அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம்
அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் அல்லது அல்-கரவிய்யீன் (அரபு மொழி: جامعة القرويين) என்பது மொரோக்கோவின் ஃபிசு நகரில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1947 இற் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டதாயினும்[1] இதன் தொடக்கம் பொ.கா. 859 ஆம் ஆண்டிலாகும். அப்போது இது ஒரு மத்ரசாவாக, அதாவது பள்ளிவாசற் பள்ளிக்கூடமாக நிறுவப்பட்டது.[2][3] கரவிய்யீன் மத்ரசா முஸ்லிம் உலகின் முதன்மையான ஆன்மீகக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளதுடன் இப்போதும் அவ்வாறே செயற்படுகின்றது.
'جامعة القرويين ஜாமிஆ அல்-கரவிய்யீன் | |
அல்-கரவிய்யீன் பள்ளிவாசல் மற்றும் பல்கலைக்கழகத்தின் உட்புறத் தோற்றம் | |
வகை | தற்போது: இசுலாமியப் பல்கலைக்கழகம் முன்னர்: பொது அறிவு |
---|---|
உருவாக்கம் | 1947[1] (பல்கலைக்கழகம்) 859[2][3](மத்ரசா) |
சார்பு | சுன்னி |
அமைவிடம் | , |
வளாகம் | நகரம் |
நடுக் காலத்தின்போது முஸ்லிம் உலகுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிற் கல்வி மற்றும் பண்பாட்டுத் தொடர்பினைப் பேணுவதில் அல்-கரவிய்யீன் மத்ரசா மிகச் சிறப்பான பங்கு வகித்துள்ளது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின்போது ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்புகளுக்காகப் பெரிதும் உதவிய வரைபடங்களை வரைந்திருந்தவரான வரைபடக் கலை வல்லுநர் முகம்மது அல்-இத்ரீசி (இ. 1166) ஃபிசு நகரிற் சில காலம் இருந்தார். அப்போது அவர் அல்-கரவிய்யீன் மத்ரசாவிற் சில காலம் பயின்றதாக அல்லது வேலை செய்ததாகக் கருதப்படுகிறது. இசுலாமிய மற்றும் யூத சமுதாயங்களைத் தம் அறிவாற் பெரிதும் கவர்ந்த பேரறிஞர்கள் பலரை இந்த மத்ரசா உருவாக்கியுள்ளது. அவர்களுள் இப்னு றுசைத் அல்-சப்தி (இ. 1321), முகம்மது இப்னு அல்-ஹஜ் அல்-அப்தரி அல்-ஃபாசி (இ. 1336), மாலிகி இசுலாமிய சட்டப் பள்ளியின் முதன்மையா அறிஞர்களுள் ஒருவரான அபூ இம்றான் அல்-ஃபாசி (இ. 1015), பெயர் பெற்ற பயணியும் எழுத்தாளருமான லியோ அஃப்ரிகானுசு மற்றும் ரபீ மோசே பின் மைமோன் ஆகியோர் குறிப்பிடத் தக்கோராவர்.
பல்கலைக்கழக மட்டத்திலான பட்டங்களை வழங்குவனவும் பன்னெடுங்காலமாகத் தொடர்ச்சியாக இயங்குவனவுமான நிறுவனங்களில் உலகிலேயே மிகவும் பழைமையானது அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகமேயெனக் கின்னசு உலக சாதனை நூல் சான்று வழங்கியுள்ளது.[4][5] எனினும், இந்தக் கோரிக்கை மத்ரசாக்களுக்கும் நடுக் காலத்திய பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கருதுகையில், வித்தியாசமானதாகவே தோன்றுகிறது. ஏனெனில், இந்தக் கல்வி நிறுவனம் மத்ரசா என்ற நிலையிலிருந்து பல்கலைக்கழகம் என மாற்றம் பெற்றதாகும்.[6][7] அக்காலத்தில் வழங்கப்பட்ட இசுலாமிய இஜாசா சான்றிதழ்களின் முறைமையைப் பின்பற்றியே நடுக்காலத்திய கலாநிதிச் சான்றிதழ்களும் இக்காலத்திய பல்கலைக்கழகப் பட்டச் சான்றிதழ்களும் தோற்றம் பெற்றன.[8][9][10] 1947 இல் இந்த மத்ரசா பல்கலைக்கழகமாக மீளமைக்கப்பட்டது.[1]. அதற்கு முன்னர், இது வெறுமனே "அல்-கரவிய்யீன்" என்றே அழைக்கப்பட்டது.
