ஐந்தாம்படை
ஐந்தாம் படை (Ainthaam Padai) என்பது 2009 ஆண்டு வெளியான தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். சுந்தர் சி.. சிம்ரன், முகேஷ், விவேக், நாசர் ஆகியோர் நடித்த இப்படம் 23 சூலை 2009 அன்று வெளியானது. இப்படத்தை சுந்தரின் மனைவி குஷ்பூ தயாரித்தார். இந்த படம் வணிக ரீதியாக சராசரிக்கும் கீழே வசூல் ஈட்டியது.[2][3]
ஐந்தாம் படை | |
---|---|
இயக்கம் | பத்ரி |
தயாரிப்பு | குஷ்பூ |
கதை | பத்ரி, சக்தி கிருஷ்ணா (உரையாடல்) |
இசை | டி. இமான் |
நடிப்பு | சுந்தர் சி. சிம்ரன் முகேஷ் விவேக் நாசர் |
ஒளிப்பதிவு | டி. சங்கர் |
படத்தொகுப்பு | காசிவிசுவநாதன் |
கலையகம் | அவினி சினிமேக்ஸ் |
விநியோகம் | ஐங்கரன் இண்டர்னேசனல் மீடியா |
வெளியீடு | 23 சூலை 2009[1] |
ஓட்டம் | 152 நமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுஇந்த படம் இரண்டு வெவ்வேறு குடும்பங்களுக்கு இடையிலான மோதல்களையும் அண்ணன் தம்பிமார்களுக்கு இடையிலான ஒற்றுமையையும் பற்றியது.
எதிரிக் குடும்பத்தின் உறவுமகளான தேவசேனாவை (சிம்ரன்) அறிமுகப்படுத்துவதில் இருந்து படத்தின் கதை முன்னோக்கி செல்கிறது. ஆனால், குணசேகரன் (நாசர்) இந்த குடும்பப் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் நோக்கில் அவரது மூத்த தம்பியான கருணாகரனுக்கும் (முகேஷ்) தேவசேனாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடுகள் செய்கிறார். ஆயினும், தேவசேனா அவளது மணமகன் பிரபாகரன் (சுந்தர் சி) தான் என தவறுதலாக எண்ணி விடுகிறாள். அவளுக்கு திருமணம் நடக்கப்போகும் நேரத்தில் மணமகன் பிரபாகரனின் அண்ணன் தான் எனத் தெரிய வர, அவள் பிரபாகரனின் காலில் விழுந்து அவளின் திருமண மறுப்பைக் கூறி கெஞ்சுகிறாள். இருந்தும், பிரபாகரன் தேவசேனாவை கட்டாயப்படுத்தி அவனது அண்ணன் கருணாகரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறான். அதன் காரணமாக, தேவசேனா பிரபாகரனை அவனின் குடும்பத்தை விட்டு பிரிப்பதாக அவனுக்கு சவால் விடுகிறாள்.
தேவசேனா அவளது கல்யாணத்திற்கு பின்பு அவளது கணவர் கருணாகரனுடன் சேர்ந்து வாழ்க்கையை துவங்காமல் பிரபாகரனை பழிவாங்க திட்டம் திட்டுகிறாள். பிரபாகரனும் காயத்திரியும் (ஆதித் சௌத்ரி) காதலிப்பதை அறிந்த தேவசேனா அந்த காதலை தோல்வியடையச் செய்ய நினைக்கிறாள். அதற்காக அவள் அவளது பெரிய தந்தையான தனுஷ்கோடியின் (தோதன்னா) உதவியை நாடுகிறாள். தனுஷ்கோடி காயத்திரியின் தந்தையை கடத்தி அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டி அவனின் கடைசி மகனான பன்னீர்க்கு (ஆர்யன்) காயத்திரியை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க முயல்கிறான். பிரபாகரனிடமும் அவனது அண்ணன்களிடமும் காயத்திரி அவளது மனப்பூர்வத்துடன் நிச்சயதார்த்தத்திற்கு சம்மதிப்பதாக பொய் கூறுகிறாள். இதனால் சந்தோசமடைந்த தேவசேனா பிரபாகரனை மென்மேலும் பழிவாங்குவதாக அவனிடம் சவால் விடுகிறாள்.
