குளுவாங்

குளுவாங் (Kluang, சீனம்: 居銮) என்பது மேற்கு மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். குளுவாங் மாவட்டத்தின் தலைப் பட்டணம் குளுவாங் நகரம். இது ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து 110 கி.மீ வடக்கே இருக்கிறது. ஜொகூர் மாநிலத்தின் மையத்தில் குளுவாங் நகரம் அமைந்துள்ளது. நகரத்தைச் சுற்றிலும் நூற்றுக் கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செம்பனையும் இரப்பரும் பயிர் செய்யப்பட்டு உள்ளன.

குளுவாங்
நகரம்
நாடுமலேசியா
மாநிலம்ஜொகூர்
நிறுவப்பட்டது1915
நேர வலயம்மநே (ஒசநே+8)

வேளாண்மைத் தொழிலே இந்தப் பகுதியின் முக்கிய தொழில். மலேசியாவில் சீனர்கள் அதிகமாகக் காணப்படும் நகரங்களில் குளுவாங் நகரமும் ஒன்று. இங்கே தமிழர்களை அதிகமாகப் பார்க்கலாம். பெரும்பாலும் செம்பனைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். குளுவாங் மாவட்டத்தின் மக்கள் தொகை 250,000. குளுவாங் நகரத்தின் மக்கள் தொகை 140,000.

வரலாறுதொகு

குளுவாங் எனும் பெயர் “கெளுவாங்” எனும் மலாய்ச் சொல்லில் இருந்து வந்தது. கெளுவாங் என்றால் நரி வௌவால். இந்த நரி வவ்வால்கள் பழங்களைத் தான் விரும்பிச் சாப்பிடும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு குளுவாங் பகுதியில் ஆயிரக் கணக்கான நரி வௌவால்கள் காணப்பட்டன. காடுகள் அழிக்கப்பட்டதாலும் உணவுக்காக வேட்டை ஆடப்பட்டதாலும் நரி வௌவால் இனம் முற்றாக அழிக்கப் பட்டு விட்டது. குளுவாங் நகரம் 1915 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.[1]

இரண்டாவது உலகப் போரின் போது ஆங்கிலேயக் கூட்டுப் படைகள் குளுவாங்கில் இருந்து தப்பிச் சிங்கப்பூருக்கு ஓடி விட்டன. குளுவாங்கிற்கு வந்த சப்பானியப் படைத் தளபதி யாமாசித்தா 1942 ஆம் ஆண்டு சனவரி 27 ஆம் தேதி குளுவாங்கைத் தன் படைத் தலைமையகமாக மாற்றிக் கொண்டான்.[2] பரணிடப்பட்டது 2003-05-04 at the வந்தவழி இயந்திரம் இந்த குளுவாங் பட்டணத்தில் இருந்து தான் சப்பானிய விமானப் படைகள் சிங்கப்பூரையும் சுமாத்திராவையும் தாக்கின. அதன் பின்னர் சப்பானியர்கள் வெளியேறிய பிறகு குளுவாங் விமான ஓடும் பாதையை 1963 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அங்கிருந்த குர்கா படையினர் 1970ஆம் ஆண்டுகளில் வெளியேறினர்.

விவசாயம்தொகு

1910 ஆம் ஆண்டுகளில் இரப்பர் பயிர் செய்வதற்காகவே குளுவாங் உருவாக்கப்பட்டது. கத்திரி ரோபல் குழு, ஆசியாடிக் ரப்பர் நிறுவனம், ஹாரிசான் குரோஸ்பீல்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் பல தோட்டங்களைத் திறந்தன. குளுவாங் நகரில் ஆங்கிலேயக் காலனித்துவ மதுபானக் கடைகள் பல திறக்கப்பட்டன. அப்போது அங்கே ஆங்கிலேயர்களைத் தான் அதிகமாகப் பார்க்க முடியும்.

குளுவாங்கில் முக்கியமான ரப்பர்/செம்பனைத் தோட்டங்கள்:

 • லம்பாக் தோட்டம்
 • மெங்கிபோல் தோட்டம்
 • நியோர் தோட்டம்
 • காஹாங் தோட்டம்
 • பாமோல் தோட்டம்
 • கெக்காயான் தோட்டம்
 • குளுவாங் தோட்டம்
 • எலியஸ் தோட்டம்
 • புக்கிட் பெனுட் தோட்டம்
 • சுங்கை சாயோங் தோட்டம்
 • பத்து டுவாஸ் தோட்டம்
 • கோட்டையா தோட்டம்
 • செண்டா தோட்டம்
 • வெசிங்டன் தோட்டம்
 • ரெங்கோ தோட்டம்
 • லாயாங் தோட்டம்

தமிழர்கள் குடியேற்றம்தொகு

இந்தத் தோட்டங்களில் வேலை செய்ய ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொத்தடிமைகளாக வாழ்க்கை நடத்திய நிகழ்ச்சிகளும் உள்ளன. ஒரு காலகட்டத்தில் இருபது ஆயிரம் தமிழர்கள் வேலை செய்தும் உள்ளனர். ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் சில தோட்டங்கள் மட்டும் தான் உள்ளன. தமிழர்களை அதிகமாகப் பார்க்க முடியவில்லை.

புலம் பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் வேலைகள் தேடி இடம் பெயர்ந்து விட்டனர். ரப்பர் தோட்டங்கள் இருந்த இடங்களில் இப்போது செம்பனைத் தோட்டங்கள் இருக்கின்றன. அன்னாசி, கொக்கோ, தேயிலை தோட்டங்களும் உள்ளன. இந்தத் தோட்டங்களில் வெளி நாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

பெரும்பாலும் இந்தோனேசிய, வங்காள தேசத் தொழிலாளர்கள், இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் இன்னும் இந்தத் தோட்டங்களில் இருக்கின்றனர். அவர்களில் பலர் வயதானவர்கள். பிள்ளைகளுடன் நகர்ப் புறங்களுக்குப் போகாமல் தங்களின் எஞ்சிய காலத்கை இங்கேயே கழிக்கின்றனர். 1969 ஆம் ஆண்டு மலேசியாவில் ஓர் இனக் கலவரம் நடைபெற்றது. அதன் பின் விளைவுகளின் காரணமாகப் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்களின் தாயகமான தமிழ் நாட்டிற்குத் திரும்பி விட்டனர்.

மூன்றாம் தலைமுறையினர் பெரும்பாலும் படித்தவர்கள். கல்லூரிகளில் பலகலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள். பல தமிழர்கள் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். முதன்முதலில் வந்த தமிழர்கள் பல கோயில்களைக் கட்டினர். ஆண்டு தோறும் சிறப்பான முறையில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

கல்வித் துறையில் நாட்டம் இல்லாதத் தமிழர்கள் பலர் தேயிலைத் தோட்டங்களை நம்பி வாழ்கின்றனர். இளம் வயதினரும் கடினமான உடல் உழைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு நாட்டின் குடியுரிமை பத்திரங்கள் இல்லை. சில பெற்றோரின் அலட்சியப் போக்கினால் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புப் பத்திரம் எடுப்பது இல்லை. அதனால் அந்தக் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்குப் போக முடியாத நிலைமை. கல்வி அறிவு இல்லாததால் அந்தக் குழந்தைகளில் பலர் பால்ய வயதிலேயே உடல் உழைப்புத் துறைக்கு வருகின்றனர்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளுவாங்&oldid=3309562" இருந்து மீள்விக்கப்பட்டது