சிக்கந்தர் பேகம்

போபால் மாநிலத்தின் நவாப்

சிக்கந்தர் பேகம், ( Sikandar Begum; 10 செப்டம்பர் 1817 - 30 அக்டோபர் 1868) 1860 முதல் 1868 இல் தான் இறக்கும் வரை போபாலின் நவாப்பாக இருந்தார். இவர் ஆரம்பத்தில் 1844 இல் தனது ஒன்பது வயது மகள் ஷாஜகான் பேகத்தின் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டாலும், 1860 இல் நவாப்பாக அங்கீகரிக்கப்பட்டார். 1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது, சிக்கந்தரின் பிரித்தானிய சார்பு நிலைப்பாடு இவரை 1861 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியால் நிறுவப்பட்ட வீரத்தின் ஒரு வரிசையான நைட் கிராண்ட் கமாண்டர் ஆக்கியது. 1863 இல், ஹஜ் புனிதப்பயணம் செய்த முதல் இந்திய ஆட்சியாளர் இவராவார். சிக்கந்தர் மாநிலத்தில் ஒரு நாணயச் சாலை, ஒரு செயலகம், ஒரு நாடாளுமன்றம் மற்றும் ஒரு நவீன நீதித்துறையை உருவாக்குதல் உட்பட பல சீர்திருத்தங்களை செய்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சிக்கந்தர் பேகம், 1817 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவின் போபால் இராச்சியத்திலுள்ள உள்ள கௌகர் மகால் அரண்மனையில் பிறந்தார். இவரது பெற்றோர், நசீர் முகம்மது கான் மற்றும் போபாலின் பேகமான குத்சியா பேகம் மாநிலத்தின் முன்னாள் நவாப்களாக இருந்தனர்.

ஆட்சி தொகு

3 ஜனவரி 1847 இல், சிக்கந்தர் பேகத்தின் ஒன்பது வயது மகள் ஷாஜகான் பேகம் போபாலின் அரியணையில் ஏறினார். இந்தியத் தலைமை ஆளுநரின் அரசியல் முகவரான ஜோசப் டேவி கன்னிங்ஹாம், அந்த ஆண்டு ஜூலை 27 அன்று சிக்கந்தர் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதாக அறிவித்தார். தலைமை ஆளுநர் இவருக்கு மாநில நிர்வாக அதிகாரங்களை வழங்கினார்.

1857 சிப்பாய் கிளர்ச்சியின் போது, சிக்கந்தர் ஆங்கிலேயர்களின் பக்கம் நின்றார். போபாலில் கிளர்ச்சியைத் தடுக்க, இவர் பிரித்தானிய எதிர்ப்பு துண்டுப்பிரசுரங்களை வெளியிடுவதையும் பரப்புவதையும் தடைசெய்தார். தனது உளவுத்துறை வலையமைப்பை வலுப்படுத்தினார். மேலும் பிரித்தானிய எதிர்ப்பு வீரர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள லஞ்சம் கொடுத்தார். இருப்பினும், ஆகஸ்டில், சிப்பாய்களின் குழு செஹோர் மற்றும் பெரேசியாவில் உள்ள பிரித்தானிய படைநிலைகளைத் தாக்கியது; இவரது பிரித்தானிய சார்பு நிலைப்பாட்டின் காரணமாக மாநிலத்தில் இவர் மீதான கோபம் அதிகரித்தது. சிக்கந்தரால் ஊக்குவிக்கப்பட்ட அதே சிப்பாய்களின் குழு டிசம்பரில் இவரது அரண்மனையைச் சுற்றி வளைத்தது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சிக்கந்தர் தனது மருமகன் உம்ராவ் தௌலாவை அனுப்பினார். அவர்களுடைய ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தவுடன் வீரர்கள் தங்கள் முற்றுகையை முடித்துக் கொண்டனர். 1861 ஆம் ஆண்டில், சிகந்தர் கிளர்ச்சியின் போது பிரித்தானிய சார்பு நிலைப்பாட்டிற்காக நைட் கிராண்ட் கமாண்டர் விருதைப் பெற்றார்.[1] 1860 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி சிக்கந்தரை போபாலின் நவாப்பாக ஆங்கிலேயர்கள் அங்கீகரித்தனர். அடுத்த ஆண்டு இவரது இராணுவ மரியாதை 19 துப்பாக்கிகளாக அதிகரிக்கப்பட்டது.

