சர்க்கரைப் பதிலீடு
சர்க்கரைப் பதிலீடு (sugar substitute) என்பது, சர்க்கரையின் (இலங்கை வழக்கு: சீனி) இனிப்புச் சுவையைத் தரக்கூடிய உணவுச் சேர்பொருட்களுள் ஏதாவதொன்றைக் குறிக்கும். இவற்றை "இனிப்பூட்டிகள்" எனவும் அழைப்பது உண்டு. இவை பொதுவாக உணவுக்குக் குறைந்த கலோரிப் பெறுமானத்தைத் தருகின்றன. சர்க்கரைப் பதிலீடுகளுள் சில இயற்கையானவை, வேறு சில செயற்கையாகத் தயாரிக்கப்படுபவை. செயற்கையாகத் தயாரிக்கப்படுபவை "செயற்கை இனிப்பூட்டிகள்" எனப்படுகின்றன.
சர்க்கரைப் பதிலீடுகளுள் ஒரு வகை உயர்செறிவு இனிப்பூட்டிகள் எனப்படுகின்றன. இவை பொதுவாக மேசைச் சர்க்கரை எனப்படும் சுக்கிரோசிலும் பலமடங்கு இனிப்புத்தன்மை கொண்டவை. இதனால், உணவில் பயன்படுத்தும்போது மிகக் குறைந்த அளவு இனிப்பூட்டியே தேவைப்படுவதால், இவற்றின் ஆற்றல் பங்களிப்பும் பெரும்பாலும் புறக்கணிக்கத் தக்கதே. சில வேளைகளில் இவ்வாறான சேர்வைகளிலிருந்து கிடைக்கும் சுவை உணர்வு, சுக்கிரோசில் இருந்து கிடைப்பதிலும் வேறுபட்டுக் காணப்படும். இதனால், கூடிய அளவு இயற்கையான சுவையைப் பெறுவதற்காக இவற்றைச் சிக்கலான கலவைகளாகவே பயன்படுத்துகின்றனர்.
சுக்குரோசு அல்லது வேறு சர்க்கரைப் பொருட்களை உணவுப் பொருட்களில் சேர்க்கும்போது அவற்றுக்குச் சிறப்பான தோற்றத் தன்மை அல்லது நாவுணர்ச்சித் தன்மை கிடைப்பது உண்டு. சர்க்கரைப் பதிலீடுகள் இவ்வாறான தன்மைகளைக் கொடுப்பது இல்லை. இதனால், இப்பதிலீடுகளுடன் பருமமாக்கு பொருட்களையும் சேர்க்கவேண்டி ஏற்படுகிறது. பத்தியக் குளிர்பானங்களிலும், மேசைச் சர்க்கரைக்கான மாற்றுப் பொருள்களிலும் சர்க்கரைப் பதிலீடுகளுடன் இவ்வாறான பருமமாக்கு பொருட்களைச் சேர்ப்பது உண்டு.