மத்ரசா
தொகுஅல்-கரவிய்யீன் மத்ரசாவானது உண்மையில் ஒரு பள்ளிவாசலின் ஒரு பகுதியாகும். பொ.கா. 859 ஆம் ஆண்டு முகம்மது அல்-பிஹ்ரி என்ற செல்வந்தரின் மகளான பாத்திமா அல்-பிஹ்ரி என்பவரால் இது உருவாக்கப்பட்டது. அவர்களின் குடும்பம் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இன்றைய தூனிசியாவின் கைரவானிலிருந்து மொரோக்கோவின் ஃபிசு நகரின் மேற்குப் புறமாக இருக்கும் கைரவான் குடியேற்றவாசிகள் வாழ்ந்த பகுதிக்குக் குடிபெயர்ந்தது. அவர்களின் ஊர்ப் பெயர் காரணமாகவே இந்த மத்ரசாவிற்கும் "அல்-கரவிய்யீன்" என்று பெயரிடப்பட்டது. நன்கு கற்பிக்கப்பட்டோரான பாத்திமாவும் அவரது தங்கை மர்யமும் தம் தந்தையிடமிருந்து பெருமளவு பணத்தை வாரிசுரிமையாகப் பெற்றனர். அச்செல்வத்திலிருந்து தம் சமுதாயத்தினருக்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுவிப்பதற்காகத் தம் முழுச் சொத்தையும் வழங்குவதாகப் பாத்திமா உறுதி பூண்டார்.[11]
தொழுகைக்கான இடமாக இருப்பதற்குக் கூடுதலாக, அரசியற் கலந்துரையாடல்களுக்கும் களமாக அமைந்த இப்பள்ளிவாசலில் பின்னர், குறிப்பாக இயற்கை அறிவியல்கள் உட்பட ஏராளமான பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இங்கு கணிதம், வேதியியல் மற்றும் வெளிநாட்டு மொழிகள் போன்றவற்றைக் கற்பிப்பதை மன்னர் ஐந்தாம் முகம்மது 1957 இல் மீள அறிமுகப்படுத்தினார்.[12]
வரலாறு
தொகுஇந்த மத்ரசா, அரசியல் அடிப்படையில் வலிய சுல்தான்கள் பலரின் ஆதரவைப் பெற்றது. மரீனிய அரச மரபின் சுல்தான் அபூ இனான் பாரிசினால் 1349 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன் நூலகம் மிகப் பெருமளவிலான கையெழுத்து மூல ஆவணங்களைக் கொண்டுள்ளது. இங்கு பாதுகாக்கப்பட்டுள்ள பெறுமதி மிக்க கையெழுத்து மூல ஆவணங்களில் மான் தோலில் எழுதப்பட்ட இமாம் மாலிக் அவர்களின் அல்-முவத்தா, முகம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை முதலாவதாகச் சரிவரத் தொகுத்தெழுதிய "சீறா இப்னு இஸ்ஹாக்", சுல்தான் அஹ்மத் அல்-மன்சூரினால் 1602 ஆம் ஆண்டு இம்மத்ரசாவுக்கு வழங்கப்பட்ட புனித குர்ஆனின் கையெழுத்துப் பிரதி, இப்னு கல்தூன் எழுதிய "அல்-இபார்" என்ற நூலின் மூலப் பிரதி என்பன அடங்கும்.[13] குர்ஆன் மற்றும் பிக்ஹு (இசுலாமிய சட்டக்கலை) என்பவற்றுக்குக் கூடுதலாக இங்கு இலக்கணம், சொற்பொழிவு, அளவையியல், மருத்துவம், கணிதம், வானியல், வேதியியல், வரலாறு, புவியியல், இசை என்பனவும் கற்பிக்கப்படுகின்றன.