ஹஜ் புனிதப்பயணம் தொகு

சிக்கந்தர், 1863 ஆம் ஆண்டில், ஹஜ் புனிதப்பயணம் செய்த முதல் இந்திய இரானியாவார். இவருடன் சுமார் 1,000 பேர் பயணம் செய்தனர். அவர்களில், பெரும்பாலானோர் பெண்கள். சிக்கந்தர் தனது பயணத்தின் நினைவுக் குறிப்பை உருது மொழியில் எழுதினார். மேலும் ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு 1870 இல் வெளியிடப்பட்டது. நினைவுக் குறிப்பில், மெக்கா மற்றும் ஜித்தா நகரங்கள் "அசுத்தமானவை" என்றும் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்கள் "நாகரீகமற்றவர்கள்" மற்றும் "மத அறிவு இல்லாதவர்கள்" என்றும் எழுதினார். இவர் கொண்டு சென்ற அனைத்திற்கும் வரி விதிக்க விரும்பிய துருக்கிய சுங்க அதிகாரிகளுடன் நடந்த மோதலைப் பற்றிய ஒரு கதையும் நினைவுக் குறிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சீர்திருத்தங்கள் தொகு

சிக்கந்தர் பேகம், மாநிலத்தை மூன்று மாவட்டங்களாகவும் 21 துணை மாவட்டங்களாகவும் பிரித்தார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வருவாய் அதிகாரியும், ஒவ்வொரு துணை மாவட்டத்திற்கும் ஒரு நிர்வாகியும் நியமிக்கப்பட்டனர். மாநிலத்தின் 3 மில்லியன் (US$38,000) கடனை இவர் திருப்பிச் செலுத்தினார். சிக்கந்தர் ஒரு சுங்க அலுவலகம், ஒரு செயலகம், ஒரு உளவுத்துறை வலையமைப்பு, ஒரு நாணயச் சாலை, இந்தியாவின் பிற பகுதிகளுடன் மாநிலத்தை இணைக்கும் அஞ்சல் சேவை மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்துடன் நவீன நீதித்துறை ஆகியவற்றையும் நிறுவினார்.

இவர் பெண்களுக்கான விக்டோரியா பள்ளியையும், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு உருது மற்றும் இந்தி நடுநிலைப் பள்ளியை நிறுவினார்.[1] சிக்கந்தர் 1847 இல் மஜ்லிஸ்-இ-ஷூராவை ( நாடாளுமன்றம் ) அறிமுகப்படுத்தினார். பிரபுக்கள் மற்றும் அறிஞர்களைக் கொண்ட அதன் நோக்கம், சட்டங்களை இயற்றுவதும் பரிந்துரைப்பதும் சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதும் ஆகும். 1862 இல், இவர் பாரசீக மொழிக்குப் பதிலாக உருதுவை அரசவை மொழியாகக் கொண்டு வந்தார்.

கட்டிடக்கலை தொகு

சிக்கந்தர் சிவப்பு மணற்கற்களால் செய்யப்பட்ட மோதி பள்ளிவாசலைக் கட்டினார்.[3] இதைத் தவிர மேலும் மோதி மகால் மற்றும் சௌகத் மகால் அரண்மனைகளைக் கட்டினார். பிந்தையது கோதிக் அம்சங்களுடன் ஐரோப்பிய மற்றும் இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலைகளின் கலவையாகும்.[4]

சொந்த வாழ்க்கை தொகு

1835 ஏப்ரல் 18 அன்று, சிக்கந்தர் நவாப் ஜஹாங்கீர் முகமது கான் என்பவரை மணந்தார்.[4] இவர்களுக்கு ஷாஜகான் பேகம் என்ற ஒரு மகள் இருந்தார். இவரது தாயார் குத்சியா பேகத்தைப் போலவே, சிக்கந்தர் ஒரு பக்தியுள்ள முஸ்லிமாக இருந்தார். இருப்பினும், இவர் நிகாப் (முகத்திரை) அல்லது பர்தா (பெண் தனிமை) அணியவில்லை. இவர் புலிகளை வேட்டையாடினார், செண்டாட்டம் விளையாடினார். வாள் வித்தை, வில் வித்தை மற்றும் ஈட்டி வீசுதலில் வீராங்கனையாக இருந்தார். சிக்கந்தர் இராணுவத்தை மேற்பார்வையிட்டு வந்தார். மேலும் நீதிமன்றங்கள், அலுவலகங்கள், நாணயச் சாலை மற்றும் கருவூலங்களை நேரில் ஆய்வு செய்தார்.

இறப்பு தொகு

சிக்கந்தர் பேகம் 1868 அக்டோபர் 30 அன்று சிறுநீரக செயலிழப்பால் இறந்தார். இவரது உடல் பர்கத் அஃப்சா பாக் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் இவரது மகள் போபாலின் நவாப் ஆனார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Begums Of Bhopal - Saris and a scabbard". The Telegraph. 16 May 2010. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
  2. Kashif-ul-Huda (14 March 2010). "Nawab Sikandar Begum's Hajj memoir". Two Circles. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
  3. Podder, Tanushree (11 November 2010). "Fascinating Bhopal: City of Begums". தி எகனாமிக் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
  4. 4.0 4.1 "Nawab Sikander Begum". Governor of Madhya Pradash. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கந்தர்_பேகம்&oldid=3940298" இலிருந்து மீள்விக்கப்பட்டது