ஓயாத அலைகள் மூன்று

ஓயாத அலைகள் மூன்று என்பது இலங்கை அரசபடைகள் மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல சண்டைக்களங்களை உள்ளடக்கிய நீண்டகாலத் தொடர் நடவடிக்கையாகும். இந்நெடிய சமரில் கட்டம் ஒன்று, இரண்டு என்பன வன்னிப் பெருநிலப்பரப்பில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா அரசபடைகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் ஆகும். ஏனைய மூன்றும் வடபோர்முனையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டவையாகும்.

ஓயாத அலைகள் நடவடிக்கை
ஈழப் போர்
காலம் நவம்பர் 1-10, 1999
இடம் வன்னி பெருநிலப்பரப்பு
முன் ஓயாத அலைகள் 2
அணிகள்
இலங்கை அரசு தமிழ்ப் புலிகள்
இது ஐந்து கட்டங்களைக் கொண்டது

பின்னணி

தொகு

ஓயாத அலைகள் மூன்று நெடுஞ்சமரில் முதலிரு கட்டங்கள், ஜெயசிக்குறு, ரணகோச-1,2,3,4, றிவிபல போன்ற பல இராணுவ நடவடிக்கைகள் மூலம் சிறிலங்கா அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்புக்களையும், பதினைந்து வருடங்களுக்கு முன்பே சிறிலங்கா அரசபடையினரால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டுச் சிங்களக்குடியேற்றமாக்கப்பட்ட சில நிலப்பரப்புக்களையும் கைப்பற்றும் நோக்கோடு சிறிலங்கா இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்து அப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்ட நிகழ்வாகும்.

யாழ்ப்பாணத்தை அரசபடைகளிடம் இழந்தபின் புலிகளின் தலைமையகமாகவும் முதன்மைத் தளப்பகுதியாகவும் விளங்கியது வன்னிப் பெருநிலப்பரப்பு. அப்பரப்பில் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு இராணுவ முகாமை 'ஓயாத அலைகள் ஒன்று' என்ற இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றியதன் மூலம் புலிகள் வன்னியை பலம்வாய்ந்த தளமாக ஆக்கிக்கொண்டனர். இலங்கையின் வடமுனையான யாழ்ப்பாணத்தை அரசபடையினர் கைப்பற்றி வைந்திருந்தாலும் அவர்களுக்கு தென்பகுதியுடனான தொடர்புகளனைத்தும் கடல்வழியாக மட்டுமே இருந்தன. படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வன்னிப் பெருநிலப்பரப்பும் அதனூடு செல்லும் ஏ-9 அல்லது கண்டிவீதி என அழைக்கப்படும் முதன்மை நெடுஞ்சாலையும் விடுதலைப்புலிகள் வசமிருந்தன.

யாழ்ப்பாணத்துக்கான வினியோகத்தில் பெரிய சிக்கல்களை எதிர்கொண்டதால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றி தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வரை கட்டுப்பாட்டுப் பகுதியை ஏற்படுத்தும் நோக்கோடு சிறிலங்கா அரசதரப்பால் 'ஜெயசிக்குறு' என்ற பெயரில் மே 13. 1997 அன்று இராணுவ நடவடிக்கையொன்று தொடங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து ஆனையிறவு வரையான ஏ-9 பாதையைக் கைப்பற்றுவதே அதன் நோக்கம். அந்நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் போர் புரிந்ததால் வன்னிப்பரப்பில் பல கடுமையான சமர்கள் நடைபெற்றன. அந்நடவடிக்கை மூலம் மாங்குளம் வரையான பாதையை சிறிலங்கா அரசதரப்பினர் கைப்பற்றிக் கொண்டனர்.

பின்னர் டிசம்பர் 5 1998 அன்று சிறிலங்கா அரசபடையினர் 'றிவிபல' என்ற பெயரில் நடவடிக்கையொன்றைச் செய்து மாங்குளத்துக்கும் ஏ-9 நெடுஞ்சாலைக்கும் கிழக்குப் பக்கமாகவுள்ள ஒட்டுசுட்டான் என்ற பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். அன்றைய தினமே 'ஜெயசிக்குறு' இராணுவ நடவடிக்கை கைவிடப்படுவதாக சிறிலங்கா அரசபடைத்தரப்பு அறிவித்தது. ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை அமைக்கும் முயற்சியை சிறிலங்கா அரசபடைகள் கைவிட்டதற்கு, விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலும் அதனால் சிறிலங்கா அரசபடைக்கு ஏற்பட்ட இழப்புக்களுமே காரணம் என்று பல இராணுவ ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

