்ணாமல் தன் தமையனுக்கும் சமமாக நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார்.

திருமணம்

தொகு

உயர்நிலைக்கல்வித் தேர்வினை முடித்து ஊர் திரும்பிய பன்னீர் செல்வம் பெற்றோர்களின் சம்மதத்துடன் பொன்னுப்பாப்பம்மாள் என்பாரை மணந்து கொண்டார்.

இங்கிலாந்தில் கல்வி

தொகு

கல்லூரியில் இடை நிலை மாணவராக இருந்த பன்னீர் செல்வம் இங்கிலாந்துக்குச் சென்று சட்டக் கல்வி பயில விரும்பினார். அக்காலத்தில் இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இடம்பெறுவது அத்துனை கடினமாக இருக்கவில்லை. அவருக்கு எளிதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. ஜனவரி 26, 1912 இல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். அதே ஆண்டு மார்ச் 22 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.

நீதிக் கட்சிப் பணிகள்

தொகு

சென்னை வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய சில நாட்களிலேயே தஞ்சையில் வழக்கறிஞர் பணியினைத் தொடங்கினார். 1912 –ம் ஆண்டில் பிராமணர்களே எல்லாத்துறைகளிலும் முதலிடம் வகித்து வந்தனர். பிராமணர்களின் ஆதிக்கம் அளவுக்கு அதிகமாக ஓங்கியிருந்தது. வர்ணாசிரமக் கொள்கையை[2] பிராமணர்கள் தீவிரமாக கடைப்பிடித்தனர். இந்த நிலையை மாற்ற பிராமணரல்லாதார் சிலர் சிந்திக்கத்தொடங்கினர். அன்றைய காங்கிரசிலும் பிராமணர்களின் கையே ஓங்கியிருந்தது. திராவிட இனத்தாரின் தனிச்சிறப்பை உணர்ந்த பிராமணரல்லாதார் ஒன்று கூடி தென்னிந்திய மக்கள் பேரவையைத் தோற்றுவித்தனர். பின் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக உருவாயிற்று. இந்த தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் பின்னாளில் நீதிக்கட்சியாக அனைவராலும் அழைக்கலாயிற்று. இதன் உறுப்பினர்களான சர் தியாகராய செட்டி, பனகல் அரசர், செளந்தரபாண்டியனார், நடேச முதலியார் போன்றவர்கள், பன்னீர் செல்வத்தின் தலைமையில் தொண்டாற்றினர்.

நீதிக்கட்சி மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களுக்கு வழிகோலியது. வகுப்புவாரி பிரதிநித்துவம் ஏற்பட முக்கிய பங்காற்றியது.

தேர்தலில் வெற்றி

தொகு

1920 நவம்பர் 30 ம் நாள் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று முதல் முறையாக பகதூர் ஏ. சுப்பராயலு ரெட்டியார் (முதலமைச்சர்) தலைமையில் ஆட்சி அமைத்தது. பனகல் அரசர் (இராஜா இராமராய நிங்கர்) இரண்டாவது அமைச்சராகவும் , ராவ்பகதூர் கே. வி. ரெட்டி நாயுடுவை மூன்றாவது அமைச்சராகவும் நியமித்து இரட்டை ஆட்சி முறையில் ஆட்சிபுரிந்தனர்.

சுயமரியாதை இயக்கம்

தொகு

காங்கிரசக் கட்சியில் பிராமணர்களின் ஆதிக்கத்தைப் பொறுக்கமுடியாமல் 1926-ம் ஆண்டு ஈ வெ ரா பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். பெரியாரின் நெருங்கிய நண்பர் எஸ் இராமநாதன் அதே ஆண்டிலேயே சுயமரியாதை இயக்கத்தைத்[2] தொடங்கியிருந்தார். சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடையே பரப்புவதை தன் நோக்கமாகக் கொண்டிருந்த இவ்வியக்கத்தின் தலைவர் பெரியாரும், செயலாளர் எஸ் இராமநாதனும் பொறுப்பேற்றிருந்தனர். 1926 –ல் நடந்த மதுரை நீதிக்கட்சி மாநாடுகளிலும் பெரியார் கலந்து கொண்டார் ஆயினும் (நீதிக்கட்சியின் போக்கு பிடிக்காததால்) பெரியார் நீதிக்கட்சியில் சேரவில்லை. நீதிக்கட்சியிலிருந்து பலர் சுயமரியாதை இயக்கத்துடன் இணைத்துக்கொண்டனர். சிலர் நீதிக்கட்சியை அரசியல் கட்சியாகவும் சுயமரியாதை இயக்கத்தை சமூக இயக்கமாக நினைத்து இரண்டிலும் ஈடுபாடு கொண்டனர். பன்னீர் செல்வம் தன்னை தீவிரமாக சுயமரியாதை இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கத்தின் தீவிர நாத்திக (கடவுள் மறுப்பு) கொள்கைக்கு உடன்படாதவராயினும் பிராமண எதிர்ப்பு , சமூக சீர்திருத்தக் கருத்துகளுக்கு மதிப்பளித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இறுதிவரை தன்தலைவரை ஈ வெ ரா பெரியாரை எவ்விடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இயக்கப்பணியாற்றினார்.