பிரபாகரனுக்கு கடந்தகால நினைவுகள் சில முன்வந்து செல்கிறது. ஆறு வருடங்களுக்கு முன்பு, குணசேகரனுக்கும் அவரது காதலியான கல்பனாவிற்கும் (தேவயாணி) கல்யாணம் பண்ணி வைக்க நிச்சயிக்கப்படுகிறது. அந்நேரம் அந்த ஊரில் கள்ளச்சாராய பாவனையின் காரணமாக சில ஆண்மக்கள் இறந்துவிட்டனர். அந்த குற்றத்திற்கு காரணமானவர்கள் தனுஷ்கோடி மற்றும் அவரது மூத்த மகனான ராஜதுரை (ராஜ்கபூர்) எனத் தெரியவந்தது. அப்போது அவ்வூரின் மகளிர் மன்றத் தலைவியாக இருந்த கல்பனா அவளது குழுவுடன் அந்த மோசடியை தடுக்க சென்றபோது அங்கே பிரபாகரனுக்கும் ராஜதுரைக்கும் இடையே சண்டை நிலவுகிறது. தனுஷ்கோடி ஊர்க் கலவரங்களை ஏற்படுத்த பிரச்சினைகள் தீவிரமடைந்து, ராஜதுரையின் மீது கொடுக்கப்பட்ட புகாரை கல்பனாவின் குழுவுடனான பேச்சுவார்த்தையினது சுமூகமான முடிவில் இரத்து செய்தனர். இதனால் தனுஷ்கோடி மற்றும் குணசேகரன் குடும்பத்துக்கு இடையில் பகை ஆரம்பித்தது.
தனுஷ்கோடி வேறு ஊருக்கு சென்று சாராயம் தயாரிப்பதற்கு யோசனை கூற, ராஜதுரை அதனை மறுத்து கல்பனாவை அவளின் வாழ்நாள் முழுவதும் பழிவாங்க வேண்டுமென திட்டம் போடத் துவங்கினான். மறுநாள் காலையில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதன் படி குணசேகரனதும் கல்பனாவினதும் கல்யாண ஏற்பாடுகள் கோவிலின் மண்டபத்திற்குள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. கல்பனா கல்யாணத்திற்கு தயாராக மணமேடையில் மாலையுடன் அமர்ந்து கொண்டு சடங்குகளை செய்து கொண்டிருக்கும் போது அங்கே ராஜதுரை யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வருகிறான். ராஜதுரை சரியாக கல்பனாவிற்கு முன்னால் நின்று அவனது வேடத்தை கலைக்க, அவன் கையில் தாலிக்கயிறு வைத்திருப்பதை கல்பனா காண்கிறாள். அங்கு என்ன நடக்கிறது என கல்பனா யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ராஜதுரை அவளின் கழுத்தில் தாலி கட்ட முயற்சிக்கிறான். அவன் முடிச்சுப் போட துவங்க முன்பாக கல்பனா அவனைத் தள்ளிவிட்டு கோவிலை விட்டு ஓடிவிடுகிறாள். ராஜதுரையைத் தடுக்க குணசேகரன் உட்பட சிலர் முற்பட்ட போதிலும், அவன் அவர்களை தாக்கிவிட்டு கல்பனாவை துரத்த ஆரம்பித்தான். கல்பனா எவ்வளவு தூரம் ஓடிய போதிலும், ராஜதுரை அவளை ஒரு வீதித்தடை அருகே மடக்கிப் பிடித்துவிட்டான். தன்னை கட்டாயக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாமென கல்பனா எவ்வளவோ கெஞ்சி அழுத போதிலும், ராஜதுரை அதைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தடுக்க வந்த அவளின் அம்மாவையும் கீழே தள்ளிவிட்டு கல்பனாவின் கழுத்தில் வலுக்கட்டாயமாகத் தாலி கட்டத் துவங்கினான். கல்பனா எவ்வளவோ முயன்றும் அவளால் ராஜதுரையின் பிடியிலிருந்து விலக முடியவில்லை. ராஜதுரை கல்பனாவின் கழுத்தில் தாலி கட்டி முடித்துவிட்டு குணசேகரனை தாக்க முயல்கிறான். கல்பனா அதிர்ச்சியடைந்து அவளின் கழுத்தில் கட்டப்பட்ட தாலியை கைகளில் ஏந்திக்கொண்டு அதைப் பார்த்தபடியே நிற்கிறாள். இதற்கிடையில் நடைபெற்ற சண்டையில் பிரபாகரன் தன்னை தற்காத்து கொள்ளும் முயற்சியில் ராஜதுரை இறந்துபோகிறான். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த கல்பனா மனநலம் பாதிக்கப்பட்டு பைத்தியமாகிறாள். இவ்வாறாக, பிரபாகரன் அவனது கடந்தகாலத்தை தாந்தோணியிடம் (விவேக்) கூறி முடிக்கிறான்.
