குரோதம்
குரோதம் (Krodham) 1982 ஆம் ஆண்டு பிரேம் மேனன் கதை, திரைக்கதையில், ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில், கே. ரங்கராஜன் வசனத்தில், சங்கர் கணேஷ் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1] பிரேம் மேனன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.[2] 2000 ஆவது ஆண்டு பிரேம் மேனன் நடித்து இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகமான குரோதம் 2 வெளியானது.
குரோதம் | |
---|---|
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
தயாரிப்பு | இந்திரா லட்சுமணன் |
கதை | கே. ரங்கராஜன் (வசனம்) |
திரைக்கதை | பிரேம் மேனன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பிரேம் மேனன் ராணி பத்மினி எஸ். ஏ. அசோகன் கே. ஏ. தங்கவேலு ஸ்ரீதர் ஜெயமாலினி அஞ்சலி சித்ரா |
ஒளிப்பதிவு | ஜே. வில்லியம்ஸ் |
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
கலையகம் | ஏ லோட்டஸ் பிலிம் கம்பெனி |
வெளியீடு | சனவரி 12, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுகட்டிடக்கலை வல்லுனரான பிரேம் (பிரேம் மேனன்) தன் மனைவி இந்து (அஞ்சலி), தங்கை சுபா (சித்ரா) மற்றும் தங்கையின் கணவர் சிவா (ஸ்ரீதர்) ஆகியோருடன் சென்னையில் வசிக்கிறான். ஒரு நாள் இந்துவும் சுபாவும் வீட்டில் தனியாக இருக்கும்போது இரண்டு நபர்கள் வீட்டினுள் நுழைந்து சுபாவைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர். அவளைக் காப்பாற்ற முயலும் இந்து, அவர்களின் பயங்கர தாக்குதலுக்கு உள்ளாகி இறக்கிறாள்.
எதிர்பாராத அசம்பாவிதங்களால் நிலைகுலையும் பிரேம் பணிமாறுதலால் மைசூர் செல்கிறான். அங்கு கவிதா (ராணி பத்மினி) மற்றும் அவளின் தந்தையைச் (கே. ஏ. தங்கவேலு) சந்திக்கிறான். அவர்களுக்கு நல்லதொரு வீட்டைக் கட்டிக்கொடுக்கிறான். இதனால் மனம்மகிழும் கவிதாவின் தந்தை, துப்பாக்கிச் சுடுதலில் திறமையான பிரேமிற்கு ஒரு கைத்துப்பாக்கியை பரிசளிக்கிறார். சென்னைக்குத் திரும்பும் பிரேம் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன் தங்கை சுபாவை சிகிச்சைக்காக ஐக்கிய அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் உள்ள மனநல மருத்துவமனைக்கு சிவாவுடன் அனுப்புகிறான்.
தன் குடும்பம் பாதிக்கப்பட்டது போல இனி யாரும் பாதிக்கப்படக்கூடாது என முடிவு செய்யும் பிரேம், தனக்குப் பரிசாகக் கிடைத்த கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு இரவில் நகரை உலா வருகிறான். அப்போது தன் எதிரில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை சுட்டுக் கொல்கிறான். இதனால் நகரில் குற்றங்கள் குறையத் தொடங்குகிறது. தொடர்ச்சியாக இரவில் மட்டும் குற்றவாளிகளை மட்டும் குறிவைத்துக் கொல்வது யார் என்று காவல்துறை விசாரணையைத் துவக்குகிறது. பிரேம் காவல்துறையிடம் பிடிபட்டரா? என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
தொகு- பிரேம் மேனன் - பிரேம்
- ராணி பத்மினி - கவிதா
- அஞ்சலி - இந்து
- எஸ். ஏ. அசோகன் - காவல் ஆய்வாளர் பிரசாத்
- ஸ்ரீதர் - சிவா
- கே. ஏ. தங்கவேலு - கவிதாவின் தந்தை
- சித்ரா - சுபா
- என்னத்த கன்னையா - வண்டு
- ஜெயமாலினி - கமலா
படக்குழு
தொகு- கலை : மோகனா
- படங்கள் : சங்கர் ராவ்
- வடிவமைப்பு : ஓபல்ட்
- விளம்பரம் : எல். ஆர். சாமி
- ஆய்வகம் : பிரசாத் கலர் லேப்
- உபகரணங்கள் : பில்மொ கிராப்ட்ஸ்
- பாடல் பதிவு : ஜே. ஜே. மாணிக்கம் மற்றும் சம்பத்
- வசனம் பதிவு : எம். சிவராவ், ஏவிஎம் ஜி. தியேட்டர்
- நடனம் : மதுரை ராமு
- சண்டைப்பயிற்சி : தர்மலிங்கம்
- வெளிப்புறப் படப்பிடிப்பு : மூர்த்தி மூவிஸ்
- பதாகை : சாமி ஆர்ட்ஸ்
தயாரிப்பு
தொகுஇப்படம் சார்லஸ் பிரான்சன் நடிப்பில், மைக்கேல் வின்னர் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான டெத் விஷ் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டது.[3]
மேலும் இப்படம் வெளியாகி 3 வருடங்கள் கழித்து 1985 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில், எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தின் கதைக்களமும் இதேபோல் அமைந்தது.[4]
இசை
தொகுபடத்தின் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். பாடலாசிரியர்கள் வாலி, வைரமுத்து மற்றும் உதயணன்.[5][6][7][8]
வ.எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | பாவை இதழ் தேன் | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | 4:10 |
2 | வானம் வருமோ | வாணி ஜெயராம் | 5:03 |
3 | வானம் நல்ல | எல். ஆர். ஈஸ்வரி | 4:09 |
4 | அஞ்சாறு நாளாச்சி | பி. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் | 4:26 |