செம்போத்து

(செண்பகம் (பறவை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செம்பகம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
செ. சைனென்சிசு
இருசொற் பெயரீடு
செண்ட்ரோபசு சைனென்சிசு
(ஸ்டெபன்ஸ், 1815)[2]

செம்போத்து, செம்பகம் அல்லது செங்காகம்[3], குக்கில் (Centropus sinensis) குயில் வரிசையில் உள்ள பறவைகளில் ஏனைய பறவைகளின் கூட்டில் திருட்டுத்தனமாக முட்டையிடும் வழக்கமில்லாத பெரிய பறவையினங்களுள் ஒன்றாகும். ஆசியா கண்டத்தில் இந்தியா, இலங்கை முதல் கிழக்கு மற்றும் தென் சீனா வரையிலும் இந்தோனேசியா வரையிலுமான இடைப்பட்ட பகுதியில் செம்பகங்கள் மிகப் பரவலாகக் காணப்படுகின்றன. செம்பகம் தன் இனத்தில் சில உப இனங்களைக் கொண்டுள்ள அதே வேளை அவற்றின் உப இனங்களாகக் கருதப்படும் சில முழுமையாக வேற்றினமாகச் சில வேளைகளில் கணிக்கப்படுவதுண்டு. காகம் போன்ற தோற்றத்திலும் கபில நிற இறக்கைகளைக் கொண்ட இவை காடுகள், மலைகள், வயல் வெளிகள், நகர்ப் புறங்களெனப் பொதுவாக எல்லா வகையான இடங்களிலும் காணப்படுகின்றன. சிறு பூச்சிகள், முட்டைகள் மற்றும் ஏனைய பறவைகளின் கூடுகளை உணவாகக் கொள்ளும் இது பறக்கும் தன்மை குறைந்த ஒரு பறவையாகும். செம்பகங்கள் இரை தேடும்போது மரங்களில் தத்தித் தாவியும் நடந்தும் செல்வது மிகச் சாதாரணம். செம்பகத்தின் ஒலி மிகத் தொலைவு வரை கேட்கக் கூடியதாகும்.

செம்பூழ்

தொகு

செம்போத்து [4] என்னும் பறவையைச் சங்கநூல் செம்பூழ் என்று குறிப்பிடுகிறது.

  • செம்பூழ்ப் பறவையின் கழுத்து கருத்திருக்கும். தன் பெண்பறவையோடு சேர்ந்து புழுதியைக் கிளறிக்கொண்டிருக்கும் கொடிய பாலைநில வழி கடுமையான வறட்சி உடையது.[5]
  • முல்லைநில மக்கள் காய வைத்திருக்கும் தினையைச் செம்பூழ்ப் பறவைகள் மேயுமாம்.[6]
குறிப்பு
  • தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே மயில், எழால் ஆகிய பறவைகளில் ஆண்பறவையைப் போத்து என்றனர்.[7]
  • மேலும், களவழி நாற்பதிலும் சேம்போத்து பறவையை குக்கில் என்றும் குறிப்பிடுகிறது. செங்கட்சோழன் பகைவரைக் கொன்ற போர்களத்தில், பகைவரின் வடிந்த உரத்தத்தை (குருதியை) உண்ட காகங்கள் தன் கரு நிறத்தை இழந்து சேம்போத்தின் நிறத்திற்கு மாறியதாக குறிப்பிடுகிறார் பொய்கையார்.[8]

விபரம்

தொகு
 
அதிகாலை இரை தேடும் இந்த செம்பக பறவை. திருநெல்வேலி, தமிழ்நாடு.

குயில் வரிசையைச் சேர்ந்த இப்பறவை 48  சதம மீற்றர் வரை வளரக்கூடியதாகும். செம்பகத்தின் தலை கருமையாகவும் உடலின் மேற்பகுதியும் கீழ்ப்பகுதியும் நாவல் நிறம் கலந்த கருமையாகவும் காணப்படும். இவற்றின் கண்கள் நன்கு சிவந்திருக்கும். இவற்றின் குஞ்சுகளோ கருமை குறைந்தனவாகக் காணப்படுவதோடு அவற்றின் கீழ்ப் பகுதியிலும் வாலிலும் வெண்மையான கோடுகள் காணப்படும். இவற்றில் இடத்துக்கிடம் வித்தியாசமான தரைத்தோற்றம் சார் இனங்கள் காணப்படுவதுண்டு. இவ்வினங்களின் நிற அமைப்பிலும் ஒலியிலும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுவதுண்டு. தென்னிந்தியாவில் காணப்படும் செம்பக இனமொன்று கருமையான தலையையும் நீல நிறத்திலமைந்த கீழ்ப் பகுதியையும் கபில நிறம் கூடியளவிலமைந்த நெற்றி, முகம், கழுத்து போன்ற பகுதிகளையும் கொண்டிருக்கும்.[9] செம்பகங்களின் இறக்கைகளின் நிறம் அவற்றின் ஆண், பெண் என்பவற்றுக்குப் பொதுவானதாகும். எனினும், பெண் பறவைகளின் இறக்கைகள் சற்றுப் பெரிதாக இருக்கும்.[10] வெண்ணிறக் கலப்புள்ள செம்பக இனங்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன.[11]