பின்னர், மன்னாரிலிருந்து பூநகரி வரையான விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு நிலப்பகுதியைக் கைப்பற்றி மேற்குக் கடற்கரையோரமாக யாழ்ப்பாணத்துக்கு வினியோகப் பாதையை ஏற்படுத்துவதென சிறிலங்கா அரசபடை திட்டமிட்டது. அதன்படி 'ரணகோச' என்ற பெயரில் தொடரிலக்கங்களுடன் பெரியதொரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. ஒன்று, இரண்டு எனத் தொடங்கி நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட ரணகோச இராணுவ நடவடிக்கையில் சிறிலங்கா அரசபடைத்தரப்பு 'பள்ளமடு' என்ற இடம்வரை முன்னேறியது. பள்ளமடுவில் பல சண்டைகள் நடந்தாலும் அக்கிராமத்துக்கு அப்பால் சிறிலங்கா அரசபடை முன்னேறவில்லை.

இந்நிலையில் 1999 ஒக்டோபர் இறுதிப்பகுதியில் ஏ-9 நெடுஞ்சாலைக்குக் கிழக்குப் புறமாக 'அம்பகாமம்' என்ற இடத்தில் 'வோட்டர் செட் -1, 2' என்ற பேரில் இரண்டு இராணுவ முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தாக்குதல்

தொகு

ஓயாத அலைகள் மூன்று - கட்டம் ஒன்று

தொகு

நவம்பர் 1, 1999 அன்று நள்ளிரவு 'ஓயாத அலைகள் மூன்று' இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது. 'றிவிபல' என்ற இராணுவ நடவடிக்கை மூலம் சிறிலங்கா அரசபடைகள் கைப்பற்றி நிலைகொண்டிருந்த ஒட்டுசுட்டான் கூட்டுப்படைத்தளம் மீது முதலாவது தாக்குதல் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நெடுங்கேணி, அம்பகாமம், கரிப்பட்ட முறிப்பு, மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம், விளக்குவைத்த குளம் போன்ற 'ஜெயசிக்குறு' நடவடிக்கை மூலம் சிறிலங்கா அரசபடையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளும், 1985 ஆம் ஆண்டு தமிழர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுச் சிங்களக் குடியேற்றமாகவும் இராணுவத் தளமாகவும் மாற்றப்பட்டிருந்த சிலோன்தியேட்டர், கென்ற்பாம், டொலர்பாம் போன்ற நிலப்பகுதிகளும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன.

தாக்குதல் தொடங்கி ஐந்தாம்நாள் (நவம்பர் 5. 1999) ஏ-9 பாதையில் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முதற்கட்டம் முடிவுக்கு வந்தது.

ஓயாத அலைகள் மூன்று - கட்டம் இரண்டு

தொகு

இரண்டுநாட்கள் கழிந்த நிலையில் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டது. ரணகோச என்ற பெயரில் தொடரிலக்கமாக நான்கு நடவடிக்கைகளைச் செய்து சிறிலங்கா அரசபடைகள் மன்னார் மாவட்டத்தில் கைப்பற்றியிருந்த நிலப்பகுதிகளை மீளக் கைப்பற்றும் நோக்கத்தோடு பள்ளமடுவில் தாக்குதல் தொடங்கப்பட்டது. பள்ளமடு, பெரியமடு, தட்சணாமருதமடு, மடுத்தேவாலயப்பகுதி உட்பட 'ரணகோச' மூலம் சிறிலங்கா படையினர் கைப்பற்றிய பகுதிகள் அனைத்தையும் விடுதலைப்புலிகள் மீளக்கைப்பற்றினர்.

இத்தாக்குதல் நடவடிக்கையின் போதுதான் மடுத்தேவாலயம் தாக்குதலுக்கு உள்ளாகி அங்குத் தஞ்சமடைந்திருந்த 42 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் பலர் படுகாயமடைந்திருந்தனர். இத்தாக்குதல் யாரால் நடத்தப்பட்டதென்ற குழப்பம் சிலரிடையே நிலவினாலும், கோயிலில் தங்கியிருந்த மக்கள், காயமடைந்தவர்கள் அனைவரினதும் சாட்சியங்கள் அரசபடையினரையே சுட்டின.

ஏறத்தாழ மூன்றுநாட்களில் இரண்டாம் கட்டம் நிறைவுக்கு வந்தது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓயாத_அலைகள்_மூன்று&oldid=3945063" இலிருந்து மீள்விக்கப்பட்டது