ஐக்கிய அமெரிக்காவில் ஆறுவகையான சர்க்கரைப் பதிலீடுகள் பயன்படுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை, இசுட்டெவியா, அசுப்பர்ட்டேம், சுக்கிரலோசு, நியோட்டேம், ஏசுசல்பேம் பொட்டாசியம், சக்கரின் என்பவை. செயற்கை இனிப்பூட்டிகள் உணவுச் சேர்பொருட்களாகப் பயன்படுத்தப்படுவதை ஐக்கிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கட்டுப்படுத்துகிறது.[1] இவ்வாறான செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதனால், உடல்நலத்துக்குத் தீங்கு உண்டா என்பது குறித்து பல விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் எல்லா சர்க்கரைப் பதிலீடுகளும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பொருட்களைப் "பாதுகாப்பானதாகப் பொதுவாக அடையாளம் காணப்பட்டவை" என்னும் தலைப்பில் பட்டியலாக வெளியிடுகின்றது. அங்கீகரிக்கப்பட்ட எந்தச் சர்க்கரைப் பதிலீடுகளின் அங்கீகார நிலையையும் மாற்றக்கூடிய வகையிலான அறிவியல் அடைப்படையிலான சான்றுகள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. இப்பொருட்களை அனுமதிப்பது குறித்த முடிவுகளை எடுக்கும்போது, நச்சியல், மருத்துவம் ஆகியவை சார்ந்த ஆய்வுத் தகவல்கள் உள்ளிட்ட ஏராளமான விரிவான ஆய்வுத் தகவல்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
உணவில் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்ற பெரும்பான்மையான சர்க்கரைப் பதிலீடுகள் செயற்கையாக உருவாக்கப்பட்ட சேர்வைகள். ஆனாலும் சில இயற்கையான சர்க்கரைப் பதிலிடு பொருட்களும் உள்ளன. பெர்ரிகள், பழங்கள், காய்கறிகள், காளான்கள் போன்றவற்றில் காணப்படும் சோர்பிட்டோல், சைலிட்டோல் போன்றவை இவ்வாறானவை. மேற்படி இயற்கைப் பொருட்களில் இருந்து இச் சேர்வைகளைப் பிரித்து எடுப்பது வணிக அடிப்படையில் சாத்தியமானதல்ல. இதனால், பொருத்தமான தாழ்த்து சர்க்கரைகளை வினையூக்க ஐதரசனேற்றம் செய்வதன் மூலம் இச் சர்க்கரைப் பதிலீடுகள் தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இம்முறை மூலம் சைலோசு சைலிட்டோல் ஆகவும், லக்டோசு லக்ட்டிடோல் ஆகவும், குளுக்கோசு சோர்பிட்டோல் ஆகவும் மாற்றப்படுகின்றன.
பயன்பாட்டுக்கான காரணங்கள்
தொகுசர்க்கரைப் பதிலீடுகள் பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
- உடல் நிறையைக் குறைப்பதற்கு: உடல் நிறையைக் குறைக்க விரும்புபவர்கள் உணவின் மூலம் உள்ளெடுக்கும் கலோரிப் பெறுமானத்தைக் குறைக்கவேண்டி இருக்கிறது. சர்க்கரை கூடிய கலோரிப் பெறுமானம் கொண்டது. இதனால், புறக்கணிக்கத்தக்க கலோரிப் பெறுமானம் கொண்ட சர்க்கரைப் பதிலீடுகளைப் பயன்படுத்தும்போது உணவின் கலோரிப் பெறுமானத்தைக் குறைக்க முடிகிறது. இது உணவின் அளவைக் குறைக்காமல் கலோரிப் பெறுமானத்தை மட்டும் குறைக்கும் ஒரு வழியாக இருப்பதால், பலர் உடல் நிறைக் குறைப்புக்குச் சர்க்கரைக்குப் பதிலாகச் சர்க்கரைப் பதிலீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
- பற்பாதுகாப்பு: உணவில் இருக்கும் சர்க்கரை பற்களில் ஒட்டிக்கொண்டுவிடும். இது, இது பக்டீரியாக்களினால் நொதிக்கப்படும்போது உருவாகும் அமிலங்களினால் பற்குழிகள் உருவாகிக் காலப் போக்கில் பற்கள் சிதைகின்றன. ஆனால், சர்க்கரைப் பதிலீடுகள் பக்டீரியாக்களால் நொதிக்கப்படுவது இல்லை. இதனால் பற்குழிகள் ஏற்படுவதற்கு இவை உதவுவது இல்லை. சில சர்க்க்கரைப் பதிலீடுகள் பல் நலத்துக்கு உதவுகின்றன. சைலிட்டோல் இவ்வாறான ஒரு சர்க்கரைப் பதிலீடு. இது பக்டீரியாக்கள் பற்களில் தங்குவதையும் தடுக்கிறது.
- சர்க்கரை நோய்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் குருதிச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டி உள்ளது. சர்க்கரைப் பதிலீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை உள்ளெடுப்பைக் குறைத்துக் குருதிச் சர்க்கரை அளவு கூடாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. சில சர்க்கரைப் பதிலீடுகள் ஆற்றலை வெளிவிட்டாலும், மிகவும் மெதுவாகவே இது நடைபெறுகிறது. இதனால் குருதிச் சர்க்கரை திடீரென உயராமல் கட்டுப்படுத்தலாம்.