நடத்தை

தொகு
 
நத்தையோடொன்றைப் பொறுக்குதல்

செம்பகம் பொதுவாகப் பூச்சிகள், புழுக்கள் மற்றும் சிறு பாம்புகள் போன்ற சிறு முண்ணாணிகள் என்பவற்றை உட்கொள்வதாகும்.[12] மேலும் அது முட்டைகள், பறவைகள் அமைக்கும் கூடுகள், பழங்கள், விதைகள் போன்றவற்றையும் உட்கொள்ளக் கூடியன. தமிழ் நாட்டில் அவை பொதுவாக நத்தையுண்ணிகளாகவே காணப்படுகின்றன. அத்துடன் அவை நச்சுப் பழங்களையும் உட்கொண்டு உயிர் வாழ்கின்றன.[13][14] அவை நன்கு பழுத்த தாளிப் பனையின் பழங்களை உண்பதால் தாளிப் பனைப் பயிர்ச் செய்கைக்குப் பெரிதும் கேடு செய்கின்றன.[15] மிகுந்து இருக்கும் கள்ளிப் புதர்களிலும், அடர்தென்னைத் தோப்பின் நிழல்களிலும் தத்திப் போகும் பறவை. இரண்டிரட்டாய் சற்றே தூரத்தில் தரையில் நடந்து புழுபூச்சிகளை தேடும் இணைப் பறவைகள் நம் காலடி அதிர்விலோ, பேச்சின் ஒலியிலோ எழுப்பிப் பறக்கும்போது வெகுதூரம் பறப்பதில்லை. தரையிலிருந்து அருகில் தாழ உள்ள மரக்கிளைகளுக்கோ அல்லது கிளைவிட்டு கிளைதாவியோ சிறு தூரங்களையே பறந்து கடக்கின்றன. மழை பெய்ந்து ஓய்ந்த மதிய நேரங்களில் குகுக் குகுக் எனக் கத்தி அழைக்கும் ஒலி எவராலும் எளிதில் இனம் காண முடியும்.

 
செம்பகங்களின் சூரியக் குளியல்

காலை வேளைகளில் செம்பகங்கள் தம் இறக்கைகளை மேல் நோக்கி விரித்து, தனியாகவோ சோடியாகவோ சூரியக் குளியல் மேற்கொள்வதுண்டு. கூடு கட்டும் செம்பகச் சோடியொன்று 0.9-7.2 ஹெக்டேயர் வரையான நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்வதுண்டு.[16] செம்பகங்கள் காலையிலும் மாலையிலும் இளஞ் சூட்டு நேரங்களில் மிகச் சுறுசுறுப்பாகக் காணப்படும்.[17]

இனப்பெருக்கம்

தொகு

செம்பகத்தின் இனப்பெருக்கக் காலம் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரையாகும். மற்ற குயிலங்களைப் போலன்றி இது தானே கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சுகளை பராமரிக்கககூடியது.[18] இது தொடர்ந்து 3 முதல் 4 வரையிலான முட்டைகளை இட்டு அடைகாக்கும். இதன் முட்டைகள் வெள்ளை நிறத்தில் காணப்படும். இதன் உயிரியல் பெயர் சென்ரோபஸ் சினென்சிஸ்.