தேவசேனாவின் ஒவ்வொரு திட்டங்களையும் பிரபாகரன் தாந்தோணியின் உதவியுடன் ஒவ்வொன்றாக முறியடிக்கிறான். ஒரு அமைச்சரின் (ராதா ரவி) அதிகாரத்தை இருவரும் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கிடையில், ஏற்கனவே தனுஷ்கோடியின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கல்பனாவிற்கு ஒருவாறாக சுயநினைவு திரும்புகிறது. பிரபாகரன் முயற்சி செய்து காயத்திரியின் தந்தையை தனுஷ்கோடியிடம் இருந்து மீட்டெடுக்கிறான். அதனை காயத்திரிக்கு புரிய வைத்துவிட்டு பிரபாகரன் நடக்கவிருந்த கல்யாணத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுகிறான். முடிவில், தேவசேனாவின் முன்னிலையில் பிரபாகரன் காயத்திரியின் கழுத்தில் சந்தோசமாகத் தாலி கட்ட அவளும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறாள்.
தனுஷ்கோடி தேவசேனாவின் மீது கோபமடைந்து அவளைக் கொலை செய்ய முயற்சிக்கிறான் கல்பனா அங்கே வந்து தேவசேனாவிற்கு உதவி செய்கிறாள். குணசேகரன், கருணாகரன் மற்றும் பிரபாகரன் ஆகிய மூவரும் சேர்ந்து அங்கிருந்த அத்தனை பேருடனும் சண்டையிட்டு வெற்றி பெறுகின்றனர். அன்று இரவில், பிரபாகரன் - காயத்திரி, குணசேகரன் - கல்பனா, கருணாகரன் - தேவசேனா, தாந்தோணி - டயானா (ஆர்த்தி) ஆகிய தம்பதிகள் அவர்களது முதலிரவைக் கொண்டாட செல்கின்றவாறு படத்தின் கதை முடிவு பெறுகிறது.
நடிகர்கள்
தொகு- சுந்தர் சி. பிரபாகரனாக
- சிம்ரன் தேவசேனா கருணாகரனாக
- முகேஷ் கருணாகரன்
- விவேக் தாந்தோணி
- நாசர் குணசேகரனாக
- தேவயானி கல்பணா குணசேகரனாக
- ஆதித் சோந்தரி காயத்திரி பிரபாகரனாக
- சாய் பிரசாந்த் தினகரனாக
- தொட்டண்ணா தணுஷ்கோடியாக
- மதன் பாப் தேவசேனாவின் தந்தையாக
- ஆர்த்தி தினாத் தாந்தோணியாக
- ராதாரவி அமைச்சராக
- சம்பத் ராஜ் பெரியசாமியாக
- ராஜ்கபூர் இராஜதுரையாக
- ஆரியன்
- விச்சு விசுவநாத்
- பெசன்ட் ரவி
- மின்னல் ரவி
- சுஜா குத்தாட்டப் பாடலில்
இசை
தொகுஇப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, பாடல் வரிகளை கங்கை அமரன், நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதினர்.[4]
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடல் வரிகள் |
---|---|---|---|
1 | "ஓரம்போ" | ரஞ்சித், எம். எல். ஆர் கார்த்திகேயன், விஜய் யேசுதாஸ், கே. ஜே. யேசுதாஸ் | கங்கை அமரன் |
2 | "ஆறடி ரட்ச்சனோ" | சிரேயா கோசல், ஷைல் ஹடா, குமார் சானு | நா. முத்துக்குமார் |
3 | "சொக்கு சுந்தர்" | அனிதா | |
4 | "வாடி என்" | தேவன் | |
5 | "சின்ன கொழுந்தனாரே" | சாதனா சர்கம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ayngaran International".
- ↑ https://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/aintham-padai.html
- ↑ https://www.sify.com/movies/boxoffice.php?id=plupq3fbecheh[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Ainthaam Padai Tamil Movie High Quality mp3 Songs Listen and Download Music By D.Imman StarMusiQ.com". Archived from the original on 2017-02-27. பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.