அல்-கரவிய்யீன் நடுக்காலத்தில் முஸ்லிம்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையிலான பண்பாட்டு மற்றும் அறிவியற் பரிமாற்றத்தின் தலையாய இடமாக விளங்கியது. கெட்டிக்கார அறிஞர்களான யூத அறிஞர் இப்னு மைமுன் (மைமோனிடெசு) (1135–1204),[14] அல்-இத்ரீசி (இ. 1166 பொ.கா.), இப்னு அல்-அரபி (1165-1240 பொ.கா.), இப்னு கல்தூன் (1332-1395 பொ.கா.), இப்னு அல்-கதீப், அல்-பித்ரூஜி (அல்பெத்ராஜியுசு - Alpetragius), இப்னு ஹிர்சிஹிம், அல்-வஸ்ஸான் போன்ற பலரும் மாணவராக அல்லது ஆசிரியராக இந்த மத்ரசாவுடன் தொடர்புள்ளோராயிருந்தனர். இங்கு வந்த கிறித்தவ அறிஞர்களுள் பெல்ஜியம் நாட்டவரான நிக்கோலசு கிளைனார்ட்சு மற்றும் நெதர்லாந்து நாட்டவரான கோலியுசு என்போர் குறிப்பிடத் தக்கோராவர்.[13]
பல்கலைக்கழகம்
தொகு1947 இல் இந்த மத்ரசா முழுமையான பல்கலைக்கழகம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது.[1]
பள்ளிவாசலின் கட்டிட அமைப்பு
தொகுஅல்-கரவிய்யீன் பள்ளிவாசல் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக வந்த அரச மரபுகளாற் பெரிதாக்கப்பட்டு, 20,000 பேருக்கும் கூடுதலானோர் ஒரே நேரத்திற் தொழுகையில் ஈடுபடத் தக்கதாக வட ஆபிரிக்காவிலேயே மிகப் பெரிய பள்ளிவாசலாக ஆக்கப்பட்டது. இசுபகான் அல்லது இசுத்தான்புல் போன்ற நகரங்களில் உள்ள பெரிய பள்ளிவாசல்களுடன் ஒப்பிடும்போது, அல்-கரவிய்யீன் பள்ளிவாசலின் அமைப்பு சிக்கலான கட்டிட அமைப்பாக உள்ளது. இதன் தூண்களும் வளைவுகளும் தனி வெள்ளை நிறத்திலுள்ளன; வாசலில் நல்ல தரைவிரிப்புக்களுக்குப் பதிலாகக் கோரைப் பாய்களே விரிக்கப்பட்டுள்ளன. எனினும், இடைவிடாது காணப்படும் வளைவுகள் ஒரு விதமான மாட்சிமையையும் அந்தரங்கத்தையும் கொண்டிருப்பதாகக் காட்டுகின்றன. அறைகளும் மேடைகளும் வெளிப்புற முற்றமும் எளிய முறையில் அமைக்கப்பட்டிருப்பினும் மிக உயர்ந்த தரத்திலான ஓடுகளையும், வடிவமைப்புக்களையும், மரச் செதுக்கல்களையும் ஓவியங்களையும் கொண்டிருக்கின்றன.
இந்தப் பள்ளிவாசலின் இன்றைய தோற்றம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அமைக்கப்பட்ட கட்டிட நுணுக்கங்களின் தொகுப்பாகவே அமைந்துள்ளது. முதலில் இப்பள்ளிவாசல் 30 மீ நீளமாயும் குறுக்காக நான்கு உள்வரிகள் உள்ளதாயும் பெரிய முற்றத்தைக் கொண்டுமே இருந்தது. இதன் முதலாவது விரிவாக்கம் குர்துபாவின் உமையா கலீபாவான மூன்றாம் அப்துர் ரஹ்மானினால் பொ.கா. 956 இல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இதன் தொழுமிடம் விரிவாக்கப்பட்டதுடன் மினாரா மீளமைக்கப்பட்டது. இந்த மினாராவே அக்காலத்தில் வட ஆபிரிக்காவின் மினாராக்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழந்தது. அக்காலத்தில் ஃபிசு நகரிலிருந்த ஏனைய பள்ளிவாசல்களில் எல்லாம் அல்-கரவிய்யீன் பள்ளிவாசலின் அதான் (தொழுகை அழைப்பு) ஒலிக்கப்பட்ட பின்னரே அதான் ஒலிக்கப்பட்டது. அல்-கரவிய்யீன் பள்ளிவாசலின் மினாராவில் தொழுகை நேரங்களைக் குறித்து வைப்பதற்கான தாருல் முவக்கித் எனப்படும் தனியறையொன்றும் காணப்படுகிறது.
இதன் மிகப் பெரிய மீள் கட்டுமானம் அல்-முராவிய சுல்தான் அலீ இப்னு யூசுப் இனால் 1135 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. அப்போது 3000 சமீ பரப்பளவில் 18 முதல் 21 உள்வரிகள் உள்ளதாக அமைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இப்பள்ளிவாசலின் இன்றைய தோற்றம் அதிலிருந்தே உருப் பெற்றது. இங்கு குதிரைக் குளம்பு வடிவிலான வளைவுகள், அந்தலூசியக் கலைவடிவங்களால் அலங்கரிக்கப்பட்டனவும் கூபி எழுத்தணிகளைக் கொண்டனவுமான ஓவியங்கள் என்பனவும் காணப்படுகின்றன.