மறைவு

தொகு

இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கில அரசின் போர்க்கால அமைச்சரவைக்கு ஆலோசகராக பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார். இதனால் நீதிக்கட்சி பெரிதும் மகிழ்ச்சியுற்றது. (நீதிக்கட்சி போருக்கு ஆதரவு அளித்தது) இந்த பதவியேற்புக்காக இங்கிலாந்து புறப்பட்டார். 1 மார்ச் 1940 விடியற்காலை நேரம் 4.54 இராணுவத்துக்குச் சொந்தமான அனிபால் விமானத்தில் பன்னீர் செல்வத்துடன் நான்கு இராணுவ அதிகாரிகள் மற்றும் ஆங்கில அதிகாரிகள் மூவரும் சென்றனர். விமானம் முற்பகல் 10.25 க்கு ஜிவானி விமான தளத்தை அடைந்தது. அங்கிருந்து 11.02 க்குப் பறப்பட்டது. விமானி பிற்பகல் 2.30 மணிக்கு ஜிவானி விமான தளத்தைத் தொடர்பு கொண்டு ஜாஸ்க் நகருக்கு மேற்கே 30 மைல் தூரத்தில் பறந்துக் கொண்டிருப்பதாகவும் 3.30 மணிக்கு சார்ஜா அடைந்து விடுவதாகவும் அறிவித்தார்

ஆனால் அனிபால் விமானத்தின் சங்கேத ஓலி 2.51 மணிக்கு ஜிவானி, சார்ஜா விமான தளங்களில் கேட்டது. ஆனால் அதன் பிறகு விமானத்துடன் எவரும் தொடர்பு கொண்டு பேசமுடியவில்லை. பாரசீக மற்றும் ஷார்ஜா விமானங்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் விமானத்தைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. எனவே ஓமான் குடாவில் அனிபால் விமானம் விபத்துக்குள்ளாகியது, அதில் பயணம் செய்தவர் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் உறுதியாகியது.

பெரியாருடைய இரங்கல் செய்தி

தொகு

“என் மனைவி முடிவெய்திய போதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்த போதும், ‘இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா, இது பேராசை அல்லவா’ என்று தான் கருதினேன். 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20-ஆவது வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை; கதறவில்லை. பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டிடுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் தமிழர் நிலையை எண்ணும் தோறும் நெஞ்சம் பகீரென்கிறது. இவருக்குப் பதில் யார் என்றே திகைக்கிறது . . . “ என்று பெரியார் தன்னுடைய குடியரசு இதழில் தலையங்கம் எழுதியிருப்பது சுயமரியாதை இயக்கத்தில் பன்னீர் செல்வம் அவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்று.

பன்னீர் செல்வத்தின் வாழ்க்கைக் குறிப்பு

தொகு
  • 01-04-1888 பிறப்பு செல்வபுரம்
  • 1900-1908 திருச்சியில் கல்வி
  • 1908-1912 இலண்டனில் சட்டக்கல்வி
  • 1918-1920 தஞ்சை நகராட்சி மன்றத்தலைவர்
  • 1922-1924 தஞ்சை மாவட்ட கல்விக் குழுத்தலைவர்
  • 1924-1930 தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்
  • 1930-1931 வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பு
  • 1930-1939 சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினர்[3]
  • 1934-1937 சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழு உறுப்பினர்[3]
  • 1937 சென்னை மாநிலத்தின் நிதி உள்துறை அமைச்சர்
  • 1937-1939 சட்டமன்றத்தில் எதிர்கட்சித்துணைத் தலைவர்
  • 1940 வானூர்தி விபத்தில் மரணம்[3]

