காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில்
காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் (மணிகண்டீசம்) என்று அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் பிரம்மன், திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் இவ்விறைவனை வழிபட்ட இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1] [2]
காஞ்சிபுரம் மணிகண்டீசம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் மணிகண்டீசம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மணிகண்டீசுவரர். |
இறைவர், வழிபட்டோர்
தொகுதல வரலாறு
தொகுதிருப்பாற்கடலை கடைந்தபோது தோன்றிய நஞ்சுவால் துயருற்று, தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அந்நஞ்சை இறைவனுக்கு கொடுத்துண்ணுமாறு செய்த பாவம் நீங்கும்படி பிரமன், திருமால் முதலியோர் காஞ்சிக்கு வந்து தங்களை காத்த இறைவனின் மணிகண்டத்திற்கு (கண்டம்-கழுத்து) போற்றி செய்யும் வகையில் "மணிகண்டம்" எனும் பெயரிலேயே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டனரென்பது தல வரலாறாகும். எனவே இக்கோயில், மணிகண்டீசம் என்றும், சுவாமி மணிகண்டீசுவரர் என்றும் திருநாமம் பெற்று விளங்குகிறது.[3]
தல விளக்கம்
தொகுமணிகண்டேசம் கூறும் தல விளக்கம் யாதெனில், தேவரும், அசுரரும் பிரமனொடும் சூழ்ந்து திருமாலை வணங்கி இறப்பினை வெல்லும் வழியை அருளவேண்டினர். திருப்பாற் கடலினின்றும் அமுதம் பெற்றுண்டலே உபாயமென மதித்து மந்தரத்தை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு சுராசுரர் கடைந்தபொழுது அங்கு வந்த வாலி, இயலாத அவரை விலக்கி மலை கடலில் அழுந்தாதபடி திருமால் ஆமையாய்த் தாங்கக் கடைந்தனன். வாசுகி வலிபொறாது வாய்நுரையைக் கக்கிப் பெருமூச்செறிந்தனன். அக்கலப்பினால் ஆலாலம் என்னும் கொடியவிட மெழுந்து உலகைக் கனற்றுவதாயிற்று.
வாலி ஓட்டெடுப்பப் பொன்னிறம் போய்ப் புகைநிறமுற்ற பிரமனும், வெண்ணிற மிழந்து கரிய நிறமுற்ற மேலும் நிறமாறிய பிறர் பிறரும் கயிலையைச் சரணடைந்தனர். ‘அஞ்சலீர்’ என்றருள் செய்த சிவபிரானார் திருவுளக் குறிப்பின்படிவிடம் யாண்டும் பரவிச் செறிந்து நின்றநிலை நீங்கி நீட்டிய மலர்க் கரத்தில் மலரில் வண்டுபோலத் தங்கித் திருக் கண்ணோக்குற்றுச் சிற்றுருவாய் மெய்யன்பர் திருமனம் இறைவன் ? திருவடிக்கீழ் ஒடுங்குமாறுபோல அடங்கியது. திருவடித் தொண்டராகிய தமிழ் முனிவர் திருக்கரத்தில் உழுந்தளவாகக் கடல்நீர் சுருங்குமேல் இந்நிகழ்ச்சி புகழ்ந்துரைக்கும் பொருளதோ? இறைவன் சங்கற்பப்படி அம்மையார் திருக்கண்களால் ஆலமுண்டு அமுதம்பொழிந்த அந்தவிடத்தைப் பிறரால் நிறுத்தலாகாத கண்டத்தில் நிறுத்தித் திருநீலகண்டர் ஆயினர். அருளைப்பெற்று மீண்டு எழுந்த விடத்தை இறைவனுக்காக்கிய பிழைதீரக் காஞ்சியில் சிவலிங்கம் தாபித்துத் திருமால் முதலானோர் தொழுது நீலமணியை ஒக்கும் கண்டம் உபகரித்த செய்ந் நன்றியை நினைந்து மணிகண்டேசர் என வழங்கினர். பின்பு கடலைக் கடைந்து அருளாற்பெற்ற அமுதத்தை அசுரரை வஞ்சித்துத் தேவர் உண்டு நோய் நீங்கி இறவாமையை எய்தினர். அமுதம் விடமும் போல அனைத்திலும் விரவி நிற்கும் இன்பம் தலைதூக்கித் துன்பம் தொலைய மணிகண்டேசர் வழிபடற் பாலர் ஆவர். இத்தலம் திருக்கச்சிநம்பி தெருவில் மணிகண்டேசர் ஆலயம் எனச் சிறப்புற்று விளங்கும்.
கோயிலின் உள்ளே மேற்புறத்தில், வாசுகி தன்னால் விடமெழுந்த குற்றம் தீரச் சிவலிங்கம் நிறுவி அனந்த தீர்த்தம் தொட்டுப் பண(பணம்- படம்)த்தில் உள்ள இரத்தின மணிகளால் பூசித்து உமையம்மை மணாளனார் திருமேனியில் அணிகலனாகும் பேறு பெற்றனன். மணிகண்டேசரை வணங்கி முத்தியை அடைந்தவர் அளப்பிலர்.[4]
அமைவிடம்
தொகுதமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் விஷ்ணுகாஞ்சி என்றழைக்கப்படும், சிறிய காஞ்சிபுரத்தின் கிழக்கு பிராந்திய , வரதராசபெருமாள் கோயிலின் மேற்கே இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலையில் சுமார் 4-வது கிலோமீட்டர் தொலைவில் திருக்கச்சி நம்பி தெருவில் இத்தலமுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Project Madurai, 1998-2008|சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2|மணிகண்டேசப் படலம் 632 - 698
- ↑ tamilvu.org | சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த|காஞ்சிப் புராணம் | மணிகண்டேசப் படலம் 194 - 215
- ↑ "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | மணிகண்டீசம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-12.
- ↑ Tamilvu.org|திருத்தல விளக்கம் | மணிகண்டேசம் | பக்கம்: 808 - 809