16 ஆம் நூற்றாண்டில், சஅதி அரச மரபினர் இப்பள்ளிவாசலின் முற்றத்தின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளில் இரண்டு பெரும் நடைபாதைப் படிக்கட்டுக்களை அமைத்தனர்.
புகழ் மிக்க மாணவர்கள்
தொகுஅல்லால் அல்-ஃபாசி
லியோ அஃப்ரிகானுசு
அப்துல் கரீம் அல்-கத்தாபி
இப்னு கல்தூன்
வெளித் தொடுப்புகள்
தொகு- ISESCO: Fez 2007 [1] பரணிடப்பட்டது 2008-12-11 at the வந்தவழி இயந்திரம்
- கரவிய்யீன் பல்கலைக்கழகம் - ஃபிசு பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் (பிரெஞ்சு)
- வொய்சு ஒஃப் அமெரிக்கா கட்டுரை (உருது)
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Kevin Shillington: "Encyclopedia of African history", Vol. 1, New York: Taylor & Francis Group, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57958-245-1, p.1025
- ↑ 2.0 2.1 The Report: Morocco 2009 - Page 252 Oxford Business Group "... yet for many Morocco's cultural, artistic and spiritual capital remains Fez. The best-preserved ... School has been in session at Karaouine University since 859, making it the world's oldest continuously operating university. "
- ↑ 3.0 3.1 Esposito, John (2003). The Oxford Dictionary of Islam. Oxford University Press. p. 328. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-1951-2559-2.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|origmonth=
,|month=
,|chapterurl=
,|origdate=
, and|coauthors=
(help) - ↑ The Guinness Book Of Records, Published 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-553-57895-2, P.242
- ↑ http://www.buzzle.com/articles/oldest-university-in-the-world.html
- ↑ George Makdisi: "Madrasa and University in the Middle Ages", Studia Islamica, No. 32 (1970), pp. 255-264 (264):
Thus the university, as a form of social organization, was peculiar to medieval Europe. Later, it was exported to all parts of the world, including the Muslim East; and it has remained with us down to the present day. But back in the middle ages, outside of Europe, there was nothing anything quite like it anywhere.
- ↑ Encyclopedia of Islam has an entry on "madrasa" but notably lacks one for a Muslim "university" (Pedersen, J.; Rahman, Munibur; Hillenbrand, R. "Madrasa." Encyclopaedia of Islam, Second Edition. Edited by: P. Bearman , Th. Bianquis , C.E. Bosworth , E. van Donzel and W.P. Heinrichs. Brill, 2010, retrieved 21/03/2010)
- ↑ Makdisi, George (April–June 1989), "Scholasticism and Humanism in Classical Islam and the Christian West", Journal of the American Oriental Society, 109 (2): 175–182 (176)
{{citation}}
: CS1 maint: date format (link) - ↑ Pedersen, J.; Rahman, Munibur; Hillenbrand, R. "Madrasa." Encyclopaedia of Islam, Second Edition. Edited by: P. Bearman , Th. Bianquis , C.E. Bosworth , E. van Donzel and W.P. Heinrichs. Brill, 2010, retrieved 20/03/2010
- ↑ Jomier, J. "al- Azhar (al-Ḏj̲āmiʿ al-Azhar)." Encyclopaedia of Islam, Second Edition. Edited by: P. Bearman , Th. Bianquis , C.E. Bosworth , E. van Donzel and W.P. Heinrichs. Brill, 2010, retrieved 20/03/2010
- ↑ see R. Saoud article on http://muslimheritage.com/topics/default.cfm?ArticleID=447 பரணிடப்பட்டது 2009-01-15 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Renaissance in Fez பரணிடப்பட்டது 2012-01-22 at the வந்தவழி இயந்திரம் - டைம் (இதழ்) (Monday, October 24, 1960)
- ↑ 13.0 13.1 see R. Saoud article on http://muslimheritage.com/topics/default.cfm?ArticleID=447 பரணிடப்பட்டது 2009-01-15 at the வந்தவழி இயந்திரம்,
- ↑ Kenneth Seeskin, The Cambridge companion to Maimonides, Cambridge University Press 2005, p. 18, He is said to have received "formal medical training while residing in Fez."