பொதுப்பணிகள்

தொகு
  • தஞ்சை நகர் மன்றத் தலைவராகப் பதவியேற்று (1918-1920) தண்ணீர்ப் பஞ்சம் நீங்க அருந்தொண்டாற்றினார்
  • தஞ்சைமாவட்ட உயர்கல்விக்குழுத் தலைவராக (1922-1924) அமர்ந்து தஞ்சை மாவட்டத்தின் கல்வி நிலை உயரப் பட்டுபட்டார்
  • தஞ்சை மாவட்டக் கழகத் தலைவராகப் பொறுப்பேற்று ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தார் (1924-1930). அப்போது, வழிப்போக்கர் சத்திரங்களில் சாதி பேதங்கள் மலிந்திருந்ததை அகற்றப் பாடுபட்டார். ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதி ஒன்றைத் தஞ்சையில் ஏற்படுத்தி அந்த இன மாணவர்களின் கல்விக்குத் துணை புரிந்தார். திருவையாறு சமஸ்கிருதக் கல்லூரிக்கு “அரசர் கல்லூரி” என்று பெயர் மாற்றம் செய்வித்தார். அங்கே சமஸ்கிருதம் மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்த நிலையினை மாற்றி தமிழ்க்கல்வியைத் தொடங்கச் செய்தார். தமிழ் கற்போர், புலவர் பட்டம் பெறும் வகையில் அங்கே தமிழ்க்கல்வி தழைக்கத் தொண்டு புரிந்தார்.
  • 1930-ல் லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட பன்னீர் செல்வம் அவர்களின் உரை, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், தனித் தொகுதிகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி அமைந்தது.
  • 1931-ல் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிலும் காந்திஜியுடன் கலந்து கொண்ட பெருமை பன்னீர் செல்வத்துக்கு உண்டு.
  • மாண்ட்போர்டு சீர்திருத்த சட்டமன்றத்தில், உறுப்பினர் பொறுப்பில் (1930 / 1935) இருந்து, பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை மூலம் நன்மை பெற பணியாற்றினார்.
  • ஆளுநரின் நிர்வாக ஆலோசனைக் குழுவில் இடம் பெற்று (1934) தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் நன்மைக்கான நற்பணிகளில் நாட்டம் செலுத்தினார்.
  • சென்னை மாநில, நிதி, உள்துறை அமைச்சர் பொறுப்பில் (1937) நேர்மையான தொண்டுகள் புரிந்தார்
  • இங்கிலாந்தில் போர்க்கால அமைச்சரவை அமைந்தபோது இந்தியாவுக்கான அமைச்சருக்கு ஆலோசனை கூறும் குழு உறுப்பினர் பதவி (1940) பெற்றார்.

பட்டங்கள்

தொகு

1929-ல் ‘ராவ்பகதூர்’ பட்டம், 1938-ல் ‘சர்’ பட்டம்.

பதவிகளில் நேர்மை

தொகு
  • நீதிக்கட்சி ஆட்சியில் மேட்டூர் அணைத்திட்டத்தால் பயனடையும் தஞ்சை விவசாயிகள், மாவட்ட நிலவுரிமையாளர்கள், ஏக்கருக்கு பதினைந்து ரூபாய் கூடுதல் தண்ணீர்வரி செலுத்த வேண்டும்” என்கிற கருத்து முன்மொழியப்பட்டபோது, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தும் பன்னீர் செல்வம் அதனைக் கடுமையாக எதிர்த்தார். “தமிழகத்துக்கு உணவளித்து வரும் தஞ்சை மாவட்டத்துக்குச் செய்ய வேண்டிய கடமையைத் தான் மேட்டூர் அணை கட்டியதன் மூலம் அரசு செய்திருக்கிறது. கடமையைச் செய்வதற்குக் கட்டணம் வசூலிப்பது நியாயமில்ல” என்பது அவர் தரப்புவாதம்.
  • 1934-ல் ஆளுநரின் நிர்வாகக் குழுவில் இருந்த போது, அவருடைய மருமகன் சுந்தரேசன் (மகளின் கணவர்) காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்த போது அவருக்காக ஆளுநரிடம் பரிந்துரை செய்ய மறுத்து விட்டார்.
  • அதே காலகட்டத்தில் அவருடைய மகன் ஜார்ஜ் பொறியாளர் பதவிக்கு விண்ணப்பித்த போதும் பரிந்துரைக்க மறுத்து தகுதி அடிப்படையில் தேர்வாகி வரட்டும் என்று கூறி விட்டார்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. அடிகள், அமுதன் (1990). தமிழர் செல்வம்-சர் ஏ டி பன்னீர் செல்வம் வரலாறு. 49, பாரதியார் சாலைரதிருச்சி-1: தமி.ழ் இலக்கியக் கழகம். pp. XXVII-110.{{cite book}}: CS1 maint: location (link)
  2. 2.0 2.1 Selvam, A T Panneer (1925–39). "Periyar Movement". Mr.K.Veeramani. Archived from the original on 2007-01-30. பார்க்கப்பட்ட நாள் 2009-01-23.{{cite web}}: CS1 maint: date format (link)
  3. 3.0 3.1 3.2 "Periyar E.V.Ramaswamy - பெரியார்". One Hundred Tamils of the 20th Century. தமிழ் நேசன். பார்க்கப்பட்ட நாள் 2009-01-20. At this critical movement, two of the old guards staunchly stood by [Periyar]. They were Sir R.K.Shanmugam and Sir A.T. Panneerselvam. At the time, the former was the Dewan of the Princely State of Kochi (now a part of Kerala) and then became Independent India's first finance minister in 1947. The latter was a member of the Governor's council and then a minister in Madras province in 1930s. On 1st March 1940, he lost his life in a plane crash while flying over Oman sea on his way to London where he was to assume office as an adviser to the Secretary of State for India in the British Government. Periyar lamented that the sudden and tragic demise of Panneerselvam was an irreparable loss to the people of Tamil Nadu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._தா._பன்னீர்செல்வம்&oldid=4112713" இலிருந்து மீள்விக்கப்பட்டது