சிறப்பு

தொகு

இப்பறவை தமிழீழத்தின் தேசியப்பறவை என்று வே. பிரபாகரன் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.[19] இந்தப் பறவை பல மூடநம்பிக்கைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் தொடர்புடையது. இதனுடைய ஆழ்ந்த ஒலியானது ஆவிகள் மற்றும் சகுனங்களுடன் தொடர்புடையவையாக் கருதப்படுகிறது.[20][21] இதனுடைய சதையானது காசநோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கான நாட்டுப்புற சிகிச்சை மருந்தாக உண்ணப்பட்டது.[22]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2009). "Centropus sinensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2009.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. ஷோவின் பொது விலங்கியல் 9 இல், pt. 1, p. 51. (Type locality China, Ning Po.) per Payne (2005)
  3. பல்வேறு அகரமுதலிகளில் செங்காகம் என்பதன் பொருள்
  4. செம்பூழ்த்து > செம்பூத்து
  5. கருந்தாள் மிடற்ற செம்பூழ்ச் சேவல் சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண் - அகநானூறு 63-7
  6. பைந்திணை உணங்கல் செம்பூழ் கவரும் வன்புல நாடன் - ஐங்குறுநூறு 469
  7. தொல்காப்பியம் மரபியல் செய்திகள்
  8. தெரிகணை எஃகம் திறந்தவாய் எல்லாம் குருதி படிந்துண்ட காகம் - உருவிழந்து, குக்கில் புறத்த; சீரல்வாய - செங்கண்மால் தப்பியார் அட்ட களத்து. - களவழிநாற்பது : 5
  9. Rasmussen, PC & JC Anderton (2005). தெற்காசியப் பறவைகள்: ரிப்லே வழிகாட்டி. பாகம் 2. Smithsonian Institution & Lynx Edicions.
  10. Ali, S & SD Ripley (1981). இந்திய, பாக்கிஸ்தானியப் பறவைகள் பற்றிய கைநூல். பாகம் 3 (2 ed.). Oxford University Press. pp. 240–244.
  11. Ghosal,DK; Ghose,RK (1990). "செம்பகங்களில் பகுதியளவு வெண்ணிறத் தன்மை Centropus sinensis sinensis (Stephens)". Records Zool. Survey India 87: 337. 
  12. Venugopal,B (1981) Observations on the Southern Coucal Centropus sinensis feeding on the Saw-scaled Viper Echis carinatus. Newsl. for Birdwatchers 21(12):19.
  13. Payne, RB (2005). The Cuckoos. Oxford University Press. pp. 238–242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850213-3.
  14. நடராஜன், வி (1993). "தெற்கத்திய செம்பகத்தின் உணவும் உணவுப் பழக்கங்களும் Stresemann (Aves : Cuculidae) at Pt. Calimere, Tamil Nadu". J. Bombay Nat. Hist. Soc. 90 (1): 11–16. 
  15. Dhileepan K (1989). "Investigations on avian pests of oil palm, Elaeis guineensis Jacq. in India". Tropical pest management 35 (3): 273–277. doi:10.1080/09670878909371379. 
  16. Natarajan, V. (1997). "Breeding biology of the Southern Crow-Pheasant Centropus sinensis parroti Stresemann (Aves: Cuculidae) at Point Calimere, Tamil Nadu.". J. of the Bombay Natural History Society 94 (1): 56–64. 
  17. Natarajan,V (1993) Time budgeting by the Southern Crow-Pheasant Centropus sinensis parroti Stresemann (Aves : Cuculidae) at Pt. Calimere, Tamil Nadu. J. Bombay Nat. Hist. Soc. 90(1):92-95
  18. "குயிலே... குயிலே." Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.
  19. தமிழீழ தேசியப் பறவை செண்பகம்
  20. Yule, Henry (1903). Hobson-Jobson: A glossary of colloquial Anglo-Indian words and phrases, and of kindred terms, etymological, historical and discursive. New. London: J. Murray. p. 277. Archived from the original on 2012-07-11. பார்க்கப்பட்ட நாள் 2021-11-16. {{cite book}}: More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)
  21. Thurston, Edgar (1906). Ethnographic notes in Southern India. Government Press, Madras. p. 283.
  22. Inglis, CM (1898). "Birds collected during five years' residence in the Hylakandy District, Cachar. Part V". J. Bombay Nat. Hist. Soc. 11 (3): 474–481. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Centropus sinensis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Bhujle,BV; Nadkarni,VB (1977) Steroid synthesizing cellular sites in the testis of Crow Pheasant Centropus sinensis (Stephens). Pavo 14(1&2), 61–64.
  • Bhujle,BV; Nadkarni,VB (1980) Histological and histochemical observations on the adrenal gland of four species of birds, Dicrurus macrocercus (Viellot), Centropus sinensis (Stephens), Sturnus pagodarum (Gmelin) and Columba livia (Gmelin). Zool. Beitrage 26(2):287–295.
  • Khajuria,H (1975) The Crow-pheasant, Centropus sinensis (Stevens) (Aves: Cuculidae) of central and eastern Madhya Pradesh. All-India Congr. Zool. 3:42.
  • Khajuria,H (1984) The Crow-Pheasant, Centropus sinensis (Stephens) (Aves: Cuculidae) of central and eastern Madhya Pradesh. Rec. Z.S.I. 81(1–2):89–93.
  • Natarajan, V (1993). "Awakening, roosting and vocalisation behavioiur of the Southern Crow-Pheasant (Centropus sinensis) at Point Calimere, Tamil Nadu". In Verghese,A; Sridhar,S; Chakravarthy, AK (eds.). Bird Conservation: Strategies for the Nineties and Beyond. Ornithological Society of India, Bangalore. pp. 158–160.
  • Natarajan,V (1990) The ecology of the Southern Crow-Pheasant Centropus sinensis parroti Stresemann (Aves: Cuculidae) at Point Calimere, Tamil Nadu. Ph.D. Dissertation, University of Bombay, Bombay.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்போத்து&oldid=3790005" இலிருந்து மீள்விக்கப்பட்டது