- எதிர்வினைக் குருதிச் சர்க்கரைக் குறை: எதிர்வினைக் குருதிச் சர்க்கரைக் குறை உள்ளவர்களில் குளுக்கோசு விரைவாகக் குருதிக்குள் உறிஞ்சப்பட்டும்போது கூடிய அளவு இன்சுலின் சுரக்கப்படுகிறது. இதனால், குருதிச் சர்க்கரை அளவு உடல், மூளை ஆகியவற்றின் சரியான செயற்பாட்டுக்குத் தேவையான அளவிலும் குறைந்துவிடுகிறது. இதனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மெதுவாக உள்ளிழுக்கப்படக்கூடிய உணவு வகைகளை உண்பதுடன், சர்க்கரைப் பதிலீடுகளையும் பயன்படுத்துகின்றனர்.
- செலவுக் குறைப்பு: பல சர்க்கரைப் பதிலீடுகள் சர்க்கரையை விடச் செலவு குறைவானவை. நீண்டகாலம் வைத்திருக்கக்கூடியதாக இருப்பதும், செறிவான இனிப்புத் தன்மையுமே இவ்வாறு விலை குறைவாக இருப்பதற்கான காரணங்கள். இதனால், குறுகிய காலத்தில் பழுதடையாமல் இருக்கவேண்டிய உணவுப் பொருள்களில் சர்க்கரைப் பதிலீடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனாலும், சர்க்கரைப் பதிலீடுகளினால் ஏற்படுவதாகக் கருத்தப்படும் பக்கவிளைவுகள், நீண்டகால நோக்கில் மேற்குறிப்பிட்ட பயன்களை மீறியவையாக இருக்கின்றன.
உணவுத் தொழிற்றுறையில் சர்க்கரைப் பதிலீடுகளின் பயன்பாடு
தொகுஉணவு மற்றும் பானத்தொழில் துறையில் சர்க்கரை அல்லது சோழப் பாணிக்குப் பதிலாகச் செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவது அதிகமாகி வருகிறது. "மின்டெல்" என்னும் சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 2000க்கும் 2005க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில், செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்தும் 3,920 உற்பத்திகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. 2004ல் மட்டும் 1649 உற்பத்திப் பொருட்கள் அறிமுகமாயின. "பிரீடோனியா" என்னும் சந்தை ஆய்வு நிறுவனம், அமெரிக்காவில், செயற்கை இனிப்பூட்டிச் சந்தை ஆண்டுக்கு 8% வளர்ச்சி பெற்று 2012ல் 189 மில்லியன் டாலர்களை எட்டும் என்று கூறியிருந்தது.
அசுப்பர்ட்டேம் என்னும் செயற்கை இனிப்பூட்டியே இப்போது அமெரிக்க உணவுத் தொழிலில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதற்கான "மான்சான்டோ கம்பனி"யின் காப்புரிமம் 1992 ஆம் ஆண்டில் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விலை வீழ்ச்சியே இதற்கு முதன்மைக் காரணம். ஆனாலும், "டேட் அன்ட் லைல்" நிறுவனத்தின் புதிய உற்பத்தி முறைக்கான காப்புரிமம் கிடைத்ததும், சுக்கிரலோசின் விலை 30% குறையும் எனக் கருதப்படுவதால், அசுப்பர்ட்டேமை, சுக்கிரலோசு விஞ்சக்கூடிய சாத்தியம் உண்டு.
குறிப்புகள்
தொகு- ↑ FDA No Calories... Sweet! fda.gov பரணிடப்பட்டது 2006-08-20 at the வந்தவழி இயந்திரம்
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- கலோரிக் கட்டுப்பாட்டு அவை - செயற்கை இனிப்பூட்டிகள் மற்றும் பண்டங்கள் உற்பத்தியாளர்களுக்கான வணிகச் சங்கம். (ஆங்கில மொழியில்)